இந்தியா முழுமைக்கும் தேவையானது 2024 தேர்தலில் அதை எதிரொலிக்கச் செய்வோம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, May 16, 2023

இந்தியா முழுமைக்கும் தேவையானது 2024 தேர்தலில் அதை எதிரொலிக்கச் செய்வோம்!

 *‘திராவிட மாடல்' விளையாட்டுச் சொல் அல்ல - வினையாற்றும் சொல்!

*இப்பொழுது நடக்கும் போராட்டம் என்பது இரு தத்துவங்களுக்குமானது!

* ஈரோட்டு வெற்றி - கருநாடகத்தில் எதிரொலித்துள்ளது!

* திராவிடர் கழகம் என்பது முகக்கவசம் போன்ற பாதுகாப்பு இயக்கம்

ஈரோடு பொதுக்கூட்டத்தில்  தமிழர் தலைவர் ஆசிரியர் முழக்கம்!

ஈரோடு, மே 16 ஈரோடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வெ.கி.ச.இளங்கோவன் வெற்றி - கருநாடகத்திலும் எதிரொலித்துவிட்டது. இப்பொழுது இந்தியா முழுவதும் நடைபெறுவது இரு தத்துவங்களுக் கான போராட்டம். 2024 இல் திராவிட இயக்கக் கொள்கை பரவி வெற்றியைக் கொடுக்கும் - திராவிடர் கழகம் முகக்கவசம் போன்ற பாதுகாப்பு இயக்கமாகும் - இந்தியா வுக்கு இது தேவையானது என்று எழுச்சியுரையாற்றினார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

திராவிடர் கழகப் பொதுக்குழுத் தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம்

கடந்த 13.5.2023 அன்று மாலை ஈரோட்டில் நடை பெற்ற திராவிடர் கழகப் பொதுக்குழுத் தீர்மானக்  விளக்கக் கூட்டம் - ஈரோடு கிழக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்களுக்குப் பாராட்டுக் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி உரையாற்றினார்.

அவரது உரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:

மார்ட்டின் லூதர் கிங்

வைக்கம் சத்தியாகிரகத் தத்துவத்தைப் புரிந்து கொண்ட காரணத்தினால்தான், கருப்பனை, வெள்ளைக் காரர்கள் பேருந்தில் ஏற்றக்கூடாது என்று சொன்ன நேரத்தில், அமெரிக்காவில் மார்ட்டின் லூதர் கிங், அந்தப் போராட்டத்தினை இங்கே இருந்து கற்றுக்கொண்டு நடத்தினார், காந்திய முறையில் என்று சொன்னால் - பெரியாரிய வழி அந்தக் காலத்தில் வைக்கத்திற்கு எந்தெந்த வகையில், அது பல்வேறு ரூபங்களில் எடுத் திருக்கிறது என்பதை எண்ணிப் பார்க்கவேண்டும்.

மேலும் மேலும் களங்களை உருவாக்கிக் கொண்டு, களப் பணிகளிலே நாம் ஈடுபடவேண்டும்! 

சனாதனம் - இவர்களைத் தண்டித்தது.

சனாதனம் - மனித உரிமைகளைப் பறித்தது; வருணா சிரம தர்மம் இன்னமும் பல இடங்களில் ‘வேங்கை வயல்களாக' இன்றைக்குக் கொஞ்சம் வித்தியாசமாக, மனித குலத்தை இழிவுபடுத்தக் கூடிய அளவிற்கு நடந்து கொள்கின்ற காலகட்டத்தில், அதற்குத்தான் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழாவினைக் கொண் டாடவேண்டும் என்று நினைக்கின்றோம்; அதற்குத்தான் இந்தப் பணிகளை மேலும் மேலும் களங்களை உரு வாக்கிக் கொண்டு, களப் பணிகளிலே நாம் ஈடுபட வேண்டும் என்று நினைக்கின்றோம் என்பதை நீங்கள் நன்றாகப் புரிந்துகொள்ளவேண்டும்.

அதேநேரத்தில், சனாதனத்திற்கு நேர் எதிரான தத்துவம் எதுவென்றால், அது திராவிடத் தத்துவமே!

அனைவரையும் அணைத்துக் கொள்வதுதான் சமூகநீதி - திராவிடத் தத்துவம்!

அந்தத் திராவிடத் தத்துவம் என்னவென்றால், சமத்துவம், சம வாய்ப்பு, சம உரிமை, பேதமற்ற பெருவாழ்வு, வெறுப்பற்ற விருப்ப வாழ்வு - அனைவருக்கும் அனைத்தும் தருவது சமூகநீதி - அனைவரையும் அணைத்துக் கொள்வதுதான் சமூகநீதி - திராவிடத் தத்துவம்.

அனைவரையும் பிரித்துப் பிரித்துப் பார்ப்பது தான் சனாதனம்; கிட்டே வராதே, பார்க்காமை, நெருங்காமை, தொடாமை இவையெல்லாம் சனாதனம்.

