இந்தியாவில் பெண்களை உயிருடன் எரித்துக் கொல்லும் கொடூரத்துக்கு எதிரான போராட்டம் எப்படி வெற்றி பெற்றது? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 3, 2023

இந்தியாவில் பெண்களை உயிருடன் எரித்துக் கொல்லும் கொடூரத்துக்கு எதிரான போராட்டம் எப்படி வெற்றி பெற்றது?

உலகம் முழுவதும் ஒவ்வொரு சமுதாயத்திலும் காணப்படும் சில பழக்கங்கள், சடங்குகள் போன்றவை பிற சமுதாயங்களுக்கு வியப்பை அல்லது அதிர்ச்சியை ஏற்படுத்தக்கூடியவையாக இன்றும் உள்ளன. இந்தியாவில் கடந்த காலங்களில் நடைமுறையில் இருந்த சதி எனப்படும் உடன்கட்டை ஏறுதலும் இது போல் அதிர்ச்சி ஏற்படுத்தக்கூடிய நடைமுறையாகவே இருந்தது.

கணவன் உயிரிழந்தால், அவனது உடலை எரிக்கும் போது, மனைவியும் அத்தீயில் எரிந்து தன்னை மாய்த்துக்கொள்ளவேண்டும் என்பதே சதி எனப்படும் உடன்கட்டை ஏறுதல். காலம் காலமாக இந்துக்கள் பின்பற்றி வந்த இந்த கொடூர பழக்கத்துக்கு பிரிட்டிஷ் இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் வில்லியம் பென்டிங் பிரபு கடந்த 1829ஆம் ஆண்டு முதன்முதலாகத் தடை விதித்தார்.

வங்காளத்தின் அப்போதைய ஆளுநராக இருந்த பென்டிங், மூத்த ராணுவ அதிகாரிகள் 49 பேர் மற்றும் அய்ந்து நீதிபதிகளிடம் இது குறித்து ஆலோசனை நடத்தி, சதி எனப்படும் உடன்கட்டை ஏறும் வழக்கத்தை முடிவுக்குக் கொண்டு வருவதே சரி என்றும், மனித இனத்துக்கே எதிரான இது போன்ற நடைமுறை இந்தியாவை ஆண்ட பிரிட்டனுக்கு களங்கத்தை ஏற்படுத்தும் என்றும் கருதினார். இதன் விளைவாக உடன்கட்டை ஏறுதல் சட்ட விரோதமானது மட்டுமல்ல என்றும், அது ஒரு மனிதத்தன்மையற்ற செயல் என்றும் அறிவித்து இந்த மோசமான பழக்கத்துக்குத் தடை விதித்தார்.

அவரது புதிய சட்டத்தின்படி, இந்து கைம்பெண் ஒருவர் உடன்கட்டை ஏறுதலுக்குத் தாமாகவே முன்வந்தாலும் அதைத் தடுக்கத் தவறினால் அது கொலைக்குற்றக்குச் சமம் என அறிவிக்கப்பட்டது. மேலும், ஒருவேளை உடன்கட்டை ஏற ஒரு கைம் பெண்ணை நிர்பந்தித்தால், அல்லது உடன்கட்டை ஏறுவதற்குத் தேவையான உதவிகளை அளித்தால் தொடர்புடைய நபர்களுக்கு மரணதண்டனை விதிக்கும் அதிகாரம் நீதிமன்றங்களுக்கு அளிக்கப் பட்டது.

உடன்கட்டை ஏறும் பழக்கத்தை எதிர்த்து ஏற்கெனவே போராடி வந்த சீர்திருத்தவாதிகளை விட மிகக் கடுமையான தண்டனைகளை உள்ளடக்கியதாக பென்டிங்கின் சட்டம் இருந்தது. இந்தச் சட்டம் இயற்றப்பட்டபின், ராஜாராம் மோகன் ராய் தலைமையிலான புகழ்பெற்ற 300 ஹிந்து தலைவர்கள், மற்றும் சீர்திருத்தவாதிகள், பெண்களை இது போல் கொடூரமாக எரித்துக் கொல்லும் வழக்கத்தில் இருந்து தங்களை மீட்டதற்காக பென்டிங்கை பாராட்டி அவருக்கு நன்றி தெரிவித்தனர்.

இருப்பினும் பழைமைவாத ஹிந்துக்கள், ஹிந்து மத நெறிமுறைகளில் எங்கும் உடன்கட்டை ஏறுவது கட்டாயப்படுத்தப்படவில்லை என்பதை ஒரு ஆதாரமாகக் காட்டி பென்டிங்கை எதிர்த்து புகார் தெரிவித்தனர். ஆனால் அதற்கெல்லாம் பென்டிங் அசைந்துகொடுக்கவில்லை. இதையடுத்து ஹிந்து பழைமைவாதிகள் பிரிட்டனில் இருந்த உட்சபட்ச நீதிபரிபாலன அமைப்பான பிரிவி கவுன்சிலுக்கே சென்று உடன்கட்டை ஏறுவதைத் தடை செய்யும் சட்டத்தை எதிர்த்து வாதிட்டனர்.

