மத்திய பிரதேசத்தில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு ஆட்சியில் உள்ள பாஜக அரசு, தற்போதே வாக்காளர்களைக் கவர வாக்குறுதிகளை அள்ளி வீசி வருகிறது. அந்த வகையில் பார்ப்பனர்கள் அதிகம் வாழும் இந்தூரின் ஜனபாவ் பகுதியில் பரசுராம் லோக் (பரசுராமனின் உலகம்) என்ற பெயரில் தனிப்பாதை அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளனர்.
முதலமைச்சராக இருக்கும் சிவராஜ் சிங் சவுகான் தற்போதே தேர்தலை மனதில் கொண்டு சில திட்டங்களை வெளியிடத் துவங்கி விட்டார்.
குறிப்பாக மத்தியப் பிரதேசத்தில் வசிக்கும் பார்ப்பன சமூகத்தினரின் வாக்குகளைக் கவரும் விதமாக புதிய அறிவிப்பு ஒன்றை அம்மாநில பாஜக அரசு வெளி யிட்டுள்ளது. அதாவது, பார்ப்பன சமூகத்தினருக்காக நல வாரியம் ஒன்று அமைக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அது மட்டும் இன்றி இந்தூரின் ஜனபவ் பகுதியில் 'பரசுராம லோக்' ஆன்மிக வழித்தடம் அமைக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.
அதுமட்டுமின்றி, மாநிலத்தில் உள்ள கோயிலின் செயல்பாடுகளில் அரசு தலையிடாது என்றும், கோயில் நிலங்களின் விவகாரத்தை கோவிலை நிர்வகிக்கும் பார்ப்பனர்களே மேற்கொள்ளலாம் என்ற முடிவை எடுத்திருப்பதாகவும் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித் தார். "பார்ப்பன சமூகத்தினர் ஹிந்து கலாச்சாரத்தையும், மதத்தையும் எப்போதும் காப்பாற்றுகின்றனர். எனவே அவர்களுக்கான நல வாரியத்தை அமைக்க நாங்கள் முடிவு செய்துள்ளோம்!" என்று கூறியுள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலத்தில் அய்ந்து முதல் ஆறு சதவீதம் வரையே பார்ப்பனர்கள் உள்ளனர். இருந்தாலும் அவர்களுக்காக இவ்வளவு பெரிய முடிவை எடுத்திருப்பது அங்கு அரசியல் ரீதியாக பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது.
கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் விந்திய பகுதிகளில் மொத்தம் உள்ள 30 இடங்களில் 24 இடங்களில் பாஜக வென்றது. இந்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் பாஜகவில் இருந்து விலகி புதுக் கட்சி துவங்கியிருக்கும் நாராயண் திருப்பதி பாஜகவிற்கு அந்தப் பகுதியில் கடும் சவால் அளிக்கலாம் என்று அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
இந்தக் காரணத்திற்காகவும் பாஜக பார்ப்பன சமூக வாக்குகளைக் குறிவைத்து தேர்தலுக்கு முன்பாக இத்தகைய ஒரு முடிவை அறிவித்துள்ளது. அதே வேளையில் பாஜக அரசின் இந்த முடிவை காங்கிரஸ் கடுமையாக விமர்சித்துள்ளது. இப்போது வரை அமைச்சரவையில் முதலமைச்சர் வாக்குகளை கவர்வதற்காக இப்படி ஓர் அறிவிப்பை வெளியிட்டு இருப்பதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது.
கடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் மத்திய பிரதேசத்தில் பிஜேபி தோல்வி கண்டு, காங்கிரஸ் கட்சி ஆட்சியை அமைத்தது - மகாராட்டிரம், கருநாடக மாநிலங்களைப் போல; பிஜேபி தேர்தலில் தோற்ற மாநிலங்களில் எல்லாம் இடையில், தமக்கே உரித்தான குறுக்கு வழிமுறைகளைக் கையாண்டு ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்து விட்டது.
அதிலும் மத்தியப் பிரதேசத்தில் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் மாபெரும் தில்லுமுல்லு ("வியாபம்" என்ற பெயர் வியாபித்திருக்கவில்லையா?) நடந்தது.
இந்தப் பிரச்சினையில் ஆளுநர் மகன் உள்பட கிட்டத்தட்ட நூறு பேர் தற்கொலை செய்துகொள்ள வில்லையா?
இந்த முறை ம.பி.யில் பிஜேபி மண்ணைக் கவ்வுவது உறுதி என்று தெரிந்த நிலையில், பொய் வாக்குறுதிகளை அள்ளி வீச ஆரம்பித்து விட்டது; தோல்வியின் பயத்தைத்தான் இது காட்டுகிறது.
No comments:
Post a Comment