தனிமை என்பது; 'சுகம்' அல்ல "சோகம்" - புரிந்து கொள்க! - 2 - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, May 9, 2023

தனிமை என்பது; 'சுகம்' அல்ல "சோகம்" - புரிந்து கொள்க! - 2

 தனிமை என்பது; 'சுகம்' அல்ல "சோகம்" - புரிந்து கொள்க! - 2

தனிமையாக இருக்காமல் சில 'தொடர்புகளுடன்'தான் இருக்கிறோம் என்று சிலர் கூறுவர்; மின்னஞ்சல் அல்லது காணொலி போன்ற     Virtual Meetings  என்றால், மக்களோடு முகத் துக்கு நேராக இணைந்த தொடர்புதான் அவர்களுடைய உணர்வு, எப்படிப் பழகுகிறார் என்ற முகபாவம், மற்ற எண்ண ஓட்டங்களின் பிரதிபலிப்பு இவற்றை நாம் கணக்கிட்டு பதில் கூறுவது எளிது. அது மற்றவற்றில் மிக மிகக் குறைவு.

எனவே நண்பர்களுடன் - முக்கியமாக நல்ல தேர்வு செய்யப்பட்ட நம்பக நண்பர்களுடன் நட்புறவுகளுடன் மனம் விட்டுப் பேசிப் பழகியும் -  அதனையே சிறந்த தொடர்புக் கணக்குக்குள் கொண்டு வந்து இணைத்துக் கொண்டால் மிக மிக நல்லது!

ஒருவரிடம் நேரில் பேசும்போது அவரது முக பாவத்தினை நம்மால் புரிந்து கொள்வதைப் போல மற்ற, நிலைமைகளில் வாய்ப்புக் கிடைக்காது!

"அகத்தின் அழகு முகத்தில் தெரியும்" என்ற பழமொழிக்கேற்ப நாம் உரையாடும் போதே அவருடைய சிந்தனை, இணக்கம், நாம் கூறும் கருத்தினை அவர் உள்வாங்கும் இயல்பு மூலமே நாம் எவரையும் ஆழமாகப் புரிந்து கொள்ளும் வசதி உண்டு என்பதால் - மற்றவைகளை பய னுள்ள தொடர்புகள் என்று அறுதியிட்டுக் கூறிட முடியாது!

அவர் நம்மை ஆதரிக்கிறவரா? எதிர்ப்பவரா? காலைவாரி விடுகிறவரா? என்பதைத் தெரிந்து கொள்ள வசதி கிடைக்கும்.

இந்தத் "தனிமை"யில் பாதிக்கப்படுகின் றவர்களின் எண்ணிக்கை மக்கள் தொகையில் 61 சதவிகிதத்தினர் ஆவார்கள் என்று புள்ளி விவரம் கூறுகிறது!

பொதுவாக மனிதர்கள் இயல்பினால் கூடி வாழும் உணர்வுள்ள பிராணிகள் ஆவார்கள் - கலந்து பேசி மகிழ்ந்து வாழும்போதே அவர் களிடையே ஒரு புது உற்சாகமும், மகிழ்ச்சியும் கிடைக்கிறது.

எனவே கலந்துறவாடுதல், நட்புறவாடுதல், நெருக்கமான உறவு முறை மூலம் தனிமை தகர்க்கப்படுகிறது.

 நெல்சன் மண்டேலா அவர்கள் 27 ஆண்டுகள் தென் ஆப்பிரிக்காவில் தனிமைச் சிறையில் ரோபன் தீவில் (Robben Island) இருந்து மீண்டும் வந்து பார் போற்றும் தென்னாப்பிரிக்கா அதிபராக வும் ஆகி,  இந்தியாவின் "பாரத ரத்னா"  விருதைக் கூட பெற்றது அதியற்புத அதிசயங்களில் முதன் மையானது!

மனோ தத்துவ மருத்துவர்கள் கூறுகிறார்கள்: இந்தத் தனிமையுடன் தனி நபர்கள் இருப்பதற்குப் பல காரணங்கள் உண்டு.

