பெங்களூரு, மே 27- கருநாடக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் 135 தொகுதிகளில் வெற்றி பெற்றதையடுத்து புதிய முதலமைச்சராக சித்தராமையா கடந்த 20ஆம் தேதி பதவி ஏற்றார்.
அவருடன் டி.கே.சிவக்குமார் துணை முதலமைச்சராகவும், 8 பேர் அமைச்சர் களாகவும் பதவி ஏற்றனர்.
தொடர்ந்து கருநாடக சட்டசபை கூட்டம் கடந்த 22ஆம் தேதி தொடங்கி 24ஆம் தேதி வரை 3 நாட்கள் நடைபெற்றது. இதில் புதிய சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர். 24ஆம் தேதி சித்தராமையா, டி.கே.சிவக்குமார் ஆகியோர் டில்லி சென்றனர்.
அங்கு அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், கரு நாடக மாநில காங்கிரஸ் மேலிட பொறுப் பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா உள்ளிட் டோரை சந்தித்து, அமைச்சரவை விரி வாக்கம் குறித்து ஆலோசனை நடத்தினர்.
சோனியா காந்தி, ராகுல்காந்தியை அவரது இல்லத்தில் சித்தராமையா, டி.கே.சிவக்குமார் ஆகிய 2 பேரும் தனித்தனியாக சந்தித்து பேசினர். ஒட்டுமொத்த சட்டமன்ற உறுப்பினர்களில், 15 சதவீதம் பேருக்கு அமைச்சர் பதவி வழங்கலாம் என்பது விதி. அதன்படி, கருநாடகாவில் 224 சட்டமன்ற உறுப்பினர்கள் இருப்பதால், 34 பேர் அமைச்சர் ஆக முடியும். இதில், ஏற்கனவே 10 பேர் பதவியேற்றதால், மீதம் 24 பதவிகள் காலியாக உள்ளன.
இதையடுத்து புதியதாக பதவி ஏற்க உள்ள 24 அமைச்சர்களின் பெயர் பட்டியலை காங்கிரஸ் மேலிடம் நேற்று (26.5.2023) இரவு வெளியிட்டது.
இதைத் தொடர்ந்து கருநாடக அமைச் சரவை விரிவாக்கம் இன்று (27.5.2023) நடைபெற்றது. புதிய அமைச்சர்களுக்கு ஆளுநர் தாவர்சந்த் கெலாட் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.
புதிய அமைச்சர்களாக தினேஷ் குண்டுராவ் (காந்திநகர் தொகுதி), ஈஸ்வர் கன்ட்ரே (பால்கி தொகுதி), லட்சுமி ஹெப் பால்கர் (பெலகாவி புறநகர்), சிவானந்த பட்டீல் (பசவனபாகேவாடி), சரணபசப்பா தர்சானபுரா (சகாப்புரா), எச்.சி.மகாதேவப்பா (டி.நரசிப்புரா), வெங்கடேஷ் (பிரியப்பட் டணா), எஸ்.எஸ்.மல்லிகார்ஜூன் (தாவண கெரே), பைரதி சுரேஷ் (ஹெப்பால்), கிருஷ்ண பைரேகவுடா (பேட்ராயனபுரா),
ரகீம்கான் (பீதர் வடக்கு), எம்.சி.சுதாகர் (சிந்தாமணி), டி.சுதாகர் (இரியூர்), எச்.கே. பட்டீல் (கதக்), செலுவராயசாமி (நாக மங்களா), கே.என்.ராஜண்ணா (மதுகிரி), சந்தோஷ் லாட் (கல்கட்டகி), மது பங் காரப்பா (சொரப்), மங்கல் வைத்யா (பட்கல்), சிவராஜ் தங்கடகி (கனககிரி), ஆர்.பி.திம்மா புரா (முதோல்), சரண பிரகாஷ் பட்டீல் (சேடம்), என்.எஸ்.போசராஜூ (மான்வி), நாகேந்திரா (பல்லாரி புறநகர்) ஆகியோர் பதவி ஏற்றுக்கொண்டனர்.
விழாவில் முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், எதிர்க் கட்சி தலைவர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment