ஈரோடு: திராவிடர் கழகப் பொதுக்குழுவில் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானங்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 13, 2023

ஈரோடு: திராவிடர் கழகப் பொதுக்குழுவில் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானங்கள்

புதிய தேசியக் கல்விக் கொள்கை முற்றிலும் நிராகரிக்கப்படவேண்டும்

'நீட்', 'நெக்ஸ்ட்' 'கியூட்' தேர்வுகள் நீக்கப்படவேண்டும் தேவை - தனியார்த் துறைகளிலும் இட ஒதுக்கீடு

'திராவிட மாடல்' தமிழ்நாடு அரசின் ஈராண்டு சாதனைகளுக்குப் பாராட்டுகள் - வாழ்த்துகள்!

2024 மக்களவைத் தேர்தலில் பி.ஜே.பி. பாசிச ஆட்சியை வீழ்த்திட எதிர்க்கட்சிகள் ஒன்றுபடுக!

வரலாற்றுச் சிறப்புமிக்க நான்கு நூற்றாண்டு விழாக்களை கொண்டாடுவோம்!

கழகக் கிளை இல்லாத ஊரே இருக்கக்கூடாது; கழகக் கொடி - விடுதலை சந்தா - பிரச்சாரக் கூட்டம் சுழன்றடிக்கட்டும்!

தலைமைக் கழக அமைப்பாளர்கள் என்ற புதிய பொறுப்புகள் உருவாக்கம்!

கழகப் பொதுக்குழுவின் சிறப்புத் தீர்மானத்தை கழகத் தலைவர் ஆசிரியர் முன்மொழிந்தார்

ஈரோடு, மே. 13 இன்று (13.5.2023) ஈரோட்டில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக்குழுவில் வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சமூகநீதி, கழக அமைப்பு முறையில் புதிய மாற்றம், சுயமரியாதை இயக்கம், வைக்கம் நூற்றாண்டு விழா உள்ளிட்ட நான்கு முக்கிய நூற்றாண்டு விழாக்களைக் கொண்டாடுவது உள்பட பல முக்கிய அம்சங்களைக் கொண்ட  தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன.

இன்று (13.5.2023, சனிக்கிழமையன்று) ஈரோடு மல்லிகை அரங்கில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர் மானங்கள் வருமாறு:

இரங்கல் தீர்மானம்: 1 (அ)

4 ஆம் பக்கம் காண்க

சிறப்புத் தீர்மானம்: 2

நூற்றாண்டு காணும் விழாக்கள்!

சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா, வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா, சேரன்மாதேவி குருகுலப் போராட்ட நூற்றாண்டு விழா, சிந்துவெளி அகழாய்வுகள் மூலம் திராவிடர்களின் தொன்மை வரலாற்றை வெளிப் படுத்திய சர்ஜான் மார்ஷலின் ஆய்வு நூற்றாண்டு ஆகிய தந்தை பெரியார் - நமது இயக்கம் தொடர்புடைய நூற்றாண்டு விழாக்கள் அடுத்தடுத்து வரும் நிலையில், அவற்றின் அடிப்படை நோக்கம்- ஜாதி - தீண்டாமை ஒழிந்து சமத்துவ சமுதாயம் அமைக்கும் பணியில் வெற்றி காண்பதற்கான தந்தை பெரியாரின் தொடர் போராட்டம், போர்க்குணம் - இவற்றின் உள்ளடக்கம், முக்கிய அம்சங்கள், தியாகச் சுவடுகள் - இவற்றால் ஏற்பட்ட சமூக மாற்றங்களை மக்கள் மத்தியில் - குறிப் பாக, சிறப்பாக இளைய தலைமுறையினரிடம் கொண்டு செல்வதற்கான முன் முயற்சித் திட்டங்களை வகுத்து, வெகு மக்களைப் பெரும் அளவில் ஈர்க்கும் வகையிலும் - இவற்றின் தாக்கம் அனைத்து மாநிலங்களிலும் பரவும் வண்ணமும் சிறப்பாக நடத்துவது என்றும், 

