பெங்களுரு, மே 15 புதிய முதலமைச்சரை தேர்ந் தெடுக்கும் அதிகாரம் காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு வழங்கப்பட்டுள்ளது. புதிய அமைச்சரவை வரும் 18-ஆம் தேதி பதவியேற்கும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கருநாடகாவில் மே 10-ஆம் தேதி நடந்த சட்டப் பேரவை தேர்தலில் மொத்தம் உள்ள 224 இடங்களில் 135 இடங்களை காங்கிரஸ் கைப்பற்றி, அமோக வெற்றி பெற்றது. பாஜக 66, மஜத 19, சுயேச்சைகள் 4 இடங்களையும் பிடித்தன. பாஜக தோல்வி அடைந்ததால் முதலமைச்சர் பதவியிலிருந்து பசவராஜ் பொம்மை விலகினார்.
இந்நிலையில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ‘‘காங்கிரஸ் சட்டப்பேரவை குழு தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் பெங்களூருவில் 14-ஆம் தேதி (நேற்று) மாலை நடைபெற்றது. காங்கிரஸ் சட்டப்பேரவை குழு தலைவரை தேர்ந்தெடுக்க மேனாள் மகாராட்டிர முதலமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே, காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜிதேந்திரா சிங், மூத்த தலைவர் தீபக் பாபரியா ஆகியோர் காங்கிரஸ் மேலிட பார்வையாளர்களாக நியமிக்கப்படுகின்றனர்'' என அறிவித்தார் .
இந்நிலையில், பெங்களூருவில் உள்ள நட்சத்திர விடுதியில் நேற்று இரவு 8 மணி அளவில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் மாநிலத் தலைவர் டி.கே.சிவகுமார் தலைமையில் கூடியது. இதில் காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா, மேலிடப் பார்வையாளர் சுஷில்குமார் ஷிண்டே, ஜிதேந்திரா சிங், தீபக் பாபரியா மற்றும் புதிய சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
கருநாடக காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் புதிய முதல்வரை தேர்ந்தெடுக்கும் அதிகாரம் காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதன் நகலை வெளியிட்ட காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் ரன்தீப் சுர்ஜிவாலா, ‘‘இன்றைய கூட்டத்தில் புதிய முதலமைச்சர் யார் என்பது குறித்து முடிவெடுக்க வில்லை. வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் தலைவர்கள் இடையே அறிமுகக் கூட்டம் மட்டுமே நடந்தது. முதலமைச்சர் தேர்வு செய்வதில் எந்த சிக்கலும் ஏற்படவில்லை. தற்போது நிறைவேற்றப்பட்ட தீர்மானத் துக்கு டி.கே.சிவகுமார், சித்தராமையா உள்ளிட்ட அனைத்து தலைவர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்'' என்றார்.
தலைவர்கள் டில்லி விரைவு
இதைத் தொடர்ந்து மல்லிகார்ஜுன கார்கே டில்லி விரைந்துள்ளார். அங்கு மூத்த தலைவர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்த இருக்கிறார். 2024-ஆம் ஆண்டு நடைபெறும் மக்களவைத் தேர்தல், கருநாடகாவில் நல்லாட்சி ஆகியவற்றை மனதில் வைத்து அடுத்த முதலமைச்சர் பரிசீலனை நடைபெறும். சோனியா, ராகுல் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி புதிய முதலமைச்சரை கார்கே தேர்ந்தெடுப்பார் என தகவல் வெளியாகியுள்ளது. முதலமைச்சரை கட்சி மேலிடம் தேர்வு செய்து அறிவித்த பிறகு, புதிய அமைச்சரவை வரும் 18-ஆம் தேதி பதவி யேற்கும் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment