அரசமைப்புச் சட்டம் விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்க வேண்டும் என்கிறது ஆனால் பிஜேபி ஒன்றிய அமைச்சர்கள்?
(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்.,
சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப்
பதிலடிகளும் வழங்கப்படும்)
மின்சாரம்
நரேந்திர மோடி (இந்தியப் பிரதமர்) :
அக்டோபர் 2014 அன்று மும்பை மருத்துவர்கள் முன்னிலையில் பண்டைய வேத காலத்துக்குப் பயணித்த மோடி, “நாம் வான்வெளி அறிவியலைப் பற்றி பேசுகையில், நமது முன்னோர்கள் வான்வெளி அறிவியலில் தங்களது பெரும் திறனைக் காட்டியுள்ள னர். ஆரியபட்டா சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் சொல்லிச் சென்றதை அறிவியலாளர்கள் இன்று அங்கீ கரித்துள்ளனர். நான் சொல்லவருவது என்னவென்றால், நாம் ஏற்கெனவே இத்தகைய திறனைக் கொண்டுள் ளோம்; அவற்றை நாம் மீண்டும்பெற வேண்டும்.” என்று பேசினார்.
பிப்லப் தேப் (திரிபுரா முதலமைச்சர்) :
கடந்த 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் மகாபாரதத் தைப் பற்றி பேசிய திரிபுரா முதலமைச்சர், "பாரதப் போர் நடந்திருக்கும் போது அங்கு நடப்பவை அனைத்தும் உடனுக்குடன் கண் இல்லாத மன்னனான திருதிராஷ் டிரனுக்கு தெரியவந்தது; இது அந்தக் காலத்திலேயே செயற்கைக் கோள் தொலைத்தொடர்பும், இணையமும் இருந்ததைக் காட்டுகிறது” என்று கூறியிருந்தார். மற்றொரு சந்தர்ப்பத்தில் சிவில் (குடிமையியல்) சேவகர் களாவதற்கு இயந்திரப் பொறியாளர் மாணவர்களை விட சிவில் (கட்டடக்கலை) பொறியாளர் மாணவர்களே பொருத்தமானவர்கள் என்று கூறியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜனவரி 14, 2020 அன்று 45ஆவது கிழக்கிந்திய அறிவியல் காட்சியில், “ராமாயண காலத்தில் பறக்கும் இயந்திரங்கள் இருந்ததாகவும், அர்ஜுனன் பயன்படுத் திய அம்புகள் அணுசக்தி கொண்டவையாக இருந்தன" என்றும் கூறி பார்வையாளர்களை திடுக்கிடச் செய் தார். “வானூர்திகள் 1910 அல்லது 1911ஆம் ஆண்டில் தான் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறுப்படுகிறது. நாம் நமது இலக்கியங்களுள் நுழைந்தால் ராமாயணத்தி லேயே நாம் விமானங்களைக் காணலாம். மகாபாரதத் தில் அர்ஜுனன் பயன்படுத்திய அம்புகள் அணுசக்தி கொண்டவையாக இருந்தன”
திரிவேந்திர சிங் ராவத்
(உத்தரகாண்ட் முதலமைச்சர்):
கடந்த 2019ஆம் ஆண்டு ஜூலை 27 அன்று, உலகிலுள்ள விலங்குகள் சாம்ராஜ்ஜியத்தில் ஆக்சி ஜனை உள்ளிழுத்து ஆக்சிஜனையே வெளியே விடும் ஒரே விலங்கினம் பசு மட்டுமே என்று புதிய திருப்பு முனைக் கண்டுபிடிப்பை வெளியிட்டார். மேலும் பசுவுக்கு அருகில் வாழ்ந்து வருவது காசநோயைக் குணப்படுத்தும் என்றும் தெரிவித்தார். என்ன...! சிறப் பாக குணமாக வேண்டுமெனில் பசுவுக்கு எவ்வளவு அருகில் வாழ வேண்டும் என்பதை மட்டும் அவர் தெரிவிக்கவில்லை. மற்றொரு நிகழ்வில் கர்பிணிப் பெண்கள் அறுவை சிகிச்சை மகப்பேறைத் தடுக்க பகேஷ்வர் மாவட்டத்தில் உள்ள கருட கங்கா-வில் இருந்து வரும் குடிநீரைக் குடிக்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.
ரஞ்சித் சிறீவத்சவா (உத்தரப்பிரதேசத்தைச்
சேர்ந்த பாஜக தலைவர்) :
பசுக்கள் அனைத்தும் இந்துக்கள் என்றும் அவை இறந்ததும் அவற்றை புதைக்கக் கூடாது. புதைத்தல் என்பது முசுலீம்களின் பண்பாடு. பசுக்கள் இறந்தால் அதன் உடலை வெண்நிறத் துணிகளால் சுற்றி, இந்து முறைப்படி தீயிட்டு எரிக்க வேண்டும் அல்லது மின் தகன மேடையில் இட்டு எரிக்கப்பட வேண்டும். அதற்காக தனியாக மயானங்கள் கட்டப்படும் என்று குறிப்பிட்டுள்ளார். அவரது பேச்சில் மறக்க முடியாத பகுதி எதுவெனில், “முசுலீம்களின் வீடுகளில் இருக்கும் பசுக்களை திரும்ப எடுத்துக் கொள்ளவேண்டும். நம் வீட்டுப் பெண்கள் முசுலீம்கள் வீட்டுக்குச் செல்வதை லவ் ஜிகாத் என்று நாம் பார்க்கும்போது, நாம் தாயாகக் கருதும் பசுக்கள் அவர்களது வீட்டில் இருப்பதையும் லவ் ஜிகாத் என்றுதானே எடுத்துக் கொள்ளவேண்டும்? பசுக்களுக்குப் பதில் அவர்கள் ஆடுகளை எடுத்துக் கொள்ளட்டும். ஆடுதான் அவர்களது தாய்” என்று பேசினார்.
