‘‘பதவி எங்களுக்குக் கால் தூசு; பிரச்சாரமும், போராட்டமுமே எங்கள் உயிர்மூச்சு!''
இந்தியாவிலேயே, ஏன் உலகத்திலேயே தந்தை பெரியார் உருவாக்கிய திராவிடர் கழகத்திற்கு ஒப்பான இயக்கம் கிடையாது!
இது பெருமையல்ல; வரலாற்று உண்மை - மறுக்கப்பட முடியாத உண்மை!
ஈரோடு, மே 26 பதவி எங்களுக்குக் கால் தூசு. பிரச் சாரமும், போராட்டமுமே எங்கள் உயிர்மூச்சு என்று கருதுகின்ற ஒரே ஓர் இயக்கம் இந்தியாவிலேயே, ஏன் உலகத்திலேயே தந்தை பெரியார் உருவாக்கிய இந்தத் திராவிடர் கழகத்திற்கு ஒப்பான இயக்கம் கிடையாது. இது பெருமை அல்ல; வரலாற்று உண்மை - மறுக்கப்பட முடியாத உண்மை என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
ஈரோடு: திராவிடர் கழகப் பொதுக்குழு
கடந்த 13.5.2023 காலை ஈரோட்டில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக்குழுவில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி கருத்துரையாற்றினார்.
அவரது கருத்துரை வருமாறு:
மிகுந்த எழுச்சியோடு, நாம் எதிர்பார்த்ததைவிட, மிக அதிகமான எழுச்சியோடு ஈரோட்டில் நடைபெறக்கூடிய திராவிடர் கழகப் பொதுக்குழு - அதனுடைய ஏற்பாடுகள் நடந்து - ஒருமுறை தள்ளி வைக்கப்பட்டது என்றாலும் கூட, அதைப்பற்றி கவலைப்படாமல், மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்த திராவிடர் கழகப் பொறுப்பாளர்கள் - அவர்கள் அத்துணை பேரையும் ஒருங்கிணைத்து பணி களைச் செய்கின்ற அமைப்புச் செயலாளர் தோழர் சண் முகம் உள்பட அனைவருக்கும் என்னுடைய நெஞ்சம் நிறைந்த பாராட்டுகளை முதற்கண் உரித்தாக்குகின்றேன்.
கொள்கை தெரிந்தவர்கள்தான்
இங்கே இருக்கின்றோம்
அருமைத் தோழர்களே, நம்முடைய இயக்கம் ஒரு குடும்பம் - ஒரு கொள்கைக் குடும்பம். பல நேரங்களில் இதுபோன்ற பொதுக்குழுவில், பொதுக்கூட்டங்களில் பேசவேண்டிய கொள்கை விளக்கங்களையெல்லாம் இங்கே பேசவேண்டிய அவசியம் கிடையாது. ஏனென் றால், கொள்கை தெரிந்தவர்கள்தான் இங்கே இருக் கின்றோம்.
நமக்கு இருக்கின்ற பெருமை, திராவிடர் கழகத்திற்கு இருக்கின்ற பெருமை- பெரியார் தொண்டர்கள், கருப்புச் சட்டைக்காரர்கள் என்று சொன்னால், கருப்புடை தரித்தோர் என்று சொன்னால், அவர்களுக்கு எது பெருமை?
பணக்காரர்கள் என்பதா? அல்லது
பதவியாளர் என்பதா? அல்லது
ஊரில் செல்வாக்குள்ளவர்கள் என்பதா? அல்லது
‘‘இவர்கள்தான் அதிகமான அளவிற்கு இருக்கிறார் கள்; பெரும்பான்மை சார்ந்தவர்களாக இருக்கிறார்கள்; அவர்களுடைய தயவு நமக்குத் தேவை - ஆகவே, அவர்களை நாம் எப்படியாவது நம் வயப்படுத்தியாக வேண்டும்'' என்று மக்கள் எதிர்பார்க்கின்ற நிலையில் நாம் இருக்கின்றோமா என்றால், இல்லை.
ஊருக்கு 10, 20 பேர் இருப்பார்கள் கருப்புச்சட்டைக் காரர்கள் - அது உண்மை. அதற்காக நாம் வெட்கப்படவேண்டிய அவசியமில்லை.
