பதிலடிப் பக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, May 19, 2023

பதிலடிப் பக்கம்

இந்தியாவில் அறிவியல்?

ஒன்றிய அரசின் மூடத்தனத்தை 'ஆனந்த விகடனே' முட்டி சாய்க்கிறது




நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை' என்று பழம்பெருமை பேச ஆரம்பிக்கும் ஒரு சமூகம், கடைசியில் அறிவியலை நிராகரிப்பதில் போய் முடியும். இந்தியா அப்படி ஓர் இடத்தை நோக்கிப் போகிறதோ என்ற கவலையுடன் முன்னணி அறிவி யலாளர்கள் 1,800 பேர் இணைந்து, தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலுக்குக் கடிதம் எழுதியுள்ளனர். பத்தாம் வகுப்புப் பாடநூலிலிருந்து டார்வினின் பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டுப் பாடம் நீக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்தே இந்தக் கடிதம்.

"கரோனாவுக்குப் பிறகு மாணவர்களின் பாடச் சுமையைக் குறைக்கவே இந்தப் பாடம் நீக்கப்பட்டது. அதுதான் இணையதளத்தில் இருக்கிறதே! யாராவது பரிணாம வளர்ச்சிக் கோட்பாட்டைப் படிக்க விரும் பினால், அங்கே போய்ப் படித்துக்கொள்ளட்டுமே" என்கிறார் ஒன்றிய கல்வித்துறை இணை அமைச்சர் சுபாஷ் சர்க்கார்.

"பரிணாம வளர்ச்சிக் கோட்பாடு என்பது வெறும் உயிரியல் பாடம் இல்லை. அது அறிவியலின் பால பாடங்களில் ஒன்று. இதை மாணவர்கள் படிக்காமல் போனால், அவர்களுக்கு அறிவியல் சிந்தனை வராது. சிந்திக்கும் திறனுமே பாதிக்கப்படும். மருத்துவம், தொற்றுநோய்கள், சுற்றுச்சூழல், உளவியல், உயிரியல் என்று பல துறைகளையும் தொட்டுச் செல்லும் அறி வியல் இது, சமூகத்தையும் நம்மையும் பாதிக்கும் பல பிரச்சினைகள் குறித்துப் புரிந்துகொள்ளும் அறிவை இதுவே வளர்க்கிறது. 'தக்கன பிழைக்கும்' என்ற இயற்கைத் தேர்வுக்கொள்கையின்படி சில உயிரி னங்கள் ஏன் அழிகின்றன, சில உயிரினங்கள் எப்படிப் புதிதாக உருவாகின்றன என்பதைப் புரிந்துகொள்வது மாணவர்களுக்கு அவசியம். கரோனா வைரஸ் எப்படி தன்னை உருமாற்றிக் காத்துக்கொண்டது, தடுப்பூசிக் கண்டுபிடிப்பு எப்படி நிகழ்ந்தது என்று எல்லாவற்றிலும் பரிணாமக் கோட்பாடு உதவுகிறது. இதைச் சொல்லித்தர மறுத்தால், உலகின் பல மாற்றங்களை அறிவியல் கண் ணோட்டத்தில் பார்க்கும் திறனை மாணவர்கள் இழப்பார்கள்" என்று கடிதத்தில் கவலைப்படுகிறார்கள் அறிவியலாளர்கள்.

நிதியும் ஆராய்ச்சியும் குறைவு!

உலகில் அதிக பிஹெச்.டி ஆய்வாளர்களை உருவாக் கும் நாடுகள் பட்டியலில் முன்னணியில் இருக்கிறது இந்தியா. ஆனால், மருத்துவம் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த அறிவியல் ஆராய்ச்சிகளை இங்கே செய்பவர்கள் குறைவு. தென்கொரியாவில் 10 லட்சம் மக்கள்தொகையில் 7,498 ஆராய்ச்சியாளர்கள் இருக்கிறார்கள். இது ஜப்பானில் 5,304, பிரிட்ட னில் 4,341, அமெரிக்காவில் 4,245 என்ற எண்ணிக் கையில் இருக்கிறது. இந்தியாவில் வெறும் 255 பேரே இருக்கிறார்கள்.

