VR அப்துர் ரஹ்மான் M.E., M.A.,
மனிதவள மேம்பாட்டுப் பயிற்சியாளர், தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம்
தியாகம் என்ற சொல்லுக்கு உண்மையில் தகுதியானவர்கள் பெற்றோர்கள்.
தன் பிள்ளைகளை உருவாக்க, தன்னையும், தனது தன்மானத்தையும் ஒருசேர மறந்து வாழ்பவர்கள் தாயும், தந்தையும். இப்படி வாழும் ஒவ்வொரு பெற்றோரின் உள்ளங்களிலும் இருக்கும் ஆகப்பெரிய ஆவல், தங்களது பிள்ளைகளின் நல்வாழ்வு. ஆவல் மட்டுமல்ல, எதிர்பார்ப்பு, கனவு, சிந்தனை, நம்பிக்கை, இலட்சியம் என எல்லாமுமே அவர்களுக்கு தங்களது பிள்ளைகள்தான்.
இத்தகைய பெற்றோர்களைப் பொறுத்தவரை தங்களது குடும்ப நிலை மாறுவதும், உறவினர் முன் தலைநிமிர்ந்து நிற்பதும், பொருளாதார முன்னேற்றம்பெறுவதும், ஊரில் கவுரவத்தோடு வாழ்வதும் என அனைத்தும் அடங்கியிருப்பது தங்களது பிள்ளைகளின் எதிர்கால வாழ்வில் தான்.
இப்படி எண்ணற்ற சிறகுகளை ஏந்தி பறந்து கொண்டிருக்கும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அறிவில் சிறந்தவர்களாக உருவாக்கிட ஓயாமல் உழைத்துக் கொண்டு இருக்கின்றனர். நல்லமதிப்பெண்களுக்காக, நல்ல வேலைக்காக எதையும் செய்திட தயாராக இருக்கும் பெற்றோர்களிடம் ஒரே ஒரு கேள்வி குறித்து சிந்திக்க வேண்டுகிறேன்.
“நமது பிள்ளையை அறிவா வாளியாக உருவாக்கிடத் துடிக்கும் அளவிற்கு நல்ல மனிதனாக உருவாக்கியெடுக்க நினைக்கின்றோமா?”
அறிவாளிப் பிள்ளையா? நல்லப் பிள்ளையா?
உண்மையில் ஒருவன் அறிவாளியாக இருப்பதைவிட நல்லவனாக வாழ்வது தானே சரி! மிகச்சிறந்த அறிவு வளமிக்க ஒருவன், ஒழுக்க நெறியில் தப்பும் தவறுமாக இருந்தால் அவன் சமூகத்திற்கான அச்சுறுத்தலாக மாறிப்போவானே!
‘அறிவை பெருக்கிட அத்துணை வாசல்களையும் திறந்துவிடும் நாம், ஒழுக்கம் குறித்து ஒரு சிறு புள்ளியையாவது வைத்திருப்போமா?”
நீங்கள் கூறலாம். என் பிள்ளைக்கு எந்தக் கெட்ட பழக்கமும் இல்லை. நல்ல மதிப்பெண்கள் பெறுகிறான். எந்த பெண்ணிடமும் அவன் பேசமாட்டான். என் பெண் பிள் ளையோ குனிந்த தலை நிமிராமல் பள்ளிக்கூடம் விட்டால் வீடு - வீடு விட்டால் பள்ளிக் கூடம் என்று இருப்பவள். படிப்பில் படுச்சுட்டி. இதில் ஒழுக்கத்தைப் பற்றி கவலைப்பட என்ன இருக்கிறது!? ‘
சரிதான். ஆனால் மதிப்பெண்கள் மட்டுமே நல்லொழுக்கத்திற்கான அளவுகோல் என்று நிர்ணயித்துவிட முடியுமா? பிள்ளைகள் வீட்டில் இருப்பது போல்தான் வெளியிலும் இருக்கிறார்கள் என கூறிவிடமுடியுமா? தனிமையில் இருக்கும் போது என்ன செய்கிறார்கள் என்று அறிந்திட முடியுமா?
