ஷிண்டே அரசு ராஜினாமா செய்யுமா?
உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வின் முக்கிய தீர்ப்பு
புதுடில்லி, மே 12 - மகாராட்டிராவில் உத்தவ் தாக்கரே அரசை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துமாறு அம்மாநில ஆளுநர் உத்தரவிட்டது தவறு என்று உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு தெரிவித்துள்ளது. உள்கட்சி விவகாரங்களில் ஆளுநர்கள் தலை யிடக் கூடாது என்றும் கண்டித்துள்ளது.
கடந்த 2019-ஆம் ஆண்டு நவம்பர் 28-ஆம் தேதி மகாராட்டிராவில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் ‘மகா விகாஸ் அகாதி’ என்ற பெயரில் கூட்டணி ஆட்சியை அமைத்தன. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதலமைச்சராக பதவி யேற்றார். இரண்டரை ஆண்டுகள் கடந்த நிலையில், சிவசேனா மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களை தனியே பிரித்த பாஜக, அதன்மூலம் உத் தவ் தாக்கரே அரசைக் கவிழ்த்தது. முன்னதாக, ஷிண்டே பக்கம் சாய்ந்த 16 அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்ய, கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் சட்டப் பேரவை யின் அன்றைய பேரவைத் துணைத் தலைவர் நரஹரி ஜிர்வால் (சட்டப்பேரவைக்கு தலைவர் இல்லாத நிலையில்) நோட்டீஸ் அனுப்பினார்.
ஆனால், ஷிண்டே அணியினர், பேரவை துணைத் தலைவர் நரஹரி ஜிர்வாலுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மான நோட்டீஸ் வழங்கினர். இதனி டையே, உத்தவ் தாக்கரேவை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஆளுநர் உத்தரவிட்ட நிலையில், வாக்கெடுப்புக்கு முன்னதாகவே உத்தவ் தாக்கரே தனது முதலமைச்சர் பதவியை விட்டு விலகினார். அதைத்தொடர்ந்து, 2022 ஜூன் 30 அன்று ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான பாஜக கூட்டணி அரசு பதவியேற்றது.
உச்சநீதிமன்றத்தில் வழக்கு
எனினும், இந்த ஆட்சிக் கவிழ்ப்பு க்கு எதிராக உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா அணியினரும், முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான போட்டி சிவசேனா அணியினரும் உச்சநீதிமன்றத்தில் பல்வேறு மனுக்களை தாக்கல் செய்தனர். குறிப்பாக, 2016-ஆம் ஆண்டு அருணாச்சல பிரதேசத்தின் அன்றைய சபா நாயகர் நபம் ரெபியா வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை குறிப்பி ட்டு- அதாவது, பேரவைத் தலைவருக்கு எதி ரான நம்பிக்கையில்லா தீர்மானம் நிலுவையில் இருந்தால் அந்த பேரவைத் தலைவர் சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்ய முடியாது என்ற தீர்ப்பை சுட்டிக் காட்டி, 16 சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான தகுதி நீக்கத்தை எதிர்த்து முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அணியினர் உச்சநீதி மன்றத்தில் முறையிட்டனர். ஆனால், நபம் ரெபியா வழக்கு தீர்ப்பையே மறுஆய்வு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, உத்தவ்தாக்கரே தலைமையிலான சிவசேனா அணியினர் முறையிட்டனர். இவை தொடர்பான வழக்குகளை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதிகள் எம்.ஆர். ஷா, கிருஷ்ணா முராரி, ஹீமா கோலி, பி.எஸ். நரசிம்மா ஆகிய 5 பேர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்தது. அதன்முடிவில் வியாழனன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கியது.
