ஆளுநர் ரவியின் மொழிக் கண்ணோட்டமா - இனக் கண்ணோட்டமா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, May 5, 2023

ஆளுநர் ரவியின் மொழிக் கண்ணோட்டமா - இனக் கண்ணோட்டமா?

தமிழ்நாடு ஆளுநர் ரவி அவர்கள் எதை வேண்டுமானாலும் பேசலாம் என்ற மனப்போக்கில் இருப்பதாகத் தெரிகிறது.

நல்லது பேசினாலும், கெட்டது பேசினாலும் அது என்னைப் பற்றியதாக இருக்க வேண்டும் என்ற விளம்பரப் பேராசை வெள்ளத்தில் நீச்சல் அடித்து மகிழ்கிறாரோ என்று நினைக்கத் தோன்றுகிறது.

திராவிடம் என்பது திராவிடர் இயக்கம் கண்டுபிடித்தது அல்ல. 

மனு தர்மத்திலேயே திராவிடம் வருகிறது. இந்திய தேசிய கீதத்திலும் இடம் பெற்று இருக்கிறது.

குப்பத்தில் திராவிடப் பல்கலைக் கழகமே செயல்பட்டு வருகிறது.

சிந்துச் சமவெளி நாகரிகம் திராவிட நாகரிகம் என்று, திரு பாலகிருஷ்ணன் அய்.ஏ.எஸ். (ஓய்வு) எழுதி வெளியிட்ட ஆய்வு நூல் அடுக்கடுக்கான தொல்லியல் தரவுகளுடன் வெளி வந்துள்ளது.

இவற்றை எல்லாம் பார்க்கப் பார்க்க உயர் ஜாதி ஆரியக் கும்பலுக்குக் குமட்டிக் கொண்டு வருகிறது.

ஆளுநர் ரவி ஒன்றைக் குறிப்பிட்டுள்ளார்.

"திராவிட மாடல் கொள்கை, நாட்டில் மற்ற மொழிகளுக்கு எதிராக அமைந்துள்ளது. கருணாநிதி நூலகம் 3.25 லட்சம் புத்தகங்களுடன் அமைகிறது. இவை தமிழ் மற்றும் ஆங்கிலப் புத்தகங்கள் மட்டும்.

நாட்டின் மற்ற மொழிகளுக்கு அங்கு இடம் இல்லை. இது பிரிவினைவாத சிந்தனையை உருவாக்கும். இதை நான் ஏற்க மாட்டேன்" என்று கூறுகிறார் ஆளுநர் ரவி.

கோணிப்பைக்குள்ளிருக்கும் பூனை வெளியில் வந்து 'கீச்கீச்' என்று கத்துமாம், அது போன்றதே இது.

ஹிந்தி, சமஸ்கிருத நூல்கள் ஏன் இல்லை என்று கேட்காமல் கேட்கிறார்.

ஆளுநராக இருந்தாலும்  அவாளுக்கென்றுள்ள உணர்வைத் தமிழ்நாட்டு மக்கள் புரிந்து கொள்ளவே செய்வார்கள்.  அதுவும் மானமிகு கலைஞர் பெயரில் அல்லவா நூலகம் இருக்கிறது - பொறுக்க முடியுமா அவர்களால்?

இந்தியாவின் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் பிஜேபி தலைமையிலான ஆட்சி இந்தியாவில் அனைத்து மாநில மொழிகளையும் சம நோக்கில் பார்க்கிறதா?

இதோ ஒரு புள்ளி விவரம்:

சமஸ்கிருதத்திற்கு ரூ.640 கோடி, ஹிந்திக்கு ரூ.39 கோடி, தமிழ் உள்ளிட்ட இதர மொழிகளுக்கு வெறும் ரூ.53 கோடி. 

ஒன்றிய அரசின் கலாச்சார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் சமஸ்கிருத மொழி வளர்ச்சி மற்றும் அதன் ஆய்விற்காக கடந்த இரண்டு ஆண்டு நிதி நிலை அறிக்கையில் சமஸ்கிருதத்திற்கு மட்டும் ரூ. 643.84 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கிறது.

அதே நேரத்தில் இந்தியாவில் இதர மொழிகளுக்கு (தமிழ், தெலுங்கு, மலையாளம், ஒடிசா, வங்கம், பஞ்சாபி உள்ளிட்டவைகளுக்கு) வெறும் ₹53.61 கோடி ரூபாய் மட்டுமே 2023-2024ஆம் ஆண்டு நிதி நிலை அறிக்கையில் ஒதுக்கப்பட்டிருக்கிறது. 

அதே நேரத்தில் ஹிந்தி மொழிக்காக மட்டுமே ரூ.39.47 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் முக்கிய தலைவர்களுள் ஒருவரான ஜெயராம் ரமேஷ் சில நாட்களுக்கு முன் இதே கருத்தைத்தான் சுட்டிக் காட்டினார். அது நூற்றுக்கு நூறு சரியானதே! செத்துச் சுண்ணாம்பாகி சுடுகாடு போன சமஸ்கிருதம் பார்ப்பனர்களின் தாய்மொழி என்ற ஒரே காரணத்துக்காக, செத்த பிணத்தைக் குளிப்பாட்டி, சீராட்டி, பல்லக்கில் வைத்து சுமப்பதுபோல - இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளுக்கும் ஒதுக்கப்பட்ட தொகையைக் கூட்டினால்கூட, கிட்டவே நெருங்க முடியாத அளவுக்கு ரூ.643.84 கோடி ஒதுக்கப்படுகிறது என்றால் இதன் பொருள் என்ன? பா.ஜ.க. ஆட்சி என்றால் பார்ப்பன ஜனதா கட்சி ஆட்சி என்றுதானே எடுத்துக் கொள்ள வேண்டும்! ஆளுநர் இரவி இவற்றை எல்லாம் கண்டு கொள்ள மாட்டார்.

இப்போதெல்லாம் பார்ப்பனப் பிரச்சினை என்பதெல்லாம் கிடையாது; அது செத்துப் போனது என்று சமாளிப்போர் சிந்தனைக்குத் தான் இந்தத் தகவல்.


No comments:

Post a Comment