ஒரு பிள்ளையை உருவாக்கி யெடுப்பதில் வீட்டைத் தாண்டி சமூகத்தின் பங்கு அதிகம்
ஆனால் அறியாமைக்கால அனாச்சாரங்களால் நிறைந்திருக்கும் இன்றைய வெளியுலகம் நம் பிள்ளைகளின் மனதில் ஏற்படுத்தும் தாக்கம் எத்தகையது என்று புரிந்து வைத்திருக்கிறோமா? உடல் போதைக்கு அடிமையாகாத பிள்ளையின் உள்ளத்தில் குடியிருக்கும் மயக்கங்கள் எத்தகையது என்று சிந்தித்தது உண்டா?
‘இதையெல்லாம் பார்த்தால் பெற்றோரும் பிள்ளைகளும் எதிரியாகித்தான் போவார்கள்.
எந்த பிள்ளைகளையும் அடிப்படை விழுமியங்களில் கூட உருவாக்கியெடுத்திட முடியாது’ என்று நீங்கள் கூறலாம்.
இந்த வாதம் சரியில்லை என்றாலும் கூட, நீங்கள் கூறும் அடிப்படை விழுமியங்கள் குறித்த சிலவற்றை சிந்திப்போம்.
இன்றைய பிள்ளைகள் பெற்றோர்களது பேச்சை கேட்கிறார்களா?
பெற்றோர்களின் கருத்துரைகளை மதிக்கிறார்களா?
தாய்க்கும் தந்தைக்கும் செய்ய வேண்டிய கடமைகள் பல உள்ளனவே, அவைகளில் சிறிதளவேனும் செய்கிறார்களா?
குடும்பத்தில் இருக்கும் பெரியவர்களுக்கு எந்தளவு முக்கியத்துவம் தருகிறார்கள்?
விட்டுக்கொடுத்தல், சகிப்புத்தன்மை, நிதானம், பொறுமை ஆகிய தன்மைகளோடு இருக்கிறார்களா?
வீட்டிற்கு வரும் உறவினர்கள் நண்பர்களை கண்ணியமான முறையில் நடத்துவது எப்படி என்று பிள்ளைகளுக்கு தெரியுமா?
உறவுகளை பேணுவது என்றால் என்னவென்று தெரியுமா?
குறைந்தபட்சம் தனது உறவுகள் யார் யார் என்றாவது தெரியுமா?
இப்படி அடிப்படை விழுமியங்கள் பற்றி ஆயிரம் கேள்விகளை கேட்கலாம். ஆனால் எத்தனைக் கேள்விகளுக்கு நேர்மையான பதில்கள் உள்ளது? ஒரு சில பிள்ளைகள் விதிவிலக்காக அனைத்திலும் சிறப்புற்றிருக்கலாம்.
“விதிவிலக்குகள் விதியாவதில்லை”
இதற்கு உங்களது பதில் இதுவாக இருக்கலாம்: ‘நீங்கள் கூறுவது சரிதான். ஆனால் பெற்றோர்களே எல்லாவற்றையும் சொல்லித்தர முடியாதே. அதற்குத்தானே பள்ளிக்கூடம் அனுப்புகிறோம். அவர்கள்தானே ஒழுக்கத்தை போதிக்க வேண்டும்?”
இந்த வாதத்தை முழுமையாக ஏற்கவும் முடியாது, மறுக்கவும்முடியாது.பெற்றவர்களுக்கு இல்லாத அக்கறை மற்றவர்களுக்கு இருக்குமா என்ன? ஆனால் அதே சமயம் பள்ளிக்கூடம் என்பது நாம் சற்று ஆழமாக சிந்திக்க வேண்டிய ஒரு பகுதி.