வெறும் உணர்ச்சிப்பூர்வமான இயக்கமல்ல; வருவாயைக் காட்டி அழைக்கின்ற இயக்கமல்ல!
இந்தக் கொள்கையை ஏற்று, சுயமரியாதைக் கொள் கையை, பகுத்தறிவுக் கொள்கையை - திராவிட இயக்கத் தினுடைய மூச்சான சமூகநீதிக் கொள்கையை, செயல் படுத்துவதற்கு நமக்கு உள்ள வாய்ப்பு - எல்லோருக்கும் கிடைக்காது. ஏனென்றால், இது அறிவியக்கம் - இது வெறும் உணர்ச்சிபூர்வமான இயக்கமல்ல; அல்லது வருவாயைக் காட்டி அழைக்கின்ற இயக்கமல்ல.
திராவிடர் கழகத்தின் சிறப்பு!
நம்முடைய இயக்கத்திற்குப் பெரிய வாய்ப்பு என்னவென்றால் நண்பர்களே, நம்முடைய இயக்கம் என்பது தனித்தன்மையான இயக்கம்.
ஊருக்கு இரண்டு, மூன்று பேர்தான் இருப் பார்கள்; அவர்கள் மிகச் சிறுபான்மையாக இருப் பார்கள். ஆனால், அவர்களை மதிக்க முடியாமல் இருக்க முடியாது.
இதுதான் இந்த இயக்கத்திற்கு இருக்கின்ற சிறப்பு.
திராவிடர் கழகத்துக்காரனை புறந்தள்ள முடியாது.
ஒரே ஒரு கருப்புச் சட்டைக்காரர் கூட்டத்தில் இருந்தாலும்கூட, அந்தக் கருப்புச் சட்டைக்கு ஒரு தனி மரியாதை உண்டு.
ஏனென்றால், நாம் எதை வைத்து அளக்கப் படுகின்றோம் என்று சொன்னால் நண்பர்களே, கொள்கையால் அளக்கப்படுகின்றோம்.
நம்முடைய தன்னலமறுப்பால், மற்றவர்கள் நம்மை மிகப்பெரிய உயரத்தில் வைத்துப் பார்க்கிறார்கள்.
ஆசையிலேயே மிக மோசமான ஆசை
பதவி ஆசைதான்
பஞ்சாயத்துத் தேர்தலில்கூட நிற்கக்கூடாது என்கின்ற ஓர் இயக்கம்; அந்த ஆசையைக்கூட வளர்க்காதே என்று சொல்கின்ற ஓர் இயக்கம்.
புத்தர் சொன்னார், ஆசையை விடு, ஆசையை விடு என்று.
இருக்கின்ற ஆசையிலேயே மிக மோசமான ஆசை பதவி ஆசைதான்.
பத்தும் பறந்து போகும் பதவிக்காக என்பார்கள்; 10 இல்லை, எத்தனை வேண்டுமானாலும் பறந்து போகும்.
வரலாற்று உண்மை -
மறுக்கப்பட முடியாத உண்மை!
அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில், ‘‘அந்தப் பதவி எங்களுக்குக் கால் தூசு. பிரச்சாரமும், போராட்டமுமே எங்கள் உயிர்மூச்சு!'' என்று கருதுகின்ற ஒரே ஓர் இயக்கம் - இந்தியாவிலேயே, ஏன் உலகத்திலேயே தந்தை பெரியார் உருவாக்கிய இந்தத் திராவிடர் கழகத் திற்கு ஒப்பான இயக்கம் கிடையாது. இது பெருமை அல்ல; வரலாற்று உண்மை - மறுக்கப்பட முடியாத உண்மை. அதை நன்றாக நீங்கள் நினைத்துப் பார்க்க வேண்டும்.
அப்படிப்பட்ட இந்த இயக்கம் வளர்ந்து கொண் டிருக்கிறது.
தந்தை பெரியார்தான் சொல்வார், இது இயக்கம் - கட்சியல்ல.
கட்சி என்பது வேறு; இயக்கம் என்பது வேறு.
திராவிடர் கழகம் இயக்கம். இது கட்சி அல்ல.
