மருத்துவ மாணவி வங்கிக் கணக்கில் பே.டி.எம். மூலம் ரூ.3 லட்சம் திருட்டு ரிசர்வ் வங்கிக்கு சென்னை நீதிமன்றம் உத்தரவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 13, 2023

மருத்துவ மாணவி வங்கிக் கணக்கில் பே.டி.எம். மூலம் ரூ.3 லட்சம் திருட்டு ரிசர்வ் வங்கிக்கு சென்னை நீதிமன்றம் உத்தரவு

சென்னை, மே 13- மருத்துவ மேற்படிப்பு மாணவியின் வங்கிக் கணக்கில் இருந்து ‘பேடிஎம்’ மூலம் திருடப்பட்ட ரூ. 3 லட்சத்தை திருப்பி வழங்க பேடிஎம் நிறுவனத்துக்கு உத்தரவிடும்படி, ரிசர்வ் வங்கிக்கு சென்னை உயர்நீதி மன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்தது. திருச்சியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் மருத்துவ மேற்படிப்பு மாணவி பவித்ரா, கரோனா காலத்தில் பணியாற்றியதற்காக வழங்கப் பட்ட ஊதியத் தொகை ரூ. 3 லட்சம் தனது வங்கிக் கணக்கில் இருந்து பேடிஎம் மூலம் திருடப்பட்ட தாகக் கூறி, சம்பந்தப்பட்ட தனியார் வங்கி மற்றும் சைபர் க்ரைம் பிரிவில் புகார் அளித்திருந்தார்.

ஆனால், பணத்தை திருப்பித்தர மறுத்து வங்கி நிர்வாகம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை ரத்து செய்து, பணத்தை திருப்பித் தர உத்தரவிடக் கோரியும், தான் அளித்த புகார் மீது உரிய விசாரணை நடத்தக் கோரியும் பவித்ரா, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி மஞ்சுளா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, வங்கித் தரப்பில், ‘மாணவியின் பணம் வங்கிக் கணக்கில் இருந்து காணாமல் போகவில்லை. எந்த விதத்திலும் பொறுப் பேற்க முடியாது’ என வாதிடப் பட்டது.

பேடிஎம் தரப்பில், ‘அவர் வங்கிக் கணக்கு விவரங்களை பகிராமலோ பணப் பரிவர்த் தனை நடைபெறாது’ என தெரிவிக்கப் பட்டது. அப்போது ரிசர்வ் வங்கி தரப்பில், ‘பேடிஎம் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு இடையிலான பரிமாற்றங்களில் தலையிடுவதில்லை’ என விளக்கமளிக்கப்பட்டது. 

அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ‘மின்னணு பணப் பரிமாற்றங்கள் செய்யும்படி, பொதுமக்கள் ஊக்குவிக்கப்படும் நிலையில், மோசடிகளால் பாதிக்கப் படும் போது அவர்கள் அலைக்கழிக்கப் படுகிறார்கள் என வேதனை தெரிவித்தார். மேலும், எந்தத் தவறும் செய்யாத நிலையில் மாணவி பணத்தை பறிகொடுத்துள்ளார். ரிசர்வ் வங்கி விதிப்படி, பாதிக்கப் பட்டவருக்கு பணத்தை திருப்பிக் கொடுக்க நடவடிக்கை எடுக்காமல், வங்கி நிர்வாகமும், பேடிஎம் நிறுவனமும் மாறி மாறி பழி போடுவது ஏற்றுக்கொள்ள கூடியதல்ல. இரண்டு வாரங்களில் மாணவியின் பணத்தை திரும்ப அளிக்க பேடிஎம் நிறுவனத்துக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட் டுள்ளார்.

No comments:

Post a Comment