ஜி.சரவணன்
'சொல்வதை நம்பு, இல்லாவிட்டால் பாவம்!' என்று நான் சொல்லவில்லை. எதிலும் உண்மையைக் கண்டுபிடிக்க வேண்டும். அப்பொழுதுதான் நம் நாடு முன்னேற்றமடையுமேயன்றி, 'என்னுடைய பாட்டன், முப்பாட்டன் போன வழியில்தான் போகிறேன்' என்ற மூடக் கொள்கையினால் நாடு நாளுக்கு நாள் நாசமடைவது திண்ணம். என் புத்திக்கு எட்டியதை எடுத்துக் காட்டினேன். அதில் சரியானது எனத் தோன்றியதை ஒப்புக்கொண்டு அதன்படி நடக்கும்படிக் கேட்டுக் கொள்கிறேன். நான் சொல்வதிலும் பிசகிருந்தால் என் அறியாமைக்குப் பரிதாபப்படும்படியும் கேட்டுக் கொள்கிறேன் - பெரியார்
20ஆம் நூற்றாண்டின் தமிழ்ச்சமூகப் புரட்சியாளர்களில் முதன்மையானவரும் முக்கியமானவருமான பெரியார் எனும் பேராளுமையை கடவுள் மறுப்பாளர்' என்ற ஒற்றைக் குடுவைக்குள் அடைத்து வைத்துப் பார்க்கும் நோய்த்தன்மை அன்றிலிருந்து இன்றுவரை பெரும் பான்மைத் தமிழ்ச் சமூகத்திடம் காணப்படும் ஒன்று தான்.'சாமி' எனும் சமூக நிறுவனத்திடம் சிக்குண்டு கிடக்கும் அவர்களின் மயக்குநிலையை சமூகவியலாளர் களாலும் பெரியாரியலாளர்களாலும் புரிந்து கொள்ள முடியும். மாறாக பெரியாரின் களப்பணியையும் சமூகப் போராட்டங்களையும் நியாயப்படி ஏற்றுக் கொண்டவர்களுமேகூட பெரியார் குறித்த சில அய்யப்பாடுகளை நேரிடையாகவும் மறைமுகமாகவும் வெளிப்படுத்தும் நிகழ்வுகள் அவ்வப்போது நடப்பதும் தவிர்க்கவியலாததாகவே தொடர்ந்து வந்திருக்கிறது. பெரியார் குறித்து வெகுகாலமாகவே நடந்துவரும் வறட்சியான அணுகுமுறைகளில் இதுவுமொன்று. இதனை ஓரளவேனும் நிவர்த்தி செய்யவேண்டிய கடமையும் பொறுப்பும் பெரியாரியலாளர்களுக்கு உண்டு.
காலச்சூழலுக்கும் அவ்வப்போதைய நிலைமைக்கு மேற்ற தர்க்க நியாயங்களின் அடிப்படையில் பல்வேறு கால கட்டங்களில் வெவ்வேறு விடயங்களில் முரணான எதிரெதிர்ப் போக்குகளைக் கைக்கொண்டவர் பெரியார் என்பது உண்மைதான்.
அவரே கூறியிருக்கிறபடி,
'யோக்கியன், அறிவாளி, ஆராய்ச்சியாளன், பொறுப் பாளர் கவலையாளி ஆகியோர் மாறவேண்டியது அவசிய மாகலாம், அதைப் பற்றிய கவலை ஏன்? யார் எப்படி மாறினாலும், பார்க்கிறவர்களுக்குப் புத்தியும் கண்ணும் சரியாய் இருந்தால், மற்றதைப் பற்றி கவலைப்பட ஒன்றுமில்லை. ஒன்றும் ஆபத்து வந்துவிடாது. மாறுதல்கள் காலத்திற்கும், பகுத்தறிவிற்கும். நாட்டின் முற்போக்குக்கும் ஏற்றாற்போல் நடந்தே தீரும். எனவே நான் மாறுதலை டைந்து விட்டேன் என்று சொல்லப்படுவதில் வெட்கப் படுவதில்லை. நான் நாளை எப்படி மாறப் போகிறேன் என்பது எனக்கே தெரியாது.'
எனத் தன்னிலை விளக்கியிருக்கும் பெரியாரை எல்லோராலும் அவ்வளவு எளிதாகப் புரிந்து கொள்வது சிரமம்தான். புரியவைத்து தெளிவுபடுத்த வேண்டியது இக்காலச் சமூகப் பொறுப்பாளர்களின் கடமை.