இயக்கம் என்பதற்கு, இந்த அரங்கத்தில் உள்ளவர்கள் மட்டும்தான் உறுப்பினர் என்று கிடையாது. எங்கோ ஒரு மூலையில் இருக்கிறார் பாருங்கள், அவரும் இந்த இயக்கத்தைச் சார்ந்தவர்தான். விபூதி பட்டையை நெற்றியில் பூசியிருப்பார்; அவர்கூட, இந்த இயக்கம் என்ற சூப்பர் மார்க்கெட்டில், இரண்டு, மூன்று பொருள் கள் வேண்டுமென்றால், இங்கே வந்துதான் வாங்கிச் செல்வார் - பெரியார் என்கின்ற சூப்பர் மார்க்கெட்டில்.
இயக்கத்தினுடைய தனிப் பெருமையும், இதனுடைய வளர்ச்சியும் அபரிமிதமானது!
அப்படிப்பட்ட ஓர் இயக்கம் இது. இந்த இயக்கத் தினுடைய தனிப் பெருமையும், இதனுடைய வளர்ச்சியும் அபரிமிதமானது.
தந்தை பெரியார் அவர்கள் 50 ஆண்டுகளுக்கு முன்பு - 1973 ஆம் ஆண்டு மறைந்தபொழுது - கொஞ்சம் திரும்பிப் பாருங்கள் - இங்கே வயதானவர்கள் இருக்கிறீர்கள் - அய்யா பொத்தனூர் சண்முகம் போன்ற வர்கள், வயதாகிக் கொண்டிருக்கின்ற எங்களைப் போன்றவர்களும் இருக்கின்றோம் - இன்றைய இளைய தலைமுறையினர் இதைத் தெரிந்துகொள்ளவேண்டும்.
பெரியாரோடு இந்த இயக்கம் காணாமல் போய்விடும் என்று நினைத்தார்கள்!
பெரியார் மறைந்தபொழுது என்ன சொன்னார்கள் தெரியுமா? ‘‘பெரியார் மறைந்துவிட்டார்; அதோடு எல்லாம் முடிந்து போயிற்று; ஊருக்கு நான்கு பேர் வயதானவர்கள் இருப்பார்கள்; பெரியார் கூட்டம் போடச் சொன்னால், அவர்கள் கூட்டம் போடுவார்கள்; அவர்களோடு அந்த இயக்கம் முடிந்து போய்விடும்'' என்று.
ஆனால், நடந்தது என்ன?
இன்றைக்குப் பெரியார் - சதையும், ரத்தமுமாக இருக்கக் கூடிய உருவமாக இல்லாவிட்டாலும்கூட, கொள்கைகளாக, லட்சியங்களாக இருக்கக்கூடிய தத் துவமாக அவர்கள் மாறிவிட்ட நிலையிலே, பெரியாரின் படத்தைக் கண்டே பயப்படுகிறார்கள்; பெரியாரின் சிலையைக் கண்டே அலறுகிறார்கள்; பெரியாருடைய வார்த்தையைக் கண்டே அவர்கள் இன்னமும் பயப்படுகிறார்கள்.
இந்த சக்தி வேறு எந்தக் கொள்கைக்கும் கிடையாது.
பெரியார் என்பவர் ஒரு கொள்கை எரிமலை; அந்த எரிமலையை யாராலும் அணைக்க முடியாது
அம்பேத்கரைகூட வயப்படுத்திவிட்டார்கள்; அம் பேத்கரைகூட அணைத்துவிட்டார்கள். ஆனால், பெரியாரிடம் அவர்களின் வித்தைகள் எடுபடவில்லை.
அதற்கு என்ன காரணம்? என்பதை நான் நீண்ட காலத்திற்கு முன்பே சொன்னேன்.
அம்பேத்கர் இமயமலை போன்று உயர்ந்திருக்கிறார்; அதன்மேல்கூட ஏறி, அவரை அணைத்துவிட்டார்கள்.
ஆனால், எரிமலைமீது யாரும் கிட்டே நெருங்க முடியாது. பெரியார் என்பவர் ஒரு கொள்கை எரிமலை. அந்த எரிமலையை யாராலும் அணைக்க முடியாது.
எரிமலை என்பது நெருப்பு - பொறுப்பு நமக்கு இருக்கிறது என்று நினைக்கின்றபொழுது - பெரியார் என்பவர் நெருப்பு என்று சொல்லும்பொழுது, அந்த நெருப்பை யார் என்ன செய்தாலும் நெருங்க முடியாது!
நெருப்பு ஒருபோதும் மாசடைந்தது கிடையாது; மாசற்ற தன்மை கொண்டது!
