படி.. படி! படி.. படி! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 20, 2023

படி.. படி! படி.. படி!

பழக்கமாக்கி வழக்கமாக்கிப்

பக்குவமாய் புத்தகத்தைத் தோய்ந்துபடி!

படிப்படியாய் நீ உயர

அடிப்படையே புத்தகம்தான் ஆழ்ந்துபடி!


நிழற்குடையாய் துணையிருக்கும்!

நினைக்கும்தோறும் சுவைகொடுக்கும்! நூலைப்படி!

நித்தம்ஒரு புத்தகம்படி!

நேரம்வாய்க்கும் போதிலெல்லாம் மூழ்கிப்படி!

படி.. படி!   படி.. படி!


அண்டமெங்கும் சுற்றிவந்து மெய்சி லிர்க்கலாம்!

அறிஞர்களைக் கவிஞர்களைக் கைகு லுக்கலாம்!

கண்டுணர்ந்துப் படித்தவற்றை நீவ டிக்கலாம்!

காகிதப்பூ விதழ்களிலும் தேன்கு டிக்கலாம்!


நூலகத்துள் செல்லும்போது மனித னாகலாம்!

நுழைந்துவிட்டுத் திரும்பும்போது புனித னாகலாம்!

நாலடியும் இரண்டடியும் உரிமை யாகலாம்!

நன்னெறியைச் சட்டமாக்கி உலகை ஆளலாம்!


ஏடுதோறும் அறிவுமணம் வீசி நிற்கலாம்!

எழுத்தாளன் மனசாட்சி பேசி நிற்கலாம்!

நாடும்வீடும் கல்விமலர் பூத்தி ருக்கலாம்!

ஞாலம்உன்றன் ஆணைகேட்டுக் காத்தி ருக்கலாம்!


ஆறு, கடல், மலை,விண்ணும் தோள்கொ டுக்கலாம்!

அன்றாடம் உன்னுடைய நாள்சி றக்கலாம்!

பாறையிலும் கருணைஊற்று நீர்சு ரக்கலாம்!

பார்முழுக்கப் போர்ஒடுங்கும் சீர்நி றக்கலாம்!


கிருத்துவுக்கும் முன்பிறக்கச் சூல்பி டிக்கலாம்!

கீழடியின் காலத்தில்உன் கால்ப திக்கலாம்!

சரித்திரத்தின் பக்கங்களில் சங்க மிக்கலாம்!

சங்ககாலத் தமிழ்அவையில் பங்கெ டுக்கலாம்!


காரல்மார்க்ஸ்,  ஏங்கல்சும் சீராட்டலாம்!

காந்தியாரும்,  அம்பேத்கரும் பாராட்டலாம்!

ஊர்தாண்டித் திசைகள்உன்னைத் தாலாட்டலாம்!

உனக்கும்அந்தக் கார்க்கியின்”தாய்” பாலூட்டலாம்!


பெரியாரும் அண்ணாவும் உரையாடலாம்!

பெருந்தலைவர், கலைஞர்உன்றன் உறவாகலாம்!

வரலாற்றில் நீயும்ஒரு வரியாகலாம்!

வாழ்ந்தாய்நீ என்பதற்குப் பொருளாகலாம்!

படி.. படி!   படி.. படி!

- கவிச்சுடர் கவிதைப்பித்தன்


No comments:

Post a Comment