கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் பணி தொடக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 20, 2023

கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் பணி தொடக்கம்

மாமல்லபுரம்,மே 20- மாமல்லபுரம் அடுத்த சூலேரிக் காடு கிழக்கு கடற்கரை சாலையில் கடல்நீரை குடி நீராக்கும் ஆலை செயல்பட்டு வருகிறது.  

இந்த ஆலை கடந்த 2013ஆம் ஆண்டு 1 கோடி லிட்டர் குடிநீரை உற்பத்தி செய்யும்  வகையில் தொடங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சென்னையின் குடிநீர் பற்றாக்குறையை குறைக்கும் வகையில் சூலேரிக் காட்டில் உள்ள கடல் நீரை குடிநீராக்கும் ஆலையில் 2ஆவது ஆலை கட்ட முடிவு செய்யப்பட்டது. ரூ.1,260 கோடி செலவில், 15 கோடி லிட்டர் குடிநீர் உற்பத்தி  செய்யும் வகையில் 2ஆவது புதிய ஆலை கட்டுமானப் பணிகள் கடந்த சில ஆண்டு களுக்கு முன்பு தொடங்கப் பட்டது.

தற்போது 2ஆவது ஆலை கட்டுமானப் பணிகள்  85 விழுக்காடு முடிந்துள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த 2-ஆவது ஆலை  பயன்பாட்டுக்கு வரும் என்று தெரிகிறது. இதற்கான பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.   சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம், ஜப்பான் நாட்டு பன்னாட்டு கூட்டுறவு முகமை நிதியுடன் இணைந்து சூலேரிக்காடு கடல்  நீரை குடிநீராக்கும் ஆலையில் 400 மில்லியன் லிட்டர் உற்பத்தி திறன் கொண்ட நவீன  3ஆவது ஆலையை அமைக்க முடிவு செய்யப் பட்டுள்ளது.

இதற்கான முதற்கட்டப் பணிகள் தொடங்கப் பட்டுள்ளன. அப்பகுதியில் தற்காலிக அலுவலக கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. மேலும் நவீன கருவிகளுடன் கடல் நீர் நிலை  ஆய்வு, மணல் தன்மை, குழாய்கள் பதிக்கும்  பகுதி, மீன்வளப் பாதுகாப்பு, இயற்கை சூழல், மாசுபாடு, வனவளம் உள்ளிட்ட பகுதி களை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த ஆலையில் புதிதாக தொடங்கப்படஉள்ள 2ஆவது மற்றும் 3ஆவது ஆலை முழுபயன்பாட்டுக்கு வரும்போது சென்னை நகர மக்களின் 70 விழுக்காடு குடிநீர்  தேவை பூர்த்தியாகும் என்று தெரிகிறது.

சென்னை பெருநகர மாநகராட்சியின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் ஏரிகளில் ஒன்றான

பூண்டி ஏரியின் கொள்ளளவு 

27 ஆண்டுக்கு பிறகு உயர்த்தப்படுகிறது

ஊத்துக்கோட்டை, மே 20- சென்னை நகர மக்களின் குடிநீர்  தேவையை நிறைவேற்றும் பிரதான  ஏரிகளில் ஒன்று பூண்டி ஏரி. இந்த  ஏரி கட்டுமானப் பணிகள் 1940ஆம் தொடங்கப் பட்டு 1944ஆல் முடிக்கப்பட்டன. அப்போதைய சென்னை ஆளுநராக இருந்த சத்திய மூர்த்தி இந்த நீர்த்தேக்கத்தை கட்ட சீரிய முயற்சி எடுத்துக் கொண்டதால் நீர்த்தேக்கத்துக்கு அவரது பெயர் சூட்டப்பட்டது. ஆரம்பத்தில் இதில் 2.750  டி.எம்.சி. தண்ணீர் சேமித்து வைக்கப் பட்டது.

அதன் பிறகு ஏரியில் கூடுதல்  தண்ணீரை சேமித்து வைக்க திட்டமிடப்பட்டு  1990 முதல் 1996ஆம் ஆண்டு வரை பணிகள் நடந்தன. இதையடுத்து தற்போது 3.231  டி.எம்.சி. தண்ணீர் சேமித்து வைக்கப்படுகிறது. பருவ மழையின்போது ஏரி முழுவதுமாக  நிரம்புவதால் உபரி நீர் கொசஸ்தலை ஆற்றின் வழியாக கடலுக்கு திறக்கப் படுகிறது. இப்படி பல டி.எம்.சி. தண்ணீர் வீணாக கடலில் போய் சேருகிறது. இதைக் கருத்தில் கொண்டு பூண்டி ஏரியில் கூடுதல்  தண்ணீர் சேமிக்க நீர்வளத்துறை திட்ட மிட்டுள்ளது.

