"செங்கோல்" வந்தாச்சு மாதம் "மும்மாரி பொழி"யுமா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, May 31, 2023

"செங்கோல்" வந்தாச்சு மாதம் "மும்மாரி பொழி"யுமா?

இந்தியத் துணைக் கண்டத்தில் ஏதோ மன்னர் ஆட்சி நடைபெறுவது போன்று பல காரியங்கள் வண்ண வண்ணமாக நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றன.

தான் அணியும் உடையின் மதிப்பு ரூபாய் பத்து லட்சம் என்றும், எனது மார்பளவு 56 அங்குலம் என்றும் பேசக் கூடிய ஒருவர்தான் 130 கோடி மக்கள் வாழும் இந்தியத் துணைக் கண்டத்தின் பிரதமர்.

ஏற்கெனவே பொலிவோடும், வலுவோடும் இன்னும் நீண்ட காலத்துக்கு பலமாக நிற்கக் கூடிய நாடாளுமன்றக் கட்டடத்தைப் புறந்தள்ளி (கிடங்கு போன்று பயன்படுத்தாமல் இருந்தால் சரி) ரூ.1250 கோடியில் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை அவசர அவசரமாகக் கட்டி முடித்து, அசாதாரண சாதனை செய்த அசகாய மன்னர் என்ற மகுடத்தைச் சூட்டிக் கொண்டு இருக்கிறார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி.

அடிக்கல் நாட்டியவரும் அவரே! கட்டடத்தைத் திறந்து வைத்தவரும் அவரே! சாதாரணமாக ஓர் இரயிலை பச்சைக் கொடி காட்டி தொடங்கி வைப்பதாக இருந்தாலும் அங்கே பிரதமர் மோடி சாகேப்தான் காட்சியளிப்பார்.

தான் ஒரு மன்னர் என்ற நினைப்பில், மன்னர் ஆட்சியின் அடையாளமான செங்கோலை மடாதிபதிகளிடமிருந்து பெற்றுக் கொண்டுள்ளார்.

செங்கோல் என்றால் நீதி தவறாமல் சமன் செய்து சீர்தூக்கும் கோல் என்று வள்ளுவர் சொன்ன அந்தக் கோலா இது?

பல மாநிலங்கள், பல இனங்கள்,  பல மொழிகள், பல பண்பாடுகள், தட்ப வெப்ப நிலைகள் உள்ள இந்தியாவை  ஒரே நாடு என்றும், ஒரே மதம் என்றும், ஒரே மொழி என்றும், ஒரே பண்பாடு என்றும் சொல்லும் ஆர்.எஸ்.எஸின் ஊது குழலாக முழங்குபவருக்கும், நீதிநெறி தவறாத அடையாள சின்னமான செங்கோலுக்கும் என்ன சம்பந்தம்?

பாரதிய ஜனதா சார்பில், நாடாளுமன்றத் தேர்தலாக இருந்தாலும் சரி, மாநில சட்டப் பேரவைத் தேர்தல்களாக இருந்தாலும் சரி சிறுபான்மை சமூகத்திலிருந்து ஒரே ஒரு வேட்பாளரைக்கூட நிறுத்திட முன் வராத - மனம் வராத ஆட்சியாளர்கள் செங்கோலை நாடாளுமன்ற கட்டடத்துக்குள் மக்களவைத் தலைவர் இருக்கைக்கு அருகில் நிறுவுவது நகை முரண் அல்லாமல் வேறு என்னவாம்?

பார்ப்பனர்கள் பார்வையில் இதில் இன்னும் சில வினாக்கள் உண்டு. ரூ.1250 கோடி செலவில் ஒரு புதிய கட்டடத்தைக் கட்டினால் நாட்டுக்கு ஆகப் போவது என்ன?

அவர்கள் மொழியில் நாமும் கேட்கலாம் அல்லவா!

கேள்வி: தமிழ்மொழியை செம்மொழியாக்க சட்டம் கொண்டு வந்தால், என்னென்ன பயன்?

பதில்: காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும், ஏழை நெசவாளர் வீட்டுத் தறி நிற்காமல் இயங்கும், ஒரு வேளை கஞ்சிக்கே வழி இல்லாதவர்களுக்கு மூன்று வேளையும் மட்டன் பிரியாணி கிடைக்கும்.

('தினமலர்' வார மலர் 13.6.2004)

இதே 'தினமலரில்' இன்னொரு செய்தி:

தமிழகப் பொதுப் பணித் துறைச் செயலாளர் ராமசுந்தரம்: தமிழகத்திற்குக் கருநாடகா ஆண்டுக்கு 205 டி.எம்.சி. தண்ணீர் தர வேண்டும். மேட்டூர் அணையில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறந்து விடப்படும். கருநாடக அரசு குறித்த நேரத்தில்  தண்ணீர் திறந்து விடாததால் இந்த ஆண்டு தாமதமாக கடந்த 7ஆம் தேதிதான் திறந்து விட்டோம். 

