திராவிட இயக்கத்தின் முன்னோடி அயோத்திதாச பண்டிதர் ( 20.5.1845 - 5.5.1914 ) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, May 20, 2023

திராவிட இயக்கத்தின் முன்னோடி அயோத்திதாச பண்டிதர் ( 20.5.1845 - 5.5.1914 )

 ஜெ.பாலச்சந்தர் 

முனைவர் பட்ட ஆய்வு மாணவர், பொன்னேரி

பகுத்தறிவு, சீர்திருத்தம், சமத்துவம், மொழியுணர்வு, பெண் உரிமை, சித்த மருத்துவம், பவுத்தம் மீட்டுருவாக்கம், பார்ப்பனிய எதிர்ப்பு, இந்து மத எதிர்ப்பு என தன் வாழ்நாள் முழுவதும் சமூக விடுதலைக்காக ஒப்படைத்துக் கொண்ட, மிகச் சிறந்த சிந்தனையாளர் பண்டிதர் அயோத்திதாசர் ஆவார். அவரின் இயற்பெயர் காத்தவராயன் - இவர் ஒரு சிறந்த சித்த மருத்துவர் ஆவார். சிறு வயதில் முடக்கு வாத நோயால் பாதிக்கப்பட்டு இருந்த திரு.வி.கல்யாண சுந்தரனாரை தனது மருத்துவத்தால் எழுந்து நடக்க வைத்ததாக திரு.வி.க.வின் நாட்குறிப்பில் குறிப்பிட்டுள்ளார். அவ்வாறு பெயர் பெற்ற மருத்துவராக திகழ்ந்தவர்.

மொழி, நாடு, இனம், மதம், ஜாதி யாவும் கடந்து இந்த உலகினிலுள்ள அனைத்து உயர்களுக்கும் அறத்தை போதித்தது திருக்குறள். இந்த திருக்குறள் பண்டிதர் அயோத்திதாசர் குடும்பத்தால் பார்ப்பனர்களிடமிருந்து பாதுகாக்கப்பட்டு வந்து, சென்னையில் இருந்த ஆங்கிலேய அதிகாரி ஆரிங்டன் என்பவரிடம் வீட்டு உதவியாளராக பணியாற்றி வந்த அயோத்தி தாசரின் தாத்தா கந்தப்பர், 1825இல் சென்னையில் தமிழ்ச்சங்கம் ஒன்றை நிறுவி பழந்தமிழ் நூல்களை  தேடிப் பெற்று பதிப்பித்து வந்து தமிழ்த் தொண்டாற்றிய ஆரிங்டனின் நண்பர் எல்லிஸ் அவர்களிடம் பரம்பரை சித்த  மருத்துவரான கந்தப்பர் திருக்குறள் மூலம் திருவள்ளுவமாலை, நாலடி நாநூறு ஆகியவற்றின் சுவடிகளை எல்லீசுக்கு அளித்தார். எல்லீஸ் அதனை 1831இல் முதன்முறையாக அச்சேற்றி திருக்குறளை வெளியிட்டார். இந்த திருக்குறளுக்கு 1900இல் பண்டிதர் அயோத்தி தாசர் திருக்குறள் என பெயரிட்டு இதில் உள்ள பவுத்த சார்பை ஆழமாக விளக்கினார்.

“அயோத்திதாசர் - பார்ப்பனர் முதல் பறையர் வரை” என்ற நூலின் ஆசிரியர் முனைவர் டி.தருமராஜ் இவ்வாறு குறிப்பிடுகிறார். அயோத்தி தாசரின் முன்னிருந்த சவால்கள், ஏற்கெனவே நிரூபிக்கப்பட்டிருந்த இந்து என்ற பிம்பத்தை பொய் என்று அறிவுறுத்துவதாக இருந்தது. வரலாறு நெடுகிலும் வெவ்வேறு கலைகட்டங்களில் சைவம் என்றும் வைணவம் என்னும் பனுவல்கள் மூலமாக கட்டப்பட்டிருந்த முரண் பிம்பங்கள், காலினிய அதிகாரத்தின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் துணையோடு ‘இந்து” என்று திடப்படுத்தப்பட்டதை மிகச் சரியாகவே அவர் அடையாளம் கண்டிருந்தார். ஆகையால் 1881 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் பஞ்சமர்களாக குறிக்கப்படும் இந்து தர்மமான அதர்ம வர்ணாசிரம நான்கு வர்ண கோட்பாட்டிற்குள் அடங்காத பூர்வ பவுத்தர்களான தங்களை திராவிடர்கள் என்றும் ஆதித் தமிழர்கள் என்றும் குறிப்பிட வேண்டும் என வலியுறுத்தினார்.

