கடந்த 13ஆம் தேதி ஈரோட்டில் நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக் குழுவில் சிறப்புத் தீர்மானம் ஒன்றை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் முன்மொழிந்தார். அத்தீர்மானத்தை அனைவரும் எழுந்து நின்று கரஒலி எழுப்பி வரவேற்று வழிமொழிந்தனர்.
அத்தீர்மானம் வருமாறு:
"சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா, வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா, சேரன்மாதேவி குருகுலப் போராட்ட நூற்றாண்டு விழா, சிந்துவெளி அகழாய்வுகள் மூலம் திராவிடர்களின் தொன்மை வரலாற்றை வெளிப் படுத்திய சர்ஜான் மார்ஷலின் ஆய்வு நூற்றாண்டு ஆகிய தந்தை பெரியார் - நமது இயக்கம் தொடர்புடைய நூற்றாண்டு விழாக்கள் அடுத்தடுத்து வரும் நிலையில், அவற்றின் அடிப்படை நோக்கம்- ஜாதி - தீண்டாமை ஒழிந்து சமத்துவ சமுதாயம் அமைக்கும் பணியில் வெற்றி காண்பதற்கான தந்தை பெரியாரின் தொடர் போராட்டம், போர்க்குணம் - இவற்றின் உள்ளடக்கம், முக்கிய அம்சங்கள், தியாகச் சுவடுகள் - இவற்றால் ஏற்பட்ட சமூக மாற்றங்களை மக்கள் மத்தியில் - குறிப் பாக, சிறப்பாக இளைய தலைமுறையினரிடம் கொண்டு செல்வதற்கான முன் முயற்சித் திட்டங்களை வகுத்து, வெகு மக்களைப் பெரும் அளவில் ஈர்க்கும் வகையிலும் - இவற்றின் தாக்கம் அனைத்து மாநிலங்களிலும் பரவும் வண்ணமும் சிறப்பாக நடத்துவது என்றும்,
வரலாற்றையே புரட்டிப் போட்ட இந்த நிகழ்வுகள் நமது இயக்க வரலாற்றில் முதன்மையானதும், மிக மிக முக்கிய மானதும், திராவிட சித்தாந்தத்தின் தனித்தன்மையும் உடையது என்ற காரணத்தால் நமது தோழர்கள் பெரும் அளவில் ஒத்துழைப்புத் தந்து வரலாறு போற்றும் விழாக் களாக இவற்றை நடத்துவது என்று இப்பொதுக் குழு உணர்ச்சிப் பெருக்கோடு தீர்மானிக்கிறது."
தந்தை பெரியார் மற்றும் நம் இயக்கத் தொடர்புடைய இந்த நூற்றாண்டு விழாக்கள் என்பவை வரலாற்றைப் புரட்டிப் போட்டவையேயாகும்.
தந்தை பெரியார் 1925 நவம்பர் 22ஆம் நாள் காங்கிரசை விட்டு வெளியேறிய நிலையில் சுயமரியாதை இயக்கம் கண்டார்.
இன்னும் சொல்லப் போனால் காங்கிரசில் இருந்த போதே தன்மான கருத்துகளையும், இனமான சிந்தனைகளையும், பகுத்தறிவு எண்ணங்களையும் மக்கள் மத்தியில் பரப்பிட 'குடிஅரசு' என்னும் வார இதழை அதற்கு ஆறு மாதங்களுக்கு முன்பே 2.5.1925 அன்று தொடங்கினார்.
காங்கிரசை விட்டு தந்தை பெரியார் வெளியேறியதற்கே காரணம் - தொடர்ந்து அக்கட்சியில் முக்கிய பொறுப்புகளில் இருந்த நிலையிலேயே பார்ப்பனர் அல்லாதார்க்கும் இட ஒதுக்கீடு என்ற வகுப்புரிமை கோரும் கருத்தை வலியுறுத்தியும் - மாநாடுகளில் தீர்மானங்களைக் கொண்டு சென்றும் - வலியுறுத்திய நிலையில் காங்கிரஸ் என்பது, அக்கால கட்டத்தில் பார்ப்பனர்களின் ஆதிக்கப் பிடியில் இருந்த காரணத்தால், அத்தீர்மானங்களை நிறைவேறச் செய்யாமல் பார்த்துக் கொண்டனர்.
