கருநாடகத்தில் அதிகாரப் பங்கீடு - கட்டுக்கோப்பாக காய் நகர்த்திய ‘கார்கே’ - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 27, 2023

கருநாடகத்தில் அதிகாரப் பங்கீடு - கட்டுக்கோப்பாக காய் நகர்த்திய ‘கார்கே’

மே முதல் வாரம் விடுதலை ஞாயிறு மலரில் “வரலாறு படைக்கப்போகும் காங்கிரஸ்” என்ற ஆய்வுக்கட்டுரை  வெளிவந்தது. அப்படியே மே 13 தேர்தல் முடிவுகளில் எதிரொலித்தது. 40 ஆண்டுகளுக்குப் பிறகு வரலாற்றுச் சாதனை படைத்த வெற்றியை கருநாடக வாக்காளர்கள் காங்கிரசுக்கு அளித்தனர். பல்வேறு கருத்துக்கணிப்புகளிலும் கடைசி நேரத்தில் கூட பாஜகவிற்கு சாதகமாக தேர்தல் முடிவுகள் அமையும் என்றே கூறிவந்தன. இருப்பினும் மக்கள் முழுமையாகக் காங்கிரசுக்கு ஆதரவு அளித்தனர். பா.ஜ.க.வைத் தோற்கடித்த வெற்றிக்களிப்பில் தென் இந்தியா முழுவதுமே இறங்கி இருந்த நிலையில் ஆட்சிப்பகிர்வு குறித்து பல்வேறு எதிர்மறைச் செய்திகளை நாள்தோறும் வட இந்திய ஊடகங்கள் எழுதிவந்தன. 

ஒரு கட்டத்தில் டி.கே.சிவக்குமார் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுகிறார் என்றே தலைப்பிட்டு செய்தியை எழுதினர். தனது பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பெங்களூரில் இருந்த சிவக்குமார் உடனடியாக டில்லி சென்று குறிப்பிட்ட செய்தியை எழுதிய ஊடகத்தின்மீது நடவடிக்கை எடுப்பேன் என்று விமான நிலையத்திலேயே கோபமாகப் பேசும் அளவிற்கு வதந்திகளை பரப்பிவிட்டனர். 

ஜனநாயக வழியில் காங்கிரஸ் கட்சி பல கட்டங்களில் ஆலோசனை நடத்தியது. பின் 18ஆம் தேதி மாலை முதலமைச்சர் தேர்வு தொடர்பான முடிவுகளை டில்லியிலிருந்து வேணுகோபால் வெளியிட்டார்.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து பதவி ஏற்கும் மே 20 வரை கட்சித் தொண்டர்கள், உள்ளூர் தலைவர்கள் இடையே எந்த ஒரு பிணக்கும் ஏற்பட்டு விடாமல் கட்டுக்கோப்பாக வைத்திருந்த சாதனைக்குச் சொந்தக்காரர் மல்லிகார்ஜுன கார்கே.

நேரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அல்லாத முதல் காங்கிரஸ் தலைவர்.  - எந்த நெருக்கடியில் இருந்தாலும் அதைச் சாதுர்யமாக கையாளும் திறமைமிக்க தலைவர்களில் கலைஞர் வரிசையில் கார்கேவையும் வைக்கலாம்.

தலைமைக்கு மிகவும் விசுவாசமானவர். ஆகையால் அவரைத்தேடி தலைமைப் பொறுப்பு சென்றது.

தேர்தல் வெற்றிக்குப் பிறகு மகிழ்ச்சிக் கொண்டாட்டத்தைத் தொண்டர்கள் கொண்டாட வழிவிட்டு, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேச்சு வார்த்தைகளுக்குத் தலைமை தாங்கினார். தனது கருநாடக அனுபவத்தை பயன்படுத்தினார். தனிப்பட்ட சார்புகளை மேலோங்க விடாமல், காந்திகளைச் (சோனியா, ராகுல், பிரியங்கா) சரியான இடைவெளியில் வைத்து ஈடுபடுத்தினார்.