பிள்ளைகளின் உள்ளம் - கவனிக்கத் தவறிய கல்விமுறை
பள்ளிக்கூடம் செல்லும் நமது பிள்ளைகளை நன்றாக கவனித்தால் நமக்கு ஒரு விஷயம் புரியும். ஒவ்வொரு வகுப்பாக முன்னேற முன்னேற பிள்ளைகள் பெற்றோர்களின் கட்டுப்பாட்டில் இருந்து மெல்ல விலகியிருக்க விரும்புவார்கள் அல்லது கட்டுப்பாட்டில் தளர்வுகளை எதிர்பார்ப்பார்கள்.
இதற்குக் காரணம் அந்தந்த வயதில் உருவாகும் உணர்ச்சிகளும் உணர்வுகளும்தான். ஆனால் இவைகள் முறையாக பக்குவப்படுத்தப்பட வேண்டும். அந்த பக்குவத்தை தருவதுதான் கல்வியின் கடமையும் பொறுப்பும் ஆகும்.
ஆனால் நமது கல்விமுறையோ இதன் மீது எந்தக் கவனமும் அக்கறையும் இல்லாமல் இருக்கிறது. இன்றைய கல்விமுறை என்ன தருகிறது என்பதை பிறகு சிந்திக்கலாம். தரவேண்டியதை தருவதில்லையே என்பதுதான் வருத்தம்.
இதில் வருத்தப்பட என்ன இருக்கிறது? இது ஒன்றும் பெரிய குற்றம் இல்லை. ஒரேயடியாக கட்டுப்பாடுகளை விதித்து பிள்ளைகளை கசக்கிப் பிழியக்கூடாது.
பிள்ளைகளை அவர்கள் போக்கில்விட்டுதான் வளர்க்க வேண்டும். அவர்களுக்கென்று Personal Space கொடுக்க வேண்டும். அவர்களுக்கும் Privacy தேவைப்படும்தானே!
பிள்ளை நன்றாகப் படித்தால் போதும். மற்றதெல்லாம் வளர வளர சரியாகிவிடும் என்று யாராவது கூறினால், அவர்களுக்கு அரங்கேறிக் கொண்டிருக்கும் சிக்கலின் விபரீதம் புரியவில்லை என்றுதான் அர்த்தம்.
பதின்வயது பிள்ளைக்கு Privacyயின் தேவை என்ன? Personal Space தேவைப்படுகிற அளவிற்கு அப்படி என்ன பெரும் பாரங்களை தூக்கி சுமக்கிறார்கள்? Privacy, Personal Space என்ற வார்த்தைகளெல்லாம் பெற்றோர்களிடம் ஒரு விஷயத்தை மறைப்பதற்காகத்தான் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது.
“பகிரங்கமாக வெளியில் சொல்ல வெட்கப்படுகின்ற செயல்களில், நீ தனிமையில் இருக்கும்போது ஈடுபடாதே”
என்று தன் மகள் இந்திராகாந்திக்கு ஜவஹர்லால் நேரு அறிவுறுத்தினார்.
இன்று தனிமையை கேட்கும் பிள்ளைகளில் எத்தனைபேர் இதில் தேர்ச்சி பெறுவார்கள்?
“வெறுமையான உள்ளமும் சூழலும் தீய எண்ணங்கள் பணிபுரியும் பட்டறை’
சில புள்ளி விவரங்களையும் தகவல்களையும் அறிந்து கொண்டால், நமது பிள்ளைகளின் உள்ளங்களின் மீது தீய எண்ணங்கள் தொடுத்திருக்கும் போர் எத்தகைய வீரியமானது என்று புரியும்.
1. மன அழுத்தம்
2018- ஆம் ஆண்டின் கணக் கெடுக்கின்படி,
“உலகிலேயே அதிக மனஅழுத்தம் கொண்டுள்ள நாடு, இந்தியா”
(India Today - 10 Oct 2018)
இங்கு சராசரி வாழ்வு வாழும் எவர் மனதிலும் நிம்மதி இல்லை. குறிப்பாக பதின்பருவ பிள்ளைகளும், இளைஞர்களும் மன அழுத்தம் உள்பட மற்றபிற மனசிக்கல்களால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.