1925 நவம்பர் 21 மற்றும் 22 ஆகிய நாட்களில் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற 31ஆம் காங்கிரசு மாநாட்டின் இரண்டாவது நாளில் வகுப்புரிமை தீர்மானத்தை தந்தை பெரியார் கொண்டு சென்ற நிலையில், பார்ப்பனர்களின் சூழ்ச்சியால் - இவ்வளவுக்கும் அம்மாநாட்டிற்கு தந்தை பெரியாரின் அருமை நண்பர் திரு.வி.க. தலைமை வகித்திருந்த போதிலும் - அவரும் பார்ப்பனர் தம் சூழ்ச்சிக்குப் பலியாக - தந்தை பெரியார் அம்மாநாட்டில் கொண்டு சென்ற தீர்மானம் அனுமதிக்கப்படவே இல்லை.
காங்கிரசில் இருந்து கொண்டே, 'இனி பார்ப்பனர் அல்லாதாருக்கு வகுப்புரிமையைப் பெற்றுத் தர வாய்ப்பில்லை என்பதைத் திண்மையாக உணர்ந்த நிலையில், காங்கிரசிலிருந்து வெளியேறி சுயமரியாதை இயக்கம் கண்டார் தந்தை பெரியார், என்பதுதான் வரலாறு.
தந்தை பெரியார் எந்தக் காரணத்துக்காக காங்கிரசை விட்டு வெளியேறினாரோ, அந்தக் காரணம் இப்பொழுது காரியமாகி விட்டதைப் பார்க்கிறோம்.
தமிழ்நாட்டில் 69 விழுக்காடு இடஒதுக்கீடும், ஒன்றிய அரசில் பட்டியலின மக்களுக்கு 22.5 விழுக்காடும் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடும் சட்ட ரீதியாகக் கிடைக்கப் பெற்றன என்பதைக் கவனிக்கத் தவறக் கூடாது.
வருணாசிரமமும், ஜாதி ஒழிப்பும் என்று வருகிற போது - பார்ப்பனர்களை எதிர்ப்பதோடு, அது நின்று விடவில்லை; காந்தி யாரையுமே எதிர்க்க வேண்டிய நிலை, சுயமரியாதை இயக்கத்திற்கு ஏற்பட்டது.
காந்தியார் பேசுகிறார்: "ஒவ்வொரு வருணத்தாருக்கும் ஒவ்வொரு தர்மம் விதிக்கப்பட்டிருக்கிறது. அவரவருக்கு விதிக்கப்பட்ட தர்மத்தை அந்தந்த வருணத்தார் செய்ய வேண்டும். அப்படிச் செய்யும்போது, அவர்கள் உயர்ந்த வர்களாகிறார்கள். பிராமணனுக்குச் சில தர்மங்கள் விதிக்கப்பட்டிருக்கின்றன. அவற்றை அவன் சரிவர நிறைவேற்றும் போது, அவன் உயர்ந்தவனாகிறான். ஜனசேவையே பிராமணனுடைய முக்கிய தர்மம். எளியவர்களைப் பாது காப்பது ஷத்திரியனுடைய தர்மம்.
அந்தத் தர்மத்தை அவன் செய்யும்போது, அவன் மற்றெல்லோரிலும் மேம்பட்டவனாகிறான். இம்மாதிரியே இதர வருணத்தினர்களும் தத்தமக்கு ஏற்பட்ட தர்மங்களை, கடமைகளை செய்கையில், அவர்கள் உயர்ந்தவர்களா கிறார்கள். இப்படி இருக்கையில் உயர்வு - தாழ்வு எங்கிருந்து வருகிறது? வர்ணசிரம தர்மமானது. சமுதாய நலத்தை ரட்சிப்பதற்காகவே ஏற்பட்டது. மற்றபடி ஒரு சமூகத்தார் மற்றொரு சமூகத்தாரை ரட்சிப்பதற்கு ஏற்பட்டதல்ல." - காந்தியார் 1927இல் மைசூரில் பேசிய பேச்சுதான் இது.