கருநாடகாவில் காங்கிரசின் வெற்றிக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் ஊடகங்கள் நாள்தோறும் எழுதிய செய்தியை சாமர்த்தியமாக கையாண்டார். இமாச்சலப் பிரதேசத் தேர்தல் வெற்றிக்குப் பிறகு, பல்வேறு மாநிலங்களில் உள்ள காங்கிரஸ் உட்கட்சித் தலைவர்களிடையே ஏற்படும் பிணக்கை சரிப்படுத்த அவர் எடுத்துக்கொண்ட நடவடிக்கை கருநாடகத்தில் அவருக்குக் கை கொடுத்தது. இதன்மூலம் அவர், தான் சுயமான தலைவர் என்பதை நிரூபித்தார். அதே போல், மேனாள் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா மற்றும் ராகுல்காந்தி ஆகியோரின் ஆலோசனையைத் தேவைப்படும்போது பெறும் அளவுக்கு நம்பிக்கையுடன் இருக்கிறார்.

காங்கிரசின் இடைவிடாத வீழ்ச்சியால் அக்கட்சித் தலைமையின் மீது ஏளனங்களைத் தாராளமாக கிட்டத்தட்ட அனைத்து ஊடகங்களுமே கொட்டித் தீர்த்துக்கொண்டு இருந்தன. சோனியா, ராகுல், பிரியங்காகாந்தி ஆகியோர் கார்கேவுக்குச் சுதந்திரமாக செயல்பட வழிவிட்டனர். மேலும், அவர் ஒரு ரப்பர் ஸ்டாம்ப் தலைவர் என்று எதிர்க்கட்சிகள் சொவதற்கு வேலையில்லாமல் செய்துவிட்டனர். எடுத்துக்காட்டாக, கருநாடகத் தேர்தலுக்கு பிறகு ஏற்பட்ட ஊடக வதந்திகளைக் கையாள, கார்கேவிற்கு வழிவிட்டு  சோனியாவும் பிரியங்காவும் ஒதுங்கிக்கொண்டனர். 

 கார்கேவின் வீட்டிற்கு பிரியங்காவும் ராகுல்காந்தியும் பேச்சுவார்த்தைக்கு சென்றனர்.  கருநாடக விவகாரம் குறித்து முடிவு எடுப்பதற்கு முன்பு, கருநாடகா முன்னேற்றத்தைக் குறிக்க டி.கே.சிவக்குமார் மற்றும் சித்தராமையா ஆகியோரின் கைகளைப் பிடித்தபடி, ஒரு புதிய கார்கே முன்னுக்கு வந்து கொண்டிருந்தார். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக தன்னை ஏற்கெனவே நிரூபித்துள்ள கார்கே. சமீபத்தில் நடந்த தேர்தலில் தனது சொந்த மாநிலமான கருநாடகாவில் தீவிரப் பிரச்சாரம் செய்து, ஒரு மாத காலம் அங்கு முகாமிட்டு, தனது வயதைப் பொருட்படுத்தாமல், மாநிலம் முழுவதும் பயணம் செய்து, வலிமையான பேச்சாளராக நிரூபித்தார். பா.ஜ.க-வை கடுமையாக விமர்சித்ததுடன், தன்னை ஒருமித்த கருத்து உருவாக்குபவராகவும் காட்டியுள்ளார்.

முன்னதாக, மல்லிகார்ஜுன கார்கேவின் இல்லத்திற்குப் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாரும், பீகார் துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவும் தங்கள் ஒன்றிணைந்த எதிர்க்கட்சிப் பணியின் ஒரு பகுதியாக இருக்க அழைப்பு விடுத்தனர். அப்போது, ராகுலும் உடன் இருந்தார். மார்ச் மாதம், கார்கே மீண்டும் எதிர்க்கட்சித் தலைவர்களுக்குத் தனது இல்லத்தில் இரவு விருந்து அளித்தார். சோனியா காந்தியும் ராகுல் காந்தியும் கலந்து கொண்டனர்.

மல்லிகார்ஜுன கார்கே கருநாடக மாநிலத்தின் நீண்டகால காங்கிரஸ் தலைவராக இருந்தவர். மாநிலத்தின் முதலமைச்சர் பதவிக்கான போட்டியில் மூன்று முறை போட்டியிட்டு ஒவ்வொரு முறையும் தோற்றுப் போனார். 2013 தேர்தலில் தோல்வியடைந்தவர்களில் ஒருவர் அவர். தங்களுக்கு இடையே முன்காலத்தில் போட்டி இருந்தபோதிலும், அவர்  சித்தராமையாவை முதலமைச்சராக தேர்ந்தெடுத்தார்.