வெளிநாட்டுக்காரர்களுக்கு இன்னமும் புரிய வில்லை; அதைப் புரிய வைப்பதற்கு நமக்கு மிகப்பெரிய கஷ்டம் இருக்கிறது.

I can't understand what is your untouchability?

I can't touch electricity that is reasonable - why should I not touch a Man, what will happen?

என்று வெளிநாட்டுக்காரர்கள் கேட்கிறார்கள்.

அதைவிடக் கொடுமை என்னவென்றால்,

Unseeability - Unapproachability - Untouchability

      பார்க்கக் கூடாதது - நெருங்கக் கூடாதது - தொடக்கூடாதது என்று சொன்னார்கள்.

ஆனால், அதுதான் சனாதனம். இன்றைக்கு அந்த சனாதனத்தைத் தூக்கி நிறுத்துவதற்கான முயற்சிகள்தான் - அதுதான் ஒன்றிய அரசாங்கம் - அதுதான் மோடி தலைமையிலான அரசாங்கம் - அதுதான் ஆர்.எஸ்.எஸ்.சினுடைய கொள்கை - அதுதான் ஆளுநர் ஆர்.என்.இரவியினுடைய பிரச்சாரம். இவை அத்தனை யும் ஒன்றுக்கொன்று தொடர்புள்ளவை,  நண்பர்களே!

திராவிடம் காலாவதியாகிவிட்டது என்று சிலர் சொல்கிறார்கள்

எங்கள் கழக சார்பில் வெளியிட்டு இருக்கின்ற டைரியில் 1924 ஆம் ஆண்டுநீதிக்கட்சி - ‘திராவிட மாடல்' ஆட்சியின் சாதனைகளைப்பற்றியெல்லாம்  குறிப்பிட்டுள்ளோம். ‘திராவிட மாடல்' ஆட்சி என்றால் எங்களுக்கு விளங்கவில்லை; திராவிடம் காலாவதியாகி விட்டது என்று சிலர் சொல்கிறார்கள். நான் இந்த வார்த்தையை சொல்லுவதற்காகப் பொறுப்பேற்றுச் சொல்லுகிறேன் - முடிந்தால் வழக்குப் போட்டட்டும்!

ஏனென்றால், வள்ளுவரை நான் சாட்சிக்கு அழைப் பேன். வள்ளுவரை அவர் சரியாகப் புரிந்துகொள்ளாத நிலையில்.

மனிதர் கயமை என்ற தலைப்பே உண்டு திருக்குறளில்.

சனாதனம் என்ன சொல்லிற்று?

இந்த மேடையை விட்டால், வேறு எந்த மேடையிலும் இந்த வரலாறு கிடைக்காது!

இளந்தலைமுறையினரே புரிந்துகொள்ளுங்கள் - இந்த வரலாற்றை; இந்த மேடையை விட்டால், வேறு எந்த மேடையிலும் இந்த வரலாறு கிடைக்காது.

‘திராவிட மாடல்' விளையாட்டுச் சொல் அல்ல; அது வினையாற்றும் சொல். அந்த வினைக்கு மிகப்பெரிய வரலாற்றுப் பின்னணி உண்டு.

1924 ஆம் ஆண்டு நீதிக்கட்சி - திராவிடர் இயக்கம் - அந்த ஆட்சி வந்து செயல்படுகிறது. சர் பிட்டி தியாகராயர்; டாக்டர் நாயர்; டாக்டர் சி.நடேசனார்; அதேபோல, பனகல் அரசர், பிரதமர் என்று அழைக்கப்பட்டார் அன்றைய கால கட்டத்தில்.

அவருடைய காலத்தில் உத்தரவு போடுகிறார்; வைக்கத்தில் தெருவில் நடக்கக் கூடாது என்று திருவிதாங்கூரில் தடை செய்கிறார்கள். அதனை எதிர்த்துப் போராட்டம் நடைபெறுகிறது. போராட்டம் நடத்தியவர்களுக்குத் தண்டனை கொடுக்கிறார்கள். இதுதான் ஹிந்துத்துவா - இதுதான் ஹிந்து மத தர்மம்; வருணாசிரம தர்மம்; சனாதன தர்மம்.

வரலாற்றுக் கண்முன் இரண்டு சம்பவங்களை ஒப்பிட்டுப் பாருங்கள்.

‘திராவிட மாடல்' ஆட்சிக்கு அவைதானே அடிப்படையானவை.

ஆட்சியினுடைய நீட்சி மட்டுமல்ல - 

இந்த இனத்தினுடைய மீட்சி!

அண்ணா சொன்னாரே, ‘‘திடீரென்று நாங்கள் ஆட் சிக்கு வரவில்லை. எங்களுடைய பாட்டன் நீதிக்கட்சிக் காரன்; அதனுடைய ஆட்சியின் நீட்சிதான் எங்கள் ஆட்சி'' என்று. அந்த நீட்சி மட்டுமல்ல - இன்றைய மு.க.ஸ்டாலின் அவர்களுடைய தலைமையில் இருப் பதும், அந்த ஆட்சியினுடைய நீட்சி மட்டுமல்ல - இந்த இனத்தினுடைய மீட்சி!

அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில், இதோ ஒரு செய்தி - ஆதாரப்பூர்வமாகச் சொல்லியே பழக்கப்பட்ட வர்கள் நாங்கள்.

அந்த வகையில், சென்னை அரசாங்கத்தினுடைய ஆணை -

அரசாங்க உத்தரவு நெ.2660 உள்ளூர் மற்றும் மாநகராட்சி, 25 செப்டம்பர், 1924

ஒடுக்கப்பட்ட மக்கள் உபயோகப்படுத்தும் சாலை கள், தண்ணீர் எடுக்கும் கிணறுகள் மற்றும் உள்ளவைகள். சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மாநிலத் திலுள்ள உள்ளூர் நிர்வாகங்கள் மற்றும் தலைமை இலாக்காக்களுக்கு அனுப்பப்பட்டது.

உத்தரவு நெ.2660, 1924ஆம் ஆண்டு செப்டம்பர் 25ஆம் தேதி.

1924ஆம் ஆண்டு, செப்டம்பர் 24ஆம் தேதி நடந்த சட்டமன்றக் கூட்டத் தில் கீழ்க்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் உபயோகப் படுத்தும் பொது சாலைகள், கிணறுகள் பற்றியது.

திரு. ஆர். சீனிவாசன் (இரட்டை மலை)

1 (9) இந்தச் சட்டமன்றம் கீழ்க் கண்டவைகளை நிறைவேற்றம்  செய்து, அவை அரசாங்கத்தின் கொள்கையாக அறிவிக்கப்பட்டது.

(a) எந்தப் பொதுச் சாலையிலோ, தெருவிலோ அது எந்த கிராமத்திலோ அல்லது நகரத்திலோ இருந்தாலும், அதில் எந்த இனத்தைச் சேர்ந்த மனிதனாய் இருந்தாலும், நடப்பதற்கு உள்ள உரிமையை யாரும் தடுக்க முடியாது என்பதையும்,

(b) எந்த அரசாங்க அலுவலகமாக இருந்தாலும் அல்லது கிணறு, குளம் போன்றவைகளாய் இருந்தாலும், அல்லது பொது வர்த்தகம் நடைபெறும் இடமாய் இருந்தாலும், இவைகளிலெல்லாம் ஜாதி இந்துக்களுக்கு என்னென்ன உரிமைகள் இருக்கின்றனவோ, அவ்வளவு உரிமைகளும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் உண்டு என்பதையும்,

சென்னை அரசாங்கம் ஒப்புக் கொண்டு அதைத் தீர்மானமாகநிறைவேற்றி எல்லா மாநகராட்சி, நகராட்சி, பஞ்சாயத்து மற்றும் அரசாங்கத்தில் உள்ள எல்லா இலாக்காக்களுக்கும் அனுப்பப்பட்டது.

(இது அரசாங்க உத்தரவு, மாநில அரசு)

P.L.  மூர்,

அரசாங்கச் செயலாளர்,

சட்டக் குழு அமைப்பு

மீறி யாராவது தடுத்தால், அது கிரிமினல் குற்றம். பேருந்தில் தாழ்த்தப்பட்ட சகோதரனாகிய என்னுடைய சகோதரனை ஜாதி பெயரைச் சொல்லி நீ கீழே இறக்கி விட்டால், அந்தப் பேருந்திற்கான உரிமம் கிடையாது என்று சொன்ன இயக்கம் ‘திராவிட மாடல்' ஆட்சி - திராவிடர் இயக்கம். இந்த வரலாற்றைத் தெரியாதவர் களுக்கு இது புரியாது.

ஹிந்துத்துவாவினுடைய ஆட்சி பக்கத்தில் இருக் கின்ற கேரளாவில் நடந்ததுண்டு. இதற்காகப் போராட்டம் நடந்திருக்கிறது. இங்கே தமிழ்நாட்டில் கேட்காமலேயே அரசாங்கத்தினுடைய கொள்கை இது. யாராவது அதைத் தடுத்தால், அவர்களுக்குத் தண்டனை என்று சொல்வது இருக்கிறதே, இதுதான் நண்பர்களே, சனாதனம் என்ன என்பதற்கு - கேரளா - வைக்கம் - அதனுடைய தாக்கம்.

இரட்டைமலை சீனிவாசன்

திராவிடம் என்பதற்கு என்ன அடையாளம் என்றால், இரட்டைமலை சீனிவாசன் அவர்களுடைய தீர்மான மும், அதனை ஏற்றுக்கொண்ட பனகல் அரசருடைய ‘திராவிட மாடல்' ஆட்சியின் சாட்சியமும்தான்.

