தமிழ்நாட்டில் தொழில் தொடங்க தொழில் முனைவோரை தமிழ்நாட்டிற்கு அழைக்கும் முயற்சியில் நமது முதலமைச்சர் வெற்றி பெறுவார்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, May 23, 2023

தமிழ்நாட்டில் தொழில் தொடங்க தொழில் முனைவோரை தமிழ்நாட்டிற்கு அழைக்கும் முயற்சியில் நமது முதலமைச்சர் வெற்றி பெறுவார்!

 தமிழ்நாடு முதலமைச்சரின் வெளிநாட்டுப் பயணம்

‘திராவிட மாடல்' அரசு இந்தியாவுக்கே வழிகாட்டும்!

தமிழ்நாட்டில் தொழில் தொடங்க வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொண்டுள்ள ‘திராவிட மாடல்' அரசின் முதலமைச்சர் உறுதியாக வெற்றி பெறுவார் - அவருக்கு நமது வாழ்த்துகள் என்று  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார். 

அவரது அறிக்கை வருமாறு:

நமது முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (23.5.2023) சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு 9 நாள் சுற்றுப்பயணம் புறப்பட்டுள்ளார்!

அயல்நாட்டுத் தொழில் முனைவோர்களுக்கு அழைப்பு!

தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலைவாய்ப்புகளைப் பெருக்கும் வகையில், அந்நாட்டு தொழில் முனை வோரை ‘‘தமிழ்நாட்டில் உங்களது தொழிற்சாலைகளை அமைக்க முதலீடு செய்ய வாருங்கள்; தமிழ்நாடு ஓர் அமைதிப்பூங்கா. இது பணியாற்றும் தொழிலாளி களுக்கும், முதல் போட்டு வியாபாரம் அல்லது தொழில் தொடங்கிய அனைவருக்கும் தக்கப் பாதுகாப்பு வழங்கிடும் ஒரு சிறந்த மாநிலம்'' என்பதை முதலமைச்சர் அவர்கள், தொழில் முனைவோருக்குப் புரிய வைத்து, வெளிநாட்டுத் தொழிலதிபர்களை தமிழ்நாட்டிற்கு இரு கைகூப்பி அழைப்பதற்கு நல்ல பதில் கிடைத் திருப்பதைப்போல, இங்குள்ள கார் உற்பத்தி நிறுவனம் (தென்கொரிய நாட்டைச் சேர்ந்த) - ஹூண்டாய் நிறு வனம் சில வாரங்கள் முன்பு முதலமைச்சரைச் சந்தித்து, அதன் விரிவாக்கப் பகுதிக்கும், புதிய வேலை வாய்ப்பு களை உருவாக்குவதற்கும் ஒப்பந்தம் போட்டுள்ளார்கள்; அதற்குமுன் பிரபல ஜப்பானிய தொழில் நிறுவனங்கள் ‘ஏர்கண்டிஷனிங்' சாதன உற்பத்தித் தொழிற்சாலையைத் தமிழ்நாட்டில் அமைக்க முன்வந்து ஒப்பந்தம் போட் டுள்ளனர்.

ஏற்கெனவே தொழில் துறை அமைச்சராக இருந்த மாண்புமிகு தங்கம்தென்னரசு அவர்களது அயராத உழைப்பினாலும், ஊக்க முயற்சிகளாலும் இம்மாதிரி பல தொழில் முதலீடுகள் தமிழ்நாட்டை நோக்கி வரத் தொடங்கின!

ஜப்பானில் ஆதரவும் - வரவேற்பும்!

சிங்கப்பூருக்குப் புறப்படும்முன் நமது முதலமைச்சர் அளித்த செவ்வி(பேட்டி)யில் முன்பு துபாய்க்குச் சென்று வந்தபோதே 6,000 கோடி ரூபாய் முதலீடு நம் தமிழ்நாட்டிற்குக் கிடைத்தது என்று கூறியுள்ளார்!

ஜப்பான் தலைநகர் டோக்கியோவை ஒப்பந்தம் போடுவதற்குரிய மய்யமாகக் கொண்டே அங்கு சென்று திரும்புவார்கள் பலர்.

ஆனால், நமது முதலமைச்சர் ஆற்றல்மிகு மு.க.ஸ்டா லின் அவர்கள் ஒசாக்கா பகுதிக்குச் சென்று, அந்நகரில் தொழிலதிபர்களை சந்திப்பதுடன், புலம் பெயர்ந்து சென்று வாழும் திராவிட - தமிழ்ப் பண்பில் ஊறிய நம் மக்கள் தரும் அன்பான வரவேற்பையும் பெற்று, அவர்களுக்கும் நன்னம்பிக்கையையும், ஊக்கத்தையும் அளிக்கும் வரவேற்பு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள விருப்பது ‘திராவிட மாடல்' ஆட்சி எப்படி ‘‘அனைவருக்கும் அனைத்தும்'' என்ற மகிழ்வினையும் பங்கிட்டுத் தந்து பரவசப்படுத்தும் பார்போற்றும் ஆட்சி என்பதை உலகறியச் செய்கிற சாதனையாகும்!

சிங்கப்பூரில் பெரும் எதிர்பார்ப்பு!

அதுபோல, சிறந்த ஆளுமையின் எடுத்துக்காட்டான சிங்கப்பூர் நாட்டில் தொழில் முதலீடுகளைப் பெறும் நிகழ்வுகளில் அந்நாட்டு அரசு, அமைச்சர்களுடன் கலந்துரையாடி தமிழ்நாட்டிற்குத் தொழில் தொடங்க வருவோருக்கு அனைத்து வசதிகளையும், வாய்ப்பு களையும் உருவாக்கித் தரும் ஒப்பந்தங்களைப் போட விருப்பதோடு, சிங்கப்பூரில்  உள்ள ஒட்டுமொத்த தமிழ்ப் பெருமக்கள் - திராவிடப் பண்பாடுள்ள புலம்பெயர்ந்தும், வேரில் முளைத்து பழுதில்லா விழுதுகளாக வேகமும், விவேகமும் பெற்ற அத்துணை சிங்கப்பூரியர்களாகிய நமது வம்சாவளிகள் தரும் வரவேற்பு மழையிலும் நனையவிருக்கிறார்!

‘‘ஒளிபடைத்த கண்ணினாய் வா! வா!

உறுதிபடைத்த ஆளுமையே வா! வா!!''

என்று அனைவரும் அவரை அம்மக்கள் வரவேற்க விருப்பது பாராட்டத்தக்கது!

‘‘சென்று வருக, வென்று வருக!''

துடிப்பு மிகுந்த இனிய தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் மாண்புமிகு டி.ஆர்.பி.ராஜா முன்கூட்டியே அங்கு சென்று ஏற்பாடுகளை செய்துள்ளதானது இதன் சிறப்புக்கு மேலும் மெருகூட்டச் செய்வதாகும்.

‘திராவிட மாடல்' ஆட்சி இளைஞர்களுக்குப் புதிய பொற்காலத்தை இத்தகைய அரிய முயற்சிகள்மூலம் உருவாக்குவதற்கு ஒரு நல்ல திருப்பமாகும். இது இந்தியாவிற்கே வழிகாட்டும் வேலை வாய்ப்புத் துறை!

முதலமைச்சர் அவர்களே சென்று வருக! 

முயற்சிகளில் வென்று வருக!

நமது பாராட்டுகளும், வாழ்த்துகளும்!

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

23.5.2023


No comments:

Post a Comment