 அதன்படி ஏரியின் கொள்ளளவு மேலும் 0.74 டி.எம்.சி. 27 ஆண்டுக்கு பிறகு உயர்த்தப்பட இருக்கிறது. இதற்காக ஏரியின் மதகுகளை பலப்படுத்தும் பணிகள்  ரூ.10.12 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப் படவுள்ளது. எந்தெந்த பகுதிகளில் கரைகளை பலப்படுத்தும் பணிகளை மேற்கொள்வது என்பது குறித்து ஆய்வு பணிகள் ரூ.48  லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வருகின்றன.

இந்தப் பணிகள் முடிவடைந்த பின்னர் ஏரியில் கூடுதல் தண்ணீரை சேமித்து  வைக்கும் பணிகள் தொடங்கப்படும். இதற்காக நவீன தொழில்நுட்பங்களை நீர் வளத்துறையினர் பயன்படுத்த உள்ளனர்.  இந்த பணிகள் முடிவடைந்து பயன்பாட்டுக்கு  வரும்போது பூண்டி ஏரியில் 4 டி.எம்.சி. வரை  நீரை சேமித்து வைக்க முடியும் என்று பொதுப் பணித்துறை அதிகாரிகள் 

தெரிவித்தனர்.

குஜராத் மருந்து நிறுவனத்தின் உற்பத்தியில் தரக்குறைவு

புதுடில்லி,மே 20- உயிர் காக்கும் 4 மருந்துகளை விற்பனை செய்யத் தற்காலிகமாக தடை விதித்து திரும்பப் பெறுவதாக ஃபைசர் நிறுவனம் அறிவித் துள்ளது. உற்பத்தியின்போது ஏற்பட்ட தரக்குறைவு காரணமாக மருந்துகளை திரும்பப் பெறுவதாகவும் அறிவித்துள்ளது. 

அமெரிக்காவின் முன்னணி மருந்து தயாரிப்பு நிறுவனமான ஃபைசர், இந்தியாவில் மருந்துகளை உற்பத்தி செய்து வருகிறது. குஜராத்தின் வதோதரா பகுதியில் ஃபைசர் நிறுவனத்தின் உற்பத்தி ஆலை அமைந்துள்ளது. 

இந்த ஆலையில் உற்பத்தி செய்யப்பட்ட மருந்தில் தரக் குறைபாடு கண்டறிந்ததன் எதிரொலியாக இந்த ஆலையிலிருந்து உற்பத்தி செய்யப்பட்ட 4 மருந்துகளை விற்பனை செய்ய வேண்டாம் என ஃபைசர் நிறுவனம் தெரிவித்துள்ளது. 

மேக்னஸ், சைசோன், மேக்னமைசின், மேக்னஸ் ஃபோர்ட் ஆகிய நான்கு உயிர் காக்கும் மருந்துகளின் உற்பத்தி மற்றும் விநியோகத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு ஃபைசர் கேட்டுக்கொண்டுள்ளது. 

மருத்துவமனைகளில் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கும், குறிப்பாக தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளவர்களுக்கு இந்த மருந்துகள் வழங்கப்படும்.

குஜராத்தில் ஆஸ்ட்ரல் ஸ்டெரிடெக் ஆலையில் உற்பத்தியின்போது ஏற்பட்ட தரக்குறைபாடு காரணமாக இந்த 4 மருந்துகளுக்கும் தற்காலிகமாக தடை விதிப்பதாக ஃபைசர் நிறுவனம் அறிவித்துள்ளது.

மேக்னஸ் மருந்து பல்வேறு விதமான பாக்டீரியா தொற்று மற்றும் வைரஸ் காய்ச்சல்களுக்கு வழங்கப் படுகிறது. 

சைசோன் மருந்து, வயிற்றுவலி, தோல் நோய், சிறுநீரகத் தொற்று போன்ற பல்வேறுவிதமான பாக்டீரியா தொற்றுகளுக்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. 

காது, தொண்டை, நுரையீரல் போன்றவை பாக்டீரியா தொற்றுகளால் பாதிக்கப்பட்டால், மேக்னமைசின் மற்றும் மேக்னஸ் ஃபோர்ட் தடுப்பூசிகள் பயன்படுத்தப் படுகின்றன.

No comments:

Post a Comment