மதவாத சக்திகளின் அட்டூழியங்களும் போலி ஆன்மீகக் கூடாரங்களின் அலும்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இன்றைய சூழலில் பெரியாரின் சிந்தனைகளுக்கு ஒரு மேலதிகத் தேவை இருப்பதையும் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது.
இந்நிலையில் காலகாலமாகப் பெரியாரைப் பற்றிய முறையான புரிதலற்ற அரைகுறை மதிப்பீடுகளுக்கும் கண்மூடித்தனமான கசட்டு விமர்சனங்களுக்கும் பதிலுறுக்கும் விதமாக காத்திரமான சில புரிதல்களை எல்லோர்க்குமாக உறைக்கும்படி ஓய்வு பெற்ற பேராசிரியர் மு.இராமசுவாமி அவர்களின் 'பெரியாரை எப்படிப் புரிந்துகொள்வது?' எனும் நூல் விளக்குகிறது.
இந்நூலுக்கான அவரது என்னுரையில்,
கடந்த அய்ந்து ஆண்டுகளில், பல்வேறு சூழல்களில், தேவை கருதி எழுதப்பெற்ற இந்தக் கட்டுரைகளின் பொதுவான குணம், பெரியாரை வெவ்வேறு சூழல்களில் நிறுத்திவைத்து, அவரின் மொழியில் அவரின் செயற் பாடுகளில்- அவரைப் பொருத்திப் புரிந்துகொள்ள முயற்சித்திருப்பது மட்டும்தான்.'
என்று தெளிவாகப் பதிவு செய்துள்ளார். அதனை நிறைவாகவே செய்துமிருக்கிறார் என்றே சொல்லவேண்டும்.
'பெரியாரை எப்படிப் புரிந்து கொள்வது', 'பெரியார் இல்லாத தமிழகம்', 'கலையும் பெரியாரும்'. 'பகுத்தறிவுப் பரப்புரையாளர் சொல்லின் செல்வர் பெரியார்' ஆகியவை உள்ளிட்ட அய்ந்து கட்டுரைகளைக் கொண்டு அமைந்துள்ள இந்நூலை நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் வெளியிட்டுள்ளது.
பெரியாரின் ஒட்டுமொத்தமான பங்களிப்பைத் தெளிவாக விளக்கும் வகையில்,
'சூத்திர இழிவை நீக்கும், சுயமரியாதை பேசும் சமநீதியே, பெரியாரியத்தின் ஆணிவேர். அதைப் பலப்படுத்தும் பக்க வேர்களே, அவரின் பகுத்தறிவு, பார்ப்பனிய எதிர்ப்பு, கடவுள் மறுப்பு, பெண்ணிய விடுதலை, வடவர் ஆதிக்க இந்தி ஆதிக்க எதிர்க்குரல், ஜாதி ஒழிப்பு என்பவையாக விரிகின்றன' (ப.37)
என்று பெரியாரை மிகச் சரியாகவும் எளிமையாகவும் வரையறை செய்கிறார்.
காங்கிரஸ் கட்சியிலிருந்த காலத்திலிருந்து பெரியார் முன்னெடுத்த ஒவ்வொரு செயற்பாடுகளையும் விவரிக்கும் நூலாசிரியர் அவரது ஒவ்வொரு செயலுக்கும் பின்னிருந்த தெளிவான அரசியல் பார்வையையும் எல்லாப் போராட்டத்திலும் அவர் காட்டிய தீவிரத்தையும் தெளிவையும் பதிவு செய்துள்ளார். பெரியாருக்கிருந்த தீராத லட்சிய நோக்கத்தையும் அதன் பின்னால் அணிதிரண்ட மக்கள் திரளையும் அவர் முன்னின்று நடத்திய போராட்டங்களையும் அதன் பாரதூரமான விளைவுகளையும் இப்படிப் பதிவு செய்கிறார்.