பெரும்பான்மையை நிரூபிக்க
ஆளுநர் உத்தரவிட்டது
அப்போது, உத்தவ் தாக்கரே அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று மாநில ஆளுநர் உத்தரவிட்டது தவறு; அத்துடன் ஏக்நாத் ஷிண்டே தரப்பு கொறடாவை ஆளுநர் அங்கீகரித்ததும் சட்ட விரோதம் என்று தீர்ப்பளித்தனர். அந்த தீர்ப்பில் அவர்கள் மேலும் கூறியதாவது: “உத்தவ் தாக்கரே அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநர் உத்தரவிடுவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை; ஒரு அரசியல் கட்சியின் சட்டசபை கொறடாவை அந்த அரசியல் கட்சிதான் நியமிக்க வேண்டும்; சட்ட மன்றக் குழு ஒன்று, அரசியல் கட்சி கொறடாவை நியமிக்க முடியாது; மகாராட்டிராவில் ஷிண்டே தரப்பு நியமித்த கொறடாவை ஆளுநர் தரப்பு ஏற்றது சட்டவிரோதமானது; ஒரு கட்சியில் யார் பெரும்பான்மை என்பதை சட்டசபை நம்பிக்கை வாக்கெடுப்பை வைத்து முடிவு எடுக்க முடியாது; உள்கட்சி, கட்சி களுக்கு இடையில் ஏற்படும் பூசல் களைத் தீர்ப்பதற்கும், நிவர்த்தி செய்வதற்கும் அவையில் பெரும்பான்மையை நிரூபிப்பது மட்டுமே தீர்வாகாது. துணை முதலமைச்சர் தேவிந்திர பட்னாவிஸ் மற்றும் சுயேட்சை சட்டமனற உறுப்பினர்கள் யாரும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரவில்லை. எனவே, ஆளுநரின் விருப்பத்திற்கு ஏற்ப எடுத்த நடவடிக்கைகள் சட்டப்பூர்வமானது இல்லை. ஏக்நாத் ஷிண்டே அணியின் புதிய கொறடாவாக பரத் கோகவா லேவை நியமித்தது சட்டவிரோத மானது.'
விசாரணைக்கு பின்னரே பேரவைத் தலைவர் புதிய கொறடாவை நியமிக்க வேண்டும். எது உண்மையான சிவசேனா கட்சி என்பதை பேரவைத் தலைவரே தீர்மானிக்கலாம், அதிருப்தியாளர்கள் மீதான தகுதி நீக்க மனுக்களையும் சபாநாயகரே முடிவு செய்ய வேண்டும். சிவசேனா யாருக்கு சொந்தமானது என்பதை தேர்தல் ஆணையம்தான் முடிவு செய்ய வேண்டும். பேரவைத் தலைவர் முன்பாக வரும் தகுதி நீக்க மனுக்களை தேர்தல் ஆணையத்தின் விசாரணைகளுடன் இணைக்க வேண்டியதில்லை. உத்தவ் தாக்கரே தனது முதலமைச்சர் பதவியிலிருந்து தாமாகவே பவி விலகினார். அதனால் ஷிண்டேவை ஆளுநர் முதலமைச்சராக பதவியேற்க அழைத்ததில் தவறு இல்லை; ஒரு வேளை உத்தவ் தாக்கரே பதவியிலிருந்து விலகாமல் இருந்தால் மீண்டும் அவரது ஆட்சியைத் தொடர உத்தர விட்டிருப்போம்; அவர் ராஜினாமா செய்துவிட்டதால் தற்போது முந்தைய ஆட்சியை தொடருமாறு உத்தவ் தாக்கரேவை அழைக்க முடியாது; ஆனாலும் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு ஆளுநர் உத்தரவிட்டது தவறு; ஏக்நாத் ஷிண்டே தரப்பு கொறடாவை ஆளுநர் அங்கீகரித்ததும் தவறு.” இவ்வாறு நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர். அதேநேரம், சிவசேனா கட்சி, சின்னம், 16 எம்எல்ஏ-க்கள் தகுதி நீக்கம் ஆகியவை தொடர்பான வழக்கையும், சபாநாயகர் அதிகாரம் தொடர்பான நபம் ரேபியா வழக்கின் தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரும் மூல வழக்கையும் 7 நீதிபதிகள் அடங்கிய விரிவடைந்த அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டனர்.
No comments:
Post a Comment