தன் மக்களை உரிமைகள் மறுக்கப்பட்டவர்களாக மாற்றிய இந்து மதத்தின் மீதும், பார்ப்பனியத்தின் மீதும் வெறுப்புற்றுப்போன அவர், இறைக்கொள்கை, சடங்குவாதம், பார்ப்பனிய ஆதிக்கம், மதம் பண்பாட்டுத்தளங்கள் என அனைத்தையும் கேள்விக்குள்ளாக்கி சுயசிந்தனை அடிப்படையில் புதிய தேடல்களுக்கு தயாரான அயோத்திதாசர் பகுத்தறிவை நோக்கி பயணப்பட்டு, அசோகருக்குப்பின் பவுத்தத்தை இந்த மண்ணில் வலிமையாக பரப்பினார்.

இந்துமத வேதங்கள், தர்ம சாத்திரங்கள் எல்லாம் பார்ப்பனரல்லாத திராவிட மக்களை எவ்வாறு இழிவுப்படுத்துகிறது என 1859இல் தொடங்கப்பட்ட முதல் தலித் இதழான சூர்யோதயம் மற்றும் பஞ்சமன், ஒரு பைசா தமிழன், தமிழன், திராவிட பாண்டியன் போன்ற இதழ்களின் வழியாக தோலுரித்து காட்டினார். மேலும். 1891இல் திராவிட மகாஜன சபையை நிறுவி மாநாடுகள் வழியாக திராவிட மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார். ஒடுக்கப்பட்ட மக்கள் பூர்வ பவுத்தர்கள் என்றும், பவுத்தம் வீழ்த்தப்பட்டபோது அவர்களும் அடிமைகளானார்கள் என்று சொல்லும் அயோத்திதாசர் அனைத்து திராவிடர்களும் தங்கள் தொல்மதமாகிய பவுத்தத்தை தழுவ வேண்டும் என கூறினார்.

திராவிட இயக்கத்தின், நவீன தமிழ்நாட்டின் சிற்பியான தந்தை பெரியார் அவர்கள், அயோத்திதாச பண்டிதர் அவர்களைப்பற்றி குறிப்பிடும்போது அவரை தனது முன்னோடி என பெருமையுடன் குறிப்பிட்டிருக்கிறார். தமிழ், ஆங்கிலம், பாலி ஆகிய மொழிகளில் புலமை பெற்று விளங்கிய அயோத்திதாசர் ஒவ்வொரு காலகட்டத்திலும் தான் பார்த்த, தான் அனுபவித்த, சிறந்த கூறுகளை தனது நுண்ணிய பார்வையால் இந்து மதத்தை அதன் ஏற்றத்தாழ்வுகளை,  அதன் வஞ்சகத்தை விமர்சித்து ஏராளமான நூல்களில், கட்டுரைகளில் தனது எழுத்துகளின் வழியே எடுத்துக்காட்டியுள்ளார்.

அவரின் நினைவைப் போற்றும் விதமாக 2007ஆம் ஆண்டு தமிழன் இதழின் நூற்றாண்டு விழா தமிழ்நாடு அரசால் சிறப்பாக கொண்டாடப்பட்டது. முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் முயற்சியால் அயோத்திதாச பண்டிதருக்கு ஒன்றிய அரச அஞ்சல் தலை வெளியிட்டது. அயோத்திதாச பண்டிதரின் நூல்கள் அரசுடமை ஆக்கப்பட்டு, அவரின் வாரிசுகளுக்கு ரூ.10 லட்சம் நிதி வழங்கப்பட்டது. தமிழ்நாடு அரசு சித்த மருத்துவ கல்லூரிக்கு அயோத்திதாச பண்டிதர் பெயரை சூட்டியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஒருவருக்கு பண்டிதர் அயோத்திதாசர் பெயரில் விருது ஒன்றை தமிழ்நாடு அரசு சிறப்பித்து வழங்கி வருகிறது தமிழ்நாடு அரசு.

தமிழறிஞர், பண்பாட்டு சிந்தனையாளர், திராவிட அரசியலின் முன்னோடி, இந்திய இதழியலின் முன்னோடி, பகுத்தறிவுவாதி, தலைசிறந்த சித்த மருத்துவர்கள், நவீன பவுத்தத்தின் முன்னோடியான அயோத்தி தாச பண்டிதர் அவர்களின் நினைவுகளை போற்றுவோம்.

No comments:

Post a Comment