'பெரியார்' திரைப்படத்தை பார்த்து ரசித்த பெரியார் பிஞ்சுகள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, May 4, 2023

'பெரியார்' திரைப்படத்தை பார்த்து ரசித்த பெரியார் பிஞ்சுகள்!

வல்லம், மே.4. பழகுமுகாம் இரண்டாம் நாளில் மற்ற வகுப்புகளோடு பெரியார் பிஞ்சுகளுக்கு ‘பெரியார்’ திரைப்படம் திரையிடப்பட்டது.

பெரியார் பிஞ்சுகளுக்கான பழகுமுகாம் தஞ்சை வல்லத்திலுள்ள பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிகர்நிலை பல்கலைக் கழகத்தில் மே 2 முதல் மே 6 ஆம் தேதி வரையிலும் என நடந்துகொண்டிருக்கிறது. இரண்டாம் நாளில் (3-5-2023) வழக்கம் போல, காலை 5 மணிக்கு எழுந்து நடை ஓட்டப்பயிற்சி, சிலம்பம், கராத்தே, ஏரோபிக்ஸ் நடனம் ஆகியன கற்றல், நடைமுறையில் அறிவியல் மனப்பான்மை, எந்திரவியல், ஊடகப்பயிற்சி, நீச்சல், விளையாட்டு, பேய் உண்டா? இல்லையா? ஆகிய வகுப்புகளைக் கற்றலோடு இறுதியாக ‘பெரியார்’ திரைப் படம் பார்த்தனர்.

இயற்கையுடன் இயைந்த பெரியார் பிஞ்சுகள்!

அதிகாலை 5:50 க்கு சொர்ணம்மாள் ரங்கநாதன் விடுதியிலிருந்து பிஞ்சுகள் நடை ஓட்டப்பயிற்சிக்கு தயாரானார்கள். அப்போது இயற்கையின் தன்மை எப்படி இருந்தது என்றால் - சாம்பல் நிறம், அடர்ந்த கறுப்பு நிறம், இரட்டைவால், சிவப்புநிற நீண்ட மூக்கு, நீலநிறம், கறுப்பு வெள்ளை என பலவித பறவைகளின் 'கீச் கீச்' கீதங்கள்! மயில்களின் அகவல்கள்! முதல் குயிலின் கூவல் ஒரு ராகத்துடனும் அதற்குப் பதிலளிக்கும் விதமாக அடுத்தொரு கூவலுமாக மற்றொரு குயிலின் கூவல்!  மனித நடமாட்டங்களால் அங்கும், இங்கும் பறந்து செல்லும் காட்சி! நேற்று பெய்திருந்த மழையில் நனைந்திருந்த பூமியிலிருந்து கிளர்ந்தெழுந்த மண்வாசனை! பல இடங்களில் இரண்டு பக்கமும் அடர்ந்த  உயர்ந்தோங்கிய பசுமையான மரங்கள்! மெல்லிய காற்றில் உற்றுப்பார்த்தால் மட்டுமே அசைவது தெரியும்படியான மரத்தின் இலைகள்! இப்படிப்பட்ட சுற்றுச்சூழலில்தான் பிஞ்சுகளின் நடை ஓட்டப்பயிற்சி நடைபெற்றது. பல்நோக்கு உள்விளை யாட்டரங்கத்தின் முன் கராத்தே பயிற்றுநர் எட்வின், கால்பந்து திடலில்  சிலம்பம் ஆசிரியர் அய்யப்பன், முத்தமிழ் அரங்க மேடையில் திரைப்பட நவீன நடன ஆசிரியர் கோவிந்தராசன் ஆகியோர் பிஞ்சுகளுக்கு பயிற்றுவித்தனர். இவர்கள் மூவருமே தமிழ்நாட்டின் சிறந்த பயிற்றுநர்களாக இருப்பவர்கள்.

நடைமுறையில் அறிவியல் மனப்பான்மை!

காலை உணவு முடிந்தவுடன் நடைமுறையில் அறிவியல் மனப்பான்மை என்ற கருத்தில் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிகர்நிலை பல்கலைக் கழகத்தில் ஆராய்ச்சி முதன்மையராக இருக்கும் டாக்டர் குமரன் பிஞ்சுகளுக்கு உணவு உண்ணல், தூங்குதல், காலையில் கற்றல், உடற்பயிற்சி செய்தல், சூரிய வெப்பத்தில் நாம் பெறவேண்டிய சத்துகள் ஆகியவைகளில் பொதிந்துள்ள அறிவியல் தன்மைகளை, பிஞ்சுகளிடமே கேள்வி - பதில் மூலமாக விளக்கினார். பதில் சொன்ன பிஞ்சுகளுக்கு அனை வரின் கைதட்டல்களை பரிசாகப் பெற்றுத்தந்தார். இதில் மெலட்டோன் சுரப்பி, மெலனின், வைட்டமின் டி, உடலில் இருக்கும் பெரிய ஆர்கனான தோல், மூளையில் இருக்கும் உடலில் இருப்பதிலேயே சிறிய ஆர்கனான பெனியல் சுரப்பி போன்றவற்றின் தன்மைகளை விளக்கினார். இவற்றையெல்லாம் கடைப் பிடித்தால் தூக்கம் நன்றாக வரும், அதனால் உற்சாகமாக இருக்கலாம், மன அழுத்தம் குறையும், உடல் உறுதிப்படும், பதற்றம் குறையும், இன்சுலின் சுரக்கும், கணையம் நன்றாக வேலை செய்யும், அதனால் சக்தி பெருகும், இதனால் கற்றல் எளிதாகும் என்பன போன்ற பயன்கள் கிடைக்கும் என்று விளக்கினார். பிஞ்சுகள் இந்த வகுப்பை உற்சாகமாகக் கற்றுக்கொண்டனர். இதில் சிறீசரண், அகரா இருவரும் அதிகக் கேள்விகள், பதில்கள் சொல்லி அசத்தினர்.