இன்றைக்கு அதே காங்கிரஸ், பெரியாருடைய கொள்கையை அப்படியே நடைமுறைப்படுத்துகிறது. அதனால்தான் இன்றைக்கு இவ்வளவு பெரிய வெற்றி - கருநாடகத்திலே மற்ற மாநிலங்களில் யாரும் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு. 

இரண்டு தத்துவங்களுக்கிடையேதான் போராட்டம்!

இரண்டு தத்துவங்களுக்கிடையேதான் போராட்டமே தவிர, இரண்டு அரசியல் கட்சிகளுக்கு இடையே போராட்டமில்லை.

தந்தை பெரியார் ஏன் காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறினார்? கொஞ்சம் வரலாற்றை நினைத்துப் பாருங்கள்.

வகுப்புவாரி உரிமை - 100 சதவிகிதம் இருக்கின்ற வர்களுக்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு கொடுங்கள் என்று கேட்டார்; அதனை ஒப்புக்கொள்ளமாட்டோம் என்றார்கள்.

ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திருப்பத்தை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செய்திருக்கிறது!

அதே காங்கிரஸ் இன்றைக்கு ராகுல் காந்தி அவர்களுடைய தலைமையில், முற்போக்குச் சிந்தனை சார்ந்த சிறப்பான அவருடைய வழிகாட்டுதலில், அதி காரப்பூர்வமான தலைவராக கார்கே போன்றவர்கள் வந்த நேரத்தில், ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த திருப்பத்தை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செய்திருக்கிறது.

மக்களுக்கு இதனை சரியானபடி காங்கிரஸ்காரர்களே விளக்கிச் சொல்வதில்லை. சமூகநீதியை விளக்கிச் சொல்லவேண்டும். குறிப்புகள் வேண்டும் என்றால், எங்களிடம் இருக்கிறது - அதை வாங்கியாவது சொல் லுங்கள்.

அப்படிப்பட்ட சூழ்நிலையில், இந்தியாவிற்கே வழிகாட்டக் கூடிய அருமையான தீர்மானம் - அதனுடைய வரலாறு 120 ஆண்டுகாலத்தைத் தாண்டிய நேரத்தில், எந்தத் தீர்மானத்தைத் தந்தை பெரியார் அவர்கள், காஞ்சிபுரத்தில் கொடுத்து, அதனை காங்கிரஸ் ஏற்கவில்லை என்று, காங்கிரசைவிட்டு வெளியே வந்தாரோ, அதே தீர்மானத்தை இன்றைய சோனியா காந்தி அம்மையார் அவர்களின் வழிகாட்டுதலில், ராகுல் காந்தி அவர்களுடைய தலைமையில், இன்றைக்குக் கார்கே அவர்களுடைய மிக முக்கியமான தலைமையில் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது.

திராவிட இயக்கமே வந்திருக்காது; 

சுயமரியாதை இயக்கமே வந்திருக்காது!

ஒடுக்கப்பட்டவர்களுக்கு, பிற்படுத்தப்பட்டவர் களுக்கு, பெண்களுக்கு, அவரவர்களுக்கு உரிய பங்கை,அவரவர்களுக்கு நிர்வாகத்தில் கொடுக்கவேண்டும்; கட்சிப் பொறுப்புகளில் கொடுக்கவேண்டும் என்று சொன்னார்களே, இதைத்தானே அன்றைக்குப் பெரியார் கேட்டார். பெரியாரின் பேச்சை காங்கிரஸ் கேட்டிருந்தால், திராவிட இயக்கமே வந்திருக்காது. இன்னுங்கேட்டால் சுயமரியாதை இயக்கமே வந்திருக்காது.

பார்ப்பனர்களின் பின்புத்தியால்தான் சுயமரியாதை இயக்கம் பிறந்தது!

பெரியார்தான் சொல்வார். "பார்ப்பனர்களுக்கு எப்பொழுதுமே பின்புத்தி" என்று அன்றைக்கு முடியாது என்று சொன்னார்கள், அதுவும் நல்ல வாய்ப்பானது. அதனால்தான் சுயமரியாதை இயக்கம் பிறந்தது; திராவிட இயக்கம் வந்தது.

இங்கே நம்முடைய துணைத் தலைவர் சொன்னாரே. ஏழைகளுக்கு இட ஒதுக்கீடு என்பது நியாயமற்றது. அது என்ன உயர்ஜாதி ஏழைகளுக்கு இட ஒதுக்கீடு? ஏழைகள் எங்கே இருக்கிறார்கள்? 100 நாள் வேலைத் திட்டத்தில் இருக்கிறார்களே, அவர்கள்தானே உண்மையான ஏழைகள்.

100 நாள் வேலைத் திட்டத்தில், உயர்ஜாதி ஏழைகள் யாராவது இருக்கிறார்களா?