வரலாற்றையே புரட்டிப் போட்ட இந்த நிகழ்வுகள் நமது இயக்க வரலாற்றில் முதன்மையானதும், மிக மிக முக்கிய மானதும், திராவிட சித்தாந்தத்தின் தனித்தன்மையும் உடையது என்ற காரணத்தால் நமது தோழர்கள் பெரும் அளவில் ஒத்துழைப்புத் தந்து வரலாறு போற்றும் விழாக் களாக இவற்றை நடத்துவது என்று இப்பொதுக் குழு உணர்ச்சிப் பெருக்கோடு தீர்மானிக்கிறது.

சிறப்புத் தீர்மானத்தை கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் முன்மொழிய, பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று கரவொலி எழுப்பி வரவேற்றனர்.

தீர்மானம் எண்: 3

தமிழ்நாடு அரசின் இரண்டாண்டு சாதனைகளுக்குப் பாராட்டும் வாழ்த்தும்

கழகப் பொதுக்குழுவில் 3 ஆவது தீர்மானத்திலிருந்து 12 ஆம் தீர்மானம்வரை கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் முன்மொழிந்தார்

தமிழ்நாட்டில் 2021 மே திங்கள் மானமிகு மாண்புமிகு தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில் ஆட்சிக்கு வந்த தி.மு.க.  ஆட்சி, தேர்தல்  அறிக்கையில் அறிவிக்கப்பட்டவற்றையும், அறிவிக்கப்படாதவற்றை யும் பெரும் அளவில் செயல்படுத்தி இந்திய அளவில் முதன்மையான மாநிலமாகத் தமிழ்நாடு திகழ்கிறது.

குறிப்பாக சமூகநீதி, பெண்கள் முன்னேற்றம், பொருளாதாரம், மருத்துவம், மக்கள் நலம் போன்றவற்றில் பெரும்பாலான மக்கள் பயன்பெறும் வகையிலும், வியக்கும் வகையிலும் இன எதிரிகளும், அரசியல் காழ்ப்புணர்வு கொண்டோர் வியர்க்கும் வகையிலும் தி.மு.க. ஆட்சி ஏறு நடை போடுவதைக் கண்டு தாய்க் கழகமாம் திராவிடர் கழகம் மனம் நிறைந்த பாராட்டு களையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறது.

தீர்மானம் எண்: 4

புதிய தேசிய கல்விக் கொள்கை 

புறக்கணிக்கப்பட வேண்டும்!

ஒன்றிய அரசு கொண்டு வரும் புதிய தேசியக் கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு ஏற்காது என்று அறிவித்த நிலையில், அதில் உள்ள சில அம்சங்களை ஏற்றுக்கொள்ளலாம் என்று எந்த நிலையிலும் இடம் கொடுக்கக்கூடாது என்று தமிழ்நாடு அரசை இப்பொதுக் குழு வலியுறுத்துகிறது.

முத்தமிழ் அறிஞர் மானமிகு கலைஞர் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட சமச்சீர்க் கல்வி மூலம், தமிழ் நாடு கல்வி வளர்ச்சியில் மேலோங்கி நிற்பது வெளிப் படையாகும். மற்ற மாநிலங்கள் பின்பற்றத்தக்க வகையில் தமிழ்நாடு அரசின் சமச்சீர்க் கல்வி செழித்தோங்கி இருப் பதையும் இப்பொதுக்குழு மேலும் சுட்டிக்காட்டுகிறது.

தீர்மானம் எண்: 5

‘புதிய தேசியக் கல்விக் கொள்கை’ என்கிற பெயரில் ஹிந்தி, சமஸ்கிருதத் திணிப்பு! 