டவுட் தனபால்: அதனால் என்னங்க, பெங்களூருல திருவள்ளுவர் சிலை திறந்து விட்டோமோ இல்லையா? அதுக்கப்புறம் டெல்டாப் பகுதிகளில் முப்போகம் விளையாதா என்ன?

('தினமலர்' 18.8.2009)

'தினமலர்' இது என்றால் அதன் வகையறாவைச் சேர்ந்த 'கல்கி' என்ன எழுதுகிறது? 

கேள்வி: தமிழர்களின் புத்தாண்டு தை முதல் தேதி என விரைவில் அறிவிப்பதாகச் சொல்கிறாரே முதல் அமைச்சர்?

பதில்: எல்லாம் கிடக்க கிழவியை மணையில் அமர்த்திய கதைதான்.

('கல்கி' 27.1.2008)

இந்த ஏடுகள் இப்படியென்றால் பேனாவில் நஞ்சைத் தேக்கி எழுதும் விரியன் குட்டியான 'துக்ளக்' என்ன எழுதுகிறது?

கேள்வி: பெங்களூருவில் திருவள்ளுவர் சிலை திறக்கப்படுவதன் மூலம் கன்னடர் - தமிழர் இடையே நல்லுறவு, நல்லிணக்கம் ஏற்படும் என்று கருநாடக முதல்வர் எடியூரப்பா கூறுகிறாரே?

பதில்: நல்லுறவா? நல்ல உறவுதான். யாராவது கன்னட வெறியர்கள் ஒரு சமயம் பார்த்து, அந்தச் சிலையை அவமதிக்காமல் இருந்தால் போதுமே!

(‘துக்ளக்’  19.8.2009)

தமிழில் படித்தால் சட்டி சுரண்டுகிற வேலைக்குக் கூட லாயக்காக மாட்டோம்.

(‘துக்ளக்’ 23.6.2010)

கேள்வி: தமிழை வைத்து இன்னும் எத்தனை விதங்களில் என்னென்ன விழாக்கள் நடத்தலாம்?

பதில்: தமிழுக்கு வாய்ப்பா இல்லை? நிறைய வாய்ப்பிருக்கிறது! கலைஞர் வளர்த்த தமிழ் மாநாடு, கலைஞரால் வளர்க்கப்பட்ட தமிழ் மாநாடு, கலைஞர் சிறப்பித்த தமிழ் மாநாடு, கலைஞரால் வளர்ந்த தமிழ் மாநாடு - என்று எவ்வளவோ விழாக்கள் நடத்தலாமே!  கலைஞர் ரெடி - தமிழகம் ரெடி- தமிழ் ரெடியா?

(‘துக்ளக்’  4.8.2010)

 தமிழ் - தமிழர் - தமிழர் பண்பாடு - திருவள்ளுவர் என்றால் இப்படி எல்லாம் 'நய வஞ்சகத்தோடு, நான்கு கால் பாய்ச்சல் மேற்கொள்ளும்' பார்ப்பன கூட்டத்தைப் பார்த்து நாமும் அடுக்கடுக்காக, அலை அலையாக வினாக்கணைகளைத் தொடுக்கலாமே!

நாடாளுமன்றத்தில் செங்கோலை வைத்தாயிற்று அல்லவா! மாதம் மும்மாரி பொழியும் - வீட்டுக்கு வீடு மட்டன் பிரியாணி - தட்டின்றி கதவைத் தட்டித் தட்டி கிடைக்கும். ஏழைத் தொழிலாளி வீட்டுக் கைத்தறி நிற்காமல் இயங்கும்.

சமையல் எரிவாயு அய்ம்பது ரூபாய்க்குக் கிடைக்கும், பெட்ரோல் விலை லிட்டர் 10 ரூபாய்க்குக் கிடைக்கும்.

சொல்லிக் கொண்டே போகலாம் அவர்கள் பாணியில்!

மனுநீதி ஒரு குலத்துக்கொரு நீதி என்பது - பார்ப்பனர் ரத்தத்தோடு பிறந்ததாயிற்றே!

சிறுத்தை தன் புள்ளிகளை மாற்றிக் கொண்டாலும் பார்ப்பான் தன் பிறவிப் புத்தியை மாற்றிக் கொள்ளவே மாட்டான்.

- டாக்டர் டி.எம். நாயர்.


No comments:

Post a Comment