நெருப்புக்கு இன்னொரு பெருமையும் உண்டு. அது நினைத்தால் யாரையும் வாழ வைக்கவும் முடியும்; யாரையும் கொளுத்தவும் முடியும்.
எல்லாவற்றையும்விட, நெருப்புக்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு - நீரைக்கூட அசுத்தப்படுத்த முடியும்; அதே போல, காற்றைக்கூட மாசுபடுத்த முடியும்.
ஆனால், நெருப்பு ஒருபோதும் மாசடைந்தது கிடையாது; மாசற்ற தன்மை கொண்டது.
நெருப்பு மாசடைந்தது என்று சொல்ல முடியுமா? இதுதான் அடிப்படையான கருத்தாகும்.
நெருப்பை நெருங்கலாம் - நெருங்காமல் இருக்கலாம்; ஆனால், அந்த நெருப்பை, இது அசுத்தமான நெருப்பு - சுத்தமான நெருப்பு என்று பிரிக்க முடியுமா? என்று சொன்னால், நிச்சயமாக பிரிக்க முடியாது. எல்லா நெருப்பும் சுத்தமானதுதான்.
நெருப்புப் போன்றவர்கள்
திராவிடர் கழகத்துக்காரர்கள்
காரணம் என்னவென்றால், அந்த நெருப்புப் போன்று திராவிடர் கழகத்துக்காரர்கள் ஒழுக் கத்தில், கட்டுப்பாட்டில், அறிவில் - யாரும் நெருங்க முடியாத - ஆசாபாசத்திற்கு அப்பாற்பட்ட தோழர் கள். அதனால்தான் அவர்களுக்குத் தனி மரியாதை இருக்கிறது.
அந்த மரியாதை நமக்கும், நம் இயக்கத்திற்கும் உண்டு.
அந்த இயக்கம் பெரியாருக்குப் பின் இருக்குமா? என்று கேட்டார்கள். அதுமட்டுமல்ல, நமக்கு ஆதரவாகப் பேசுவது போன்று ஒரு கேள்வி கேட்டார்கள்.
அய்யாவினுடைய உடல் வைக்கப்பட்டு இருந்த இடத்தில் நான் நின்றிருந்தேன். அப்பொழுது செய்தி யாளர்கள், ‘‘திராவிடர் கழகத்தை கலைத்துவிட்டு, திரா விட முன்னேற்றக் கழகத்தோடு இணைக்கப் போகிறீர் கள் என்று சொல்கிறார்களே?'' என்று.
திராவிடர் கழகம்
தனித்தன்மையோடு இயங்கும்!
அய்யா பெரியாரிடம் நான் கற்றுக் கொண்ட பாடம் - என்னை அறியாமல் வெளியில் வந்தது; அப்பொழுது நான் அவர்களுக்குச் சொன்னேன், ‘‘திராவிடர் கழகம் எந்த இயக்கத்தோடும் ஒருபோதும் இணையாது; கலையாது; அது தனித்தன்மையோடு இயங்கும்'' என்று கூறினேன்.
இன்றைக்குத் தோழர்களே, வயது இடைவெளி இந்த இயக்கத்திற்கு உண்டா?
நான் பேச்சால் சொல்லவில்லை; நடைமுறையில் சொல்கிறேன். அய்யா பொத்தனூர் சண்முகம் இங்கே இருக்கிறார்; அவருக்கு வயது என்ன தெரியுமா? 102 வயது.
கையில் தடியில்லை; யாரும் அவரைப் பிடித்துக் கொண்டு வரவில்லை. அன்றைக்குப் பார்த்த சண்முகம் எப்படி இருந்தாரோ, அப்படியே இருக்கிறார்.
இதுதான் பெரியாருக்குப் பின் இந்த இயக்கம்!
(பொத்தனூர் சண்முகம் அவர்கள் மேடையில் ஏறி நிற்கிறார்; அன்பெழில் என்பவரை அழைத்து உன்னுடைய வயது என்ன என்று கேட்க, அவருடைய வயது 7 என்கிறார். இன்னொருவரை அழைத்து உன் பெயர் என்ன என்று ஆசிரியர் கேட்க - பொன்சாரா என்கிறார். உன்னுடைய வயது என்ன? என்று கேட்கிறார், அவருடைய வயது 11 என்கிறார். சத்தியமூர்த்தி, நெடுவாக்கோட்டை ஜெயமணி ஆகியோருடைய பேரப் பிள்ளைகள் இவர்கள் என்கிறார் ஆசிரியர்).