'இந்திய அரசமைப்புச் சட்டம் முதன்முதலில் திருத்தப்பட்ட வரலாறு, ஜாதியை ஒழிக்க அரசமைப்புச் சட்டநகல் எரிப்புப் போராட்டத்திற்காக, மூன்றாம் வகுப்பு மட்டுமே படித்திருந்த பெரியாரின் அறைகூவலை ஏற்று, நான்காயிரம் பேர் வரையும் அன்று கைதானது, அவரு டைய போராட்டத்தால் மட்டுமே நிகழ்ந்தது என்பதும் வரலாறு. இறுதிப் போருக்கான ஆயத்தப்படுத்தலில், தன் னையே, முதற்களப் பலியாய் அறிவித்திருந்த போராட்ட நடைமுறைவாதி அவர். (ப.38)
"கம்யூனிஸ்டுகளை பெரியாருக்குப் பிடிக்காது. கம்யூனிஸ்டுகளைக் கண்டபடித் திட்டியவர் பெரியார்" என்னுமொரு சொத்தை வாதத்தை இன்றும் முன்வைக்கும் சிலருண்டு. அறிவார்ந்த தமிழ்ச் சமூகத்தை உருவாக்க வேண்டும் என்கிற வேட்கையில் பெரியார் நடத்திய பத் திரிகைகள், எழுதிய தலையங்கங்கள், அச்சிட்டு வெளிக் கொணர்ந்த புத்தகங்கள் எனும் வகைகளில் தமிழ்நாட்டுக்கு பெரியாரின் பங்களிப்பு எத்தகைய மதிப்பும் பொறுப்பும் வாய்ந்தன என்பதைச் சொல்வதோடு பெரியா ருக்கும் கம்யூனிசத்துக்குமான தொடர்பை விளக்குமுகமாக நூலாசிரியர் இவ்வாறு குறிப்பிட்டு எழுதுகிறார்.
"....பெரியார்தான், வரலாற்றுப் புகழ் வாய்ந்த கம்யூ னிஸ்ட் கட்சி அறிக்கையை, "சமதரும அறிக்கை' என்ற பெயரில் தமிழில் முதன்முதலில் வெளியிட்டு அறிமுகப் படுத்தினவர். (இந்திய மொழிகளில் தமிழில்தான் அது முதன் முதலில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது). அதைச் செய்தவர் பெரியார்! அதற்கு முன்னுரை எழுதுகிற பெரியார், அப்பொழுது ஒன்றைச் சொன்னார்:- 'இந்த உலகத்தில் இருக்கிற முதலாளித்துவ பூதத்தை விரட்டியடிப்பதற்கு இரண்டு ஜெர்மானிய இளைஞர்கள் முன்வைத்த கருத்தை நாங்கள் உங்களுக்கு முன்வைக்கிறோம். இந்தக் கருத்து முளைத்த இடம் ஜெர்மனியாக இருந்தாலும், அதற்காக மாநாடு கூடிய இடம், இங்கிலாந்தாக இருந்தாலும், அதில் முதல் புரட்சி கண்ட இடம், பிரான்ஸாக இருந்தாலும், வெற்றி பெற்ற இடம் ருஷ்யாவாக இருக்கிறது. ஏனென்றால் அங்கு அந்த ஆட்சிக் கொடுமை அவ்வளவு அதிகமிருந்தது. அப்படிப் பார்த்தால், அதைவிடக் கொடுமை மிகுந்த இந்தியாவில் அல்லவா அது வந்திருக்க வேண்டும். இந்த நாட்டில் முதலாளி-தொழிலாளி, ஏழை-பணக்காரன் என்ற பேதம் மட்டும் இல்லாமல் உயர்த்திக்கொண்ட ஜாதி- ஒடுக்கப்பட்ட ஜாதி என்கிற ஒன்று கூடுதலாகவும், முதன்மையாகவும் (பிரதான முரண்பாடு) இருக்கிறது. இதை மனதிற்கொண்டு இந்த அறிக்கையைப் படியுங்கள்" என்று எழுதுகிறார்.
லெனின் எழுதிய 'லெனினும் மதமும்', எங்கெல்ஸ் எழுதிய 'கம்யூனிசத்தின் கொள்கைகள்', பகத்சிங் எழுதிய 'நான் ஏன் நாத்திகனானேன்?' முதலிய நூல்களைத் தமிழில் மொழிபெயர்க்கச் செய்து, குடியரசுப் பிரசுரம் மூலமாக முதலில் வெளியிட்டவர் பெரியார்.! நாத்திகத்தை மார்க்ஸியத்தின் தொடக்கமாகவும், அறிவியல் வளர்ச்சி யின் முதிர்ந்த கோட்பாடாகவும் பெரியார் விளக்கிக் காட்டுற நூல்தான், 1934 இல் வெளிவந்த 'பிரகிருதிவாதம் அல்லது மெட்டீரியலிஸம்' என்பது! 1950 பிப்ரவரி 11ஆம் தேதி, சேலம் சிறையில் 22 பொதுவுடைமைத் தோழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டபோது, அதை எதிர்த்துத் தைரிய மாய்க் குரல் கொடுத்தவர் பெரியார் மட்டுந்தான்! 13-11-1932 'குடிஅரசு' இதழிலேயே, இயக்கத்தினர் அனைவரையும், இனி, தோழர் என அழைக்குமாறு எழுதியவர் பெரியார்!" (ப.23-24) எனச் சுட்டிக்காட்டுகிறார் நூலாசிரியர்.