இதுகுறித்து பெங்களூருவில் காந்தியாரைச் சந்தித்து மூன்று மணி நேரம் விவாதம் செய்திருக்கிறார் தந்தை பெரியார்.
எந்த வருணாசிரம தர்மத்தை காந்தியார் தூக்கிப் பிடித்தாரோ, அந்த வர்ணாசிரம கொள்கையுடைய சக்திகளே காந்தியாரைப் படுகொலை செய்தன என்பதும் காலத்தின் கல்வெட்டு.
காந்தியாரை நான்தான் கொன்றேன் என்று ஒப்புக் கொண்ட நாதுராம் கோட்சே என்ற சித்பவன் பார்ப்பான், வருணாசிரம தர்மத்தை உற்பத்தி செய்தவன் என்று பெருமை அடித்துக் கொள்ளும் அந்தக் கிருஷ்ணனின் கீதையிலிருந்தே சுலோகத்தை எடுத்துக்காட்டி நியாயப்படுத்தினான் என்பது அடிக்கோடிட்டுக் கவனிக்கத்தக்கதாகும்.
இன்றைக்குத் தமிழ்நாட்டு அளவில் வருணாசிரம விரியனின் கொட்டம் அடங்கி இருக்கிறது - பெயருக்குப் பின்னால் ஒட்டிக் கொண்டுள்ள ஜாதி பட்டங்கள் மறைந்திருக்கலாம்; ஜாதிப் பட்டங்களை போட்டுக் கொள்வதற்கு வெட்கப்படுகிறார்கள் என்றால் அதற்கு விழுமிய காரணம் தந்தை பெரியாரும் அவர் கண்ட சுயமரியாதை இயக்கமும், பிரச்சாரமும்தானே!
இப்பொழுது மீண்டும் அந்த வருணாசிரமத்தை உயிர்க் கருவாகக் கொண்ட ஹிந்து ராஜ்ஜியத்தை ராமராஜ்ஜியத்தை உருவாக்கும் சக்திகள் இந்தியாவின் ஆட்சிப் பீடத்தில் அமர்ந்துள்ள நிலையில் - சுயமரியாதை இயக்கத்தில் ஜாதி ஒழிப்புக் கொள்கையின் வீச்சு முன்னிலும் வேகமாகத் தேவைப்படுகிறது.
சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டு விழாவாக இருந்தாலும் சரி, தீண்டாமை ஒழிப்புக் களமான வைக்கம் போராட்டத்தின் வெற்றி விழா நூற்றாண்டாக இருந்தாலும் சரி, சேரன் மாதேவி குரு குலப் போராட்டமாக இருந்தாலும் சரி, இந்தியாவையே தன் பக்கம் ஈர்க்கும் நூற்றாண்டு விழாவாக நாம் நிமிர்ந்து நின்று கொண்டாட வேண்டும் என்ற மிக முக்கியமான தீர்மானத்தை கழகத் தலைவர் மானமிகு ஆசிரியர் கி.வீரமணி அவர்களே முன்மொழிந்துள்ளார்.
இது ஒரு கட்சிக்கான விழாவாக அல்ல; மனித சமத்துவம் விரும்பும் அனைவருக்கும் அனைத்தும் என்னும் சமதர்மம் விரும்பும் ஒவ்வொரு மனிதனும் இந்த நூற்றாண்டு விழாக்களுக்குக் கை இணைக்க வேண்டும்!
ஈரோட்டுத் தீர்மானம் இந்தியத் துணைக் கண்டத்திற்கே ரோடு போடும் சமத்துவ சமதர்ம சுயமரியாதைப் பார்வை கொண்டதாகும். அந்த வகையில் ஈரோட்டில் கடந்த சனிக்கிழமையன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானம் நிறைகுடமாகும்!
No comments:
Post a Comment