ஆராய்ச்சிகளுக்கு இங்கு செலவிடப்படும் நிதியும் குறைவு. ஜப்பான் தன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.4% தொகையை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்காகச் செலவிடுகிறது. அமெரிக்கா 2.7%, சீனா 2% செலவிட, இந்தியா 0.7% அளவே செலவிடுகிறது.

உலகிலேயே அதிக ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் உள்ள நாடுகள் பட்டியலில் 77,000 நிறுவனங்களுடன் இந்தியா மூன்றாம் இடத்தில் இருக்கிறது. ஆனால், அவற்றில் புதுமையான டெக்னாலஜி சார்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் 3,000 மட்டுமே!

பா.ஜ.க தலைவரும் மேனாள் ஒன்றிய அமைச் சருமான சத்யபால் சிங், "டார்வின் கோட்பாடு அறிவியல்ரீதியாகத் தவறு. அதை மாற்ற வேண்டும். நம் முன்னோர்கள் யாருமே இதைச் சொன்னதில் லையே. எங்கும் எழுதி வைக்கவில்லையே? அப்புறம் எப்படி இது உண்மையாகும்" என்றார். இந்திய அறிவியல் காங்கிரஸ் மாநாட்டில் பேசிய ஆந்திரப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் நாகேஸ்வர் ராவ், "டார்வின் கோட்பாட்டைவிட மிகச் சிறந்த பரிணாமக் கோட்பாடு, பகவான் விஷ்ணுவின் தசாவதாரம்தான்” என்று பேசினார். மகாபாரதம் குறிப்பிடும் கவுரவர்கள் 100 பேரின் பிறப்பு, ஸ்டெம் செல் மற்றும் டெஸ்ட் ட்யூப் குழந்தை உருவாக்க டெக்னாலஜியை நம் முன்னோர் கள் கண்டுபிடித்திருந்தனர் என்பதைக் காட்டுகிறது என்றார். இதிகாசப் போர்களில் பயன்படுத்திய அஸ்தி ரங்கள், ஏவுகணைகள் அல்லாமல் வேறென்ன என்று கேட்டார். இவர்களின் பேச்சுகளிலிருந்து அரசின் முடிவைப் புரிந்துகொள்ள முடிகிறது.

வருங்காலத் தொழில்நுட்பம் குறித்த பாடங்களில் அய்ரோப்பியக் குழந்தைகள் மூழ்கியிருக்கிறார்கள். ஆனால், இந்தியாவில் பல்கலைக்கழக மானியக் குழு கடந்த மாதம் வெளியிட்ட National Credit Frame work, 'வேதங்களையும் புராணங்களையும் அறிந்திருந் தால், மாணவர்கள் அதற்கு மதிப்பெண் பெற முடியும்' என்று அறிவிக்கிறது. நாடெங்கிலும் வேதகால அறி வியல் மாநாடுகளை நடத்திவருகிறார்கள்.

மதிப்புமிக்க ஆராய்ச்சி இல்லை!

அமெரிக்காவின் நேஷனல் சயின்ஸ் ஃபவுண்டே ஷன் ஒவ்வோர் ஆண்டும் Science & Engineering Indicators என்ற அறிக்கையை வெளியிடும். 2022ஆம் ஆண்டுக்கான அறிக்கைப்படி, அறிவியல் ஆராய்ச்சிகளில் இந்தியா மூன்றாவது இடத்தில் இருக்கிறது. சீனா முதலிடத் திலும், அமெரிக்கா இரண்டாம் இடத்திலும் உள்ளன. ஒன்றிய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் இதைப் பெருமிதத்துடன் அறிவித்தார்.

ஆனால், பிரதமரின் முதன்மை அறிவியல் ஆலோச கரான அஜய்குமார் சூட் இதைப் பற்றி வேறுவிதமாகச் சொன்னார். "அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆராய்ச்சிக் கட்டுரைகள் எத்தனை வெளியாகின்றன என்பதை வைத்தே இந்தத் தரவரிசை வெளியிடப்படுகிறது. இந்தியா வில் அதிக ஆராய்ச்சிக் கட்டுரைகள் வெளியாவதால் இப்படி ரேங்கிங் கொடுத்துள்ளார்கள். ஆனால், இவற்றில் பெரும்பாலானவை தரமான ஆராய்ச்சிகள் இல்லை" என்றார் அவர். 'அதிக தாக்கம் ஏற்படுத்தும் ஆராய்ச்சிக் கட்டுரைகள் வெளியாவது இந்தியாவில் குறைவாகவே இருக்கிறது' என்று 2022 டிசம்பரில் வெளியான இந்தியத் தலைமைக் கணக்குத் தணிக்கை அறிக்கையும் தெரிவித்தது.