புதிய தேசியக் கல்விக் கொள்கை என்கிற பெயரில் ஹிந்தி, சமஸ்கிருதத் திணிப்பு மற்றும் ‘ஆல் இண்டிய ரேடியோ' என்பதற்குப் பதில் ‘ஆகாஷ்வாணி' என்று அழைக்கப்பட வேண்டும் என்ற ஆணை, மொழி வளர்ச்சிக்கு ஊக்கமும் ஆக்கமும் தருவது என்கிற பெயரில், செத்துப்போன சமஸ்கிருதத்திற்கு மிகப் பெரிய அளவில் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் ரூ.648.84 கோடியும், தமிழ் உள்ளிட்ட தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஒடியா மொழிகளுக்கு வெறும் ரூ.29 கோடி யும் மட்டும் ஒன்றிய அரசால் ஒதுக்கப்பட்டு இருப்பது ஒன்றிய அரசின் ஓரவஞ்சனையையும், பார்ப்பனப் பண்பாட்டுச் சின்னமான சமஸ்கிருதத் திணிப்பையுமே காட்டுகிறது  என்று இப்பொதுக் குழு உறுதியாகவே கருதுகிறது. 

ஒன்றிய அரசின் ஹிந்தி- சமஸ்கிருத ஆதிக்க வெறியை எதிர்த்து இந்திய அளவில் மதச்சார்பற்ற சமூக நீதி அமைப்புகள், சக்திகள் மொழிவாரி மாநில உணர் வோடு முயற்சித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண் டும் என்றும், அதற்கான முன்னெடுப்பை திராவிடர் கழகம் மேற்கொள்வது என்றும் தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் எண்: 6

2024 மக்களவைத் தேர்தலும், 

மக்கள் கடமையும்!

2014 ஆம் ஆண்டு முதல் ஒன்றிய ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக (NDA) கூட்டணி அரசு, ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் என்று வெளிப்படையாக அறிவித்து, செயல்பட்டு வருவது_ இந்திய அரசமைப்புச் சட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ள சமூக நீதி, மதச்சார் பின்மை, ஜனநாயக நோக்கங்களையே ஆழக் குழி தோண்டிப் புதைக்கும் ஆபத்தான போக்காகும்.

இந்த நிலையில் 2024 ஆம் ஆண்டு நடைபெற விருக்கும் மக்களவைத் தேர்தலில் மதச்சார்பற்ற, ஜனநாயக சமூக நீதிச் சக்திகள், அரசியல் கருத்து வேறுபாடுகளைப் புறந்தள்ளி, ஒன்றிணைந்து, ஒன்றிய பிஜேபி தலைமையிலான பாசிச ஆட்சியை வீழ்த்த வேண்டும்; அகில இந்திய அளவில் இந்த ஒருங் கிணைப்பும், பெருமுனைப்பும் மிக மிகத் தேவை என்பதை அனைத்து அரசியல், சமூக இயக்கங்களை இப்பொதுக்குழு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் எண்: 7

தமிழ்நாடு அரசு, தக்க சட்ட நிபுணர்களை நியமித்து, தீர்ப்பை எதிர்த்து 

உரிய வகையில் மேல் முறையீடு செய்து வெற்றி காண வேண்டும்

தி.மு.க. ஆட்சியின் நூறாவது நாள் அன்று-  தந்தை பெரியார் இறுதியாக அறிவித்த அனைத்து ஜாதியின ருக்கும் அர்ச்சகர் உரிமை என்னும் போராட்டத்தின் அருமையையும், முக்கியத்துவத்தையும் உணர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சர்-சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மானமிகு மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர் களால் 28 அர்ச்சகர்கள் அனைத்து ஜாதிகளிலிருந்தும் அறிவிக்கப்பட்டு, நியமனமும் செய்யப்பட்டனர்.