அவ்வாறே அம்பேத்கரும் பெரியாரும் எதிரெதிர் சிந்தனைப் போக்குகளைக் கொண்டவர்கள். அவர்களுக் குள் கொள்கையளவில் அவ்வளவாக இணக்கமில்லை. முரண்பட்ட கோட்பாடுகளையும் திட்டங்களையும் கொண்டிருந்தார்கள் என்றெல்லாம் போகிற போக்கில் பிதற்றல் புழுதியை வாரி இறைப்பவர்களின் சிந்தை தெளியும் விதமாகச் செயல்பட்ட பெரியாரின் இருப்பை நூலாசிரியர் நினைவுகூர்கிறார்.
"அம்பேத்கர், பொதுவுடைமைச் சிந்தனையை முழுவதுமாய் ஏற்றுக்கொண்டிராத நிலையில், அதற்கு இனி எதிர்காலம் இல்லை என்று,பவுத்தம் என்கிற சமூகநீதியின் நிழலில் ஒதுங்கியபோதும், பெரியாரின் அடிப்படையாக, அம்பேத்கரின் சமூகநீதியும், ஜாதிய ஒழிப்பும், அவற்றை வரவொட்டாமலிருக்கிற இந்துமத எதிர்ப்பும் இருந்ததென்பது தெளிவு! வருணாசிரமத்தின் கடைநிலைக்கும் கீழாய் ஒடுக்கப்பட்டிருக்கிற பஞ்சமர் நிலையிலிருந்து அதன் வலியை எல்லோருக்குமாகப் பேசியவர் அம்பேத்கர்! பஞ்சமரை ஆதிச்சூத்திரன் என்கிறார் அம்பேத்கர்! வருணாசிரமத்தின் கடைநிலை யான சூத்திர (பஞ்சமரும்) நிலையிலிருந்து, 'சூத்திரஒழிப்பே' தன் ஆயுள்பரியந்த பணி என்று அறைகூவல் விட்டு, அதன் வலியை எல்லோருக்குமாகப் பேசியவர் பெரியார்! பஞ்சமர் விடுதலை இல்லாமல், சூத்திரர் விடுதலை நிகழாது என்பதை வலியுறுத்தியவர் பெரியார்!"
தன்னிலும் 12 வயது குறைவான அண்ணல் அம்பேத்கர் பற்றிப் பெரியார் சொல்வதைக் கேட்கலாம்: "தோழர்களே! உங்களுக்கு உற்ற தலைவர் அம்பேத்கர் என்றும், அவ ரால்தான் பஞ்சமர்கள், கடையர்கள், இழிபிறப்பு என்கின்ற கொடுமைகள் நீங்கும் என்றும் நம்பினேன். அதனாலேயே உங்களின் தலைவராக ஏற்றுக் கொள்ளும்படிப் பிரச்சாரம் செய்தேன். நானும் தலைவர் என ஏற்றுக் கொண்டேன்" என்கிறார். (ப 25-26)
இவ்வாறாக கம்யூனிசம் மற்றும் அம்பேத்கரியத்துடன் பெரியார் கொண்டிருந்த இயங்கியலைக் குறிப்பிடும் நூலாசிரியர் பெரியாரியம் என்பது வெறும் புத்தகச் சித்தாந்தமல்ல, அது மக்களைத் திரட்டுவதற்கான ஆயுதம் என வரையறுக்கிறார். சமூகத்தின் நடைமுறையை வாசிப் பதிலிருந்து உருவாகி நடைமுறையைத் திசைமாற்றுவதாகப் பயணப்பட்டுக்கொண்டே இருப்பதே பெரியாரியம் எனக் கூறுவதோடு 'கற்பி, போராடு, ஒன்றுசேர்' என்பதன் புது மறுவுருவாக்கம் என்றும் பதிவு செய்கிறார்.
