‘திராவிட மாடல்' ஆட்சி நடத்தும் தி.மு.க.வின் பலம் வெறும் தேர்தல் வெற்றியில் இல்லை என்ற ரகசியம் வித் தைகளை நடத்தும் பா.ஜ.க., ஆர்.எஸ்.எசிற்குப் புரியாது! கொள்கை லட்சியம் என்பது வருணாசிரம ஒழிப்பு, ‘அனை வருக்கும் அனைத்தும்' என்ற சமூகநீதி, சமத்துவம், சுயமரியாதை, பகுத்தறிவு அடங்கிய ‘‘திராவிடத்தில்'' உள்ளது என்பதைத்தான் 2024 ஆம் ஆண்டு நடைபெறப் போகும் நாடாளுமன்றப் பொதுத்தேர்தல் அவர்களுக்கு உணர்த்தவிருக்கிறது; புதியதோர் மக்களாட்சியை, மதச்சார்பற்ற, ஜனநாயகமாக ஆக்கிட தமிழ்நாடு காட்டும் வழியை அனைத்து இந்தியாவும் பின்பற்றும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை வருமாறு:
தமிழ்நாட்டை எந்த வலையை விரித்தாவது தங்களது காவி அதிகாரப் பரப்புக்குள் கொண்டுவர ஆர்.எஸ்.எஸ்., அதன் அரசியல் பிரிவான பா.ஜ.க., அதன் திறமை வாய்ந்த வித்தை மேதை பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் பல்வேறு ‘பஞ்ச தந்திரங்களை'யும் தாண்டிய ‘தசத்' அல்ல, ‘பஞ்சதந்திர உபாயங்களையும்' கையாண்டு முயலுகின்றனர்.
காரணம், நாடாளுமன்றத்தின் மக்களவைக் கூட்டத் தின்போது ஒருமுறை முழங்கிய ராகுல் காந்தி, நேருக்கு நேராக ‘‘நீங்கள் எத்தனை ஆண்டு முயன்றாலும் உங்களால் தமிழ்நாட்டின் ஆட்சியைப் பிடிக்க முடியாது; அந்த மண் சமூகநீதி மண்'' என்பதைப் பகிரங்கமாகவே ஆணி அடித்ததைப்போல அறைகூவி நாடாளுமன்ற ஆவணமாகப் பதிய வைத்துள்ளார்!
‘அரசியல் பொம்மலாட்டம்' நடத்தி வருகின்றது!
‘மித்திர பேதம்' என்பது பஞ்ச தந்திரங்களில் முக்கிய மானது என்பதை உணர்ந்த ஆரியம் - அரசியலில் ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி., செல்வி ஜெயலலிதாவின் மறைவிற்குப் பின், தமிழ்நாடு பெரிய அரசியல் கட்சி களில் ஒன்றான அ.தி.மு.க.வை, அதற்காகவே அந் நாளைய ஒன்றிய அமைச்சர் வெங்கய்யா நாயுடுவை, செல்வி ஜெயலலிதாவின் இறுதிக் கட்டத்தில் மருத்துவ மனையிலே அமர்த்தி, பிறகு பிரதமர் மோடி, தலையில் கையை வைத்து ஆசீர்வதித்து, அதனை இரண்டு பிரிவுகளாக்கி, பிறகு பிரித்த கைகளை அந்நாளைய ஆளுநர் மூலமே கைகோர்க்கும் நாடகத்தையும் நடத்தி, பிறகு அவ்விரு அமைப்புகள், அதைத் தாண்டிய சிலர் இவற்றை தனி அணியாக்கியும், பிறகு ‘‘அனைவரும் ஒன்றாகுங்கள்'' என்று கூறி, பலவீனமாக்கி, ‘‘வித்தை களையும்'' காட்டி அதன் விளைவு கண்டு அவர்கள் அச்சப்படும் நிலைக்கு ஆளாக்கி, நல்லதோர் ‘அரசியல் பொம்மலாட்டம்' இன்றும் நடத்தி வருகின்றது!
‘திராவிட மாடல்' ஆட்சி நடத்தும் தி.மு.க.,விடம் அவர்களின் வித்தைகள் எடுபடவில்லை!
ஆனால், ‘திராவிட மாடல்' ஆட்சி நடத்தும் தி.மு.க., - அதன் தலைமையிடம் அவ்வித்தைகள் பலிக்கவில்லை - கொள்கையை, லட்சியத்தை, இயக்கத்தை, கட்சியை முன்னிறுத்தி - ஆட்சி அதிகாரம் அதன் பின்னர்தான் என்று திட்டவட்டமான திட முடிவுடன் செயல்படும் அவ்வாட்சி - கட்சி நிலைகண்டு, தமிழ்நாட்டை வளைப் பதற்கு வேறு புதிய புதிய வலைகளைத் தேடிக் கண்டுபிடிக்கிறது ஆரியம்.