இருப்பினும், உடன்கட்டை ஏறுதல் என்பது சமூகத்துக்கு எதிரான அப்பட்டமான கொடூர குற்றம் என்பதை உறுதிப்படுத்திய பிரிவி கவுன்சில், பென்டிங் கின் சட்டத்துக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது.

1829-இல் பென்டிங் அறிமுகப்படுத்திய சட்டம், இந்தியாவை பிரிட்டன் ஆட்சி செய்த 190 ஆண்டுகளில், பழைமைவாதத்துடன் எந்த விதத்திலும் சமரசம் செய்துகொள்ளாத அசைக்க முடியாத சட்டம் என மனோஜ் மிட்டல் என்ற எழுத்தாளர், தமது Caste Pride  என்ற நூலில் சுட்டிக்காட்டுகிறார்.

இந்திய விடுதலைக்காக காந்தியார் எப்படி அக்கறை செலுத்தினாரோ, அதே மாதிரி ஜாதீயம், உடன்கட்டை ஏறுதல், பாலின பாகுபாடு போன்ற வற்றிற்கு எதிராக பென்டிங் போராடினார் என்றும் மனோஜ் மிட்டல் அவரது நூலில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவை ஆட்சி செய்த பிரிட்டனுக்கு களங்கத்தை ஏற்படுத்திய, ஒரு கொடூர பழக்கமான உடன்கட்டை ஏறுவது தண்டனைக்குரிய குற்றம் என அறிவித்ததன் மூலம் பிரிட்டனும் நியாயத்தின் பக்கம் நின்ற பெருமையைப் பெற்றது.

ஆனால் இந்திய தண்டனை சட்டத்தை உரு வாக்கிய தாமஸ் மெக்காலே, உடன்கட்டை ஏறுவதற்கு எதிரான பென்டிங்கின் மிகக்கடுமையான சட்டத்தை 1837ஆம் ஆண்டு சிறிது நீர்த்துப் போகச் செய்தார். அவர், உடன்கட்டை ஏறும் போது ஒரு கைம்பெண் மீது தீயை மூட்டுபவர் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிச் செல்வதற்கான வழிகளை ஏற்படுத்தினார். அவருடைய சட்ட முன்மாதிரியில், உடன்கட்டை ஏற விரும்பிய கைம்பெண்கள் ஆழ்ந்த மத நம்பிக்கையின் மூலம் தூண்டப்பட்டிருக்கலாம் அல்லது அதை ஒரு கவுரவமாகவே கருதியிருக்கலாம் எனத் தெரிவித்திருந்தார்.

உடன்கட்டை ஏறுவதை மிகக்கடுமையாக மெக்காலே எதிர்க்காதது பிற்காலத்தில் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத் தியதாகவும் மிட்டா கருதுகிறார்.

பின்னர் 1857ஆம் ஆண்டு, பிரிட்டிஷ் அரசு வழங்கிய துப்பாக்கிக் குண்டுகளில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டிருந்ததாகவும், இது மதச்சட்டங்களுக்கு எதிரானது என்றும் கருதிய ஹிந்து மற்றும் இஸ்லாமிய ராணுவ வீரர்கள், கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிராக சிப்பாய் கலகத்தில் ஈடுபட்ட போது, மெக்காலேவின் கருத்து மேலும் வலுப்பெற்றது. இந்த சிப்பாய் கலகத்தின் போது பிரிட்டன் அரசுக்கு எதிரான உயர் ஜாதி இந்துக்களை சமாதானப்படுத்தும் நோக்கில் மெக்காலேவின் கருத்து இருந்தது எனக்கருதலம்.

1862ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட சட்டத்தில், உடன்கட்டை ஏறுவதற்கு எதிராக இருந்த மிகக்கடுமையான தண்டனைகள் ரத்து செய்யப் பட்டன. உடன்கட்டை ஏறும் கைம்பெண் ஒருவர், அதற்குச் சம்மதம் தெரிவித்திருந்தால் அது ஒரு தற்கொலையே, தவிர கொலையல்ல என்றும் இந்த புதிய சட்டம் கூறியது.

சதிக்கு எதிரான சட்டம் வலுவிழந்தது, மத ரீதியான சட்டங்களை விரும்பாத பழைமைவாதிகளுக்கு ஆதரவளிக்கும் விதத்தில் இருந்ததாகவே மிட்டல் எழுதுகிறார். உடன்கட்டை ஏறுவதைத் தடை செய்த 1850ஆம் ஆண்டு சட்டம், இந்து மதம் மற்றும் ஜாதீய நம்பிக்கையற்றவர்களுக்கும், குடும்பச் சொத்துக்களில் உரிமை இருக்கிறது என் பதை உறுதி செய்தது. இதே போல் 1856ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டம் அனைத்து கைம்பெண்களும் மறுமணம் செய்யும் உரிமையை வழங்கியது.