இந்தியர்களில்,
தனக்குத்தானே பேசிக்கொள்பவர்கள் - 56%
மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் - 49%
சோம்பேறிகள்/மந்தமான மனநிலை கொண்டவர்கள் - 47%
முட்டாள்தனமானவர்கள் - 40%
பொறுப்பற்றவர்கள் - 38%
பகல்கனவு காண்பவர்கள் - 36%
பிறரோடு பழகத் தெரியாதவர்கள் - 34%
எளிதில் கவனச்சிதறலுக்கு உள்ளாகுபவர்கள் - 33%
சோகமும் கவலையுமாக இருப்பவர்கள் - 32%
எந்நேரமும் சுத்தம் செய்து கொண்டே இருப்பவர்கள் - 30%
மனச் சீரழிவிற்கு ஆளாகுபவர்கள் - 29%
மூளை குறைபாடோடு பிறப்பவர்கள் - 26%
வன்முறைக்கு ஆட்படுபவர்கள் - 25%
ஒன்றிற்கு மேற்பட்ட மனச் சிக்கல்களோடு தான் இங்கிருக்கும் ஒவ்வொருவரும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இவைகள் 2000க்கு பிந்தைய இளவல்களுக்கான இனிய சாபங்கள். இந்த சிக்கல்களால், இளைய சமுதாயம் அடைந்திருக்கும் ஆபத்துகள் பற்பல.
2. தற்கொலைகள்
இந்தியா தனது மாணவர் தற்கொலை நெருக்கடியை எப்போது தீர்க்கும்?”
(Fair observer-25 Feb 2019)
உலக சுகாதார அமைப்பு (WHO - World Health Organization) வெளியிட்ட தகவல்களோடு மற்ற பிற தகவல்களும் இந்த இணையதள பத்திரிகையில் வெளியிடப்பட்டது.
இந்தியாவில், Dec 2018ஆம் ஆண்டு கோட்டா மற்றும் ராஜஸ்தானில் நான்கு நாள்களில் மூன்று மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர்.
ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒரு மாணவர் தற்கொலை செய்து கொள்கிறார்.
அதிக தற்கொலை விகிதம் நடக்கும் வயது 15 முதல் 29 வயது வரை.
ஆண்கள் அதிகம் தற்கொலை செய்துகொள்ளும் நாடுகளில் இந்தியா 4ஆவது இடம்.
ஜாதி அடிப்படையிலான பாகுபாடு மாணவர் தற்கொலைக்கான ஆணிவேர்
பாடச்சுமை தரும் மன அழுத்தம் தற்கொலைக்கு ஒரு முக்கிய காரணம்.
பொதுத் தேர்வுகளுக்கும், போட்டித் தேர்வுகளுக்கும் தயாராகும் மாணவர்கள்
ஒரு நாளைக்கு 14 மணிநேரம் படிக்கின்றனர். ஒரு ஆண்டுக்கு ஒரு நாள் மட்டுமே விடுமுறை எடுக்க அனுமதிக்கப்படுகின்றனர்.
முன்னிலை மதிப்பெண்கள் பெறாத மாணவர்கள். பெற்றோர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முடியாததால் குற்ற உணர்ச்சிக்கும், மன அழுத்தத்திற்கும் ஆளாகுகிறார்கள்.
தேர்வில் தோல்வி காரணமாக சராசரியாக ஒரு நாளைக்கு 7 மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர்.
2016ஆம் ஆண்டு தேர்வில் தோல்வி காரணமாக 2413 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள்.
இந்தியாவில் மாணவர்கள் தற்கொலை முடிவு எழுதப்படாத தொடர்கதை.