கிரிராஜ் ஜிங் (மீன்வளம், கால்நடை - பால்வளத்துறை ஒன்றிய அமைச்சர்) :
ஜனவரி 14, 2020 அன்று அறிவியலாளர்களிடம் மாட்டு மூத்திரம் மற்றும் சாணியை மேலும் ஆய்வுக்கு உட்படுத்துமாறும், இதன் மூலம் பசுக்கள் பால்தருவதை நிறுத்திய பின்னும் அவை கால்நடை விவசாயிகளுக்கு பணம் ஈட்டித் தரும் என்றும் அதனால் பால் கொடுப் பதை நிறுத்திய பசுக்களைக் கைவிடுதல் குறையும் என்றும் கூறியுள்ளார்.
சத்யபால் சிங் (உயர்கல்வி அமைச்சர்) :
டார்வினின் பரிணாமக் கொள்கையைக் கடந்த 2018, 2019ஆம் ஆண்டுகளில் பலமுறை கையில் எடுத் திருக்கிறார். பார்லிமெண்டில் அவர் பேசுகையில், “நமது கலாச்சாரம் நம்மை ரிஷிகளின் குழந்தைகள் எனக் கூறுகிறது. நான் நாம் குரங்குகளின் குழந்தைகள் என நம்புபவர்களை புண்படுத்த விரும்பவில்லை; ஆனால் நமது கலாச்சாரத்தின்படிநாம் ரிஷிகளின் குழந்தைகள்” என்றார். இதற்கு நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி. கனிமொழி பதிலடி கொடுத்தார். தான் ஒரு ஹோமோசேப்பியன் என்றும் தமது பெற்றோர்கள் ‘சூத்திரர்கள்’ என்றும் குறிப்பிட்டார். ஆனால் நாடாளு மன்றத்தில் சத்யபால் சிங்கின் படையினர் "பரிணாமக் கொள்கை பாடப் புத்தகத்திலிருந்து நீக்கப்பட வேண்டும்" என்றனர்.
பிரக்யா சிங் தாக்கூர்
(போபால் எம்.பி - மாலேகான் குண்டுவெடிப்பில் குற்றம்சாட்டப்பட்டவர்) :
மாட்டு மூத்திரத்தைக் குடித்ததால்தான் தனது புற்று நோய் குணமானதாகக் குறிப்பிட்டார். “நான் பசு மூத்திரம், பஞ்ச கவ்யம் மற்றும் ஆயுர்வேத மூலிகைகள் ஆகியவற்றை உட்கொண்டதன் மூலம்தான் புற்று நோயிலிருந்து தானாக குணமடைந்தேன்” என்றார்.
ஹர்ஷ் வர்தன்
(அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சர்) :
அல்ஜீப்ரா மற்றும் பித்தகோரஸ் தேற்றத்தையும் இந்தியாதான் கண்டுபிடித்தது என்றும், பின்னர், பிறர் அதை தங்களது கண்டுபிடிப்பாக அறிவித்துக் கொள்ள தாராளமாக அனுமதித்து விட்டது என்றும் கடந்த 2015ஆம் ஆண்டு ஜனவரியில் கூறியிருக்கிறார். “நமது அறிவியலாளர்கள் பித்தகோரஸ் தேற்றத்தைக் கண்டு பிடித்தனர். நாம் அந்தப் பெருமையை கிரேக்கர்களுக் குக் கொடுத்துவிட்டோம். அதே போல, அல்ஜீப்ரா கண்டுபிடிப்பின் பெருமையை அரேபியர்களுக்குக் கொடுத்துவிட்டோம்.” என்றார்.
2018ஆம் ஆண்டு மார்ச் மாதம், ஸ்டீபன் ஹாக்கிங் இறந்த பின்னர் மீண்டும் களத்தில் இறங்கிய ஹர்ஸ் வர்தன், "அய்ன்ஸ்டீனின் ரிலேட்டிவிட்டி தியரியை விட சக்தி வாய்ந்த அறிவியல் கொள்கைகளைப் பற்றிய அறிவு வேதங்களில் பொதிந்திருக்கும்" என்று ஸ்டீபன் ஹாக்கிங் தெரிவித்துள்ளதாகக் கூறியிருந்தார். இது குறித்த விவரங்களை பத்திரிகையாளர்கள் கேட்ட போது, அதைக் கண்டுபிடிப்பது பத்திரிகையாளர்களின் பணி என்று கூறினார். கொடுமையென்னவென்றால், இந்த கண்டுபிடிப்பை இந்திய அறிவியல் மாநாட்டில் அவர் பேசியுள்ளார் என்பதுதான்.
இந்திய அரசமைப்புச் சட்டம் 51A(h) விஞ்ஞான மனப்பான்மையை வளர்க்க வேண்டியது ஒவ்வொரு குடிமகனின் கடமை என்று கூறுகிறது. ஆனால் ஒன்றிய பிஜேபி அமைச்சர்களும் பிரமுகர்களும் மாட்டு மூத்திரத்தைக் குடிக்கச் சொல்லுகிறார்களே!
அய்யய்ய - வெட்கக் கேடு!
No comments:
Post a Comment