எதிர்பாராத திருப்பங்களின் தொகுப்புதான் வாழ்க்கை! ஏனெனில், ஒவ்வொரு மனிதரும் ஒவ்வொரு சிந்தனை வயப்பட்டவர்கள்! அதனால் இது இயல்புதான்! அதில் எந்த சிந்தனை அவர் களின் வாழ்க்கையை பாதிக்கிறது? எந்த சிந்தனை அவர்களை அந்த பாதிப்பிலிருந்து மீட்கிறது? என்பதைப் பொறுத்து சக மனிதர்களுக்கு திருப் பங்கள் அமையும்! ஒருவருக்கு அது மோசமாகவும், மற்றொருவருக்கு அது இனிமையாகவும் அமைய லாம். எனக்கு பெரும்பாலும் இனிமையான திருப்பங்களே இதுவரை அமைந்திருக்கின்றன. அதற்குக் காரணம் தந்தை பெரியாரும், திராவிடர் இயக்கமும் ஒரு நூற்றாண்டு காலம் பாடுபட்டு ஏற்படுத்தி வைத்திருக்கும் சமூகநீதிக் கருத்தியலே! இந்தக் கருத்தியல் தான் பல்லாயிரக்கணக் கானோரை ஈர்த்தது போலவே என்னையும் பெரியார் பால்; பெரியாரியலின் பால் ஈர்த்தது. இன்னமும் ஈர்த்துக் கொண்டிருக்கிறது. நாளும் அந்த ஈர்ப்பு, பெரியாரே அடிக்கடி சொல்வது போல, கல்லுப்போல உறுதிப்பட்டுக்கொண்டே இருக்கிறது.
இப்படிப்பட்ட சூழலில் கடந்த தொழிலாளர் நாளான மே 1 ஆம் தேதி, தஞ்சை வல்லத்தில் உள்ள, பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிகர்நிலை பல்கலைக் கழகத்தில் மே 2 முதல் மே 6 வரை, 5 நாட்கள் நடைபெறும் பெரியார் பிஞ்சுகளுக்கான பழகு முகாமில் கலந்து கொள்வதற்காக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களுடன் ஒன்றாக பயணம் செய்யும் ஓர் அரிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. தஞ்சாவூருக்கு காலை 6 மணிக்கு (2-5-2023) செல்ல வேண்டிய அந்த வண்டி, முதல் நாள் (1-5-2023) இரவு பெய்த மழையால் 45 நிமிடம் தாமதமாக சென்று கொண்டிருப்பதாக சக பயணிகளே அலுப் புடன் மெல்லிய குரலில் பேசிக்கொண்டிருந்தனர். நானும், கவிஞரும் காலை 6 மணிக்கு இறங்குவ தற்குத் தயாராக இருந்தோம். கவிஞரை வரவேற்க பொதுச்செயலாளர் தஞ்சை இரா. ஜெயக்குமார் தஞ்சை ரயில் நிலையத்தில் காத்துக் கொண்டிருக் கிறார் என்பதை கவிஞரிடம் சொன்னேன். கூடுதல் நேரம் அவர்கள் காத்துக் கொண்டிருக்க நேர்ந்த தற்கு கவிஞர் சங்கடப்பட்டார்.
வண்டி பாபநாசத்தை நெருங்கிக் கொண்டி ருந்தது. பக்கவாட்டு படுக்கையிலிருந்து ஒரு பெண் குரல், “நீங்க எப்பவுமே இப்படித்தான் சட்டை அணிவீர்களா?” என்று வந்தது. நான் பெரியார் படம் பொறித்த பனியனும், கவிஞர் வழமை போல கருப்புச் சட்டையுடனும் இருந்ததால், நம்மை நோக்கித்தான் கேள்வி வந்திருக்கிறது என்பதறிந்து, அனிச்சையாகத் திரும்பிப் பார்த்தேன். பதிலை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருந்தார் அந்தப் பெண்! பக்கத்தில் ஒரு ஆண் இருந்தார். அவரும் எங்களையே பார்த்தவாறு இருந்தார்! சட்டென்று நான், ”ஆமாங்க” என்றேன். அடுத்து மின்னல் வேகத்தில், ”தஞ்சாவூரில் ஏதாவது நிகழ்ச்சியா?” என்ற கேள்வி அவரிடமிருந்தே வந்தது! நான், நிதானமாக பழகு முகாம் பற்றிய தகவல்களை அந்தப் பெண்ணுடன் பகிர்ந்து கொண்டேன். விருப்பமான ஒன்றைப் பார்த்தால், மகிழ்ச்சியும், குறுகுறுப்பும் ஏற்படுமல்லவா? அதைப் போலவே என்னைப் பார்த்துக் கொண்டிருந்த அந்தப்பெண், “உங்களுக்கு வழக்குரைஞர்அருள்மொழி தெரி யுமா?” என்றார். “அவர் எங்கள் பிரச்சாரச் செயலாளர்” என்று நானும் அதே குறுகுறுப்புடன். பிறகு, “நீங்க” என்றேன். என் பெயர் உமா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) நான் சென்னையிலிருக்கும் தேனாம்பேட்டை ஏஜிஎஸ் அலுவலகத்தில் பணி யாற்றுகிறேன். தஞ்சைக்கு தணிக்கை செய்வதற்காக சென்று கொண்டிருக்கிறேன்” என்றார். அவர் முகத்தில் அந்த குறுகுறுப்பு கொஞ்சமும் குறைய வில்லை. அவர், கறுப்புச் சட்டையிடம் கேட்பதற்கு இன்னும் நிறைய கேள்விகளை வைத்திருந்தார் போலிருந்தது.
