தித்திக்கும் செய்தியுடன் தாம்பரத்தில் திராவிடர் தொழிலாளரணி மாநில மாநாடு திரள்வீர், தோழர்காள், திரள்வீர்!! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 17, 2023

தித்திக்கும் செய்தியுடன் தாம்பரத்தில் திராவிடர் தொழிலாளரணி மாநில மாநாடு திரள்வீர், தோழர்காள், திரள்வீர்!!

கவிஞர் கலி.பூங்குன்றன்

தோழர்களே, தோழர்களே, வரும் 20ஆம் தேதி சனியன்று காலை முதல் இரவு வரை திராவிடர் தொழிலாளரணி 4ஆவது மாநில மாநாடு, தேன்மழை கொட்டும் செய்தியுடன் கூட இருக்கிறது.

கடந்த 21ஆம் தேதி (21.4.2023) தமிழ்நாடு சட்டப் பேரவையில் சில தொழிற்சாலைகளில் தொழிலாளி களின் வேலை நேரம் 8 மணியிலிருந்து 12 மணி நேரமாக உயர்த்தப்படுவதற்கான சட்ட முன் வடிவு - சில சூழலில் நிறைவேற்றப்பட்டது.

ஆச்சரியமும், அதிர்ச்சியும் கைகோத்து மக்கள் முன் நின்றன.

இதில் கொள்கைப் பிரச்சனை, மனித உரிமைப் பிரச்சினை, உடல் நலப் பிரச்சினை, குடும்ப நலம் என்பவை எல்லாம் கேள்விக்குறிகளாக செங்குத்தாக எழுந்து நின்றன.

கண்டனம், வேண்டுகோள்கள் வீறு கொண்டன. சந்திப்புகளும் நடந்தன.

இதில் வீண் பிடிவாதம் காட்டாமல், அந்த சட்ட முன்வடிவை நிறுத்தி வைப்பதாக நமது மாண்புமிகு முதல் அமைச்சர் உறுதி அளித்தார்.

நிறுத்தினால் மட்டும் போதுமா? வெறும் அரைப் புள்ளி அரைக்கிணறு தாண்டலாமா? முற்றுப் புள்ளி வைக்கப் பட்டாலன்றி முழுத் திருப்தி எப்படி ஏற்படும் என்று தோழமை உணர்வுடன் முதல் அமைச்சர் முன் வைக்கப்பட்டது.

நூற்றாண்டைக் காணும் மேதினம் வந்தாலும் வந்தது; இதைவிடப் பொருத்தமான நாளை எங்கே தேட முடியும்?

ஆம், மேதினத்தில் மானமிகு முத்தமிழ் அறிஞர் கலைஞர் சிந்தனையால் உருவாக்கப்பட்ட மேதினப் பூங்காவில் முதலமைச்சர் மலர் வளையம் வைத்து, வீரவணக்கமும் செலுத்தி -

12 மணி நேர வேலை என்ற சட்ட முன் வடிவு ரத்து செய்யப்படுகிறது என்ற மகத்தான அறிவிப்பினை வெளியிட்டார்.

தேனாற்று மழையில் குதூகலித்து குளித்து மகிழ்ந் தனர். தொழிலாளர்த் தோழர்களும், மனித உரிமை மாந்தர்களும்.

எதிர்ப்பா? அதற்கெல்லாம் அஞ்சேன் - எடுத்த முடிவு எடுத்ததுதான்! என்று மார்புப் புடைத்துப் பேசாமல் - ‘மக்கள் நல அரசு - ஜனநாயக அரசு - மக்கள் குரலே மகத்தான குரல்!' என்ற பெருந்தன்மைக்கு மகுடம் சூட்டும் வகையில் "பெரிய மனதோடு" நடந்து கொண்ட நமது முதல் அமைச்சரின் பெருமைதான், என்னே, என்னே!

கொள்கை என்று வரும்போது, தோழமையானாலும் ‘இடித்துச்' சொல்லும் பெரும் பண்பு தமிழ் மண்ணுக்கு உண்டு.

இன்னும் திமுகவின் தொழிற்சங்கமே (தொ.மு.ச.) எதிர்த்தது என்றால், இதற்கு ஈடு இணையான எடுத்துக் காட்டை எடுத்துரைக்க இயலாது.

தாம்பரத்தில் வரும் 20ஆம் தேதி நடக்கவிருக்கும் திராவிடர் தொழிலாளர் அணி மாநில மாநாடு இந்த மணக்கும் பூச்செண்டுடன் முதல் அமைச்சரை வாழ்த்தி தொடங்கப்படவுள்ளது.

