சென்னை, மே 8 - நாடு முழுவதும் உள்ள அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளின் இளநிலை, முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான 100 சதவீத இடங்களுக்கும் தேசிய அளவில் பொதுக் கலந்தாய்வு நடத்த ஒன்றிய சுகாதாரத் துறை முடிவு செய்துள்ளது. இதற்கு மருத்துவர்கள் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
நாடு முழுவதும் அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலை பல்கலைக்கழகங்கள், ஒன்றிய அரசின் கல்வி நிறுவனங்களில் உள்ள இளநிலை, முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான இடங்கள் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வில் (NEET-நீட்) தகுதி பெறுபவர்களை கொண்டு நிரப்பப்படுகின்றன. முதுநிலை மருத்துவப் படிப்புக ளுக்கான நீட் தேர்வை தேசிய தேர்வுகள் வாரியமும் (என்பிஇஎம்எஸ்), இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வை தேசிய தேர்வுகள் முகமையும் (என்டிஏ) நடத்துகின்றன.
நாடு முழுவதும் அரசு மருத்துவக் கல்லூரிகளின் முது நிலை மருத்துவப் படிப்புகளுக்கான மொத்த இடங்களில் 50 சதவீத இடங்கள்,இளநிலை மருத்துவப் படிப்புகளில் 15 சதவீத இடங்கள், நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் மற்றும் ஒன்றிய அரசின் கல்வி நிறுவனங்களின் முதுநிலை, இளநிலைப் படிப்புகளில் 100 சதவீத இடங்களுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வை ஒன்றிய அரசின் சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குநரகம் (டிஜிஎச்எஸ்) மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வு குழு https://mcc.nic.in/#/home என்ற இணைய தளம் மூலம் நடத்துகிறது. அரசு மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலைப் படிப்புகளில் எஞ்சிய 50 சதவீத இடங்கள், இளநிலை மருத்துவப் படிப்புகளில் 85 சதவீத இடங்கள், தனியார் மருத்துவக் கல்லூரிகளின் மாநில அரசுக்கான இடங்கள் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வை மாநில அரசுகள் நடத்தி வருகின்றன.
மாநிலங்களுக்கு சுற்றறிக்கை
இந்நிலையில், நாடு முழுவதும் உள்ள அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலை பல்கலைக்கழகங்கள், ஒன்றிய அரசின் கல்வி நிறுவனங்களில் உள்ள இள நிலை,முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான 100 சதவீத இடங்களுக்கும் ஒன்றிய அரசின் சுகாதார சேவைகளுக் கான தலைமை இயக்குநரகத்தின் மருத்துவக் கலந்தாய்வு குழு இணைய வழிக் கலந்தாய்வு நடத்தும் என்று அறி வித்து, கடந்த மார்ச் 13ஆம் தேதியிட்ட சுற்றறிக்கை அனைத்து மாநில அரசுகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளன.
மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வு குழு தலைவர் அதுல்கோயல் வெளியிட்ட அந்த சுற்றறிக்கையில், ‘அகில இந்திய அளவில் நடத்தப்படும் இந்த பொதுக் கலந் தாய்வு மாணவர் சேர்க்கையில், அந்தந்த மாநில அரசு களின் இடஒதுக்கீடு, உள்இடஒதுக்கீடு நடைமுறை பின் பற்றப்படும். எனவே, நடைமுறையில் உள்ள இட ஒதுக் கீட்டு விதிகளை மாநிலஅரசுகள் சமர்ப்பிக்க வேண்டுகிறோம். பொதுக் கலந்தாய்வு மாணவர் சேர்க்கை நடவடிக்கைகளுக்கு மாநில அரசு சார்பில் ஒரு அதிகாரியை நியமிக்குமாறும். அவர்களது பெயர், அலைபேசி எண், இ-மெயில் உள்ளிட்ட விவரங்களை அனுப்புமாறும் கேட்டுக் கொள்கிறோம்’என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்குநரக உயர் அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘ஒன்றிய சுகாதாரத் துறையின் இந்த அறிவிப்பு தமிழ்நாடு மாணவர்களின் நலனை பாதிக்கும். சுகாதாரத் துறை செயலருடன் ஆலோ சனை நடத்தி, இதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஒன்றிய சுகாதாரத் துறையிடம் எடுத்துரைக்கப்படும்” என்றனர்.
மருத்துவச் சங்கங்கள் எதிர்ப்பு
ஒன்றிய அரசின் இந்த முடிவுக்கு தமிழ்நாடு அரசு மருத்துவர் சங்கங்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இது மாநில உரிமைகளை பறிக்கும் செயல் என்று அரசு மருத்துவர்கள், பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்கம், தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கம், சமூக சமத்துவத்துக்கான மருத்துவர்கள் சங்கம் ஆகியவை தெரிவித்துள்ளன.
No comments:
Post a Comment