இந்தத் தீண்டாமை, ஜாதி ஒழிப்பு ஆணையை எதிர்த்து திருச்சி சீரங்கம் குமாரவயல் முருகன் கோயிலில் பணியாற்றிய இரு அர்ச்சகர்ப் பார்ப்பனர்களால் தொடுக் கப்பட்ட வழக்கு ஒன்றின்மீது, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி -தமிழ்நாடு அரசின் ஆணை செல்லாது என்று அளித்த தீர்ப்பு அதிர்ச்சிக்கு உரியது - பிறப்பின் அடிப் படையிலான ஜாதியைக் கட்டிக்காக்கும் செயல்பாடு என்பதால், தமிழ்நாடு அரசு, தக்க சட்ட நிபுணர்களை நியமித்து, தீர்ப்பை எதிர்த்து உரிய வகையில் மேல் முறையீடு செய்து வெற்றி காண வேண்டும் என்று, ஜாதி- தீண்டாமை ஒழிப்பில் அக்கறை கொண்ட -அதற்காக முழு முயற்சியாகப் பாடுபடக்கூடிய- திராவிடர் கழகம், தமிழ்நாடு அரசை இப்பொதுக்குழு வாயிலாக வலி யுறுத்துகிறது.

தீர்மானம் எண்: 8

மணிப்பூரில் நடைபெறும் கலவரம் 

உணர்த்துவது என்ன?

மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடியல்லாத பெரும் பான்மையாக உள்ள மெய்டெய் இன மக்கள் 53 சதவிகிதம் உள்ளனர். இதில் பார்ப்பனர்களும் உள்ளனர். தங்களை எஸ்.டி பிரிவில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை வைத்த நிலையில், அதற்கு பழங்குடியின மக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். தற்போது இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள மெய்டெய் மக்களுக்கு அரசு 17 சதவிகிதம் இட ஒதுக்கீடு அளிக்கிறது. தங்களை பழங்குடிகளாக அறிவிக்க வேண்டும் என்று கோரி தொடுத்த வழக்கில் மணிப்பூர் உயர் நீதிமன்றம் அரசு பரிசீலிக்கலாம் என்றுதான் கருத்துக் கூறியது. இதை முன்னெடுத்து பா.ஜ.க. அரசு இட ஒதுக்கீட்டை அளித்திடும் என்ற அச்சத்தில், அம் மாநிலத்தில் மலைப்பிரதேசத்தில் வாழும் 40 சதவிகிதம் உள்ள குக்கி, நாகா பழங்குடி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் இதுவரை 54 பேருக்கு மேல் சுட்டுக் கொல்லப்பட்டதாக ஆளும் பா.ஜ.க. அரசே தகவல் தந்துள்ளது. மாநிலத்தை விட்டு ஆயிரக்கணக்கில் பழங்குடியினர் அண்டை மாநிலமான அசாமில் தஞ்சம் புகுந்துள்ளனர். சமூக மோதல்களை ஊக்கப்படுத்தி சமூகநீதிக்குப் பாதகம் செய்திடும் இந்தப் போக்கு உட னடியாகத் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். பா.ஜ.க.வை வளர விடுவதன் தீமையை அதற்கு ஆட்சி அமைக்க ஆதரவு தந்த தேசிய மக்கள் முன்னணி(NPP)யும், நாகா மக்கள் முன்னணி(NPP)யும் தற்போது உணர்ந்தாலும், இது தாமதமான சிந்தனை. இதே போன்ற ஒரு சூழலை, கருநாடகாவில் பா.ஜ.க. அரசு ஏற்படுத்தியது. இஸ்லாமி யர்களுக்கு சட்டப்பூர்வமாக இருந்த இட ஒதுக்கீட்டைப் பறித்து, பிற சமூகங்களுக்கு அளித்தது. சமூக நீதிக்கு எதிரான பா.ஜ.க. அரசின் இத்தகைய போக்கை இப்பொதுக்குழு கண்டிப்பதுடன், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் பா.ஜ.க.வை ஊக்கப்படுத்தும் கட்சிகள் இந்த ஆபத்தை உணர்ந்து சமூக நீதிக்கு எதிரான அக் கட்சியைத் தனிமைப்படுத்த வேண்டும் என திராவிடர் கழகப் பொதுக்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண்: 9

தகவல் தொழில்நுட்ப திருத்த விதிகள் - 

திரும்பப் பெறுக!

