அதானி மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க மேலும் 6 மாத கால அவகாசம் வேண்டுமாம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, May 2, 2023

அதானி மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க மேலும் 6 மாத கால அவகாசம் வேண்டுமாம்!

புதுடில்லி, மே 2 - அதானி நிறுவனங்கள்மீது ஹிண்டன்பர்க் சுமத்திய குற்றச்சாட்டுகளை விசாரிக்க மேலும் ஆறு மாத கால அவகாசம் வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் ‘செபி’ தெரிவித்துள்ளது.  பங்குச் சந்தை வர்த்தகத்தில் அதானி குழுமம்  ரூ. 17 லட்சத்து 80 ஆயிரம் கோடி அளவிற்கு ஊழல் முறைகேடு செய் துள்ளதாக, அமெரிக்காவைச் சேர்ந்த ‘ஹிண் டன்பர்க் ரிசர்ச்’ என்ற ஆராய்ச்சி நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் அம்பலப்படுத்தியது. 

அதைத் தொடர்ந்து, அதானியின் இந்த ஊழல் முறைகேடுகள் தொடர்பான ஹிண்டன் பர்க் ரிசர்ச் அறிக்கை குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. 

இந்த மனுக்களை விசாரித்த தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதிகள் பி.எஸ். நரசிம்மா, ஜே.பி. பர்திவாலா ஆகியோர் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு, அதானி குழும நிறுவனங்களுக்கு எதிரான ‘ஹிண்டன் பர்க் ரிசர்ச்’ அறிக்கையில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை இரண்டு மாதங்களுக்குள் விசாரிக்குமாறு இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்திற்கு கடந்த மார்ச் 2 ஆம் தேதி உத்தரவு பிறப்பித்திருந்தது. 

அதானி குழுமம் தொடர்பான ஹிண்டன் பர்க் ரிசர்ச் அறிக்கையின் பின்னணி யில், “பத்திர ஒப்பந்த ஒழுங்குமுறை விதிகளின்  விதி 19(ணீ) மீறப்பட்டுள்ளதா; ஏற்கெனவே உள்ள சட்டங்களுக்கு முரணாக பங்கு விலைகளில் ஏதேனும் கையாளுதல் செய்யப்பட்டுள்ளதா?” என  ஆராய்ந்து அறிக்கை அளிக்குமாறு கூறியிருந்தது. 

இந்நிலையில்தான், இந்திய பங்குச் சந்தை ஒழுங்குமுறை மற்றும் பரிவர்த்தனை வாரிய மான (செபி) “விஷயத்தின் சிக்கல்  தன்மை” மற்றும் “நீதியின் முக்கியத்துவத்தை” குறிப் பிட்டு, “அதானி குழுமத்திற்கு எதிராக அமெ ரிக்க ஆராய்ச்சி நிறுவனமான ஹிண்டன்பர்க் சுமத்திய மோசடி மற்றும் பங்கு சூழ்ச்சி குற்றச் சாட்டுகள் மீதான விசாரணையை முடிக்க குறைந்தது 6 மாதங்கள் தேவைப்படும் என்ப தால், 6 மாத கால அவகாச  நீட்டிப்பு வழங்க வேண்டும்” என்று 29.4.2023 அன்று மனு தாக்கல் செய்துள்ளது.

“அதானி குழுமம் தொடர்பாக நாங்கள் அளிக்கப்பட வேண்டிய அறிக்கை நியாய மானதாகவும், சரியானதாகவும் இருக்க வேண் டும். அதானி குழும விவகாரத்தில் சந்தேகத் திற்குரிய வகையில் 12 பரிவர்த்தனைகள் மிகவும் சிக்கலானதாக இருக்கிறது.  இந்த பரிவர்த்தனைகளின் கீழ்  பல்வேறு துணை பரிவர்த்தனைகள் இருப்பதாகவும், இவற்றை விசாரிக்க பல்வேறு தகவல்களை சேகரிக்க வேண்டும் என்பதாலும், அதானி விவகாரத்தை விசாரிக்க இன்னும் 6 மாதங்கள் வேண்டும்” என தெரிவித்துள்ள ‘செபி’ அமைப்பு, “அதானி மீதான குற்றச்சாட்டுகள் இன்னும் உறுதி செய்யப்படவில்லை” எனவும் குறிப்பிட்டுள்ளது. 

முன்னதாக, செபி விசாரணைக்கு அதானி குழுமம் வரவேற்பு தெரிவித்துள்ளது. “உச்சநீதி மன்றம் நியமித்துள்ள நிபுணர் குழுவின் விசாரணையை நாங்கள் வரவேற்கிறோம். எல்லா சட்டங்களையும், விதிமுறைகளையும், ஒழுங்குமுறைகளையும் நாங்கள் கடைப் பிடித்துள்ளோம். இந்த விசாரணையின் மூலம் உண்மை வெல்லும். ‘செபி’ விசாரணைக்கு எங்களது முழு ஆதரவு மற்றும் ஒத்துழைப்பை தருவோம்” என்று அதானி குழுமத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment