சென்னை, மே 23- திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு கடந்த 2 ஆண்டுகளில் ரூ.2.95 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப் பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்கும் விதமாகவும், அடுத்த ஆண்டு நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கும் வகையிலும், முதலமைச்சர் ஸ்டாலின் இன்று (23.5.2023) அரசு முறைப் பயணமாக சிங்கப்பூர், ஜப்பான் நாடுகளுக்கு புறப்பட்டுச் சென்றார்.
முன்னதாக சென்னை விமான நிலையத்தில் செய்தி யாளர்களிடம் பேசிய அவர், "ஜனவரி மாதம் சென்னையில் நடைபெற உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும் என்று பல்வேறு நாடுகளுக்குச் சென்று அழைப்பு விடுத்துக் கொண்டு இருக்கிறோம். அந்த வகையில் உலக முதலீட்டாளர் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்க 9 நாட்கள் பயணமாக ஜப்பான், சிங்கப்பூர் நாடுகளுக்கு இந்தப் பயணத்தை மேற்கொண்டு இருக்கிறேன். என்னுடன் தொழில் துறை அமைச்சர், அரசு உயரதிகாரிகள் வருகிறார்கள்.
ஏற்கெனவே கடந்த ஆண்டு மார்ச் மாதம் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் அய்க்கிய அரபு நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. இதன் தொடர்ச்சியாக ஜப்பான், சிங்கப்பூர் நாடுகளுக்கு இந்தப் பயணத்தை மேற்கொண்டு இருக்கிறேன். இந்தப் பயணத்தின் போது ஒரு சில புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன.
இந்தப் பயணத்தின் முக்கிய நோக்கம் என்பது வரும் ஜனவரி மாதம் நடைபெற உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுப்பது தான். உங்களின் வாழ்த்து களுடன் செல்கிறேன்.
கடந்த ஜனவரி மாதம் மேற்கொண்ட துபாய் பயணத்தின் மூலம் ரூ.6,000 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டன. துபாய் பயணத்தின்போது ஒப்பந்தமான 6 நிறுவனங்கள் பணிகளை தொடங்கிவிட்டன. திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு கடந்த ஆண்டுகளில் இரண்டு லட்சத்து 95 ஆயிரம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நான்கு லட்சத்து 65 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு நிச்சயமாக கிடைக்கும்."
- இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறினார்.
No comments:
Post a Comment