'திராவிட மாடல்' பற்றி ஆளுநர் கண்டிப்பதா? தலைவர்கள் கண்டனம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, May 5, 2023

'திராவிட மாடல்' பற்றி ஆளுநர் கண்டிப்பதா? தலைவர்கள் கண்டனம்

சென்னை,மே 5- திராவிட மாடல் பற்றிய ஆளுநரின் பேச்சுக்கு தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

வைகோ 

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிக்கை வருமாறு,

டைம்ஸ் ஆப் இந்தியா ஆங்கில நாளேட்டிற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அளித்த பேட்டியில் திராவிட மாடல் குறித்து அவர் விமர்சித்துள்ளார். "திராவிட மாடல் என்பது காலாவதியான கொள்கையை மீண்டும் புதுப்பிக்கும் முயற்சி. திராவிட மாடல் என்று எதுவும் இல்லை. அது வெறும் அரசியல் முழக்கம் மட்டுமே. திராவிட மாடல் கொள்கைகள் 'ஒரே நாடு, ஒரே பாரதம்' கொள்கைக்கு எதிரானது. இந்த கொள்கை சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகங்கள், வரலாற்றை மறைக்க பார்க்கிறது" என்று கூறி உள்ளார்.

ஆர்.என்.ரவி இந்தப் பேட்டியில் திராவிட இயக்கத்தின் மீது புழுதி வாரி தூற்றி இருப்பது விஷமத்தனமானது; கடும் கண்டனத்திற்கு உரியது. மனுதரும நீதியை மறுத்து மனித நீதிக்கான குரல், சமூக நீதி, சமத்துவம், பெண் உரிமை, ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மை மக்களின் நலன், மொழி, இனம், பண்பாட்டு உரிமை, அரசியல், பொருளாதாரத் துறை களில் தமிழ்நாட்டின் உரிமைப் பாதுகாப்பு, மாநில சுயாட்சிக்கான குரல் இவற்றையெல் லாம் உள்ளடக்கியதுதான் திராவிட மாடல். இதனை வெற்று முழக்கம் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி முகாரி இராகம் பாடுவது அவரது ஹிந்துத்துவ ஆதிக்க மனப் பான்மையை வெளிப்படுத்துகிறது.

ஆர்.எஸ்.எஸ் கோட்பாடுகளை ஆர். என்.ரவி ஆளுநர் மாளிகையில் இருந்து கொண்டு உளறிக் கொட்டக் கூடாது. ஆளுநர் பதவியை விட்டு வெளியேறிப் பேசட்டும். திராவிட இயக்கக் கருத்தியலை இழிவுப்படுத்தி வரும் ஆளுநர் ஆர்.என்.ரவி மன்னிப்புக் கேட்க வேண்டும்.

-இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.

இரா.முத்தரசன்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநில செயலாளர் இரா.முத்தரசன் விடுத் துள்ள அறிக்கை வருமாறு, 

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி  ஒரு ஆங்கில நாளிதழுக்கு அளித்தப் பேட்டி 4.5.2023 தேதியிட்ட இதழில் வெளியாகியுள்ளது. இப்பேட்டியின் மூலம் ஆளுநர் ஆர்.என்.ரவி  தன்னை மீண்டும் ஒரு ஆர்எஸ்எஸ் - பிஜேபியைச் சேர்ந் தவர் என்பதை நிரூபித்துள்ளார். பல்வேறு மசோதாக்களை நிலுவையில் வைத்துக் கொண்டு அப்படி இல்லை என்று பொய் சொல்கின்றார். தமிழ்நாடு நிதியமைச்சர் முன்வைத்த குற்றச்சாட்டுக்களை மறுக்க முடியாமல் ஆர்எஸ்எஸ்-அய்ச் சார்ந்த என்.ஜி.ஓ. அமைப்பை நியாயப்படுத்து கின்றார். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது என்று தமிழ்நாடு அரசு மீது களங்கம் கற்பிக்கும் வகையில் தொடர்ந்து ஒரு பொய்யான தோற்றத்தை உருவாக்குவதற்கு முனைந்துள்ளார்.

ஆர்எஸ்எஸ் - பிஜேபி முன்வைக்கும் ஒரே நாடு ஒரே பாரதம் என்ற முழக்கத்தை ஆதரிப்பதன் மூலமும், மதச்சார்பின்னை பற்றி அரசியல் நிர்ணய சபையில் பேச வில்லை என்று கூறுவதன் மூலமும், திராவிட மாடலை கொச்சைப்படுத்துவதன் மூலமும் ஆளுநர் ஆர்.என்.ரவி ஒரு ஆர்எஸ்எஸ் - பிஜேபி உறுப்பினராகவே வெளிப்படுத்தியுள்ளார்.