‘‘ரிப்போர்ட்டர்ஸ் வித்தவுட் பார்டர்ஸ்'' (Reporters Without Borders (RSF)  என்னும் அமைப்பு இந்தாண்டுக் கான அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், பத்திரிகை சுதந்திரம் உள்ள 180 நாடுகளில் இந்தியாவுக்கு 161 ஆம் இடமே கிடைத்துள்ளது. 2022 இல் 142 ஆம் இடத்தில் இருந்த இந்தியா தற்போது மேலும் பின்னுக்குச் சென்றுள்ளது.

இந்தியாவில் 2014ஆம் ஆண்டு பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற நாள் முதல் இன்று வரை ஊடகத்திற்கான சுதந்திரம் நசுக்கப்பட்டே வருகிறது. மேலும், பா.ஜ.க. அரசு மீது குற்றச்சாட்டுகளை முன் வைக்கும் பத்திரிகையாளர்கள்மீது, தேசத் துரோக வழக்கு பதிவு செய்து, அவர்களைக் கைது செய்து, சிறை யில் அடைக்கப்பட்ட கொடூரமும் அரங்கேறி வருகிறது.

உலக பத்திரிகை சுதந்திர தினத்தையொட்டி மனித உரிமை அமைப்பு மற்றும் ஊடக நிறுவனங்கள் கூட் டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன. இதில், “மிரட்டல், அச்சுறுத்தல், பொய்ப் பிரச்சாரம், தணிக்கை, தாக்குதல், சிறைத் தண்டனை போன்றவற்றை இந்தியப் பத்திரிகை யாளர்கள் ஏற்கெனவே சந்தித்து வரும் சூழலில், பத்திரிகையாளர் சுதந்திரத்தை முடக்கும் வகையில், ஒன்றிய அரசு கொண்டு வந்திருக்கும் தகவல் தொழில் நுட்ப திருத்த விதிகள் திரும்பப் பெறப்பட வேண்டும்” என வேண்டுகோள் விடுத்துள்ளதை, இப்பொதுக்குழு வரவேற்கிறது. அனைத்து ஜனநாயக சக்திகள் ஒன் றிணைந்து, பா.ஜ.க. அரசின் ஊடக சுதந்திரத்திற்கு எதிரான மசோதாவை வீழ்த்தவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் எண்: 10

நீட்’ மற்றும் ‘நெக்ஸ்ட்’ (NEXT) தேர்வை நிரந்தரமாக நீக்குக!

 மருத்துவப் பட்டப் படிப்புகளில் சேருவதற்கு இந்திய அரசு கட்டாயமாக்கி இருக்கும் ‘நீட்’ தேர்வு முறையில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்கக் கோரும் மசோதா தமிழ்நாடு சட்டப்பேரவையில் இரண்டு முறை நிறைவேற்றப்பட்டுள்ளது. இது குறித்து ஆளுநர் முதலில் தாமதம் செய்த நிலையில், தற்போது ஒன்றிய அரசும் எந்த முடிவும் எடுக்காமல் காலம் தாழ்த்துவது, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான செய லேயாகும். மேலும் மாநில உரிமையைப் பறிக்கும் செயலுமாகும். இது குறித்து தமிழ்நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒருங்கிணைந்து ‘நீட்’ தேர்வு மற்றும் மருத்துவ மேற்படிப்புக்கான ‘நெக்ஸ்ட்’ தேர்வை யும் ஒழித்திட போராட்ட நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும் என திராவிடர் கழகப் பொதுக்குழு வலியுறுத்துகிறது. ‘கியூட்' என்ற பெயரில் கலை, அறிவியல் கல்லூரிகளுக்கும் திணிக்கப்பட்டுள்ள நுழைவுத் தேர்வையும் ரத்து செய்யவேண்டும் என்றும் இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண்: 11