100 நாள் வேலைத் திட்டத்தில், உயர்ஜாதி ஏழைகள் யாராவது இருக்கிறார்களா? இதைக் கேட்பதற்கு உரிய துணிவு, திராவிடத் தத்துவம் தவிர, திராவிட மாடல் ஆட்சியைத் தவிர, வேறு யாருக்காவது உண்டா? உயர்ஜாதி ஏழைகளுக்கான சட்டத்தை நடைமுறைப்படுத்தமாட்டோம் என்று இன்றைக்கு வரையில் உறுதியுடன் இருக்கும் பெருமை திராவிட மாடல் ஆட்சிக்கு உண்டு; இன்றைய முதலமைச்சர் தலைமையில் நடக்கக்கூடிய ஆட்சிக்கு உண்டு! வேறு யாருக்கும் அந்த முதுகெலும்பு கிடையாது. அது கொள்கைத் தத்துவம், நன்றாக, தெளிவாக 'திராவிட மாடல்' ஆட்சி இன்றைக்கு நடந்துகொண்டிருக்கின்றது.

ஆகவே, மக்கள் அதனை உணர்ந்திருக்கின்ற காரணத்தினால்தான், பாவம் மோடி வித்தை, கருநாடகத்தில் பலிக்கவில்லை. என்ன நடந்தது அங்கே?

பூக்களைக் கொட்டினார்களே தவிர,

வாக்குகளைக் கொட்டவில்லை!

பூக்களை எல்லாம் சாலைகளில் வீசினார்கள்; மோடியின் தலையில் பூக்களைக் கொட்டினார்களே தவிர, வாக்குகளைக் கொட்டுவதில் மிக கவனமாக, மிகத் தெளிவாக இருந்தார்கள் கருநாடக வாக்காளர்கள்.

ஆடுமா? அசையுமா? விலைக்கு வாங்கலாமா? குதிரை பேரமா? அல்லது வேறு பேரமா? ஆயாராம் காயாராம் - இதில்கூட ராம்தான். கட்சி மாறுவதற்கே அவன் ஹிந்தியில் பெயர் வைத்திருக்கிறான் - "ஆயராம் - காயராம்” என்று. இந்த ராம் எல்லாம் தமிழ்நாட்டில் ஒருபோதும் பலனளிக்காது.

இங்கே யாராவது கட்சி மாறினால், அவர்களை வெளியில் நடமாட விடமாட்டார்கள். 1952 ஆம் ஆண்டு காலத்தில் ஒரு கட்சி மாறியது, வெளியில் நடமாட முடியவில்லை அந்தக் காலத்தில், காரணம், அறிவு நாணயம்.

எதற்காக மக்கள் வாக்களித்தார்களோ, அதற்கு அவர்கள் மதிப்பளிக்கவேண்டும். ஆனால், அதற்கே இடமில்லாத அளவிற்கு, மிகப்பெரிய அளவிற்கு வெற்றியை கருநாடக மக்கள் தந்திருக்கிறார்கள் என்று சொல்லும்பொழுது இது எங்கள் சகோதரர் பெற்ற வெற்றிக்கு அச்சார வெற்றி அது முழுமையான வெற்றி,

தென்மாநிலங்களில் பாசிச கட்சிகளுக்கு கதவு சாத்தப்பட்டுவிட்டது!

2024 ஆம் ஆண்டு ஒன்றியத்தில் எப்படிப்பட்ட ஓர் ஆட்சி ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதற்கு அமையப் போகி றது என்றால், நிச்சயமாக எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் உள்ள ஆட்சியாகத்தான் அமையும்.

கருநாடகவில் பா.ஜ.க.வின் படுதோல்வியிலிருந்து என்ன தெரிகிறது?

தென்மாநிலங்களில் கதவு சாத்தப்பட்டுவிட்டது. இங்கே காவிக்கு

இடமில்லை. இங்கே அவர்களுடைய வித்தைகளை யெல்லாம் காட்ட முடியாது,

வடநாட்டில் ராமனும் கைகொடுக்கவில்லை; தென்னாட்டில் அனுமாரும் கைகொடுக்கவில்லை!

பிரச்சாரம் முடிந்து, தேர்தலும் முடிந்துவிட்டது, கருநாடக முதலமைச்சரும், மற்றவர்களும் அமர்ந்துகொண்டு பஜனை பாடுகிறார்கள் "அனுமான் சாலி' என்று. இராமன்தான் கை கொடுக்கவில்லை வடநாட்டில் என்றால், இங்கே இவர்களுக்கு அனுமானும் கைகொடுக்கவில்லையே!

பஜ்ரங் தள் என்றால் என்ன அர்த்தம்?

பஜ்ரங் தள் என்றால் குரங்கு என்பதுதான்.

