சென்னை, மே 3- ‘நமக்கு நாமே’ திட்டத்தின் கீழ் தாங்கள் விரும்பும் திட்டப்பணிகளை மேற்கொள்ள பொதுமக்களுக்கு மாநகராட்சிஅழைப்பு விடுத்துள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு அரசின் ‘நமக்கு நாமே’ திட்டத்தில், பொதுமக்கள், சமூக நல அமைப்புகள், நிறுவனங்கள், குடியிருப்போர் நலச்சங்கங்கள் உள்ளிட்டோர் ஒரு பங்கு நிதி அளித்தால், அரசின் சார்பில் கூடுதலாக இரு பங்கு நிதி வழங்கப்பட்டு, மக்கள் பரிந்துரைக்கும் சிறப்புத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் ‘நமக்கு நாமே’ திட்டத்தின் கீழ் நீர்நிலைகளைப் புனரமைத்தல், செயற்கை நீரூற்றுகள் மற்றும் தெரு விளக்குகள் அமைத்தல், கண்காணிப்புக் கேமராக்கள் அமைத்தல், மரக்கன்று நடுதல், மழைநீர் வடிகால், சாலைகள் அமைத்தல், தூண்களில் வண்ண ஓவியங்கள் வரைதல், தெருக்களுக்கு பெயர்ப்பலகைகள் வைத்தல் போன்ற பல திட்டப்பணிகளையும் மேற்கொள்ள பொதுமக்கள், நிறுவனங்கள், பெருநிறுவனங்கள், தன் னார்வ அமைப்புகள், குடியிருப்போர் நலச் சங்கங்கள் உள்ளிட்டோர் முன்வர கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
எனவே, சென்னையில் ‘நமக்கு நாமே’ திட்டத்தில் திட்டப்பணிகளை மேற்கொள்ள விருப்பமுள்ளவர்கள் தாங்கள் செயல்படுத்த விரும்பும் மக்கள் நலத் திட்டத்தை தேர்வுசெய்து, மாநகராட்சி ஆணையர், துணை, இணை ஆணையர்கள், மண்டல அலுவலர்கள் உட்பட மாநக ராட்சி அலுவலர்களை அணுகித் தெரிவிக்கலாம். இதன் மூலம் மக்கள் தாங்கள் விரும்பும் திட்டங்களைச் செயல் படுத்தி, பயனடையலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது
No comments:
Post a Comment