1. மிகப் பெரும் வருத்தம், சோகம், வெறுமை உணர்வு அல்லது தொடர்ந்து இருக்கும் நிலை.

2. தனித்துவிடப்பட்டுள்ளோம்; நம்மைப்  புறந்தள்ளி ஒதுக்கி வைத்து விட்டார்கள் என்கிற உணர்வுகள்.

3. நட்புறவுகள் கிடைக்காதா? என்ற ஏக்கம்.

4. "நம்மை பிறர் சரியாகப் புரிந்து கொள்ள வில்லையே! - புரிந்துகொள்ள மறுக்கிறார்களே, நாம் பேசுவதை மற்றவர் பொறுமையுடன் கேட்காமலேயே அலட்சியப்படுத்துகிறார்களே" என்ற ஒரு மன அழுத்தம்.

(திடீரென்று துப்பாக்கியை எடுத்து மற்றவனை சுட்டுக் கொல்வது போன்ற அதீதச் செயல்களுக்கு அடிப்படை இதுபோன்ற மன அழுத்தமே  என்கிறார் மனோதத்துவ நிபுணர்.)

5. மற்றவர்கள் புடைசூழ இருக்கும் நிலையிலும் நம்முடன் பேசுவதை, பழகுவதை தவிர்த்து நம்மை மட்டும் ஒதுக்கி விடுகிறார்களே என்ற வேதனையின் வெளிப்பாடுதான் அது!

6. சொந்த பந்தங்களால் ஏற்பட்ட பாதிப்புகளும் வெறுப்பும், நொந்து போன மன எரிச்சலின் எல்லையும்.

7. 'நாம் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளோமோ' என்ற  தனக்குத் தானே கற்பித்துக் கொள்ளும் மனச் சிக்கலுடன் வாழும் நிலை!

8. எப்போதும் பழைய கசப்பான அனுபவங்களின் நினைப்போடும், ஏற்பட்ட பாதிப்புகளைப் பற்றியுமே சதா இடைவிடாது நினைத்து நினைத்து நெஞ்சம் புழுங்குவது.

இப்படி பலப்பல காரணங்களால் அவர்களது தனிமை அவர்களை யறியாமலேயே அவர்களை ஆட்டிப் படைத்து அவலத்துக்குள்ளாக்கியுள்ளது வருந்தத் தக்க பரிதாப நிலை!

இம்மாதிரியான நிலைமை தொடர்ந்தால் தனிமையில் தொடர்ந்து இருந்தால் மற்ற உடல் நலக் கோளாறுகளும், நல வாழ்வுக்கு சோதனை களும், வேதனைகளும் தவிர்க்க முடியாதவை என்கின்றனர் மருத்துவ வல்லுநர்கள் - ஆய் வாளர்கள்

1. மன அழுத்தம் (Depression)

2. தேவையற்ற கவலை (Anxiety)

3. தன்னைப் பற்றிய ஒரு தாழ்வு மனப்பான்மை (Low Self-esteem)

4. தூக்கமின்மை - தூக்கம் கெடுதல்

5. எதையும் செய்யாமல் அசந்து உட்கார்ந்தே இருத்தல்

6. அதன் காரணமாக உடல் பெருத்தல்,

7. எரிக்கப்பட வேண்டிய 'கலோரி'கள் அப் படியே எரிக்கப்படாமல் உடலில் தங்கி ஊறு விளைவித்தல் - 

8. மறதி நோய் (Dementia) 40 சதவிகிதம் 

இதன் விளைவாக 29 சதவிகிதம் வரக் கூடாத வயதில் சாவு.

32 சதவிகித பாரிச வாயு (Stroke)

மற்றும் சளி, இருமல், மேலும் மன இறுக்கம் இப்படி பல உடல் நலப் பிரச்சினைகளுக்கு வழி வகுக்க - இந்த தனிமையே நமக்கு தண்டனை களைத் தர - தயாராக உள்ளது என்பதை 

மறவாதீர்!

(மேலும் பல தகவல்கள் அடுத்துப் பார்ப்போமா!)


No comments:

Post a Comment