பஜ்ரங் தள் அமைப்பினுடைய சிறப்பு என்னவென்றால், ஒரிசாவில் ஸ்டெயின்ஸ் பாதிரியார் சேவை மனப்பான்மை யோடு தொழு நோயாளிகளுக்கு சேவை செய்து வந்தாரே, அவரது குடும்பத்தினரை உயிரோடு எரித்துக் கொன்ற அமைப்பினர்தான் அவர்கள். அதற்காக நீதிமன்றம் அந்த அமைப்பினருக்குத் தண்டனை கொடுத்த வரலாறு உண்டு.

அதற்காகத்தான் அப்படிப்பட்ட நிகழ்வுகளோ, மதக்கலவரமோ, மக்களைப் பிரிக்கக்கூடிய நிலைகளோ வரக்கூடாது என்று காங்கிரஸ் தீர்மானம் போட்டது. பஜ்ரங்தள் அமைப்பைத் தடை செய்வோம் ஆட்சிக்கு வந்தால் என்ற உறுதிமொழியைக் கொடுத்தது.

எத்தனை அனுமான் சாலி பாடினாலும், என்ன செய்தாலும் அவர்களுடைய பாச்சா இங்கே பலிக்காது.

இலவசங்களே கிடையாது, கூடாது என்று சொன்ன பா.ஜ.க.வினர், இலவசங்களை அறிவித்தனர்

கழகங்களே கூடாது திராவிட இயக்கங்களைப்பற்றி பேசினால் தவறு காங்கிரஸ் இலவசங்களைப்பற்றி பேசினால் தவறு. சரி, இலவசங்களே கிடையாது, கூடாது என்று சொன்ன பா.ஜ.க.வினர், இலவசங்களை அறிவித்தனர்.

நவீன மூடநம்பிக்கைகளை வளர்த்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!

இங்கே உதயநிதி ஸ்டாலின் செங்கல்லைக் காட்டி வெற்றி பெற்றதுபோன்று, அங்கே காஸ் சிலிண்டர்தான் இவ்வளவு பெரிய வெற்றியைக் கொடுத்திருக்கிறது இன்னும் கொஞ்சநாள் போனால், சிலிண்டருக்குக் கோவில் கட்டிவிடுவார்கள், அதை நினைத்தால்தான் வேதனையாக இருக்கிறது சிலிண்டரை வணங்கினால் நமக்கு வெற்றி கிடைக்கும் என்று, நவீன மூடநம்பிக்கைகளை வளர்த்தாலும் ஆச்சரியப்படுவதற் கில்லை.

அப்படிப்பட்ட சூழ்நிலையில், ஒன்றை நீங்கள் தெளிவாகத் தெரிந்துகொள்ளவேண்டும். கருநாடக மாநில தேர்தலில் வெற்றி என்பது தொடக்கம்தான்; முடிவல்ல. இந்தியாவில், 1924 தேர்தல் முடிவு அப்படித்தான் இருந்தது.

உச்சநீதிமன்றம் கண்டித்தது!

சிறுபான்மைச் சமூகத்தினர், இஸ்லாமியச் சமூகத்தினர் வாழவேண்டாமா? அவர்கள் இந்த நாட்டுக் குடிமக்கள் அல்லவா! அவர்கள் என்ன அரேபியாவிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் வந்து குதித்தவர்களா?

கிறித்தவ நண்பர்கள் என்ன இஸ்ரேலிலிருந்து வந்தவர் களா?

இல்லையே! மூன்று, நான்கு தலைமுறைகளுக்கு முன்பு ஆதிக்கக்காரர்களின் ஜாதிய கொடுமைகள் தாளாமல், மதம் மாறியவர்கள்தானே! கருநாடக மாநிலத்தில் அவர்களுக்கு இட ஒதுக்கீடு கிடையாது என்று சொன்னார்கள்; அதை உச்சநீதிமன்றம் கண்டித்திருக்கிறது.

முன்பெல்லாம் உச்சநீதிமன்றத் தீர்ப்பு ஒரு முதலமைச் சருக்கோ அல்லது அமைச்சருக்கோ அல்லது ஆட்சிக்கு எதிராக வந்தால், உடனே அவர்கள் அந்தப் பதவியிலிருந்து விலகியிருக்கிறார்கள்.

சஞ்சீவ ரெட்டி. ஆந்திராவில் முதலமைச்சராக இருந்த பொழுது மாநிலப் பேருந்தை தேசியமயமாக்கியபொழுது அதை எதிர்த்து உச்சநீதிமன்றத்திற்குச் சென்றபொழுது தேசிய மயமாக்கியது செல்லாது என்று சொன்னவுடன், சஞ்சீவ ரெட்டி அவருடைய பதவியிலிருந்து அறிவு நாணயத் தோடு விலகினார்.

ஆனால், இன்றைய நிலை என்ன?

அமலாக்கத் துறையில் ஏழாவது முறையாக ஒரே ஆளுக்குப் பதவி நீட்டிப்புக் கொடுக்கவேண்டுமா? அவரை விட்டால் வேறு ஆள் கிடையாதா? என்று உச்சநீதிமன்றம் கேள்வி கேட்கிறது.

இது கடைசி முறைதான் என்று ஒன்றிய அரசு சொல்கிறது. 

அதுபோல, டில்லி மாநில அரசுக்குத்தான் அதிகாரம் உண்டு என்று உச்சநீதிமன்றம் குட்டு வைத்திருக்கிறது.

அதுபோலவே, ஆளுநருடைய பணி என்ன? என்றும் கேள்வி கேட்டு இருக்கிறது உச்சநீதிமன்றம்.

எதை வேண்டுமானாலும் சொல்வதற்கு உத்தரப்பிரதேசமா -இது தென்னாடு!

ஆகவே நண்பர்களே, இந்த ஹிந்துத்துவத்திற்குப் பரிசோதனைக் கூடமாக இந்தக் கருநாடக மாநிலத் தேர்தலை அமைத்தார்கள். வடநாடு போன்று எதை வேண்டுமானாலும் சொல்வதற்கு உத்தரப்பிரதேசமா - கருநாடகம்? இது தென் மாநிலம்.

ஹிந்துத்துவப் பரிசோதனைக் கூடமாக நினைத்து, வெவ்வேறு விதமான முயற்சிகளையெல்லாம் செய்து பார்த் தார்கள். அதன்மூலமாக மிகப்பெரிய வெற்றி பெற்றுவிடலாம் என்று நினைத்தார்கள். மற்றவர்களையெல்லாம் ஒன்று சேர்க்கிறோம்; எதிர்க்கட்சிகளைப் பிரித்துப் பார்க்கிறோம் என்று வெறுப்பு அரசியல் நடத்திய நேரத்தில், திராவிட உணர்வுகள் என்பது நெருப்பு, அனலாக அதை சுட்டெரித்து வெளியில் வெற்றியைப் பெற வைத்திருக்கிறது.

கருநாடகத் தேர்தல் புரிய வைத்திருக்கிறது!

இன்னொரு உண்மையும் வெளியாகியிருக்கிறது. அந்த உண்மையை நன்றாக இந்தக் கருநாடகத் தேர்தல் புரிய வைத்திருக்கிறது.

அது என்னவென்று சொன்னால், "மோடி என்பவர் வந்தால், வாக்குகள் எல்லாம் கொட்டும்; அவர் மக்கள் மத்தி யில் - பேசினால், வாக்குகளை எல்லாம் திருப்பி விடுவார், அவருக்கு வெற்றி நாயகன் பெயர்" என்றெல்லாம் சொன்னார் களே, அப்படியில்லை - அது போலித்தனமாகக் கட்டமைக் கப்பட்ட ஒரு கற்பனை - ஒரு வித்தை என்பது இன்றைக்குத் தெளிவாகத் தெரிந்துவிட்டது. உத்தரகாண்டில் அது ஏற்கெனவே தெரிந்துவிட்டது.

ராகுல் காந்தி சொன்னதை கல்வெட்டாக செதுக்கி வைக்கவேண்டும்!

இதையெல்லாம் புரிந்த ஒரு தெளிவு, இளந்தலைமை இன்றைக்கு ராகுல்காந்தி போன்றவர்களிடம் இருக்கிறது. 

நாடாளுமன்றத்தில் நேருக்கு நேர் சொன்னார்; அந்தத் துணிச்சல் வரவேண்டும். "நீங்கள் நூறு ஆண்டுகள் கரடியாகக் கரணம் போட்டாலும் தமிழ்நாட்டில் பி.ஜே.பி. ஆட்சியைக் கொண்டுவர முடியாது" என்று சொன்னதை கல்வெட்டாக செதுக்கி வைக்கப்படவேண்டிய செய்தியாகும்.

இன்றைக்கு அவ்வளவு உறுதியான திராவிட இயக்க ஆட்சி, 'திராவிட மாடல்' ஆட்சி என்பது, அது ஏதோ ஒரு கட்சியைப் பொறுத்ததல்ல நண்பர்களே; ஒரு கொள்கையைப் பொறுத்தது. தத்துவத்தைப் பொறுத்தது.

பேதமிலா பெருவாழ்வு - திராவிடம்தான்!

எங்கெல்லாம் சமத்துவம் இருக்கிறதோ, எங்கெல்லாம் சமூகநீதிக் கொடி தலைதாழாமல் பறக்கிறதோ, எங்கெல்லாம் சம உரிமை, சம வாய்ப்பு என்று இருக்கிறதோ, அங்கெல்லாம் திராவிடம்தான். பேதமிலா பெருவாழ்வு - திராவிடம்தான்.

ஆகவே நண்பர்களே, அருமையான வாய்ப்பில், திராவிட மாடல் ஆட்சியினுடைய சாதனைகளையும், அந்த சாதனைகளை ஏற்றுக்கொண்ட மக்கள் - நீங்கள் எப்படி தெளிவாக வாக்களித்தீர்களோ. எப்படி பெருவாரியாக வாக் களித்தீர்களோ அதுபோலத்தான் அனைத்து இந்தியாவிலும் நடக்கும்.