இப்படி ஒரு பேட்டியை அளித்ததன் மூலம் ஒரு ஆளுநர் என்ற முறையில் தன் அரசமைப்புக் கடமையிலிருந்து தவறிவிட்டார். எனவே, தமிழ்நாடு ஆளுனரை வன்மையாக கண்டிப்பதோடு உடனடியாக அவர் பதவி விலக வேண்டுமென்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு செயற்குழு வலியுறுத்துகின்றது.

-இவ்வாறு  இரா.முத்தரசன் குறிப்பிட் டுள்ளார்.

கு. செல்வப்பெருந்தகை

தமிழ்நாடு காங்கிரசு கமிட்டியின் சட்டமன்றக்கட்சித் தலைவர் கு.செல்வப் பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் அங்கொன்றும், இங்கொன்றுமாக நடக்கும் சம்பவங்களை சுட்டிக்காட்டி தமிழ்நாடு அமைதிப் பூங்கா என்று  எப்படி சொல்ல முடியுமென்று ஆளுநர் கேட்டிருக்கிறார். மேலும், திராவிட மாடல் காலாவதியான கொள்கை என்றும் பேசியுள்ளார். இதற்கு வன்மை யான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இன்றைய தினம், பாஜக ஆளும் மாநிலமான மணிப்பூர் பற்றி எரிகிறது. அங்குள்ள 16 மாவட்டங்களில் 8 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. உத்தரப்பிரதேசத்தில் கடந்த ஏப்ரல் மாதத்தில் காவல்துறையினர் பாதுகாப்பில் இருந்த 2 நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவமானது இந்தியா வையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதைப் பற்றியெல்லாம் கருத்து கூறமாட்டார் ஆளுநர். ஏனென்றால் அங்கு பாஜகவினர் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு எதிராக போராடிய மக்களை, தியாகம் செய்த மக்களை அவமானப்படுத்தும் விதமாக, மக்கள் மேற்கொண்ட  மகத்தான போராட்டத்தை கொச்சைப்படுத்தும் விதமாக, வெளிநாட்டினர் தூண்டுதல் பேரில் நடைபெற்ற போராட்டம் என்றும் சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்தார். ஆளுநர் கூறும் இதுபோன்ற சர்ச்சைக் கருத்துக்களுக்கு தமிழ்நாட்டில் எதிர்ப்பு வலுத்து வருகிறது. மேலும், மசோதாக்களை வழங்கிடவில்லை. நிராகரிக்கக் கூடிய அதிகாரத்தை யாரும் இவருக்கு வழங்கிட வில்லை.

நடைபெறவுள்ள கருநாடக சட்ட மன்றத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள், திராவிட மாடல் தமிழ்நாடு ஆட்சியின் தேர்தல் வாக்குறுதியை ஒத்திருப்பது போல உள்ளது என்று பெரும்பாலான சமூக செயல்பாட்டாளர்கள் கூறுவதையும், தமிழ்நாடு நம்பர் 1 மாநிலமாக வளர்ச்சியில் முன்னேறிக் கொண்டிருப்பதையும் பொறுத்துக் கொள்ள முடியாத ஆளுநர் இவ்வாறெல்லாம் பேசிக் கொண்டிருக் கிறார்.

ஆளுநர், தான் வகிக்கும் உயர்ந்த பொறுப்பிற்கு மதிப்பளித்து கருத்துக்களைக் கூறுவேண்டும். மாறாக, ஆளுநர் பொறுப்பை அவமதிக்கும் செயலில் அவர் ஈடுபடக்கூடாது. தமிழ்நாட்டிற்கு, தமிழ்நாடு மக்களுக்கு, தமிழ்நாட்டின் ஆட்சிக்கு எதிராக செயல்பட்டு மக்களை ஒருவித அச்சத்தில் ஆழ்த்தி, சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளை உருவாக்கி அதன் மூலம் குறுகிய அரசியல் நோக்கத்தை ஒன்றிய அரசும், ஆளுநரும் நிறைவேற்றிக் கொள்ள முயற்சிக்கிறார்களா? என்ற சந்தேகம் வருகிறது.

ஆளுநர் என்பவர் மாநில அமைச் சரவையின் ஆலோசனை அடிப்படையில் செயல்பட வேண்டுமென அரசியல் சாசனம் வகுத்தளித்துள்ளது. அரசியல் சாசனத்தை மீறும் ஆளுநரை உடனடியாக குடியரசுத் தலைவர் திரும்பப் பெற வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்.

- இவ்வாறு கு.செல்வப்பெருந்தகை குறிப்பிட்டுள்ளார்.


No comments:

Post a Comment