கார்கே தங்களின் கடந்த காலத்தையோ அல்லது தனிப்பட்ட பிணக்குகளையோ முதலமைச்சர் தேர்வு செய்யும் பணியில் வர அனுமதிக்கவில்லை. இரண்டு கருநாடகப் போட்டியாளர்களுடனான பேச்சு வார்த்தையை அவர் மேற்பார்வையிட்டார். எந்த இடத்திலும் ராகுல்காந்தியும் சோனியா காந்தியும் கருநாடக முதலமைச்சர் விவகாரத்தில் தங்களின் கருத்துகளை தனிப்பட்ட முறையில் வைக்கவில்லை. அவர்கள் அனைவருமே கார்கேவின் 10, ராஜாஜி மார்க் இல்லத்தில் இருந்துதான் எந்த முடிவும் வரவேண்டும் என்பதில் தீர்மானமாக இருந்தனர். இதனால் ஊடகங்களுக்கு தீனி கிடைப்பதில் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதை ராகுலும் ரசித்துக்கொண்டு இருந்தார்.

கார்கே விதிகளைக் கடுமையாகக் கடைப்பிடித்தார். புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள், தங்களின் சட்டமன்றத் தலைவரை நியமிக்க காங்கிரஸ் தலைவருக்கு அதிகாரம் அளிக்கும் ஒரு வரித் தீர்மானத்தை நிறைவேற்றினர். இருப்பினும் அவர்களின் விருப்பத்தையும், சபையின் உணர்வையும் அறிய ஒரு வாக்கெடுப்பையும் நடத்தினார்.

அதைக் கொண்டு அழுத்தங்களையோ,  மிரட்டல்களையோ கொடுக்காமல் அமைதியான முறையில் ஆலோசனை நடத்தினார். துணை முதலமைச்சர் பதவியை ஏற்க சிவக்குமாரிடம் கூறுவதற்கு முன், சோனியா மற்றும் ராகுல் இருவரிடமும்  கருத்தையும் ஆலோசனையையும் அவர் கோரினார்.

“எந்த நேரத்திலும், அவர் பதற்றமாக காணப்படவில்லை. அவர் எந்தவோர் இறுதி எச்சரிக்கையையும் கொடுக்கவில்லை; கடுமையான தொனியில் பேசவில்லை. உண்மையில், அனைவர் மனநிலையும் அன்பாகவும் உண்மையில் மகிழ்ச்சியாகவும் இருந்தது” என்று ஒரு தலைவர் கூறினார்.

கருநாடக காங்கிரஸ் பொறுப்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா ஒருமுறை செய்தியாளர் களிடம் பேசும்போது, ஒரு நபர் ஒரே அதிகார மய்யமாக இருக்க அனுமதிக்கப்படக் கூடாது என்பதில் மல்லிகார்ஜுன கார்கே தெளிவாக இருப்பதாகச் சுட்டிக்காட்டினார்.

கார்கே அணுகுமுறையின் நுணுக்கங்களை அறிந்தவர் என்று கூறிய சுர்ஜேவாலா, “தனது சொந்த அனுபவம்  பொது வாழ்க்கையில் பெற்ற அறிவு மற்றும் 50 ஆண்டுகளுக்கு மேலாக மாநிலத்திற்குச் சேவை செய்ததன் அடிப்படையில், சிவக்குமார்,  சித்தராமையா இருவருக்குமே பொறுப்பு வழங்கப்பட வேண்டும் என்று அவர் முடிவு செய்தார். 

நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு, காங்கிரஸ் தலைமைக்குப் பெரியாரிய, அம்பேத்கரிய சமூகநீதிக் கருத்துகளை முதன்மையாகக் கொண்டு, கொள்கைகளில் எக்காரணத்திலும் சமரசம் செய்துகொள்ளாமல், சறுக்கல்கள் வந்த போதிலும் அதை நிதானமாக எதிர்கொண்டு  சமூகநீதித் தலைவர்களின் பாதையில் சென்று வெற்றிக்கனியைப் பறித்துக் கொடுத்தார். இருப்பினும் அவர் தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளவில்லை. 

அவருக்குத் தெரியும்... அவருக்கு முன்பு 2024ஆம் ஆண்டு தேர்தல் உள்ளது. அதையும் பெரியாரிய அம்பேத்கரிய சமூகநீதிப் பாதையிலே சென்றால்தான் வெற்றிபெற முடியும் என்று! ஆகவே தான் கருநாடகத் தேர்தல் வெற்றியைக் கொண்டாட, தொண்டர்களிடம் கொடுத்துவிட்டு கார்கே மீண்டும் டில்லியை நோக்கி பயணத்தைத் தொடர்கிறார் மல்லிகார்ஜுன கார்கே.

No comments:

Post a Comment