இந்த பட்டியல் ஏதோ மலை கிராமத்தில் வாழும் நாட்டுப்புறக் மாணவர்களுக்கு என்று எண்ணிவிடாதீர்கள். இவைகள் நன்கு படித்த பெற்றோர்கள் நிறைந்திருக்கின்ற, கல்விக்கென அதிக பணம் புரளுகின்ற பெருநகரங்களில்தான் அதிகமாக நடக்கின்றது.
கல்வியே தன் குழந்தைகளின் உயிரை வாங்குவது, இந்திய மண்ணின் சாபக்கேடு.
3. விவாகரத்துக்கள்
மும்பையிலும், டில்லியிலும் 40% திருமணங்கள் விவாகரத்தில் முடிகின்றது.” (The Times of India - March 26, 2018)
“இந்தியாவில் விவாகரத்து பெற்றவர்களின் எண்ணிக்கை 13,60,000.
விவாகரத்து பெற்றவர்களை போன்று மூன்று மடங்கு மக்கள் பிரிந்து வாழ்கின்றனர்””(BBC News - September 29, 2016)
பெருகிவரும் விவாகரத்துக்கள் இந்திய தேசத்தின் மிகப் பெரும் அச்சுறுத்தலாக உருவாகி வருகின்றன. அதிலும் அதிகம் விவாகரத்து கேட்டு வருபவர்கள் பெண்கள்தான்.நன்றாக படித்து மிகப்பெரிய பட்டங்களை பெற்றவர்களும், பொருளாதாரத்தில் பெரும் திருப்தி பெற்றவர்களும்தான் விவாகரத்து பெறுவதிலும் அதிகமாக இருக்கின்றனர். அழகும், பொருளாதாரமும், குடும்ப கவுரவமும் இவர்களை ஒன்றிணைக்கிறது. குணங்களும், பண்புகளும் இல்லாத உள்ளங்கள் சகமனிதர்களோடு சேர்ந்து வாழ்வது என்பது ஒரு நாளும் சாத்தியமில்லை.
4. முதியோர்கள்
அகில இந்திய மூத்த குடிமக்கள் கூட்டமைப்பு (AISCCON-All India Senior Citizens Confederation) மேற்கொண்ட 2015-2016ஆம் ஆண்டுக்கான கணக்கெடுக்கின்படி இந்தியாவில் வாழும் முதியவர்களில், தங்கள் குடும்பத்தினருடன் சேர்ந்து வசித்தும், உரிய முறையில் நடத்தப்படாமலோ அல்லது துன்புறுத்தலுக்கோ ஆளாக்கப்படுபவர்கள் - 60%
மிகவும் ஏழையாக அல்லது வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்பவர்கள் - 66%
கைவிடப்பட்டவர்களாகவோ அல்லது தனியாகவோ வாழ்பவர்கள் - 39%
சிறுபிராயத்தில் பிள்ளைகளுக்கு எதை கொடுக்கின்றோமோ அதையேதான் வளர்ந்த பிறகு பிள்ளைகளும் திருப்பித் தருவார்கள். அன்பை ஊட்டி வளர்க்கும் பெற்றோர்கள் அதைவிட அதிகமாக பொருளாதார சிந்தனையை ஊட்டி வளர்த்தால் வளர்ந்த பின் என்ன தரும்?
மேற்கு வங்காளத்தில், பள்ளி ஆசிரியராக பணிபுரிந்த சியாமாலி பால்ஜாஷ் என்னும் 65 வயது முதிய பெண்ணின் மகன் IIT இல் பட்டம் பெற்றவர். பிறகு வெளிநாட்டில் வேலைக்கு சேர்ந்ததோடு தன் தாயைக் கண்டு கொள்ளாமல் கைகழுவிவிட்டார்.
குடும்ப சண்டையின் காரணமாக சியாமாலி தன் கணவரிடமிருந்தும் பிரிந்துவிட்டார். தன் மகனும் தொடர்ந்து கைவிட்ட தலால் பர்த்வான் நகரில் இருந்து கொல்கொத்தா வந்தார்.