"அறிவியல் ஆராய்ச்சிகளைப் பொருளாதார வளர்ச்சியுடன் இணைத்துப் பார்க்க வேண்டும். ஆய்வுக்கூடத்திலிருந்து நிஜ வாழ்க்கைக்கு ஒரு கண்டுபிடிப்பு வடிவெடுத்து வந்தால் மட்டுமே அது சாதனையாக மாறும்" என்று இந்த ஜனவரி மாதம் நடைபெற்ற இந்திய அறிவியல் காங்கிரஸ் மாநாட்டில் சொன்னார் பிரதமர் மோடி. பிரதமர் சொல்வது உண்மைதான். அறிவியல் ஆராய்ச்சியிலும் புதுமைக் கண்டுபிடிப்புகளிலும் முன்னணியில் இருக்கும் தேசங்களே பொருளாதார வளர்ச்சி பெறுகின்றன. இதற்காக குளோபல் இன்னோவேஷன் இண்டெக்ஸ் என்று ஒரு தரவரிசை வெளியிடுகிறார்கள். சுவிட்சர் லாந்து, அமெரிக்கா, சுவீடன், பிரிட்டன், நெதர்லாந்து ஆகியவை இந்தத் தரவரிசையில் முதல் அய்ந்து இடங் களில் இருக்கின்றன. சீனா 11ஆவது இடத்தில் உள்ளது. இதில் இந்தியா 40ஆவது இடத்தில் இருக் கிறது.

அறிவியலுக்கு நாம் எந்த அளவுக்கு முன்னுரிமை கொடுக்கிறோம் என்பதற்கு டார்வின் கோட்பாட்டைத் தாண்டியும் இரண்டு உதாரணங்களைக் கொடுக்க முடியும். இந்திய அறிவியல் சமூகத்துக்கு 280-க்கும் மேற்பட்ட விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்படும். கடந்த ஆண்டு ஒன்றிய அரசு ஒரு முடிவெடுத்து, இந்த விருதுகள் அனைத்தையும் நிறுத்திவிட்டது. அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை, அணுசக்தித் துறை, விண்வெளித் துறை, பயோடெக்னாலஜி துறை, தொழி லக ஆராய்ச்சித் துறை, புவி அறிவியல் அமைச்சகம், சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை என்று அனைத் துத் துறைகள் சார்பாகவும் சிறந்த ஆராய்ச்சியாளர் களுக்கு வழங்கப்படும் விருதுகள் இவை. இந்தப் பரிசுகளைத் தாண்டி அறிவியல் மற்றும் தொழிலக ஆராய்ச்சி கவுன்சில் சார்பில் வழங்கப்படும் இந்தியா வின் மதிப்புக்குரிய அறிவியல் விருதான சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருதும் கடந்த ஆண்டு வழங்கப் படவில்லை. 'நோபல் பரிசுக்கு இணையான விஞ்ஞான் ரத்னா விருது இந்திய ஆராய்ச்சியாளர்களுக்கு வழங் கப்படும்' என்று அறிவிப்பு வெளியானது. அதற்கும் எந்த முனைப்பும் இல்லை.

இவர்களில் சிலருக்கு விருதைவிட முக்கியம், இந்த விருதுடன் இணைந்து வழங்கப்படும் மாதாந்திர ஃபெல்லோஷிப் தொகை. அது, தொடர் ஆராய்ச்சி களுக்குப் பல ஆண்டுகளுக்கு உதவியாக இருக்கும். விருது இல்லாததால், அதுவும் இல்லாமல் போய்விடும். ஏற்கெனவே ஆராய்ச்சி மாணவர்களுக்கும் ஃபெல் லோஷிப் தொகை உரிய காலத்தில் கிடைப்பதில்லை என்று புகார் இருக்கிறது.

