திராவிடர் கழகத்தின் காப்பாளர், முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் மானமிகு எஸ்.எம். ஜெகதீசன் (வயது 94) அவர்கள் சீர்காழி சட்டநாதபுரம் - அவரது இல்லத்தில் இன்று (05-05-2023) காலை பத்து மணியளவில் வயது மூப்பின் காரணமாக இயற்கை எய்தினார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.
15-07-1929 ஆம் ஆண்டில் பிறந்தவர். பள்ளிப் பருவத்திலிருந்து தந்தை பெரியார் கொள்கைகளில் தீவிர பற்றுக் கொண்டிருந்தவர் அரசுப்பணிக்குச் சென்ற போதும் தாம் பணியாற்றிய இடங்களில் பகுத்தறிவாளர் கழகத்தைத் தோற்றுவித்து அதில் தீவிர பங்காற்றியவர்.
இவரது துணைவியார் திருமதி வசந்தா ஜெகதீசன் ஓய்வுபெற்ற ஆசிரியை. திலகவதி, வாசுகி, உமாராணி, வெற்றிச்செல்வி மற்றும் தன்மானம் என்கின்ற அய்ந்து மகள்கள் - மருமகன்கள் மற்றும் பேரன் பேத்திகளுடன் வசித்து வந்தார்.
தனது பணி ஓய்வுக்குப்பின் சீர்காழி நகர திராவிடர் கழகத் தலைவராகவும் - பின் மாவட்டத் தலைவர், மண்டலத் தலைவராக, கழகக் காப்பாளராக பொறுப் புகளை வகித்தவர். கழகத்தின் அனைத்துப் போராட்டங்களிலும் பங்கேற்றவர்.
சீர்காழி நகரில் மிகுந்த எதிர்ப்புகளுக்கிடையே பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் தந்தை பெரியார் சிலை அமைப்பதில் முக்கிய பங்காற்றியவர்.
கடந்த மார்ச்சு 30ஆம் தேதியன்று சீர்காழியில் உள்ள அவரது இல்லத்திற்குச் சென்று உடல் நலம் விசாரித்து வந்தோம். இப்படியொரு முடிவு வரும் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை.
அவரது பேரிழப்பால் துயருறும் குடும்பத்தின ருக்கும், கழகத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
பெரியார் பெருந்தொண்டருக்கு வீர வணக்கம்!
கி.வீரமணி
சென்னை தலைவர்,
5.5.2023 திராவிடர் கழகம்
குறிப்பு : கழகப் பொதுச் செயலாளர் டாக்டர் துரை. சந்திரசேகரன் இறுதி நிகழ்ச்சியில் பங்கேற்று கழகத்தின் சார்பில் இறுதி மரியாதை செலுத்துவார்.
No comments:
Post a Comment