இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெறவுள்ள மத்தியப் பிரதேசம், ராஜஸ்தானில் மதவாதத்தையும் சத்தீஸ்கரில் ஜாதிய வாதத்தையும், திரிபுரா, மணிப்பூரில் பிஜேபி பிரிவினைவாதத்தையும் கையிலெடுக்கிறது இதனால் ஏற்கெனவே மணிப்பூர் தீப்பற்றி எரிந்துகொண்டிருக்கிறது
கருநாடகாவில் வாக்காளர்கள் பா.ஜ.க-வை நிராகரித்ததில் இருந்து, அக்கட்சி பாடம் கற்றதாகத் தெரியவில்லை.
அக்கட்சி ஆட்சியில் இருந்த ஒரே தென் மாநிலத்தின் தோல்விகூட - அதன் அரசியல், நிர்வாக நிகழ்ச்சி நிரலில் இருந்து விலகிவிடாது. அதன் நிலைப்பாடு ஆட்சி அல்லது கருத்தியல் பிரச்சினைகளில் தேர்தல் பின்னடைவுகளால் அதன் பாசிசத்தைக் கைவிடப் போவதில்லை. பா.ஜ.க-வின் கவலை என்னவென்றால், மதவாதத்தில் முன்னோக்கி செல்லும் பாதைதான்! தற்போது, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் தேர்தல் நடைபெறவுள்ள அக்கட்சிக்கு அம்மாநிலங்களில் சூழ்நிலை சரியாக இல்லை.
நரேந்திர மோடி அரசாங்கத்தின் மூன்று சமீபத்திய முடிவுகள் - டில்லி அரசாங்கத்திடம் அரசுப் பணிகளின் அதிகாரத்தை ஒப்படைத்த உச்ச நீதிமன்ற அரசமைப்பு அமர்வின் தீர்ப்பை ரத்து செய்வதற்கான அவசரச் சட்டத்தை வெளியிடுதல்; 2,000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறல் மற்றும் கிரண் ரிஜ்ஜு சட்ட அமைச் சகத்தில் இருந்து நீக்கப்பட்டது ஆகியவை விமர்சனங்களைப் பெற்றுள்ளது. இந்த நடவடிக்கைகள்கூட விமர்சகர்கள் மற்றும் பா.ஜ.க-வில் உள்ளவர்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
மோடி தான் விரும்பியதைச் செய்வதிலிருந்து எதுவும் தடுக்க முடியாது. பா.ஜ.க-வைச் சேர்ந்த 31 வேட்பாளர்கள் டெபாசிட் இழந்த கருநாடகா தேர்தல் முடிவை காங்கிரசுக்கு வாக்களிக்காமல் பா.ஜ.க-வுக்கு எதிரான வாக்காக பல வல்லுநர்கள் பார்க்கும்போது, பல பா.ஜ.க தலைவர்களுக்கு இது கட்சிக்கோ அதன் கொள்கை களுக்கோ எதிரான முடிவு அல்ல மாறாக அதன் மோசமான தேர்தல் நிர்வாகத்தின் விளைவுதான். “எனவே, இது எங்களின் எந்த நிகழ்ச்சி நிரலையும் சிதைக்கக்கூடாது” என்ற நிலைப்பாடுதான்.
காங்கிரசுக்குப் பெரிய ஊக்கத்தை அளித்துள்ள இந்த முடிவு தேசிய பா.ஜ.க மீதான வாக்கெடுப்பு அல்ல - அல்லது இந்த முடிவு அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று கட்சி நிர்வாகிகளும் நம்புகிறார்களாம்.
ஜனசங்க நாட்களில் இருந்தே பா.ஜ.க-வின் கோட்டைகளில் ஒன்றான மத்தியப் பிரதேசத்தில், அக்கட்சி பெரும் நெருக்கடியை எதிர்கொள்கிறது என்று உள்விவகாரங்கள் தெரிவிக்கின்றன.
