மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் மும்முரம்: ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் தலைவர்களை சந்திக்க காங்கிரஸ் தலைவர் கார்கே திட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, May 22, 2023

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் மும்முரம்: ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் தலைவர்களை சந்திக்க காங்கிரஸ் தலைவர் கார்கே திட்டம்

புதுடில்லி, மே 22 கரநாடக மாநில சட்டமன்றத்திற்கு நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி அபார வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. அடுத்த ஆண்டு மக்களவை தேர்தலை நாடு சந்திக்க உள்ளது. அதற்கு முன்பாக 5 மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. 

அந்த மாநிலங்கள் மிசோரம், சத்தீஷ்கார், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானா ஆகும். இவற்றில் மிசோரமில் முதலமைச்சர் ஜோரம் தங்கா தலைமையில் மிசோ தேசிய முன்னணி ஆட்சி நடக்கிறது. சத்தீஷ்காரிலும், ராஜஸ்தானிலும் முறையே பூபேஷ் பாகல், அசோக் கெலாட் ஆகியோர் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது. மத்திய ப் பிரதேசம் மட்டும்தான் சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் பா.ஜ.க. ஆளுகிற மாநிலமாக உள்ளது. தெலுங்கானாவில் சந்திரசேகர ராவ் தலைமையில் பாரத ராஷ்டிரிய சமிதி கட்சி ஆட்சி நடக்கிறது. 

செல்வாக்கை நிலை நிறுத்த...

காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தமட் டில் சத்தீஷ்காரிலும், ராஜஸ்தானிலும் ஆட்சியைப் பிடித்தே ஆக வேண்டும் என்ற நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இமா சலபிரதேசத்திலும், கருநாடகத்திலும் அடுத்தடுத்து ஆட்சியைப் பிடித்துள்ள காங்கிரஸ் கட்சிக்கு சத்தீஷ்காரிலும், ராஜஸ்தானிலும் வெற்றி பெற்றால் அது அதன் செல்வாக்கை நிலைநிறுத்த உதவும். மக்களவைத் தேர்தலுக்கு காங் கிரஸ் கட்சிக்கு தார்மீக பலத்தை அளிக்கும். எனவே இந்த தேர்தல்களை சந்திப்பதில் காங்கிரஸ் கட்சி தனது கவனத்தை திருப்புகிறது.

கருநாடக மாநிலத்தைப் போலவே சத்தீஷ்காரிலும், ராஜஸ்தானிலும் கட்சி தலைவர்கள் ஒற்றுமையுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று காங்கிரஸ் மேலிடம் அறிவுறுத்தி இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. ஆட்சிக்கு எதிரான உணர்வினை இலவச அறிவிப்புகளால் மாற்றி விடலாம் என்றும் காங்கிரஸ் கருதுகிறது. மத்திய  பிரதேசத்திலும் ஜோதிர் ஆதித்ய சிந்தியாவும், அவரது ஆதரவாளர்களும் பா.ஜ.க.வுக்கு தாவியதைத் தொடர்ந்து இழந்த ஆட்சியைத் திரும்பப்பிடிக்க காங்கிரஸ் ஆர்வம் காட்டுகிறது. தெலங்கானா, மத்திய  பிரதேசம், ராஜஸ்தான் வழியாக ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை நடைப்பயணம் நடத்தியதால், அது தேர்தலில் வாக்கு அறுவடைக்கு கைகொடுக்கும் என்று காங்கிரஸ் எதிர்பார்க்கிறது.

காங்கிரஸ் மேலிடம் ஆராய்கிறது

பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட உட்கட்சிப்பூசல் அங்கு நடந்த தேர்தலில், ஆம் ஆத்மியை ஆட்சியில் அமர்த்தியது. அதே போன்ற அபாயம், ராஜஸ்தானிலும் இருக்கிறது. முதலமைச்சர் அசோக் கெலாட்டுக்கும், முதலமைச்சர் நாற்காலி கனவில் நாட்களை கடத்திக்கொண்டிருக்கும் இளம்தலைவர் சச்சின் பைலட்டுக்கும் இடையே மோதல் போக்கு தொடர் கதையாய் நீளுகிறது. இது சட்டமன்றத் தேர்தல் வரை நீடித்தால் அது காங்கிரஸ் கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தி விடலாம். எனவே அங்கு உட்கட்சி மோதலை முடிவுக்கு கொண்டுவர வேண்டிய கட் டாயத்தில் காங்கிரஸ் கட்சி இருக்கிறது.  

முந்தைய பா.ஜ.க. அரசு மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து உயர்மட்ட விசாரணை நடத்த வேண்டும் என்ற சச்சின் பைலட் கோரிக்கைக்கு அசோக் கெலாட் செவி சாய்ப்பாரா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த நிலையில் தேர்தல் நடக்க உள்ள 5 மாநிலங்களில் தங்களுக்கு சவாலாக உள்ள பிரச்சினைகள், அதற்கான தீர்வுகள் குறித்து காங்கிரஸ் மேலிடம் ஆராய்கிறது. இது தொடர்பாக விவாதிப் பதற்காகவும், தேர்தல் யுக்திகளை வகுக் கவும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, அந்த மாநிலங்களின் தலை வர்கள் கூட்டத்தை 24-ஆம் தேதி கூட்டி உள்ளார். இந்த கூட்டத்தில் 5 மாநில சட்டமன்றத்  தேர்தல் தொடர்பாக முக்கிய ஆலோசனை நடக்கிறது.

தேர்தல்களில் எப்போதுமே கடை சியில் இறங்குவதை வழக்கமாக கொண் டிருந்த காங்கிரஸ் கட்சி, கருநாடகத்தில் தேர்தல் அறிவிப்பதற்கு முன்பே களத்தில் இறங்கியது. அதே போன்று 5 மாநில தேர்தலிலும் முன்கூட்டியே களமிறங்கி திட்டமிடத்தொடங்கி இருப்பது அரசி யல் அரங்கத்தில் அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளது.


No comments:

Post a Comment