தனியார்த் துறைகளிலும் 

தேவை இடஒதுக்கீடு

தாராளமயம், தனியார்மயம், உலகமயம் (LPG) என்பதற்கான பொருளாதாரக் கொள்கைகளும், செயல் பாடுகளும் விரிந்துவரும் இந்தக் காலகட்டத்தில். அர சமைப்புச் சட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ள கல்வி மற்றும் சமூகநீதியின் அடிப்படையில், தனியார்த் துறை யிலும் இடஒதுக்கீடு தேவை என்பது முன்னிலும் அதிகமான அளவில் அவசியமாகிவிட்டது. 

தற்போதைய ஆட்சியில், பொதுத்துறை நிறுவனங் களை தனியார் மயமாக்கும் போக்கும் அதிகரித்து வருகிறது. ஒன்றிய அரசில் ஏறக்குறைய 11 லட்சம் இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. 

இவற்றைக் கருத்தில் கொண்டு, தனியார்த் துறைகளிலும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு அளித்திடும் சட்டத்தை ஒன்றிய/மாநில அரசுகள் நிறைவேற்றிட திராவிடர் கழகப் பொதுக்குழு  வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண்: 12

ஆரியர்- திராவிடப் பிரச்சினை!

“நாட்டில் நடப்பது வெறும் அரசியல் போராட்டமல்ல; பார்ப்பனர்- பார்ப்பனர் அல்லாதார் போராட்டமே’’ என்றார் தந்தை பெரியார் (‘விடுதலை’ 22.5.1967)

வரலாற்று ரீதியாக ஆரியர்- திராவிடர் போராட்டம்தான் நடந்து வருகிறது. இராமாயணம் உட்பட ஆரியர்- திராவிடர் போராட்டமே என்று வரலாற்று ஆசிரியர்கள் பதிவு செய்துள்ளனர்.

இன்றைய நிலையில்கூட, அந்தப் போராட்டமே தொடர்ந்து கொண்டுள்ளது.

தமிழ்நாடு ஆளுநர் சனாதனம் என்பதை உயர்த்தி பேசுவதும், ‘திராவிட மாடலை’க் கேலி செய்வதும் அந்த இனப் போராட்டத்தின் தொடர்ச்சியேயாகும்.

நமது முதல் அமைச்சர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்கள் இதனை எதிர்கொள்ளத் தயார் என்று அறிவித்திருப்பது - அடிப்படையான சித்தாந்த உறுதியை வெளிப்படுத்துவதாகும்.

‘திராவிட மாடல்’ ஆட்சி என்பதற்கான வலுவான அறிவிப்புமாகும்.

இது தமிழ்நாட்டைக் கடந்து இந்திய அளவில் பரவத் தொடங்கி இருப்பது நல்லதோர் திருப்பமாகும்.

மக்களவையில் “தந்தை பெரியார் வாழ்க!’’, “வெல்க திராவிடம்!’’ என்ற முழக்கம் இந்திய அளவில் தேவையான திராவிட இயக்கத்தின் சித்தாந்த  முழக்கமே!

2024 மக்களவைத் தேர்தலில் பார்ப்பனர் அல்லாதார் மத்தியில் இந்த எழுச்சி மூண்டெழுந்து, இந்திய ஒன்றியத்தில் ஆட்சி அதிகாரத்தில் இருக்கும் பாசிச - பாஜக ஆட்சிக்கு முடிவுரையை எழுதும் வகையில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துசெயல்படவேண்டும் என்று இப்பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.