2018 தேர்தலில், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் ஆதரவு தளத்தின் மீது பா.ஜ.க. தனது பிடியை இழந்தது. மேலும், அக்கட்சியின் மூத்த தலைவர் பி.முரளிதர்ராவின் வழிகாட்டுதலின் கீழ், ஒரு பெரிய அமைப்பு ரீதியான மறுமலர்ச்சி திட்டத்தை சில மாதங்களுக்கு முன்பு தொடங்கியது. தொழில்நுட்பத்தை அதிக அளவில் பயன்படுத்தி, அடித்தளத்தில் அமைப்பை வலுப்படுத்த பா.ஜ.க-வின் முயற்சிகள் ஓரளவு வெற்றி பெற்றதாக பார்க்கப்படுகிறது. ஆனால், தலைவர்களுக்கிடையே விரிவடையும் விரிசல், நான்கு முறை முதலமைச்சராக இருந்த சிவராஜ் சிங் சவுகானைச் சுற்றியுள்ள வர்களிடம் சோர்வு உணர்வு காணப்படுகிறது. 2020இல் காங்கிரஸில் இருந்து இணைந்தவர்களுக்கும், நீண்ட கால ஊழியர்களுக்கும், தலைவர்களுக்கும் இடையே இணக்கமான உறவை உறுதி செய்யத் தலைமை தவறியது ஆகியவை இந்தத் தலைவலிக்கு காரணமாக அமைந்தது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. தோல்வியடைந்த போதிலும், ஜோதிராதித்ய சிந்தியா தலைமையிலான 23 சட்டமன்ற உறுப்பினர்கள் காங்கிரஸிலிருந்து விலகி கமல்நாத் தலைமையிலான அரசாங்கத்தை வீழ்த்தியது. பின்னர், மார்ச் 2020-இல் பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தது - அந்த காங்கிரஸ் கிளர்ச்சியாளர்களின் சேர்க்கை மற்றும் அவர்கள் அரசாங்கத்தில் பதவி உயர்வு பெற்றது ஆகியவை கட்சிக்குள் பெரும் சலனத்தை ஏற்படுத்தியுள்ளது.
பா.ஜ.க-வின் மற்றொரு கவலை என்னவென்றால், கருநாடகாவைப் போல மத்தியப் பிரதேசத்தில் முதலமைச்சரும் மாநில பா.ஜ.க தலைவரும் இணக்கமாக இல்லை. மாநிலத் தலைவர் வி.டி. சர்மா உள்ளிட்ட மாநிலத் தலைமைக்கோ அல்லது முதலமைச்சருக்கோ ஏகா பொருத்தம் எனும் நிலைதான். இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள தேர்தலில் பெரும் இழப்பை சந்திக்க நேரிடும் என்று மூத்த மாநில பா.ஜ.க. தலைவர்கள் கட்சியை எச்சரித்துள்ளனர். இரண்டு வாரங்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கைலாஷ் ஜோஷியின் மகனும் மேனாள் அமைச்சருமான தீபக் ஜோஷி காங்கிரஸில் இணைந்ததால், சிந்தியா தலைமையிலான காங்கிரஸ் தலைவர்களுக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவத்தில் அவர் அதிருப்தி அடைந்ததாகக் கூறப்பட்டது
ராஜஸ்தானிலும் லவ் ஜிகாத் பிரச்சினை - அங்குள்ள ஹிந்துக் கோவில்கள் மீட்பு போன்றவற்றைக்கையிலெடுத்துள்ளது, அதே போல் சத்தீஸ்கரில் பழங்குடியின மக்களுக்கும் இதர வகுப்பு மக்களுக்குமிடையே பகைமையை வளர்க்கும் விதத்தில் பரப்புரைகளை மேற்கொண்டு வருகின்றனர். வரும் தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களில் பல்வேறு சிக்கல்களைச்சந்தித்து வந்தாலும் தங்களுடைய பிரித்தாளும் சூழ்ச்சியால் தேர்தல் வெற்றியைப் பெற்றுவிடலாம் என்று நப்பாசையில் மீண்டும் மோடி என்ற முகமூடியை மாட்டிக்கொண்டு பாஜக களமிறங்க உள்ளது.
ஒரே நாடு என்று ஒரு பக்கத்தில் குரல் கொடுக்கும் பா.ஜ.க. மணிப்பூரில் பிரிவினைவாதத்தைத் தூண்டுகிறது.
வாண வேடிக்கைகளும் ஜிகினா வேலைப்பாடுகளும் வேலைக்கு ஆகப் போவதில்லை. இந்தச் சூழ்நிலையை காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகள் பயன்படுத்தி வெற்றி காண வேண்டும்.
No comments:
Post a Comment