திராவிடக் குரல்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 24, 2023

திராவிடக் குரல்!

ஆர்.எஸ்.எஸ். அமைப்பு ஆரியர்களின் நலனுக்காக உள்ளது என்று கூறிய சித்தராமையாவின் கருத்து குறித்து செய்தியாளர்கள் கேட்ட போது பதில் கூறிய பசவராஜ் பொம்மை "இங்கு அனைவருமே இந்தியர்கள்தான். ஆரியர், திராவிடர் என்று யாரும் இல்லை. முதலில் சித்தராமையா தான் ஆரியரா? திராவிடரா? என சொல்லட்டும்" என்று கூறியிருந்தார்.

இதுகுறித்து சித்தராமையாவிடம் கேட்டபோது திருப்பி 'அடி' கொடுத்தார். பொம்மை என்ன சொல்ல? "நான் திராவிடன் தான்" (நானு திராவிடா) இந்த மண்ணுக்குச் சொந்தக்காரன், இம்மண்ணின் பூர்வக்குடி. ஆரியர்கள் இங்கே பல ஆயிரம் ஆண்டுகளுக்குமுன் வந்து குடியேறிய வந்தேறிகள்" என பசவராஜ் பொம்மையின் சந்தேகக் கேள்விக்கு ஊடகவியலாளர்கள் மூலம் பதிலடி கொடுத்தார் முதலமைச்சர் சித்தராமையா.

இது ஒன்றும் புதிதல்ல. இன்றைய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே - மக்களவை உறுப்பினராக இருந்தபோது, இது குறித்த பிரச்சினை வந்தபோது செவிளில் அறைந்தது போல, அவையிலேயே ஓங்கி அடித்துச் சொன்னதுண்டே!

மத சகிப்பின்மை தொடர்பாக அண்ணல் அம்பேத்கர் குறித்து உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் பேச்சுக்கு "நாங்கள் திராவிடர்கள் - நீங்கள் ஆரியர்கள். நீங்கள் தான் வெளியில் இருந்து வந்தவர்கள்'' என்று மல்லிகார்ஜுன கார்கே பதில் தந்தார் (27.11.2015). இந்திய அரசமைப்புச் சட்டம் இயற்றப்பட்ட நாள் மற்றும் இந்த சட்டத்தை வடிவமைத்த, சட்டமேதை அம்பேத்கரின், 125 ஆவது  பிறந்த நாள் போன்றவற்றைக் கொண் டாடும் விதமாக, மழைக்கால கூட்டத்தொடரின் முதல் இரண்டு நாள்களும் விவாதம் நடத்த, ஒன்றிய அரசு திட்டமிட்டு இருந்தது. 

மக்களவையில், இந்திய அரசமைப்புச் சட்டம் மற்றும் அண்ணல் அம்பேத்கர் குறித்த சிறப்பு விவாதம் துவங்கியது. மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜனுக்குப் பின், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியதாவது: ''அரசமைப்புச் சட்டம் வடிவமைக்கப்பட்ட நேரத்தில், 'சமதர்மம், மதச்சார்பின்மை' என்ற வார்த்தைகளே கிடை யாது. ஆனால், 42 ஆவது திருத்தமாக, அவை சேர்க்கப் பட்டன. அம்பேத்கருக்கே தோன்றாத இந்த வார்த்தைகள், அரசியல் காரணங்களுக்காகப் புகுத்தப்பட்டன. மதச் சார்பின்மை என்ற வார்த்தையே ஒழிக்கப்பட வேண்டும். அம்பேத்கரின் சிந்தையில் உதித்தது தான், கூட்டாட்சித் தத்துவம்; அதை முழுமையாகப் பின்பற்றுகிறது மோடி அரசு. சட்டமேதை அம்பேத்கர், மிகுந்த அவமானங்களை சந்தித்த போதிலும் நாட்டை விட்டு வெளியேறுவேன் என ஒரு போதும் கூறியதில்லை.'' இவ்வாறு ராஜ்நாத் சிங் பேசினார். இதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக, மக்களவை காங்., தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசியதாவது: ''சமதர்மம், மதச்சார்பின்மை' என்ற வார்த்தைகளை அம்பேத்கர் சேர்க்க நினைத்தார். ஆனால், அதை ஏற்கவில்லை, கடுமையாக எதிர்த்தார்கள், நீங்கள், ஆரியர்கள்; வேறு நாடுகளில் இருந்து வந்தவர்கள். நாங்கள், 5,000 ஆண்டுகளாக இங்கு வசிக்கிறோம். பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாகிறோம். ஆனாலும், தொடர்ந்து இங்கு தான் வசிக்கிறோம்; இனியும் இங்கு தான் வசிப்போம்.'' இவ்வாறு 'பளிச்' சென்று பதிலடி கொடுத்தார்.

தென் மாநிலம் திராவிடப் பூமி - அதனால்தான் ஆரிய அமைப்பான பார்ப்பன பா.ஜ.க.வுக்கு இங்கு இடமில்லை என்கிறாகி விட்டது. அண்மையில் நடந்த கருநாடக மாநில சட்டப் பேரவையே ஆரியத்துக்கு நல்ல பாடம் கற்பித்து விட்டது.

என்னதான் மூடி மறைத்தாலும் பிரச்சினை என்று வரும்போது, ஆரியர் வேறு, திராவிடர் வேறு என்ற உண்மை அம்பலத்திற்கு வெளிச்சமாக வரத்தான் செய்கிறது.

நடப்பது வெறும் அரசியல் போராட்டமல்ல; ஆரியர் - திராவிடர் போராட்டமே என்று தந்தை பெரியார் சொன் னதை நினைவூட்டுகிறோம்! ஆம், தொலைநோக்காளர் தந்தை பெரியார்.

No comments:

Post a Comment