'தனிமை' என்பது; 'சுகம்' அல்ல "சோகம்" - புரிந்து கொள்க! - 3
தனிமை கொடிது, கொடிது என்று உணர்ந்த பின், எப்படியாவது நம்மீது பல்வேறு சூழ்நிலை களாலும், காரணங்களாலும் திணிக்கப்படும் "தனிமை"க்கு விடை கொடுத்து மகிழ்ச்சியை வர வழைத்து, சமூக நட்புறவுடன் கலந்து கவலை மறந்த முழு வாழ்வினைப் பெற முயற்சிப்பது நம் கையில் தான் உள்ளது!
நமது உள்ள உறுதி அதற்கு மிகவும் உறுதுணையாக அமையக் கூடும்.
வெளிப்புற சூழ்நிலைகளால் அந்தத் தனிமை ஏற்பட்டிருக்குமாயின் அதைப் பகிர்ந்துணர்ந்து பகுத்தறிவைப் பயன்படுத்தினால் நிச்சயம் மாறுதலை ஏற்படுத்தலாம்.
உள்ளத்துள் உருவாகிவிட்ட மன அழுத்தம் அதற்குக் காரணமானால் அதுபற்றி சற்று ஆழ்ந்து சிந்தித்து, மாற்றத்தை ஏற்படுத்திக் கொள்ளலாம்; கொள்ள முடியும்!
முயல வேண்டும்.
மகிழ்ச்சியோடு இருக்கும் எவருக்கும் தனிமை ஒரு போதும் பிடிக்காது; மற்றவர்களோடு கலகலப்பாகப் பழகி, உரையாடி, சிரித்து மகிழும் நிலையை நல்ல நட்புறவுகள்மூலம் எந்த வயதிலும் நம்மால் ஏற்படுத்திக் கொள்ள முடியுமே!
எப்போதும் சிலர் தங்களை மற்றவர்களுடன் ஒப்பிட்டு ஒப்பிட்டு "அவர்போல் நம்மால் பெருமையுடன், செல்வத்துடன், பகட்டுடன் வாழ முடியவில்லையே" என்ற ஒப்பீட்டு முறையை விட்டொழிக்க வேண்டும்; அவரவர் வாய்ப்பு, சூழல் வேறு - நமது இலக்கு, சூழல், வாழ்க்கை முறை வேறு - என்று தெளிவுபடுத்திக் கொண்டு அதனைச் சற்றும் எண்ணிக்கூடப் பார்க்காமல், அந்த சிந்தனையை மனக் குகைக்குள் புக விடாமல் விரட்டியாக வேண்டும்!
நமக்கு வரும் பிரச்சினைகளில் பல நாம் நாமாக இருக்க விரும்பாமல், நாம் பிறராக இருக்க விரும்புவதால்தான் பலருக்கு நிம்மதியற்ற வாழ்க்கை!
எவ்வளவு காலத்திற்கு மனிதன் ஒப்பனை களோடு வாழ முடியும்?
நிஜம் மனிதன்தான். நிழல் மனிதன் ஒரு போதும் நிஜ மனிதனாக மாட்டான்.
எனவே எனக்குக் கிடைத்துள்ள மகிழ்ச்சி, வருவாய், நட்பு வட்டம் எனது பணியில் எனக்கு ஏற்பட்டிருக்கும் முழு மன நிறைவு இவைதான் எனக்கு முக்கியமே தவிர பிறர் போல் வாழ வேண்டும் - டாம்பீகமாக உலவ வேண்டும் என்றால் - இறுதியில் "நிம்மதியற்ற நெருஞ்சி முள் பாதையாகவே அன்றாட வாழ்க்கை - எனக்கு அவல வாழ்க்கையாகும்" என்று உணர வேண்டியது ஒவ்வொருவரின் கடமையல்லவா?
2022இல் ஓர் ஆய்வு - உறவுகள் தனிமை போக்கிய மகிழ்ச்சியான வாழ்வின் விழுமிய பயன்களைக் கணக்கிட்டுள்ளார்கள்.
1. வெளியில் இருந்து மகிழ்வது - 87 சதவிகித மகிழ்ச்சி.
2. உடல் செயற்பாடுகள் (Physical Activites) - 72 சதவிகிதம்
3. பழக்கங்கள், திறமைகள், திட்டங்கள் - 72 சதவிகிதம்
4. மற்றவர்களுடன் தொடர்பு கொள்வதால் ஏற்படும் மகிழ்ச்சி - 83 சதவிகிதம்.
5. தொலைபேசி அல்லது நேரடியாக இல்லாமல் காணொலி மூலம் தொடர்பு (Virtual) - 79 சதவிகிதம்
அலெக்சாண்டர் சாமர்ஸ் என்ற அறிஞர் கூறினார். வாழ்வின் மூன்று முக்கிய மகிழ்ச்சி பெருக்கும் விடயங்கள் எவை தெரியுமா?
1. செய்ய வேண்டியவற்றைச் செய்து மகிழ்!
2.. அன்புடன் நேசிக்க வேண்டியவற்றின் மூலம் மகிழ்ச்சி!
3. நம்பிக்கையுடன் இலக்கு நோக்கிய பயணம் மூலம் கிடைக்கும் மகிழ்ச்சி!
இம்மூன்றையும் உள்வாங்கி - எண்ணிப் பாருங்கள் - உங்கள் தனிமையை ஓடோட விரட்டி மகிழ்ச்சியை நம் மடிமேல் அமர்த்தும்!
[நாளை தொடரலாமா?]
No comments:
Post a Comment