இறுதியில் சியாமாலி பால்ஜாஷ் அய் காவல்துறை கண்டுபிடிக்கும் போது, அவர் கந்தலான ஆடையோடு தெருவில் அலைந்து திரிபவராக இருந்தார்(India Today- May 7, 2018)
“தனிமை வாழ்வு தரும் மனநல பிரச்சினைகள் மிகவும் தீவிரமானவை,குறிப்பாக வயதானவர்களுக்கு”
5. சமூக சீர்கேடுகள்
சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகளுக்கும் மேலாகியும். இந்தியா இன்னும் வளரும் நாடு என்று முத்திரை குத்தப்படுகிறது. இந்தியாவில் தற்போதுள்ள சில முக்கிய பிரச்சினைகள், நம் நாட்டின் வளர்ச்சியைத் தடுக்கின்றன.
ஊழல்
தனிமனித ஒழுக்கமின்மை - பெண்கள் பாதுகாப்பின்மை
அடிப்படை சுகாதாரமின்மை - விவசாயிகள் தற்கொலை
வறுமை
கல்வி முறை & கல்வியறிவின்மை
வேலை வாய்ப்பின்மை
சுற்றுசூழல் சீரழிவு
தேசத்தின் உள்கட்டமைப்பு
பொருளாதார வீழ்ச்சி
சட்டம் ஒழுங்கு சீர்கேடு
அராஜகமும் அடக்குமுறைகளும்
அதிகமாகுதல்
எழுச்சி
உலகளாவிய பாதுகாப்புவாதத்தில்
இந்த சிக்கல்களுக்கெல்லாம் யார் காரணம் என்று சற்று பின்னோக்கி தேடிப்பார்த்தால் அங்கே படித்த மூளை ஒன்று ஒய்யாரமாக அமர்ந்து நடக்கும் சீரழிவுகளையெல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும். ஒழுக்க நெறிகள் இல்லாத உள்ளம் இருக்கும் இடமெல்லாம் நாசக் குரல்கள் ஓங்கி ஒலித்துக்கொண்டேதான் இருக்கும்.
ஒரு அய்ம்பது அல்லது அறுபது இந்த ஆண்டுகளுக்குப் பிறகு தகவல்களெல்லாம் காலங்கடந்தவையாக மாறிப்போகலாம்.
ஆனால் இந்த சிக்கல்களை குறித்து நாம் இன்று சிந்திக்க தவறினால், நூறு ஆண்டுகளானாலும் நமது சந்ததிகள் குப்பைகளாக மாறிப்போவதை யாராலும் தடுக்க முடியாது.
நமது பிள்ளைகளுக்கு ஒரு உணவையோ, உடையையோ வாங்கித்தர வேண்டுமென்றால், எவ்வளவு தூரம் தேடி அலைகிறோம்? ஏன்? நமது பிள்ளைகள் சிறந்ததை பெறவேண்டும் என்பதற்காக! அவர்களுக்கு எந்த தீங்கும் வந்துவிடக்கூடாது என்பதற்காக! ஆனால் எல்லா வகையான தீங்குகளும் உருவாகும் இடம், உள்ளம்.
உள்ளத்தின் உணர்வுகளும் உணர்ச்சிகளும் பக்குவப்படுத்தப்படா விட்டால் மொத்தமும் நாசகதியாகி விடுமே! இது குறித்து என்றாவது நாம் சிந்தித்தது உண்டா?
பிள்ளைகளின் எதிர்கால வாழ்வின் மீது மிகுந்த அக்கறை கொண்டிருக்கும் பெற்றோர்களிடம், மீண்டும் அதே கேள்வியை கேட்டு இந்த பகுதியை நிறைவு செய்கிறேன்.
“நமது பிள்ளையை அறிவாளியாக உருவாக்கிட துடிக்கும் அளவிற்கு நல்ல மனிதனாக உருவாக்கியெடுக்க நினைக்கின்றோமா?”
- நன்றி: சமூகநீதி முரசு, மே 2023
No comments:
Post a Comment