ஆனால், பிரிட்டன் அரசு துப்பாக்கிக் குண்டுகளில் மாட்டு கொழுப்பை பயன்படுத்தியது என்பதால் அதிக கோபத்தில் இருந்த உயர் ஜாதி இந்துக்களின் கோபத்தைக் குறைப்பதே, உடன்கட்டை ஏறுவதற்கு எதிராக கடுமையான சட்டங்களை இயற்ற முடியாத நிலையை உருவாக்கியது.

உடன்கட்டை ஏறுவதற்கு உடந்தையாக இருப்பது ஒரு கொலைக்குற்றம் என்ற நிலையில் இருந்து, அது வெறும் தற்கொலைக்குத் தூண்டுதல் என்ற நிலை 1829 - 1862ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் ஏற்பட்டது. 1829ஆம் ஆண்டிலிருந்து உடன்கட்டை ஏறுவது மிகவும் குறைந்திருந்தாலும், உயர் ஜாதி இந்துக்களிடையே அது ஒரு கவுரவமும், மதிப்பும் மிக்க செயல் என்றே கருதப்பட்டது என மிட்டா கூறுகிறார்.

பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான விடுதலைப் போரில் அதிக அளவில் ஈடுபட்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்த அரசியல்வாதியும், வழக்குரைருமான மோதிலால் நேரு, உத்தரப்பிரதேசத்தில் உடன்கட்டை ஏறுவதற்கு உடந்தையாக இருந்த 6 உயர் ஜாதி இந்து ஆண்களுக்காக 1913ஆம் ஆண்டு நீதிமன்றத்தில் வாதிட்டதை யாரும் எதிர்பார்க்கவில்லை.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஆண்கள், உடன்கட்டை ஏறிய கைம்பெண்ணின் ஆழ்ந்த மன விருப்பத்தின் காரணமாக இயற்கையாகவே அவர்களது உடலில் தீ பற்றியதாக நீதிமன்றத்தில் தெரிவித்தனர். ஆனால் இந்த வாதத்தை ஏற்காத நீதிபதி, இதில் கடவுளர் சக்தி சம்பந்தப்பட்டிருந்தது என்ற வாதத்தை நிராகரித்து, குற்றம் சாட்டப்பட்டவர்கள் தற்கொலைக்குத் தூண்டியது தான் உண்மை எனத் தீர்ப்பளித்தார். குற்றம் சாட்டப்பட்டவர்களில் இருவருக்கும் நான்கு ஆண்டு தண்டனையும் விதிக்கப்பட்டது.

அதன் பின் 70 ஆண்டுகள் கழித்து உடன்கட்டை விடயத்தில் இறுதி மாற்றம் ஏற்பட்டது. 1987ஆம் ஆண்டு மோதிலால் நேருவின் கொள்ளுப் பேரனான ராஜீவ் காந்தியின் அரசு, உடன்கட்டை ஏறுவதை ஆதரிக்கும் எந்த நடவடிக்கையும் ஒரு குற்றமே என்ற சட்டத்தை முதன்முதலாக இயற்றியது. உடன்கட்டை ஏறுவதை ஊக்குவித்தல், அதற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தல், அதை நியாயப்படுத்துதல் என எந்தச் செயலாக இருப்பினும் அதற்கு 7 ஆண்டுகள் தண்டனை விதிக்க இந்தச் சட்டம் வழிவகைகளை ஏற்படுத்தியது. மேலும், உடன்கட்டை ஏறுவதற்கு நிர்பந்திப்பது அல்லது உடந்தையாக இருப்பது ஒரு கொலைக்குற்றம் என்றும், அதற்கு ஆதரவாக இருந்தால் மரண தண்டனை விதிக்கப்படும் என்றும் இந்த சட்டம் கூறியது.

இருப்பினும் ராஜஸ்தான் மாநிலத்தின் ஒரு குக்கிராமத்தைச் சேர்ந்த ரூப் கன்வார் என்ற இளம் பெண் நாட்டிலேயே கடைசியாக உடன்கட்டை ஏறிய போது இந்தச் சட்டம் பெரும் எதிர்ப்பைச் சம்பாதித்தது. 1947-இல் இந்தியா சுதந்திரம் அடைந்த பின் அதிகாரப்பூர்வமாகப் பதிவான உடன்கட்டை ஏறிய நிகழ்வுகளில் இது 41-ஆவது நிகழ்வு என மிட்டா கூறுகிறார்.

 நன்றி: பிபிசி தமிழ் இணையம், 25.4.2023


No comments:

Post a Comment