ஒருங்கிணைந்த அறிவுத்தனமும் குழந்தைத்தனமும்!

அதைத் தொடர்ந்து  எந்திரவியல் வகுப்பு அறிவு மய்யம் கட்டடத்தின் தரை தளத்திலேயே உள்ள எந்திரவியல் துறையில் நடைபெற்றது. சுகவனேஷ் பயிற்றுநராக இருந்து பிஞ்சுகளுக்கு செயற்கை நுண்ணறிவு சார்ந்த எந்திரமனிதன் எப்படி வேலை செய்கிறது என்று செயல்முறையில் செய்துகாட்டினார். பிஞ்சுகள் மிகவும் ஆர்வமுடன் கவனித்தனர். அடுக்கடுக்கான கேள்விகளை பயிற்றுநர் முன் வைத்தனர். அவரும் சளைக்காமல் பதில் சொன்னார். இறுதியில் எதிர்கால எந்திரமனிதன் பற்றிய பிஞ்சுகளின் கேள்விக்கு, நீங்கள் எந்திரவியல் படித்து நீங்கள் சொல்கிற எந்திர மனிதனை நீங்களே வடிவ மையுங்கள் என்று சொல்லி அவர்களை ஆற்றுப்படுத்தினார். பிறகு பெரிய நிறுவனங் களில் பயன்படுத்தப்படும் பெரிய எந்திர மனிதன் முன் பயிற்றுநர் மற்றும் அந்தத்துறை சார்ந்த தோழர்களுடன் பிஞ்சுகள் குழு ஒளிப்படம் எடுத்துக்கொண்டனர். அதைத் தொடர்ந்து அதே அறிவு மய்ய கட்டடத்தின் நான்காம் தளத்தில் உள்ள ஊடக மய்யத்தில் பயிற்றுநர் சாமுவேல், ஜோஸ்வா இருவரும் பிஞ்சுகளுக்கு போட்டோகிராஃபி, அனிமேசன், விர்ச்சுவல் எபெக்ட்ஸ் ஆகியன பற்றி பிஞ்சுகள் பார்த்த திரைப்படங்களையே எடுத்துக்காட்டாகக் கொண்டு கற்றுக்கொடுத்தனர். குறிப்பாக பிஞ்சு அருள்விழியன் அறிவுப் பூர்வமாக பதிலளித்தைக் கண்டு வியந்த பயிற்றுநர் சாமுவேல் அவருடைய மொழியில், ‘அனிமேசன் இரண்டாம் ஆண்டு படிக்கிறார் போல, விட்டால் நமக்கே பாடம் எடுத்துவிடுவார்’ என்று சக தோழரிடம் சிரித்தபடியே பேச, பிஞ்சுகள் அதை வேறுமாதிரி புரிந்துகொண்டு, ‘சார், அவன் இரண்டாம் வகுப்பு படிக்கிறான்’ என்று சொன்னதும், ஒரே நேரத்தில் அறிவுத்தனமும், குழந்தைத்தனமும் கலந்த அந்த இன்பக்கலவையால் ஆனந்தமான வெடிச்சிரிப்பு எழுந்து அடங்கியது.

ஆவலைத்தூண்டிய கோமாளி!

