படிப்புக்கு வயது ஒரு தடையில்லை 56 வயது பெண் 10ஆம் வகுப்பு தேர்ச்சி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, May 21, 2023

படிப்புக்கு வயது ஒரு தடையில்லை 56 வயது பெண் 10ஆம் வகுப்பு தேர்ச்சி

நாமக்கல், மே 21 - படிப்புக்கு வயது ஒரு தடையில்லை என்பதற்கு எடுத்துக்காட்டாக, 56 வயது பெண் ஒருவர் தன்னம்பிக்கையுடன், 10ஆம் வகுப்பு தேர் வெழுதி, 247 மதிப்பெண் பெற்று தேர்ச்சியடைந்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம், பழைய காவல் நிலைய வீதியை சேர்ந்தவர் தமிழ்மணி (60) பாத்திரக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி தனம் (56); இவர், 10ஆம் வகுப்பு தேர்வெழுதி, 247 மதிப்பெண் பெற்று தேர்ச்சியடைந்துள்ளார். இதுகுறித்து, அவர் கூறியதாவது:

கடந்த, 1980இல், 8ஆம் வகுப்பு முடித்தேன். அதன்பின் இரண்டு ஆண்டுகளில், என் பெற்றோர் எனக்கு திருமணம் நடத்தி வைத்தனர். தொடர்ந்து குடும்பத்தை கவனித்து வந்ததால், என்னால் படிப்பை தொடர முடியவில்லை.

கடந்த சில ஆண்டாக மனவளக்கலை யோகா பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன். இப்பயிற்சியின் அடுத்தகட்டத்துக்கு செல்ல, 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதனால் கடந்த டிசம்பரிலிருந்து, தனியார் பயிற்சி மய்யத்தில் படித்து வந்தேன். மூன்று மாதம் தன்னம்பிக்கையுடன் முழுமையாக படித்து, கடந்த மாதம் நடந்த தேர்வில், 10ஆம் வகுப்பு தேர்வு எழுதினேன். தற்போது, வெளியான முடிவில், 247 மதிப்பெண் பெற்று தேர்ச்சியடைந்துள்ளேன். இந்த வயதில் படிப்பதற்கு, என் கணவர் மற்றும் குடும்பத்தினர் ஊக்கமளித்தனர். படிப்புக்கு வயது தடையில்லை, ஆர்வம், பயிற்சி, முயற்சி இருந்தால் எந்த வயதிலும் படிக்கலாம், தேர்ச்சி பெறலாம். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment