பொருளாதார அறிவு மோடி அரசுக்கு அறவேயில்லை பொருளாதாரத்தில் பெருந்தோல்வியைச் சந்தித்துவிட்டது ஒன்றிய பா.ஜ.க. அரசு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 22, 2023

பொருளாதார அறிவு மோடி அரசுக்கு அறவேயில்லை பொருளாதாரத்தில் பெருந்தோல்வியைச் சந்தித்துவிட்டது ஒன்றிய பா.ஜ.க. அரசு

*  ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று திடீரென்று அறிவித்து - 

  ரூ.2000 நோட்டை புதிதாக அச்சடித்தது மோடி அரசு!

* இப்பொழுதோ அந்த ரூ.2000 நோட்டும் செல்லாதாம்!

திருத்தணியில் செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர்

திருத்தணி, மே 22  ஒரு நாள் திடீரென்று ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தார் பிரதமர் மோடி. கருப்புப் பணத்தை ஒழிக்க ரூ.2000 நோட்டைக் கொண்டு வந்தார். இப்பொழுதோ அந்த ரூ.2000 நோட்டும் செல்லாது என்று ரிசர்வ் வங்கிமூலம் சொல்ல வைத்துள்ளார்; பொருளாதார அறிவு சிறிது மின்றி பெருந்தோல்வியை அடைந்துள்ளது மோடி தலைமையிலான ஒன்றிய பா.ஜ.க. அரசு என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி.

இன்று (22.5.2023) திருத்தணிக்குச் சென்ற திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்  செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

அவரது பேட்டி வருமாறு:

செய்தியாளர்: ரூ.2000 நோட்டுகள் செல்லாது என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது குறித்து தங்கள் கருத்து என்ன?

தமிழர் தலைவர்: பிரதமர் மோடியின் தலைமை யில் நடக்கும் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. ஆட்சி எவ்வளவு' சிறப்பான ஆட்சி' என்பதற்கு இது ஓர் உதாரணம்.  அவரேதான் சில ஆண்டுகளுக்கு முன்பு - திடீரென்று ஒரு நாள் 2000 ரூபாய் நோட்டைக் கொண்டு வந்தார், 

கருப்புப் பணத்தை 

வெளியில் கொண்டு வந்தார்களா?

நிதியமைச்சருக்கே தெரியுமா என்ற கேள்வி இருந்த நேரத்தில்,  பிரதமர் மோடி பணமதிப்பிழப்பு என்பதை அறிவித்து 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்றார். காரணம், கருப்புப் பணத்தை வெளியில் கொண்டுவரவேண்டும் என்பதற்காக என்று சொன்னார்கள்.

அப்பொழுதுதான் 2000 ரூபாய் நோட்டுகளைக் கொண்டு வந்தார்கள். அப்பொழுதே மேனாள் ஒன்றிய நிதியமைச்சர் ப.சிதம்பரம் போன்றவர்கள், பொரு ளாதார நிபுணர்கள், கருப்புப் பணத்தை வெளியில் கொண்டு வருவதற்காக ரூ.500, ரூ.1000 நோட்டுகளை ஒழித்துவிட்டு, ரூ.2000 நோட்டுகளை அறிமுகம் செய்தால், இன்னும் பதுக்கல்காரர்களுக்கு அது வசதியாக இருக்குமே தவிர, உங்கள் நோக்கத்தை அது எப்படி நிறைவேற்றும்? என்று கேள்வி கேட்டனர்.

அந்தக் கேள்விக்கு வழக்கம் போன்று பிரதமரிடமிருந்து பதில் இல்லை.

அதேநேரத்தில், அண்மைக்காலத்தில் ரூ.2000 கள்ள நோட்டுகள் ஏராளமாகப் புழக்கத்தில் வந்துவிட்டன என்று ரிசர்வ் வங்கியே சொல்லும் அளவிற்கு நிலைமைகள் வந்தன.

இப்பொழுது, எந்தக் காரணமும் இல்லாமல், அதற்குரிய போதிய அறிவிப்பும் இல்லாமல், ஏற்கெ னவே தொலைக்காட்சியில் ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று தொலைக்காட்சியில் தோன்றி சொன்னது போன்று இல்லாமல், ரிசர்வ் வங்கியினுடைய அறிவிப்பாகவே இதை அறிவித்திருக்கிறது.

இப்பொழுது பிரதமர் அறிவிக்கவில்லை; 

ரிசர்வ் வங்கி அறிவிப்பது ஏன்?

மிக புரட்சிகரமான திட்டத்தை அறிவிப்பது என்றால், தொலைக்காட்சியில் தோன்றி பிரதமரே பேசுவார். பிறகு அதனுடைய தோல்வியை ஒப்புக்கொள்ள வேண்டிய நிலை இருக்கிறது என்றால், அது ரிசர்வ் வங்கியையே சாரும் என்று சொல்லக்கூடிய அளவிற்கு இன்றைக்கு ஆக்கியிருக்கிறார்கள். மோடி ஆட்சி பொருளாதாரத் துறையில் தோற்றுவிட்டது.

ஏனென்றால், ரிசர்வ் வங்கியில், கருத்து மாறுபாடு கொண்டு பொருளாதாரத்தில் அனுபவம் உள்ள பல அதிகாரிகள், நிபுணர்கள், மதியுரைஞர்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டுப் போனார்கள்.

ஆகவேதான், மோடி ஆட்சியின் பொருளாதார கொள்கையைப் பொறுத்தவரையில், அந்த ஆட்சி யானது அதானிகளுக்கும், அம்பானிகளுக்கும் பயன் படக் கூடிய ஓர் ஆட்சியே தவிர, ஏழை, எளிய மக்களுக்கு என்பதல்ல.

வங்கியில் ரூ.15 லட்சம் விழுந்ததா?

ஒன்றியத்தில் பா.ஜ.க. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு என்ன சொன்னார்கள்? உலகம் முழுவதும் உள்ள கருப்புப் பணத்தை இந்தியர்களின் பணத்தைக் கொண்டு வந்து, ஒவ்வொரு குடிமகனின் வங்கிக் கணக் கிலும் 15 லட்சம் ரூபாய் போடுவோம்; உள்ளூரில் இருக்கின்ற கருப்புப் பணத்தை ஒழிப்பதற்காகத்தான் பண மதிப்பிழப்பு என்று இரண்டு திட்டங்களைச் சொன்னார்கள்.

யார் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் ரூபாய் விழவில்லை; ஏழை, எளிய மக்கள், கிராமப்புற மக்கள் சேர்த்து வைத்திருக்கின்ற பணம் செல்லாது என்று சொன்னவுடன், ஏறத்தாழ 15 பேர் உயிரிழந்தனர்.

ஆகவேதான், இப்படி அடிக்கடி மாற்றுவதினுடைய நோக்கம் என்னவென்று அதனை விளக்கிச் சொல்லவும் இல்லை; அந்த நோக்கமும் நிறைவேறவில்லை என்ப தையும் மக்கள் புரிந்துகொண்டிருக்கின்றார்கள்.

பண மதிப்பிழப்பா? மோடியின் மதிப்பிழப்பா?

எனவே, பண மதிப்பிழப்பு என்பதன்மூலமாக, பணம் மட்டும் மதிப்பிழக்கவில்லை; மோடியின் தலைமையில் உள்ள ஆர்.எஸ்.எஸ். ஆட்சியும் அதன் மதிப்பை இழந்திருக்கிறது.

செய்தியாளர்: பண மதிப்பிழப்பு என்பது தோல்வியடைந்துவிட்டது என்று சொல்லலாமா?

தமிழர் தலைவர்: நிச்சயமாக. அதைப்பற்றி அவர் கவலைப்படாமல், உலகளாவிய தலைவராக அவர் நடந்துகொண்டிருக்கிறார்.

காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் என்று சொன்னார்கள்.

பிரதமரின் ‘ரோடு ஷோ!'

கருநாடகத் தேர்தலில் பிரதமர் மோடியும், உள் துறை அமைச்சர் அமித்ஷாவும் வேறு மாநிலத்தில் இல்லாத அளவிற்குப் பிரச்சாரம் செய்தார்கள். அந்த மாநிலத்திற்கு அவர்கள் கொடுத்த நிதி என்பது வேறு எந்த மாநிலத்திற்கும் இல்லாத அளவிற்குக் கொடுத்தார்கள்.

பிரதமர் மோடி ''ரோடு ஷோ'' நடத்தினார்; பூக்கள்  அவர்மீது தூவப்பட்டன. (அந்தப் பூக்கள் வீசுகின்ற ஏற்பாட்டினை யார் செய்தார்கள் என்பது வெட்ட வெளிச்சமானது குறிப்பிடத்தக்கதாகும்) பூக்கள்தான் அவர்மீது விழுந்தனவே தவிர, மக்கள் வாக்குகளைக் கொட்டவில்லை.

இதுதான் கருநாடக மக்களிடம் ஏற்பட்ட தெளிவு. இந்தத் தெளிவு இந்தியா முழுவதும் ஏற்படத் தயாராக இருக்கிறது.

அதைப்பற்றியெல்லாம் மக்கள் பேசக்கூடாது என்பதற்காக, கருநாடகத்தினுடைய தோல்வியை நாட்டு மக்கள் பேசக்கூடாது என்பதற்காகத்தான் ரூ.2000 நோட்டுகள் செல்லாது என்கிற அறிவிப்பு. திசை திருப்புகின்ற நிகழ்வுகளை எப்பொழுதுமே பா.ஜ.க. ஆட்சி கையாளும்; அது ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கைவந்த கலையாகும்.

உத்தரப்பிரதேசத்தில் 'பெரியார் மேளா'வை சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள் என்று சொன்னால், உடனே பிள்ளையார் பால் குடிக்கிறார் என்கிற திசை திருப்பல்களை செய்தனர்.

திசை திருப்பல் வேலையாகத்தான், கருநாடகத் தோல்வியை மறைப்பதற்காக, ரூ.2000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு.

செய்தியாளர்: ரூ.2000 நோட்டுகள் செல்லாது என்று ஒன்றிய அரசு - ரிசர்வ் வங்கி அறிவித்திருப்பது கோழைத்தனமான செயல்தானே?

அதானி பிரச்சினையில் ராகுல் காந்தியின் கேள்விக்குப் பதில் எங்கே?

தமிழர் தலைவர்: அதுபோன்ற கடுமையான வார்த்தையை நான் சொல்ல விரும்பவில்லை.

அவர்கள் இதுவரையில், நாடாளுமன்றத்தில் இது போன்ற பிரச்சினைகளுக்குப் பதில் சொன்னதே கிடையாது.

அதானி வழக்குப் பிரச்சினையில்கூட, ராகுல் காந்தி அவர்கள் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லவில்லை. மாறாக, ராகுல் காந்தியையே நாடாளுமன்றத்திற்கு வரவிட முடியாமல் செய்துவிட்டார்கள்.

ரயிலில் பயணம் செய்யும்பொழுது, ஜன்னலுக்கு அருகே அமர்ந்துகொண்டு குழந்தைகள் கேள்வி கேட்கும்பொழுது, ஒன்றிரண்டு கேள்விகளுக்கு அப்பா பதில் சொல்வார். மூன்றாவது கேள்விக்கு அப்பாவிற்குப் பதில் தெரியாது. தெரியவில்லை என்று குழந்தையிடம் சொல்லுவதற்குப் பதில், இடத்தை மாற்றி உட்கார் என்று சொல்வார். 

ஏனென்றால், ஜன்னலில் பார்க்கின்ற காட்சிகளை வைத்துத்தானே கேள்வி கேட்கிறார்கள். அதுபோன்று தான் இப்பொழுது பிரதமர் மோடி நடந்துகொள்கிறார்.

ஊதாரி செலவுகள்!

செய்தியாளர்: பன்னாட்டளவில் கச்சா பொருட் களின் விலை குறைந்துகொண்டு வந்தாலும், இந்தியா வில் பெட்ரோல் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறதே? 

தமிழர் தலைவர்: அதில் அவர்கள் சேர்த்த பணம் எவ்வளவு என்கிற புள்ளிவிவரத்தை நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேட்கவேண்டும்.

செஸ் வரி மற்றவை மூலமாக எடுத்த பணம் ஏராளம். அந்தப் பணத்தையெல்லாம் எடுத்து என்ன செய்கிறார்கள் என்று கேள்வி கேட்டால், நாடாளு மன்றத்திற்குப் பழைய கட்டடம் இருக்கின்றபொழுதே, ஒரு புதிய கட்டடத்தைக் கட்டுகிறார்கள்.

விமான நிலையத்தில், குடியரசுத் தலைவருக்குத் தனி விமானம், பிரதமருக்குத் தனி விமானம், குடியரசுத் துணைத் தலைவருக்கு தனி விமானம் என்ற நிலை இருக்கலாமா?

விமான நிலையங்களை தனியாருக்கு விற்றுவிட்டு, அல்லது நீண்ட காலம் குத்தகைக்கு  விட்டுவிட்டு, இவர்கள் செல்வதற்குத் தனித்தனியே விமானத்தை, அதுவும் சுதேசி விமானம் அல்ல; வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட எப்பொழுதாவது பயன் படுத்தக் கூடிய அளவிற்கு - அதேபோல, 20 ஆயிரம் கோடி ரூபாய், 30 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் புதிய நாடாளுமன்றக் கட்டடம் - தானே கட்டி, தானே திறக்கவேண்டும் என்ற அளவிற்கு இருக்கிறது. அந்தப் பிரச்சினையில்கூட, புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை குடியரசுத் தலைவர் திறக்கவேண்டாமா? அதுதானே நியாயமானது என்று ராகுல் காந்தி கேட்டிருக்கிறார்.

வேலை வாய்ப்புகள் உண்டா?

ஒரு பக்கத்தில் பொதுத் துறை நிறுவனங்கள் எல் லாம் விற்கப்பட்டு வருகின்றன. இன்னொரு பக்கத்தில் ஆடம்பரமான கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன.

எனவேதான், இரண்டும் ஒன்றுக்கொன்று முரண் பட்ட ஒரு சூழ்நிலை. ஏழைகளைப்பற்றி ஒன்றிய அரசு கவலைப்படுவதில்லை. வேலை வாய்ப்புகளைப்பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை.

வேலை வாய்ப்புகளில், அரசாங்க வேலை வாய்ப்பில் இடங்கள் காலியாகி, அதை நிரப்புவதற்கே - ஒரு பெரிய விளம்பரத்தைச் செய்துகொண்டிருக்கிறார்கள்.

ஆகவே, நல்ல வித்தைக்காரர் - அடிக்கடி வித்தைக் காட்டுவார் - அந்த வித்தைகளினுடைய பலன்தான் இது.

நன்றி, வணக்கம்!

 - இவ்வாறு தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்  செய்தியா ளர்களிடம் கூறினார்.

No comments:

Post a Comment