முதல் அமைச்சரின் அறிவிப்பு வந்த அடுத்த நொடியில் நமது தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் முதல் அமைச்சரை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு பாராட்டி, நன்றி தெரிவித்ததுடன் தாம்பரம் மாநாடு முதல் அமைச்சருக்குப் பாராட்டும் நன்றி தெரிவிக்கும் மாநாடாகவும் நடைபெறும் என்று கூறியது கழகத்தின் கண்ணியமான கொள்கைச் சீலத்தைப் பறைசாற்றும்.

ஒரு தகவலைச் சொன்னால் சிலருக்குப் புதிய தரவாகவும் இருக்கும்.

1932 டிசம்பரில் தந்தை பெரியாரால் வெளியிடப்பட்ட "சுயமரியாதை இயக்கத்தின் அடிப்படை இலட்சியங்களும், சுயமரியாதை இயக்க சமதர்மக் கட்சியாரின் வேலைத் திட்டமும்" என்று பிரகடனத்தின் 7ஆவது அறிவிப்பு என்ன தெரியுமா தோழர்களே!

"தொழில் செய்பவர்கள் 7 மணி நேரத்திற்கு மேல் வேலை செய்யக் கூடாது என்பதுடன், அவர்களுடைய வாழ்க்கை நிலை உயர்த்தப்படுவது; தொழிலாளிகளுக் குக் கூலியை உயர்த்தி, அவர்களது சுகவாழ்க்கைக்கு வேண்டிய சவுகரியங்களையும், இலவச நூல் நிலை யங்கள் முதலிய வசதிகளையும் ஏற்படுத்துவது;  தொழில் செய்யாமல் இருக்கின்றவர்களை சர்க்கார் போஷிக்கும்படியும் செய்வது என்பவைகள் சுயமரி யாதை இயக்கத்தின் அடிப்படையான இலட்சியங் களாகும்."

- என்று இன்றைக்கு 91 ஆண்டுகளுக்கு முன் தந்தை பெரியார் வெளியிட்ட திட்டம் - தொழிலாளர்த் தோழர்களின் பால் அய்யாவும், அவர் கண்ட இயக்க மும் எத்தகைய ஈடுபாடும், எல்லையற்ற அக்கறையும் கொண்டது என்பதற்கான ஈடு இணை இல்லா எடுத்துக் காட்டு அல்லவா!

இன்னொன்றையும் கண்டிப்பாகக் குறிப்பிட்டாக வேண்டும்.

சேலம் மாநாடு இயக்க வரலாற்றில் ஒரு திருப்பு முனை (27.8.1944) நீதிக்கட்சி திராவிடர் கழகமாக மாற்றப்பட்ட புரட்சிகரமான மாநாடு அது. பட்டம் பதவிகளைத் தூக்கி எறியச் சொன்ன இலட்சியக் கீதம் பாடிய மாநாடு.

அதன் ஏழாம் தீர்மானம் என்ன கூறுகிறது?

தொழிலாளிக்கு இலாபத்தில் பங்கும், அப்பங்கு முதலீட்டுப் பங்குடன் சேர்க்கப்படவும் வேண்டும் என்பது தான் அந்த ஏழாம் தீர்மானம்!

மார்க்சுக்கும் தோன்றாத புதிய மார்க்கத்திற்கான புதிய திறவு கோல்!

முதலாளி - தொழிலாளி என்ற சொல்லே அகராதியில் இருக்கக் கூடாது. முதலாளி பொருளை மூலதனமாகப் போடுகிறான் என்றால் தொழிலாளி உழைப்பை மூலதனமாகப் போடுகிறான்.

இதில் முதலாளி, தொழிலாளி, கூலியாளி எங்கிருந்து வந்து குதிக்கிறது என்று கேட்கிறார் உண்மை சமதர்ம சமத்துவ ஞானியான தந்தை பெரியார்.

"பாட்டாளிகளின் கவலையும், தொல்லையும் தொலைய வேண்டுமானால் முதலாளித்துவம் என்பது அடியோடு ஒழிந்தே தீர வேண்டும்" என்று ஓங்கி அடித்து ஒலிக்கிறார் உயர் எண்ணங்கள் மலரும் சோலையாம் தந்தை பெரியார்.

இத்தகு இலட்சியங்களையும், கோட்பாடுகளையும் கொண்ட ஒரு கழகத்தில் மாநில மாநாடு என்றால் அதில், இந்தக் காலத்துக்குத் தேவையான - ஏற்றதான தீர்மானங்கள் வந்து தீரும் என்பது யாருக்குத் தான் தெரியாது.

முற்பகல் கருத்தரங்கம் - மாலை திறந்த வெளி மாநாடு!