ஒன்றிய அரசு எடுத்திருக்கும் இன்னொரு முடிவின் மூலம், விஞ்ஞான் பிரசார் அமைப்பு மூடப்படுகிறது. ஒன்றிய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் சுயாட்சி பெற்ற அமைப்பு, விஞ்ஞான் பிரசார். அறிவியல் சிந்தனையை மாணவர்களிடமும் மக்களிடமும் எடுத்துச் செல்வதற்காக கடந்த 1989ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. புத்தகங்கள், பத்திரிகை கள், வானொலி நிகழ்ச்சிகள், குறும்படங்கள், வொர்க் சாப்கள் ஆகியவற்றை நடத்துவது இதன் பணி. பல ஊர்களில் அறிவியல் கிளப்களை உருவாக்கி, மூட நம்பிக்கைகளை அகற்றி அறிவியல் அணுகுமுறை யைக் கற்றுத் தரும் பணியையும் செய்தது.

இதுபோன்ற ஓர் அமைப்பு இந்தியாவிலேயே கிடையாது எனலாம். வெறும் 10 அறிவியலாளர்களை வைத்துக்கொண்டு இவ்வளவு பணிகளையும் இது செய்கிறது. 18 மொழிகளில் புத்தகங்கள், 19 மொழிகளில் வானொலி நிகழ்ச்சிகள் என கிராமப்புற மாணவர் களிடம் அறிவியல் அறிவைக் கொண்டு சேர்க்கும் பணியைச் செய்துவந்தது. இந்த அமைப்புக்கு ஆண்டு தோறும் ஒன்றிய அரசு செய்யும் செலவு ரூ.20 கோடிக் குள்தான் இருக்கும். இந்திய சுதந்திரத்தின் நூற்றாண் டுக்காக 'ட்ரீம் 2047 என்ற இதழைத் தொடர்ச்சியாக நடத்திவரும் இந்த அமைப்பு ஏன் மூடப்படுகிறது என்ற காரணம்கூட இதில் இருப்பவர்களுக்குத் தெரிய வில்லை.

உலகிலேயே இளைய தலைமுறையை அதிகம் கொண்ட நாடாக இந்தியா இருக்கிறது. நம் கோய முத்தூரில் தொடங்கி இந்தியா முழுக்க சின்னச்சின்ன நகரங்களில் கனவுகளுடன் பலர் அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் புதுமைகளைச் செய்துவருகிறார்கள். புத்தெழில் தொழில்நுட்பங்களைப் பெரிதும் பயன் படுத்தும் நிறுவனங்கள் அதிகம் இருக்கும் பகுதிகளை Science & Technology Cluster என்றழைக் கிறார்கள். இப்படிப்பட்ட உலகின் டாப் 100 கிளஸ்டர் களில் 21 சீனாவிலும், 21 அமெரிக்காவிலும் உள்ளன. இந்தியாவிலும் பெங்களுகு, டில்லி, மும்பை, சென்னை என நான்கு கிளஸ்டர்கள் இருக்கின்றன. தேசத்தின் எதிர்காலத்தை வடிவமைக்கும் இடங்கள் இவை இதுபோன்றவை இன்றும் அதிகரிக்க வேண்டுமானால், பள்ளிப்பருவத்திலிருந்து நம் குழந்தைகள் அறிவியல் அறிவு பெற வேண்டும் அதற்கான வழிகளையே அரசு தேட வேண்டும்.



இந்தியாவுக்கு இதில் 12ஆவது இடம்!
ஒரு நாடு எந்த அளவுக்குப் புதிய உருவாக்கங் களுக்கான பன்னாட்டுக் காப்புரிமை பெறுகிறது என்பதை வைத்தே அந்த நாட்டின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி மதிப்பிடப்படுகிறது. கடந்த 2022ஆம் ஆண்டில் அதிக பன்னாட்டுக் காப்புரிமை பெற்ற டாப் 5 நாடுகள்.

'முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் 'இல்லை' என்று நாம் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை. அவர்களுடைய அறிவின் செழுமையே நம்மை நாகரி கமானவர்களாக மாற்றி, தொழில்நுட்பப் பாய்ச்சலை நமக்குக் கொடுத்தது. ஆனால், நாம் அறிவியலில் சளைத்தவர்கள் இல்லை என்பதை நம் எதிர்காலத் தலைமுறைகளுக்கு நிரூபிக்க வேண்டிய கட்டாயம் நமக்கு இருக்கிறது.

- ‘ஆனந்த விகடன்‘, 17.5.2023


No comments:

Post a Comment