விடுதலையை கையில் வைத்துக்கொண்டே கவிஞரும் இந்த உரையாடலை கவனித்துக் கொண்டுதான் இருந்தார். அவர் விடுதலையைப் பார்த்துக் கொண்டே, “அங்கே நம் தோழர் பூங்குழலி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் வேலை செய்கிறார்” என்றதும், அந்தப் பெண், “தெரியும்” என்றார் என்னைப்பார்த்தே! அப்போது தான் அவரை சற்று கவனிக்க முடிந்தது. நெற்றியில் பளிச்சென்று தெரியும்படி சிவப்புநிற பொட்டு வைத்திருந்தார். இருந்த ஆவலை அடக்க முடியாமல் அவரே, “எங்க சங்கத்தில் அருள்மொழி பேசியிருக்காங்க. நாங்க அவங்ககிட்ட அரசியல் மட்டும் பேசாதீங்க என்று மட்டும் தான் சொன் னோம். அவங்களும் கச்சிதமா என்ன பேசணுமோ அதை மட்டும்தான் பேசினாங்க. எனக்கு ரொம்பப் பிடிச்சுப் போச்சு. அதிலிருந்து நான் அடிக்கடி அவங்க பேச்சைக் கேட்பேன்” என்றார் ஒரு குழந்தையைப் போன்ற ஒரு குதூகலத்துடன். அடிக்கடி ஏற்படும் ஒரு மனநிறைவுடன் நான், “அவங்க சொன்னது ஒரு துளிதாங்க. வாய்ப்பு இருந்தால் நீங்க பெரியார் திடலுக்கு வந்து, உங்களுக்குத் தேவையான புத்தகங்களை வாங்கிப் படிங்க” என்றேன். நான் பேசி முடிக்கும் முன்பே, “நான் பெரியார் புத்தகம் படிச்சிருக்கேன்” என்றார் மிகுந்த உற்சாகத்துடன். உரையாடலின் சுவை கூடிப்போக, “என்ன புத்தகம்?” என்றேன் அடக்க முடியாத ஆவலுடன். அதே ஆர்வத்துடன், “பெண் ஏன் அடிமையானாள்?” என்றார். நான், “அது ஒன்றே போதுங்க!” என்றேன் மிகுந்த மனநிறைவுடன். கட்டுப்படுத்த முடியாத ஆவல் அந்தப் பெண்ணின் முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்தது. அவரால் பேசாமல் இருக்க முடிய வில்லை. “அதெப்படிங்க? ஒரு பெண்ணா எனக்கு வெளியில் சொல்ல முடியாத பிரச்சினைகள் என்னென்ன இருக்கோ, அத்தனையையும் அவரு பேசியிருக்காரு!! என்றார் கண்கள் விரிய, வியப்பு முகத்தில் தாண்டவமாட! மயிர்க்கூச் செறிந்து போயிருந்த நான், “அதனாலதாங்க அவர் பெரியார்” என்றேன்.