நண்பர்களே, இந்த மூன்று பேரையும் பாருங்கள்; இதுதான் பெரியாருக்குப் பின் இந்த இயக்கம்.
வருகின்ற ஜூன் 27 ஆம் தேதி...
எனக்கு ஏன் அது தோன்றியது என்றால், நான் இந்த வயதில்தான் ஆரம்பித்தேன். இந்த ஆண்டு மிகச் சிறப்பான ஆண்டு - வருகின்ற ஜூன் 27 ஆம் தேதி வந்தால், 90 ஆண்டு வயதில், 80 ஆண்டு பொதுவாழ்க்கை எனக்கு. பொத்தனூர் சண்முகம் போன்று அவருடைய வயதை எட்ட முடியுமா? என்று எனக்குத் தெரியாது. ஆனால், அதைப்பற்றி கவலைப்படவில்லை. நீங்கள் இருக்கிறீர்கள்; இந்தக் கொள்கையை உங்களிடம் ஒப் படைத்தாகிவிட்டது: இவர்களிடம் ஒப்படைத்தாகி விட்டது - அதுபோதும் எனக்கு.
இந்த இயக்கம்
ஒருபோதும் தோற்காது;
இந்தக் கொள்கை நீடித்து நிற்கும்!
இந்தக் கொள்கை என்பது ஆயிரங்காலத்துப் பயிர்; எந்தக் கொம்பனாலும் அழிக்க முடியாது; எந்தக் கொள்ளைக்காரனாலும் திருட முடியாது.
அதன்படிதான் கருநாடக மாநிலத்தில் இன் றைக்கு மிகப்பெரிய அளவிற்கு வெற்றியாக வந்திருக்கக் கூடிய சூழ்நிலை.
ஆகவே, இந்த இயக்கம் ஒருபோதும் தோற்காது. இந்தக் கொள்கை நீடித்து நிற்கும்.
பெரியார் காலத்தில் மகளிர், தாய்மார்களே என்பார்! இருக்கிறார்களோ, இல்லையோ, மரியா தைக்குச் சொல்லவேண்டும் என்று.
ஆனால், இன்றைக்கு அந்த நிலை இல்லை. அன்றைக்கே பெரியார் அவர்களைத் தயாரித்தார்.
நூறாண்டுகளுக்கு முன்பே...
1924 ஆம் ஆண்டு இயக்கத்தைத் தொடங்குவதற்கு முன்பாக அய்யா என்ன செய்தார் தெரியுமா?
அன்னை நாகம்மையாரை களத்தில் இறக்கினார்; கண்ணம்மையாரை களத்தில் இறக்கினார். இந்த ஊருக்கு அந்தப் பெருமை உண்டு. அவர்கள் கள்ளுக் கடை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எப்பொழுது?
நூறு ஆண்டுகளுக்கு முன். கள்ளுக்கடை மறி யலுக்குச் சென்ற பெண்கள் - வைக்கம் போராட்டத்திற்குச் சென்ற பெண்கள் - அவர்களைத் தயாரித்த தலைவர் தந்தை பெரியார். அந்தப் பெரியார் வாழுகிறார் - இந்தக் கொள்கைகளின் மூலமாக - அப்படிப்பட்டவர்களுக்குச் சிறப்பு செய்வதில் பெருமைப்படுகின்றேன்.
குருவரெட்டியூர் கிருஷ்ணமூர்த்தியின் பேரன் அகிலன் அவர்களுக்கு 10 வயது.
வேரும் சரியாக இருக்கிறது; விழுதுகளும் சரியாக இருக்கின்றன
ஈரோட்டில் நடைபெறுகின்ற திராவிடர் கழகப் பொதுக்குழுவின் சிறப்பு இதுதான். வயது இடைவெளி இல்லாமல் இந்த இயக்கத்தில் இருக்கிறார்கள் என்பதற்கு உரிய எடுத்துக்காட்டுகள்!
வேரும் சரியாக இருக்கிறது; விழுதுகளும் சரியாக இருக்கின்றன என்பதற்கு இதுதான் அடையாளம்.
(தொடரும்)
No comments:
Post a Comment