மதிய உணவுக்குப் பிறகு, நீச்சல் சென்று வந்தனர். அதுவும் மழை வந்துவிட்டதால் விரைவிலேயே திரும்பி விட்டனர். பல்நோக்கு உள்விளையாட்டரங்கில் அவர் களுக்கு ஒரு உற்சாகமான, மிரளவைக்கக்கூடிய அளவுக்கு ஒரு நிகழ்ச்சி காத்துக்கொண்டிருந்தது. இதுவரையிலும் வகுப்பு எடுப்பவர் யார்? வகுப்பின் தலைப்பு என்ன என்பது பற்றி அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுவிடும். ஆனால், இந்த நிகழ்ச்சியில் வரப்போகிறவர் யார்? என்ன வகுப்பு? என்றோ சொல்லாமல் பூடகமான முறையில், அதுவும் பிஞ்சுகளையே ஊகிக்கும்படியாக வைத்து அவர் களின் ஆவலைக் கூட்டி, பிறகு வகுப்பு எடுப்பவர் அழைக்கப்பட்டார். முதலில் மேடையின் ஓர் அறைக் குள்ளிருந்து பீப்பீ ஊதும் ஒசை மட்டும் கேட்டது. பிஞ்சுகளின் கவனம் ஒருசேர அங்கே திரும்பியது. அங்கே தலையில்  குல்லாவுடன், கோமாளி ஒப்பனையுடன், பீப்பீ ஊதிய படியே ஒருவர் வர பிஞ்சுகளின் எதிர்பார்ப்பு எகிறத் தொடங்கிவிட்டது. கோமாளி அருகில் வர, வர உட்கார்ந் திருந்தவர்கள் அனிச்சையாக கலைந்து ஆளுக்கொரு திசையில் நழுவத் தொடங்கினர். கோமாளி அச்சுறுத்தும் படியாக அருகில் வந்தவுடன் பதறி, சிதறினர் பிஞ்சுகள். கோமாளி பிஞ்சுகளூடேயே நுழைந்து கலவரம் செய்துவிட, ஆரவாரம் கட்டுங்கடங்காமல் சென்று, பின்னர் பிஞ்சுகள் கோமாளியிடம் நெருங்கி நிகழ்ச்சியில் பங்கேற்று அசத் தினர். எதிர்பாராத இந்த வகுப்பால் பிஞ்சுகள் உற்சாகக் கடலில் மூழ்கிவிட்டனர். முன்னதாக முதல்நாள் நடந்த வீணாகும் பொருளிலிருந்து பிஞ்சுகள் கற்றுக்கொண்டு செய்த காகிதக்கூடை காட்சிக்கு வைக்கப்பட்டது. 

கோமாளியால் விலகிய பேய் பயம்!

சிற்றுண்டிக்குப்பிறகு, பிஞ்சுகள் அனைவரும் கட்டுப் பாடுடன் அய்ன்ஸ்டீன் அரங்கிற்கு அழைத்துவரப்பட்டனர். அங்கு நடந்த கோமாளி நிகழ்வு குறித்து, பிஞ்சுகளின் கருத்துகளை பிரின்சு கேட்டார். பெரும்பாலானவர்கள் ஆர்வத்துடன் பாராட்டிக்கூறினாலும், தொடக்கத்தில் பயமாக இருந்தது என்று கூறியதால், அவர்களின் பயத்தைப் போக்கும் வண்ணம், எதிலெல்லாம் பயமாக இருக்கிறது எனக்கேட்டு, முதலில்  ‘பேய்’, ’சாமியாடுதல்’ குறித்து பாடம் நடத்தினார் பிரின்சு. ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக தனக்கு ஏற்பட்ட கனவுகள், இரவில் ஏற்பட்ட பேய் குறித்த சிந்தனைகள் ஆகியவற்றை பகிர்ந்துகொண்டனர். பேய் குறித்து விளக்குவதற்கு உயிர் என்பது என்ன? அதைப்பற்றி பெரியார் என்ன சொல்லியிருக்கிறார்? ஆகவே பெரியார் கருத்துப் படியும், அறிவியல்படியும் உயிர் மேலே செல்வதில்லை. அதனால் ’பேய்’ என்பது வருவதில்லை. நிறைவேறாத ஆசை காரணமாகவே இறந்தவர்கள் பேயாகிறார்கள் என்பதை பிஞ்சுகளில் சிலர் கேள்வியாக முன்வைத்தபோது, ‘நிறை வேறாத ஆசை இறப்பவர்கள் எல்லோருக்கும் பொது வானது என்றும், நாம் நசுக்குகிற மூட்டைப்பூச்சி பேயாக வருமா? தலையில் அம்மா தேடி எடுத்து நசுக்குகின்ற பேன், பேயாக வருமா? என்றெல்லாம் கேள்விகளை பிரின்சு எழுப்பிய போது, பிஞ்சுகள் 'கொல்' லென்று சிரித்து, தாங்கள் தெளி வடைந்ததைக் காட்டினர். 

பெரியார் திரைப்படமும், பிஞ்சுகளும்!

அதைத்தொடர்ந்து முதல் நாள் பாதி திரையிட்ட ’பெரியார்’ திரைப்படத்தின் மீதி திரையிடப்பட்டது. மழை காரணமாக பிஞ்சுகள் மிகவும் கவனத்துடன் உணவுண்ணும் இடத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டனர். அதே பாது காப்புடன் தங்கும் விடுதிக்கும் அழைத்துச்செல்லப்பட்டனர். வருகைப்பதிவு சரிபார்க்கப்பட்டது. அனைவரும் சுடுநீர் குடிப்பதை ஒருங்கிணைப்பாளர்கள் உறுதிசெய்தனர். அதிகாலை தொடங்கி, இரவு ஆனாலும் அவர்களின் உற்சாகம் குறையவில்லை. அறையில் நண்பர்களுடன் அவர்களுக்குப் பிடித்த விளையாட்டுகளை விளையாடிய படி தூங்கச்சென்றனர்.



No comments:

Post a Comment