வண்டி தஞ்சை ரயில் நிலையத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. தன் மனதில் உள்ளவற்றை எல்லாம் கொட்டிவிட வேண்டும் என்று எண்ணிய அந்தப்பெண், “நீங்க என்னதான் சொன்னாலும், சிலர் உங்க கருத்தை ஏத்துக்க மாட்டாங்க. நான் யாரைச் சொல்றேன்னு உங்களுக்குத் தெரிந்திருக் கும். அவங்க மாறவே மாட்டாங்க. அதனால் அவர்களை விடுங்க. சாதாரண மக்களுக்கு இந்தக் கருத்துக்களை நீங்க சொல்றீங்களா?” என்று அக்கறையுடன் கேட்டார். விரிவாகப் பேச முடியா விட்டாலும், ”உங்கள் கவலை நியாயமானது. ஊடகங்களின் ஆதரவு தந்தை பெரியார் காலத்திலிருந்தே எங்களுக்கு இல்லாததால், எங்கள் சக்திக்கும் மீறி நாங்கள் செய்கிற பிரச்சாரம் உங்களுக்கும் வந்து சேரவில்லை, அவ்வளவுதான்” என்றேன். அவர் விடவில்லை என்னை, “இந்த
12 மணி நேர வேலை என்று முதலமைச்சர் கொண்டு வந்தது சரியா?” என்று கேட்டார். “எங்கள் தலைவர், ஆசிரியர் அய்யா அதைக் கண்டித்து அறிக்கை கொடுத்திருக்கிறார். அனைத்துக் கட்சி கூட்டத்தில் அதிகாரிகளின் அறிவுரை குறித்து விமர்சித்திருக்கிறார். கொள்கையில் தடம் மாறி னால் இன்னார், இனியர் என்று எங்களுக்கு கவலை இல்லை. உரிமையோடு கண்டிப்போம்” என்று சொன்னேன். “உங்கள் தலைவர் முதலமைச்சருக்கு பாராட்டுவிழா நடத்துவதாக சொல்லியிருக்கிறாரே” என்று அடுத்த கேள்வியை முன்வைத்தார். “செய் தது தவறு. அதை திருப்பப் பெற்றுக்கொள்கிறோம் என்று சொல்லியிருப்பதும், திரும்பபெற்றதும் பாராட்டத்தக்கதுதானே” “அதெப்படிங்க? இந்த
12 மணி நேர சிந்தனையே வந்திருக்கலாமா?” என்றார் விடாப்பிடியாக. “அப்படியில்லைங்க, பிரதமர் மோடி மாதிரி, பெரும்பான்மை இருக்கிறது என்று, நம்மை தெருவில் இறங்கி போராட விடவில்லையே. செய்த தவறை திருத்திக்கொள்வது பாராட்ட வேண்டிய ஒன்றல்லவா?” என்றேன். அவர் சிரித்துக்கொண்டார். ரயில் தஞ்சை நிலையத் தில் நின்றது. இருவரும் ஒருவருக்கொருவர் ஒரு மனநிறைவான புன்னகையைப் பரிமாறிக்கொண்டு இறங்கினோம்.
பொதுச் செயலாளர் தஞ்சை இரா. ஜெயக்குமார் தோழர்களுடன் கவிஞரை வரவேற்று, வாசலுக்கு அழைத்துச் சென்றார். வாகனம் பெரியார் மணி யம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிகர் நிலை பல்கலைக் கழகத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது. எனக்குள்ளும் கவிஞருக்குள்ளும் ரயிலில் சந்தித்த பெண்ணைப் பற்றிய சிந் தனைகளே ஆக்ரமித்திருந்தன. ”அந்தப் பெண் படிச்ச புத்தகத்தின் பெயரைக் கேட்டதும், பெரியார் எங்கெங்கெல்லாம் போயிருக்கிறாரு பாருங்கய்யா” என்று நான் முன் இருக்கையில் இருந்த கவிஞரை நோக்கிச் சொன்னேன். அவரோ, “அந்தப் புத்தகம் பி.ஹெச்.டி.க்கு சமம்!” என்று சொல்லிவிட்டு, ”வயது கூடகூட, கொள்கைப் பக்குவம் வரவர, மறுபடியும் படிச்சா, புதுசு, புதுசா பொருள் விளங்குகிறது” என்று வியந்தார். தொடர்ந்து, “பெண்களுக்கு உரிமைகள் கொடுக்கணும் என்று எண்ணும் போது, நீங்கள் உங்கள் மனைவியைப் பற்றி எண்ணாமல், உங்கள் மகளையும், உடன்பிறந்த சகோதரியையும் எண்ணிக்கொண்டு கொடுங்கள் என்று பெரியார் சொன்னார்” என்றார் தன்னிச்சையாக! எனக்கோ மயிர்க்கூச் செறிந்தது! ”ஆமாங்க, ஆமாங்க” என்றேன் நானும் தன்னிச்சையாக! அப்போது பெரியார் என்னுள் பேருருக் கொண்டிருந்தார். அது என்னையே மூழ்கடித்து அமிழச் செய்துவிடும் போலத் தெரிந்தது. அதிலிருந்து மீளவே முடியாதது போன்ற ஆக்ரமிப்பு அது! ஆனால், அது சுகமாக இருக்கின்றதே! சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வு அல்லவா? அதிலிருந்து நான் ஏன் மீளவேண்டும்?
- உடுமலை வடிவேல்
No comments:
Post a Comment