திருவாரூர், மே 5 ‘கடவுள்' அய்ம்பொன் சிலையை வீட்டில் அமுக்கி வைத்திருந்த ஆசாமி சிலை கடத்தல் பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
அதன் விவரம் வருமாறு:
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் கடைத்தெருவில் கண்ணன் (வயது 53) என்பவர் உணவகம் நடத்தி வருகிறார். இவரது மகன் சூர்யபிரகாஷ் (23).
இவரது வீட்டில் பழங்கால அய்ம்பொன் சிலைகள் மற்றும் 1000 ஆண்டுகள் பழைமையான செப்பு நாணயங்கள் ஆகியவை பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து, திருச்சி சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளர் இந்திரா மற்றும் கும்பகோணம் குற்ற புலனாய்வுத்துறை ஆய்வாளர் இலக்குமணன் ஆகியோர் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் கண்ணன் வீட்டிற்குச் சிலை வாங்க செல்வது போல் உள்ளே சென்றனர்.
பின்னர், வீட்டில் உள்ள எல்லா அறைகளுக்கும் சென்று அதிரடியாக சோதனை நடத்தினர். சோதனையில் 1000 ஆண்டுகள் பழைமையான தன்வந்திரி அய்ம்பொன் சிலை, 1 1/4 அடி உயரமுள்ள ராக்காயி அம்மன் வெண்கல சிலை மற்றும் 1000 ஆண்டுகள் பழமையான 750 கிராம் எடை உள்ள 2 செப்பு நாணயங்கள், ஒரு காலச்சக்கரம் ஆகியவை இருந்தது தெரியவந்தது.
இவை அனைத்தையும் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் துறையினர் பறிமுதல் செய்து தந்தை, மகன் இருவரையும் கைது செய்தனர். பின்னர், சூரியபிரகாசிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில் மன்னார்குடி அருகே திருமக்கோட்டையில் உள்ள ஒரு கோவிலில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதாகவும், அந்தக் கோவிலை சேர்ந்த ஒருவரிடம் சிலை மற்றும் செப்பு நாணயங்களை வாங்கியதும், விற்பதற்காக வீட்டில் பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது.
பறிமுதல் செய்யப்பட்ட சிலைகள் மற்றும் செப்பு நாணயங்களின் மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் என கூறப்படுகிறது. மேலும், இதில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும், மன்னார்குடியில் சிலையை விற்பனைக்காக கொடுத்தவர் மற்றும் இது தொடர்பாக பலரிடம் விசாரணை மேற்கொள்ள உள்ளதாக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு மற்றும் குற்றப்புலனாய்வு காவல் துறையினர் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment