வேலைவாய்ப்புச் சந்தையில் பல தலை முறைகளாக ஆசிரியர் பணிக்கான வரவேற்பு இன்னமும் அப்படியேதான் இருக்கிறது. பட்டய ஆசிரியராக மாறு வதற்குப் பிளஸ் 2-க்கு பிறகு பயில வேண்டிய பட்டயம் Diploma in Teacher Education (D.T.Ed).
ஆசிரியர் பட்டயப் பயிற்சிக்குப் பத்தாண்டுகளுக்கு முன்பிருந்த வரவேற்பு தற்போது இல்லாது போனாலும், ஆண்களைவிட பெண்கள் மத்தியில் இந்தப் படிப்பில் சேருவதற்குப் போட்டி நிலவுகிறது. தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு, பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதே இதற்குக் காரணம். இதற்கான டிப்ளமா (D.T.Ed.) படிப்பில் சேர்வதும் எளிது. பிளஸ் 2-வில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண் பெற்றிருந்தால் சேர்க்கைக்குத் தகுதியுண்டு.
கல்வித் தகுதி
1. தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பிற்கு சேர்க்கை பெற விரும்புவோர் மேல்நிலைத் தேர்வில் (Higher Secondary) தேர்ச்சி பெற்று இருத்தல் வேண்டும்.
2. மேலும், பொதுப் பிரிவினர் (OC) குறைந்தபட்சம் 50 விழுக்காடு மதிப்பெண் ( 600 / 1200 அல்லது 300 / 600 ) மற்றும் பிற்படுத்தப்பட்டோர் / பிற்படுத்தப்பட்டோர் முஸ்லிம் / மிகவும் பிற்படுத்தப்பட்டோர் / ஆதி திராவிடர் / ஆதி திராவிடர் அருந்ததியர் / பழங்குடியினர் (BC / BCM / MBC / SC / SCA / ST ) பிரிவினர் குறைந்தபட்சம் 45 விழுக்காடு (540 / 1200 அல்லது 270 / 600 ) மதிப்பெண் பெற்றிருத்தல் வேண்டும்.
3. விண்ணப்பதாரர் தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பில் எந்த மொழிப் பாடப்பிரிவிற்கு (தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, உருது) விண்ணப்பிக்கின்றாரோ, அம்மொழியினை +2 வரை மொழிப் பாடத்தில் பகுதி ஒன்றிலோ அல்லது பகுதி இரண்டிலோ கட்டாயமாக பயின்றிருக்க வேண்டும்.
4. வயது வரம்பு: 31.07.2023 அன்று அதிகபட்ச வயது 30-க்கு மிகாமல் இருக்க வேண்டும். ஆதிதிராவிடர், ஆதிதிராவிட அருந்ததியர் , பழங்குடியினத்தவர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு அதிகபட்ச வயது 35 ஆகும் . ஆதரவற்றோர் (Orphans), கணவரால் கைவிடப்பட்ட பெண்டிர் மற்றும் விதவைகளுக்கான அதிகபட்ச வயது வரம்பு 40 ஆகும். கலப்புத் திருமணத் தம்பதியினரில் பொது | பிற்படுத்தப்பட்டோர் | மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 31.07.2023 அன்று அதிகபட்ச வயது வரம்பு 32 மற்றும் கலப்புத் திருமணத் தம்பதியினரில் ஆதி திராவிடர், ஆதிதிராவிட அருந்ததியர், பழங்குடியினத்தவருக்கு 31.07.2023 அன்று அதிகபட்ச வயது 37 ஆகும்.
5. சிறப்பு இட ஒதுக்கீடு : மாற்றுத் திறனாளிகள், முன்னாள் படை வீரரின் குழந்தைகள், சுதந்திரப் போராட்டத் தியாகிகளின் வாரிசுகள் ஆகியோருக்குச் சிறப்பு இட ஒதுக்கீடு உள்ளது . இதற்கான விவரம் இணையதளத்தில் உள்ள விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக் கையேட்டில் கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் ‘மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம்’ எனப்படும் ‘டயட்/ DIET’ மையம் செயல்படுகிறது. இது தவிர்த்து ஏராளமான தனியார் பயிற்சி நிறுவனங்களும் உண்டு. உங்கள் பகுதியில் உள்ள தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனம் குறித்த அங்கீகாரம் உள்ளிட்ட தகவல்களை அருகிலுள்ள ‘டயட்’ நிறுவனத்தில் உறுதி செய்துகொள்ளலாம்.
இரண்டு வருடப் பட்டயப் படிப்பு முடித்து ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) எழுதி, அதில் பெற்ற ‘கட் ஆப்‘ மதிப்பெண்கள் மற்றும் முன்னுரிமை அடிப்படையில் தொடக்கப் பள்ளி ஆசிரியராகப் பணி வாய்ப்பு பெறலாம்.
தமிழ்நாட்டில் உள்ள 12 மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் 1,070 இடங்களும், எட்டு அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் 480 இடங்களும், ஆறு ஒன்றிய ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் 300 இடங்களும் உள்ளன.
எப்படி விண்ணப்பிப்பது?
இதற்கான அறிவிப்பு ஆகஸ்ட் மாதத் தில் வெளியிடப்படும். விண்ணப்பங்கள் www.tnscert.org என்ற இணையதளத்தில் முகவரியில் வெளியிடப்படவுள்ளது. இவ்விணைய தளத்தில் உரிய கட்டணத் தைச் செலுத்தி தங்களது விவரங்களைப் பதிவேற்றம் செய்யலாம் .
கட்டணம் செலுத்துவதற்குத் தங்களது பற்று அட்டை (Debit Card), கடன் அட்டை (Credit Card ) மற்றும் இணைய வங்கிச் சேவை ( Internet Banking) ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தி செலுத்தலாம். விண்ணப்பக் கட்டணமாகப் பொதுப்பிரிவு | பிற்படுத்தப்பட்ட வகுப்பு | மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர்களுக்கு ரூ .500 / - , மாற்றுத் திறனாளிகள் / தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு ரூ .250 / - நிர்ணயிக்கப் பட்டுள்ளது.
விண்ணப்பங்களை Online மூலம் ஒவ்வொரு மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் (DIET) மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.
மாணவர்கள் இணையதளத்தில் தங்களது விவரங்களை ஒவ்வொன்றாக உள்ளீடு செய்து, அனைத்து விவரங்களையும் பதிவேற்றியபின் சேமிப்பு (Save) பொத்தானை அழுத்த வேண்டும். பிறகு பணம் செலுத்துவதற்கான தளம் உருவாகும் . இத்தளத்தில் பணம் செலுத்திய பிறகுதான் தங்களது விண்ணப்பம் முழுமையாகப் பதிவேற்றம் செய்யப்படும். இணையதளத்தில் விண்ணப்பதாரர் அளிக்கும் விவரங்கள் சரியானதாக இருக்க வேண்டும். அவர் அளிக்கும் விவரங்கள் சரிபார்க்கப்பட்டு உறுதி செய்த பின்பே அவரது சேர்க்கை உறுதி செய்யப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது. விண்ணப்பத்தில் அளிக்க வேண்டிய முழுமையான விவரங்கள் மற்றும் தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பு பயிற்சி வழங்கும் அரசு நிறுவன விவரங்கள் விண்ணப்பக் கையேட்டில் கொடுக்கப்பட்டுள்ளது. இவ்விண்ணப்பக் கையேட்டினை சொடுக்கி (Click) பார்த்துக் கொள்ளலாம்.
No comments:
Post a Comment