உரிமையோடு சொல்லுகிறேன், அவர்களுக்கு வேண்டுகேளாக சொல்கிறேன்!

இனியாவது, அடகு வைக்கப்பட்ட பொருளாக இன் றைக்கு இருக்கக்கூடிய எதிர்க்கட்சிகள், உங்கள் அடகுப் பொருளை மீட்பதற்கு முயற்சியுங்கள். இனியும் நீங்கள் அடகுப் பொருளாக இருக்காதீர்கள்; உரிமையோடு சொல்லு கிறேன், அவர்களுக்கு வேண்டுகேளாக சொல்கிறேன். மிக முக்கியமாக கவனிக்கவேண்டிய கவனத்தில் கொள்ள வேண்டிய செய்திகள்! 

நன்றியும், பாராட்டும்!

அருமையான முயற்சி எடுத்து, சிறப்பான கூட்டத்தை ஏற்பாடு செய்த தலைமைக் கழக அமைப்பாளராக இருக்கக்கூடிய தோழர் சண்முகம், கோபி மாவட்டத் தலைவர் சிவலிங்கம், பொதுக்குழு உறுப்பினர் சிற்றரசு, பேராசிரியர் காளிமுத்து, பொதுக்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன், கோபி மாவட்டச் செயலாளர் வழக்குரைஞர் சென்னியப்பன், மாநகரத் தலைவர் திருநாவுக்கரசு, பாராட்டுக்குரிய ஈ.வெ.கி.ச.இளங்கோவன் அவர்கள், கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், ம.தி.மு.க. பொருளாளரும், சீரிய கொள்கையாளரும், அருமைச் சகோதரருமான நாடாளுமன்ற உறுப்பினர் ஈரோடு கணேசமூர்த்தி, நம்முடைய திராவிட முன்னேற்றக் கழக தெற்கு மாவட்ட துணைச் செயலாளர் செந்தில்குமார் அவர்களுக்கும், காங்கிரஸ் கட்சியின் வடக்கு மாவட்டத் தலைவர் அய்யா சரவணன் அவர்களுக்கும், காங்கிரஸ் கட்சியின் மாநகர மாவட்டப் பொறுப்பாளர் திருச்செல்வம் அவர்களுக்கும், கழகப் பொருளாளர் குமரேசன், கழகப் பொதுச்செயலாளர் துரை.சந்திரசேகரன், பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அருள்மொழி, காங்கிரஸ் கட்சியின் மேனாள் சட்டப்பேரவை உறுப்பினர் சி.எம்.பழனிச்சாமி அவர்களுக்கும், நன்றியுரை கூறவிருக்கக்கூடிய மாநகர செயலாளர் காமராஜ் மற்றும் ஈட்டி கணேசன், ஈரோடு மாநகர திராவிட முன்னேற்றக் கழக செயலாளர் தோழர் மு.சுப்பிரமணியன், பெரியார் நகர் பகுதி திராவிட முன்னேற்றக் கழக செயலாளர் அக்னிசந்துரு, ம.தி.மு.க. பொறுப்பாளர் தோழர் சாதிக், ஊடக நண்பர்களுக்கும், தோழர்களுக்கும், ஏற்பாடு செய்த உங்களுக்கும் நன்றியும், பாராட்டையும் தெரிவித்து இந்த வெற்றி என்பது ஒரு தொடர் பயணம் - அந்தத் தொடர் பயணத்தில் முதல் வெற்றியை நாம் சுவைத்திருக்கின்றோம்; இதுவே முடிவல்ல - இது தொடக்கம்; இந்தத் தொடக்கம் தொடரட்டும்; அதன்மூலம் நம்முடைய உரிமைகள் வெல்லட்டும்! ஜனநாயகம் காப்பாற்றப்படட்டும்; பாசிசம் வீழ்த்தப்படட்டும்; மதச்சார்பின்மையும், சமத்துவக் கொள்கையும் வளரட்டும்; பாதுகாப்போம், என்றைக்கும் பாதுகாப்போம்!

முகக்கவசங்களாக என்றைக்கும் திராவிடர் கழகம் எல்லா இயக்கங்களுக்கும் இருக்கும்

நாங்கள் முகக்கவசம்போல; முகக்கவசத்திற்கு வேலை என்னவென்று சொன்னால், அதற்குத் தனியே எதுவும் சக்தி கிடையாது, தடுக்கின்ற சக்தி உண்டு. அந்த முகக்கவசங்களாக என்றைக்கும் திராவிடர் கழகம் எல்லா இயக்கங்களுக்கும் இருக்கும் என்று உறுதி கூறி, விடைபெறுகிறேன்.

வாழ்க பெரியார்!

வளர்க பகுத்தறிவு!

நன்றி, வணக்கம்!

இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நிறைவுரையாற்றினார்.


No comments:

Post a Comment