தமிழ் முகமூடியைப் பயன்படுத்தினால் தமிழ்நாட்டில் வாக்காளர்களை வயப்படுத்தலாம் என்று நினைக்கின்றனர்!
‘‘தமிழ் உணர்வுதானே தி.மு.க.வை ஆட்சியில் அமர்த்தியது; எனவே, தமிழ் முகமூடியைப் பயன்படுத் தினால் தமிழ்நாட்டில் வாக்காளர்களை வயப்படுத்தலாம்'' என்று ஆர்.எஸ்.எஸ். திட்டமிட்டு, அதனை பிரதமர் மோடி வாயிலாக ஓர் உத்தியாகவே கையாளவேண்டும் என்று பார்க்கின்றனர்!
தமிழ்நாட்டிற்கு வரும்போதெல்லாம் பிரதமர் மோடி, தமிழின், தமிழனின் பெருமை பேசுகிறார்! அவ்வையார், பாரதியார் பாடல்களைத் தேடிக் கண்டுபிடித்துப் பேசுகின்றார்; திருவள்ளுவர்பற்றி பெருமை பேசி, அவருக்கும் காவிச் சாயமடிக்கின்றார்!
ஆனாலும், அது தமிழ்நாட்டவரை ஏமாற்றப் பயன் பட்டு, பலன் விளைவிக்கவில்லை.
உண்மை வேறு; ஒப்பனை வேறு!
காரணம், அவை அவர்களுக்கு மனதார நேசிக்கும் கொள்கைத் திட்டம் அல்ல; ‘‘சமஸ்கிருதம்தான் நாட்டின் பொது மொழி - ஒரே கலாச்சாரம் - அதற்கு 1000 கோடி ரூபாய்க்குமேல் ஒதுக்குபவர்கள் அதே வரிசையில் உள்ள சமஸ்கிருதத்தைவிட பல கோடி மக்கள் பேசும், எழுதும் ‘மக்கள் மொழி' வளர்ச்சிக்கு எவ்வளவு தொகை இதுவரை ஒதுக்கி உள்ளார்கள்? அதுவே உண்மை வேறு; ஒப்பனை வேறு என்று காட்டுகிறதே!
இதோ அந்தப் புள்ளி விவரம்:
சமஸ்கிருதத்திற்கு 3 ஆண்டுகளில் ரூ.643 கோடி
2017-2018 ஆம் ஆண்டில் ரூ.198.31 கோடி.
2018-2019 ஆம் ஆண்டில் ரூ.214.38 கோடி.
2019-2020 ஆம் ஆண்டில் ரூ.231.15 கோடி
தமிழ் மொழிக்கு 3 ஆண்டுகளில் ரூ.22.85 கோடி
2017-2018 ஆம் ஆண்டில் ரூ.10.59 கோடியும்,
2018-2019 ஆம் ஆண்டில் ரூ4.56 கோடியும்,
2019-2020 ஆம் ஆண்டில் ரூ7.7 கோடியும் ஒதுக்கப்பட்டன.
பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸின் தமிழ் அபிமானம் ஓர் ‘‘அரசியல் மயக்க பிஸ்கெட்'' என்பதை தமிழ்நாட்டு மக்கள் புரிந்துகொண்டு, ஏற்க மறுக்கிறார்கள்.
அவர்களுக்கு மிஞ்சியது ஏமாற்றமே!
1. மற்றொரு உத்தி - வித்தை காசியில் (பிரதமர் தொகுதியில்) தமிழ், தமிழர்கள் சங்கமம் என்ற ஒரு நாடகம் - அரசு செலவில் சுமார் 2000 பேரை அங்கே அழைத்து, சில துதிபாடிகளை விட்டு பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ்.சை வளர்க்க சில நடவடிக்கைகள்.
‘காதொடிந்த ஊசி' பலன்கூட அதனால் தமிழ்நாட்டில் பா.ஜ.க.வுக்கு ஏற்படவில்லை! அதன் பிறகு பா.ஜ. கட்சியே கலகலத்த கட்சியாகுமளவிற்கு, பலரும் அதன் தலைவர்மீது குற்றப் பத்திரிகை வாசித்து வெளி யேறியதுதான் மிச்சம்!
2. அதன் பிறகு குஜராத் - தமிழ்நாட்டிற்கும் இடை யோன தொடர்புகளைக் கொண்டாடும் வகையில், ‘‘சவுராஷ்டிரா - தமிழ் சங்கமம்'' கடந்த ஏப்ரல் 18 ஆம் தேதிமுதல் ஏப்ரல் 30 ஆம் தேதிவரை நடத்தினர் - அதற்கென வழமைபோல ஒருவகை புதுவகை கற்பனை வரலாற்றுப் புனைவுகள்.
