விளையாட்டுத்துறையில் தமிழ்நாட்டின் அடுத்த பாய்ச்சல் - உலகக்கோப்பை ஸ்குவாஷ் போட்டி தமிழ்நாட்டில்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, May 23, 2023

விளையாட்டுத்துறையில் தமிழ்நாட்டின் அடுத்த பாய்ச்சல் - உலகக்கோப்பை ஸ்குவாஷ் போட்டி தமிழ்நாட்டில்!

சென்னை, மே 23- சென்னையில் நடைபெற உள்ள பன்னாட்டு ஸ்குவாஷ் போட்டிக்கான டி-சர்ட்டுகளை   அறிமுகப்படுத்தி பன்னாட்டு ஸ்குவாஷ் போட்டியை நடத்த சென்னை தயாராகி வருவதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னையில் பன்னாட்டு ஸ்குவாஷ் போட்டி வரும் ஜூன் 13ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதையொட்டி, விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று (22.5.2023) கூறியதாவது:

தமிழ்நாடு அரசின் நிதியுதவியுடன் பன்னாட்டு ஸ்குவாஷ் உலகக் கோப்பை போட்டிகள் நடத்தப் படுகின்றன. போட்டியை நடத்தும் இந்தியாவுடன், ஹாங்காங், சீனா, ஜப்பான், மலேசியா, எகிப்து, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் கொலம்பியா ஆகிய 8 நாடுகளைச் சேர்ந்த தலைசிறந்த ஸ்குவாஷ் வீரர்கள் பங்கேற்க உள்ளனர். 2023ஆம் ஆண்டுக்கான பன்னாட்டு ஸ்குவாஷ் உலகக் கோப்பை போட்டியை நடத்த சென்னை தயாராகி வருகிறது. திராவிட மாடல் ஆட்சியில் இளைஞர்கள் விளையாட்டுத் துறையில் முன்னேற்றம் பெற வேண்டும் என்ற வகையில் செஸ் ஒலிம்பியாட் உள்ளிட்ட பல்வேறு பன்னாட்டு போட்டி கள் நடத்தப்பட்டன. வரும் நாட்களில் பன்னாட்டு அளவிலான ஆக்கி மற்றும் ஸ்குவாஷ் போட்டிகளும் நடத்தப்பட உள்ளன. இவ்வாறு அவர் கூறினார். 

தொடர்ந்து, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ரூ.1.50 கோடிக்கான காசசோலையை, தமிழ்நாடு ஸ்குவாஷ் ராக்கெட் அசோசியேசன் தலைவர் என்.ராமச்சந்திரனிடம் வழங்கினார். இந்த நிகழ்வில், விளையாட்டுத் துறைச் செயலர் அதுல்ய மிஸ்ரா, விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர்-செயலர் மேகநாத ரெட்டி, நிர்வாக மேலாளர் வே.மணிகண்டன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

பன்னாட்டு சதுரங்கப் போட்டியை அடுத்து பன்னாட்டு ஸ்குவாஷ் உலகக்கோப்பை விளை யாட்டையும் தமிழ்நாடு நடத்துவது உலக அரங்கில் விளையாட்டுத்துறைக்கான முக்கிய நகரமாக சென்னை மாறிவருவது குறிப்பிடத் தக்கதாகும்.

பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற 

மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு மேயர் பாராட்டு

சென்னை, மே 23-  சென்னை மாநகராட்சி கல்வித்துறையின்கீழ் 32 மேல்நிலைப் பள்ளிகளும், 38 உயர்நிலைப் பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன. சமீபத்தில் நடைபெற்ற 10ஆம் வகுப்பு, பிளஸ்-1 பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற 21 மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகள், நேற்று (22.5.2023) ரிப்பன் கட்டட வளாகத்தில் மேயர் ஆர்.பிரியாவை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.

அப்போது 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற வி.கீர்த்தனா, எம்.பர்ஹானா, 

எச்.திராஜ், ஜெ.விஷ்வா, எஸ்.மணிகண்டன், எஸ்.குமர வேல், எ.தருனா, முத்துலட்சுமி, எ.ஸ்வேதா, ஆர்.ஜெய பிரியா மற்றும் ஜி.ஹரிஷ் ஆகியோருக்கும், பிளஸ்-1 பொதுத் தேர்வில் சிறப்பிடம் பெற்ற ஆர்.சித்ரா, எம்.மகேஸ்வரி, எம்.ஸ்வேதா, பி.ஹரிணி பிரியா, வி.திவ்யா, எம்.பெமின் ஆம்ரா, ஜெ.நேகா, கே.ப்ரீத்தி, எஸ்.ஷாருக் மற்றும் கே.மேனகா ஆகியோருக்கும் மேயர் பிரியா பரிசுகளை வழங்கி ஊக்கப்படுத்தினார்.

மேலும், உயர்க்கல்வி படிப்பிலும் தனிக்கவனம் செலுத்தி சிறப்பாக கல்வி பயிலுமாறு அவர்களிடம் அறிவுறுத்தினார். தொடர்ந்து, பொதுத் தேர்வில் மாணவ, மாணவியர் 100 சதவீதம் தேர்ச்சி பெற உறுதுணையாக இருந்த ரங்கராஜபுரம், ஆயிரம் விளக்கு உயர் நிலைப்பள்ளிகள் மற்றும் அப்பாசாமி தெரு, லாயிட்ஸ் சாலை மேல்நிலைப்பள்ளிகள் ஆகியவற்றின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் மேயர் பிரியா நினைவுப் பரிசுகளை வழங்கி பாராட்டினார். இந்நிகழ் வில், மாநகராட்சி துணை மேயர் மகேஷ் குமார், ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன், கல்வி நிலைக்குழுத் தலைவர் விஸ்வநாதன், கல்வி துணை ஆணையர் ஷரண்யா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இவ்வாறு மாநகராட்சி செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட் டுள்ளது.

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் சேர 

2,99,558 விண்ணப்பங்கள்

சென்னை, மே 23- அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் படிக்க 2,99,588 மாணவர்கள் விண்ணப்பித் துள்ளனர். தமிழ்நாட்டில் 164 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் இயங்குகின்றன. இவற்றில் இளநிலை படிப்புகளில் ஒரு லட்சத்து 7,395 இடங்கள் உள்ளன. இவற்றில் மாணவர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு நேற்றுடன் (22.5.2023) நிறை வடைந்தது.

அந்தவகையில், அரசு கலை, அறிவியல் கல்லூரி களில் இளநிலை படிப்புகளில் சேர 2 லட்சத்து 99 ஆயிரத்து 558 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அதில் 2 லட்சத்து 44 ஆயிரத்து 104 பேர்விண்ணப்பக் கட்டணம் செலுத்தியுள்ளனர்.

இதில் 1 லட்சத்து 15 ஆயிரத்து 752 மாணவர்களும், 1 லட்சத்து 28 ஆயிரத்து 274 மாணவிகளும், 78 திருநங்கைகளும் அடங்குவர். மேலும், அரசு பள்ளி மாணவிகள் 54,638 பேர் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளில் சேர விண்ணப் பித்துள்ளனர்.

No comments:

Post a Comment