"ஆக, மார்க்சியம், அம்பேத்கரியம் இரண்டினோடும் கருத்தியல் தளத்தில் இயைந்து, சமஉரிமைக்கான இரண் டின் கருத்தியலுடன் தனித்துவத்துடன் கலந்து, பாகு பாட்டைப் பேணும் இந்துத்துவத்தின் எதிர்நிலையில், சமவுடைமையின் நாத்திகக் கருத்தியலைப் பேசுப வராகவே பெரியார் நிற்கிறார். அதனாலேயே, சமூகநீதி பேசும் அம்பேத்கரை அரவணைக்கத் துடிக்கும் வலதுசாரி இந்துத்துவச் சக்திகள்கூட, அவர்கள் நெருங்கவே முடியா நெருப்பாக விளங்குகிற பெரியார் மீது வெறுப்பைக் கொட்டுகின்றன. மனிதகுல விரோதியாக விளங்குகிற-சமூக முன்னேற்றத்திற்குத் தடையாக விளங்குகிற-சிறு பான்மைச் சமூகத்தின் மீது வஞ்சினம் கொள்ளுகிற-வலதுசாரிப் பிற்போக்குச் சக்தியான ஆர்.எஸ்.எஸ். காவிக்கு எதிராக நின்று களமாடிக் கொண்டிருக்கிற பெரியாரின் கருத்தை நாம் புரிந்து கொள்ளவேண்டும்! ஏதோவொரு கிழவன், சமவுரிமை, பகுத்தறிவு, சுயமரியாதை, கடவுள் மறுப்பு, கருவறை நுழைவு என்று எதெதற்காகவோ எந்தச் சுய ஆதாயமுமின்றிக் கத்திக் கொண்டிருந்தான் என்று கருதாமல், உலகத் தத்துவங்களை உள்வாங்கிய, எல்லாவகையான ஆதிக்கங்களுக்கும் எதிரான, சமநீதியைத் தன் சங்கற்பமாய்க் கொண்டு முழங்கிய, இந்த மண்ணிற்கான ஒளியாகத் தமிழ் மண்ணில் உலா வந்தவர் பெரியார் என்று புரிந்துகொண்டால், அது சமூக மேம்பாட்டிற்கு நல்லது." (ப .32)
.என்று இந்துத்துவவாதிகளுக்கு இன்றைக்கும் பரம வைரியாகவே திகழ்ந்து வரும் பெரியாரை கனகச்சிதமாக மதிப்பிடுகிறார்.
பஞ்சமர்களைப் பற்றி பெரியார் கூறியவற்றிலிருந்து மேற்கோள் காட்டும் நூலாசிரியர் அங்கொன்றும் இங் கொன்றுமாகப் படித்துவிட்டு உளறல் மொழியில் பெரி யாரை ஏசிவரும் பிழையர்கள் பெரியாரைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதை அழுத்தமாகக் குறிப்பிடுகிறார்.
"பிரம்மனுடைய தலையிலிருந்து பிறந்தவன் பிரா மணன். தோளிலிருந்து பிறந்தவன் சத்திரியன். தொடை யிலிருந்து பிறந்தவன் வைசியன்.காலிலிருந்து பிறந்தவன் சூத்திரன் என்று மனு கூறுவதில், பஞ்சமன் எங்கிருந்து பிறந்தவன் என்ற ஒரு கேள்வியைக் கேட்க வைத்து, 'அவன் ஒருத்தந்தான் ஒழுங்கா அவுங்க அப்பா அம்மா வுக்குப் பொறந்தவன்போல' என்று போகிற போக்கில் சவுக்கை வீசிச் செல்கிற வீரியம் கொண்டவர் பெரியார். கடைசிவரைக்கும் பெரியார் சொல்வதைக் காது கொடுத் துக் கேளுங்கள் அல்லது கண்களை அகலத் திறந்து வைத்துப் பாருங்கள். அப்பொழுதுதான் பெரியார் கருத்தின் உண்மைக்குப் பக்கத்திலேகூட நீங்கள் எல்லாம் வரமுடியும்." (ப.53)
பெரியாரின் சைமன் கமிஷன் ஆதரவு, அரசமைப்புச் சட்டநகல் எரிப்பு, இடஒதுக்கீடு போராட்டம், வகுப்புவாரிப் பிரதிநிதித்துவக் கருத்தாக்கத்தின் நிலைப்பாடு, ஹிந்தி எதிர்ப்பு தொடர்பான கருத்து மாற்றங்கள், மனைவி நாகம்மாள் மரணத்தின் போதான வெளிப்பாட்டு யதார்த்த மனநிலை, மணியம்மையார் திருமணத்திற்கான தன்னிலை விளக்கம் என இன்னுமின்னும் பெரியார் எடுத்த வெவ் வேறு முடிவுகள் குறித்து மட்டுமல்லாது அவரது துணிச் சலான, நேர்மையான, செயல்பாடுகளை விரிவாக விவ ரிக்கவும் விவாதிக்கவும் செய்யும் இந்நூல் தக்கதொரு தருணத்தில் வெளிவந்திருக்கும் ஆக்கபூர்வத் தேவை யாகும்.
அறிந்தோர்க்கும் அறியாதோர்க்கும்கூட பெரியாரை முழுமையாகப் புரிந்துகொள்வதற்கு இந்நூல் துணை செய்யும் என்பதில் வேறு கருத்தில்லை.
No comments:
Post a Comment