மிஞ்சியது ஏமாற்றமே!
இஸ்லாமியத் தீவிரவாதிகள் படையெடுப்பால்தான் தென்னிந்தியாவிற்கு குஜராத் சவுராஷ்டிரர்கள் சென்றனர் என்று ஓர் ஆதாரமில்லா அளப்பு.
தொழில் தேடி பல பகுதிகளுக்குச் சென்றதுபோலவே, சவுராஷ்டிரர்கள் தென்னிந்தியா சென்றனர் என்று வரலாற்று அறிஞர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்!
பாரதீய பாஷா சமதித் தலைவர் என்ற கிருஷ்ண சாஸ்திரி என்ற பார்ப்பனர் - ஒன்றிய அரசின் கல்வித் துறையை வைத்து இப்படி ஒரு வித்தை.
அடுத்து தமிழ்நாட்டுக்காரர்களை ‘கேதார்நாத் சங்கமம்' நடத்தி அழைத்துச் செல்லும் திட்டம்!
முன்பு ராஜேந்திர சோழனை முன் வைத்து தமிழ் நாட்டை வளைக்கும் ஆர்.எஸ்.எஸ். உத்தி எதிர்பார்த்த ஆதரவைத் திரட்டப் பயன்படவில்லை என்றவுடன், இப்போது அலகாபாத் கண்காட்சியில் வைக்கப்பட்ட செங்கோலை எடுத்து வந்து, பலத்த எதிர்ப்புக்கிடையே நாளை (28.5.2023) பிரதமர் மோடியால் திறக்கப்பட விருக்கும் புதிய நாடாளுமன்றக் கட்டடத் திறப்பு விழாவிற்கு 20 பண்டார சந்நிதிகள் என்று மடாதிபதிகளை அழைத்து செங்கோல் விழா (இரண்டாவதாக) அதுவும் சோழர் காலத்துச் செங்கோல் என்று ஒரு ‘புரூடா'வை விட்டு, சோழர்களின் சொந்தக்காரர்கள் நாங்களே, நந்தியைக் காட்டுகிறோம் என்கிறார்கள் - மொகஞ்சதாரோ திராவிடக் காளைகளை ‘குதிரை'யாக்கிய இந்த அரசியல் குதர்க்கவாதிகள்!
காஞ்சி சங்கராச்சாரியார் கருவில் உதித்த திட்டம் - ஆச்சாரியாரால் ஆதரிக்கப்பட்ட மதச்சார்பை நிலை நிறுத்த பதிவு செய்யப்பட்ட ஒரு திட்டம்!
தமிழ்நாட்டு வாக்காளர்களுக்கு ‘‘குளோரோஃபாம்'' கொடுத்து ஏமாற்றிவிட முடியாது!
இவற்றால் ஒருபோதும் தமிழ்நாட்டை நீங்கள் வசப் படுத்தி, தமிழ்நாட்டு வாக்காளர்களுக்கு ‘‘குளோரோ ஃபாம்'' கொடுத்து ஏமாற்றிவிட முடியாது!
‘திராவிட மாடல்' ஆட்சி நடத்தும் தி.மு.க.வின் பலம் வெறும் தேர்தல் வெற்றியில் இல்லை என்ற ரகசியம் அவர்களுக்குப் புரியாது!
அதன் கொள்கை லட்சியம் என்பது வருணாசிரம ஒழிப்பு, ‘அனைவருக்கும் அனைத்தும்' என்ற சமூகநீதி, சமத்துவம், சுயமரியாதை, பகுத்தறிவு அடங்கிய ‘‘திராவிடத்தில்'' உள்ளது என்பதைத்தான் 2024 ஆம் ஆண்டு நடைபெறப் போகும் நாடாளுமன்றப் பொதுத்தேர்தல் அவர்களுக்கு உணர்த்தவிருக்கிறது.
தமிழ்நாடு காட்டும் வழியை
அனைத்து இந்தியாவும் பின்பற்றும்
‘தென்னாடுடைய திராவிடம்' அனைத்துத் திக்கு களிலும் அதன் கதிரொளி பரப்பி, புதியதோர் மக்களாட்சியை, மதச்சார்பற்ற, ஜனநாயகமாக ஆக்கிட தமிழ்நாடு காட்டும் வழியை அனைத்து இந்தியாவும் பின்பற்றும்.
காரணம், தமிழ் இந்தியா முழுவதும் பரவி இருந்த மொழி; அதன் பண்பாடு, சமத்துவ, மானிடநேயம் அதன் வலிமையைக் காட்டும்!
இங்கே, வித்தைகள் பலிக்காது!
சென்னை தலைவர்,
27.5.2023 திராவிடர் கழகம்
No comments:
Post a Comment