தமிழர் தலைவர் தலைமையேற்கிறார். அமைச்சர் பெரு மக்கள் கருத்துரையாற்றுகின்றனர். 

மாநாட்டுக்கான ஏற்பாடுகள் தடபுடலாக நடந்தேறிக் கொண்டு இருக்கின்றன.

எங்குப் பார்த்தாலும் சுவர் எழுத்துகள் - கழகக் கொடிகளின் அணி வரிசை.

இரயில்வே தொழிற்சங்கம் (எஸ்.ஆர்.எம்.யூ.), திராவிடர் விவசாய சங்கம், பெல் தொழிலாளர் சங்கம் இவற்றை எல்லாம் பாங்குடன் நடத்திக் காட்டிய தனித் தன்மை திராவிடர் தொழிலாளர் கழகத்திற்கு உண்டு.

கட்டுமான தொழிலாளர் சங்கம், முறை சாராத தொழிலாளர்களின் அமைப்புகள், ஆட்டோ ஓட்டுநர் சங்கம் என்று காலத்திற்கும், அவசியத்திற்கும் தேவை யான அமைப்புகளையும் திராவிடர் தொழிலாளர் சங்கம் கட்டமைத்துச் செயல்படுத்தி வருகிறது.

இச்சங்கங்களின் சங்கமத்தை வரும் சனியன்று  (20.5.2023) தாம்பரத்தில் காணப் போகிறோம்.

ஏதோ, திராவிடர் கழகத்தின் ஒரு பிரிவினர் நடத்தும் மாநாடு என்று கருதவேண்டாம்!

திராவிடர் கழகமே தொழிலாளர் கழகம் தான் என்பார் தந்தை பெரியார்.

மனுதர்ம சாஸ்திரம் என்ன கூறுகிறது?

"யுத்தத்தில் ஜெயித்துக் கொண்டு வரப்பட்டவன், பக்தியினால் வேலை செய்கின்றவன், தன்னுடைய தேவடியாள் மகன், விலைக்கு வாங்கப்பட்டவன், ஒருவனால் கொடுக்கப்பட்டவன், குல வழியாக தொன்று தொட்டு வேலை செய்கிறவன், குற்றத்திற்காக வேலை செய்கிறவன் என தொழிலாளிகள் ஏழு வகைப்படுவர்."

(மனுதர்ம சாஸ்திரம் அத்தியாயம் 8, சுலோகம் 415)

தொழிலாளிகளைப் பற்றி தானே சுலோகம் கூறுகிறது. இதில் சூத்திரர்கள் - பார்ப்பனர் அல்லாதார் எங்கிருந்து வந்தனர்? என்று அவசரப்பட்டு கேள்வி எழுப்ப வேண்டாம்!

அடுத்து வரும் 417ஆம் சுலோகம் அச்சு அடித்து அப்பட்டமாகவே அடையாளம் காட்டி விட்டதே!

"பிராமணன் சந்தேகமின்றி மேற்சொன்ன ஏழுவித தொழிலாளியான சூத்திரரிடத்தினின்று பொருளை வலிமையாலும் எடுத்துக் கொள்ளலாம். யஜமானன் எடுத்துக் கொள்ளத்தக்க பொருளை அடைய அந்தச் சூத்திரர் தன் பொருளுக்குக் கொஞ்சமும் சொந்தக்கார ரல்ல".

புரிகிறதா? முதலாளிமார்கள் - இன்றைய மொழியில் கார்ப்பரேட்டுகள்,சூத்திரர்களான தொழிலாளிகளின் உழைப்பை உறிஞ்சி, ஏதோ பிழைத்துப் போகட்டும் என்று பிச்சைக் காசை எறிவது போல் நடந்து கொள் ளலாம் என்று நெஞ்சில் நஞ்சைத் தேக்கி செயல்படு கின்றனர்.

இன்றைய ஒன்றிய பிஜேபி அரசு என்பது கார்ப்பரேட்டுகளின் அரசுதானே!

அதானி, அம்பானிகளின் அரசுதானே!

தொழிலாளர்கள் தோள் தூக்கி எழுந்தால் எந்த இரும்புக் கோட்டையும் தூள் தூளாகுமே!

தோழர்களே, கழகக் கொடியேந்தி, தாம்பரம் நோக்கி வாரீர்! வாரீர்!!

90 வயதைத் தாண்டிய நமது தலைவர் இளமை முறுக்கோடு பணியாற்றுகிறார்! உங்களின் பட்டாள அலைகடல் தாம்பரத்தைத் தத்தளிக்க விடட்டும், வாரீர்! வாரீர்!!


No comments:

Post a Comment