கழகப் பொதுக்குழுவில் 13 ஆம் தீர்மானத்திலிருந்து 15 ஆம் தீர்மானம்வரை கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் முன்மொழிந்தார்

தீர்மானம் எண்: 13

திராவிடர் கழகத்தின் செயல்பாடுகள்

திராவிடர் கழகக் கிளை இல்லாத ஊர் இல்லை என்று கூறும் அளவுக்குக் கழகப் பொறுப்பாளர்களும், தோழர்களும், உறுப்பினர்களும் கட்டுப்பாட்டுடனும், திட்டமிட்ட வேலைத் திறனுடனும் சிறப்பாகப் பணியாற்ற வேண்டும்; குறிப்பாக பாலின வேறுபாடின்றி இளைஞர்கள் கழக உறுப்பினர் சேர்க்கையை விரைவுபடுத்த வேண்டுமென்றும் இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது. 

1. கழகக் கொடி, 

2. ‘விடுதலை’ சந்தா

3. பிரச்சாரக் கூட்டம் என்பது ஒவ்வொரு ஊரிலும் உறுதியாக தொடர்ந்துகொண்டே இருக்க வேண்டும் என்று கழக நிருவாகிகளை, தோழர்களை இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது. மக்கள் மத்தியில் இயக்கக் கொள்கைகளை எடுத்துக்கூறி, ஆற்றுப்படுத்த வேண்டும் என்று இப்பொதுக்குழு கழகத்தினரை வலியுறுத்துகிறது. ஆண்டுக்கு இருமுறை குடும்ப விழா - விருந்துகள் நடத்தப்பட வேண்டும் எனவும் இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது. சுயமரியாதைச் சுடரொளிகள் நினைவேந்தல் கூட்டம் என்னும் நிகழ்வின்படி அவர்களை நினைவு கூர்தல் வேண்டும்.

கழக ஏடுகளுக்குச் சந்தா சேர்த்தல், இயக்க நூல்களைப் பரவச் செய்தல், துண்டறிக்கைகளை வழங்குதல், சுவர் எழுத்துப் பிரச்சாரம், பகுத்தறிவுத் தகவல் பலகை, தெரு முனைக் கூட்டங்கள் - இன்னோரன்ன வகையில் திட்டங்களை வகுத்துக் கொண்டு செயல்பட வேண்டும் என்று இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

தீர்மானம் எண்: 14

சமூகக் கொடுமைகள் குறித்த தகவல்களும் - கழகத்தின் நடவடிக்கைகளும்!

கழகப் பொறுப்பாளர்கள் தங்கள் தங்கள் மாவட்டத்தில் அல்லது வட்டாரத்தில் நடைபெறும் ஜாதி, தீண்டாமை உள்ளிட்ட பல பிரச்சினைகள், ஜாதி ஆணவக் கொலைகள், சமூகச் சீர்மைக்கு எதிரான பிரச்சினைகள், மூடநம்பிக்கை  நிகழ்வுகள் குறித்து, உடனுக்குடன் தலைமைக் கழகத்துக்குத் தெரிவித்து அப்பகுதியில் கழகம் உடனடியாக மேற்கொள்ள வேண்டிய செயல்பாடுகளுக்கு தடுப்பு நிகழ்வுகளுக்கு முன்னுரிமை கொடுக்குமாறு இப்பொதுக் குழு வலியுறுத்துகிறது.

தாங்கள் இருக்கும் பகுதிகளில் தொண்டறப் பணிகளிலும் உடனடியாக ஈடுபட்டு பொது மக்களின் நன்மதிப்பை ஈட்டுமாறும் கழகத்தினைரை இப்பொதுக்குழு கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் எண்: 15

திராவிடக் கழக அமைப்பு முறை கீழ்க்கண்ட வகையில் அமையும். மாநிலத் தலைமைக் கழக நிருவாகிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பணிகள் விவரம் நாளைய விடுதலையில்!


No comments:

Post a Comment