கருஞ்சட்டையை சீண்டாதே, சீரழிந்து போகாதே! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, April 17, 2023

கருஞ்சட்டையை சீண்டாதே, சீரழிந்து போகாதே!

-மின்சாரம் -

கேள்வி: தி.க. வீரமணி சாதித்தது என்ன?

பதில்: தினமும் கருப்புச் சட்டை அணிந்து கொள்கிறாரே, அதுதான் அவர் சாதித்தது?

- தினமலரின் அந்துமணி பதில்கள், 16.4.2023

நல்ல பதில்தான்... பார்ப்பனர்கள் முதுகில் பூணூல் அணிந்து கொள்கிறார்களே, நாமம் தீட்டிக் கொள்கிறார்களே! (அதிலும் ‘Y' ‘U‘  வித்தியாச நாமங்கள்).... இத்தியாதி இத்தியாதி...

இதெல்லாம் அவர்களின் சாதனையா? இளிச்சவாயர் இந்தப் பெரும்பான்மை பார்ப் பனர் அல்லாத மக்கள் - அவர்கள்மீது சவாரி செய்யலாம் என்ற ஆணவத்தின் அடை யாளமா?

தி.க. வீரமணி கருப்புச் சட்டை நாள்தோறும் அணிவது - பார்ப்பனர் அல்லாத மக்களின் இழிவைத் துடைப்பதற்கான அடையாளம்.

பார்ப்பனர் அல்லாத மக்களே, உங்களை யெல்லாம் சூத்திரர்களாக, நாலாஞ் ஜாதி மக்களாக ஆக்கி இருக்கிறார்களே, சூத்திரன் என்றால், வேசி மக்கள் என்பது உள்பட ஏழு வகைப் பட்ட பிறவித் தொழிலாளர்கள் என்று மனுநீதியில் எழுதி வைத்துள்ளார்களே,

இவற்றைக் கண்டு கொதித்து எழவேண் டாமா? சுயமரியாதை பெறவேண்டாமா?

மாட்டுச் சாணியை உருட்டி வைத்து, அதில் இரண்டு அருகம்புல்லை நட்டு வைத்து, இது தான் கடவுள், விழுந்து கும்பிடு என்று ஆக்கி வைத்திருக்கிறானே, இந்த முட்டாள்தனத்திலி ருந்து மவுடிகத்திலிருந்து விடுபடவேண்டாமா என்ற வினா எழுப்புவதன் அறிகுறியே அந்தக் கருப்புச் சட்டை.

ஏ, தமிழா, நீ கட்டிய கோவில் கருவறைக்குள் நீ நுழைய முடியாது, தமிழன் கட்டிய கோவிலில் வழிபாட்டு மொழியாக தமிழ் இருக்கக் கூடாது; காரணம், நீ சூத்திரன், தமிழ் நீஷப் பாஷை என்று ஆக்கி வைத்துவிட்டானே, எங்கே உன் தமிழ்ப்பற்று, இனப்பற்று? என்று தன்மான உணர்ச்சியைத் தட்டி எழுப்பும் போராட்டக் குணத்தின் சின்னம்தான் கருப்புச் சட்டை.

மாட்டு மூத்திரத்தையும் (தப்பு, தப்பு, கோமி யம்), சாணியையும், பாலையும், தயிரையும், வெண்ணெய்யையும் கலந்து ஒரு கலக்குக் கலக்கி பஞ்சகவ்யம் என்று தட்சணைக் கொடுத்துக் குடிக்கிறாயே, குடிக்க வைக்கிறானே, அந்தக் குடுமிகளின் கொழுப்பையும், மாட்டு மூத்திரத்தையும், சாணி என்று தெரிந்திருந்தும், தட்சணை கொடுத்துக் குடிக்கிறாயே, ‘சூத் திரனே!' உனக்குப் புத்தி வருவது எப்போது? அந்த அவுட்டுத் திரிகளின் ஆணவத்தை அடக்குவது எப்போது?

பிரம்மாவின் நெற்றியில் பிராமணன் பிறந் தான் என்றும், பிரம்மாவின் காலில் சூத்திரன் பிறந்தான் என்றும், அதற்கும் கீழ் அவர்ணஸ் தவன், தாழ்ந்த ஜாதிக்காரன் பிறந்தான் என்றும் எழுதி வைத்து, அவற்றை இன்றுவரை காப்பாற்றிக் கொண்டிருக்கும் கயவர் கூட்டத்தை எச்சரித்தும், அறிவைப் பறிகொடுத்து, ‘ஆமாம் சாமி!' போடும் அவமானத்தையும், ஆணிவே ரோடு வெட்டி வீழ்த்த வேண்டாமா? என்று கேட்கும் விவேகத்தின் வினா எரிமலை இந்தக் கருஞ்சட்டை.

தந்தை பெரியார் அளித்த சின்னம், அவர் அன்றாடம் அணிந்திருந்த உடை அந்தக் கருப்பு!

ஏன் இன்றைக்குக்கூட எந்தக் கட்சிப் போராட்டம் நடத்தினாலும், அவர்கள் அணியும் நிறம் என்ன? 

கருப்புச் சட்டைதானே! 

அதன் பொருள் என்ன?

கருப்புச் சட்டை என்றால், களம் காண்பது, உரிமைக்காகக் குரல் கொடுப்பது, வீதிக்கு வந்து போராடுவது, வெற்றி கிட்டும்வரை போராடுவது, வெஞ்சிறை என்றாலும், அது நமது உரிமைக் குரலுக்குக் கிடைத்த வெகுமானம் என்று முரசொலிப்பது கருப்புச் சட்டை!

ஏன், நீதி கேட்டு வாதாடும் வழக்குரைஞர்கள் அணிவது கருப்புச் சட்டை; நீதிபதி ஆசனத்தில் அமர்ந்து இருக்கும் நீதிபதிகள் அணிவதும் அவ்வுடையே!

கண்ணும் கருப்புதான், கண்ணும் கருத்து மாகச் சிந்தித்து அணியும் போர்ச் சின்னமே கருப்பு!

இன இழிவை ஒழிக்க இதுவே நன்மருந்து!

இது ஓர் எரிமலை; சீண்டிப் பார்க்காதே, சில்லுண்டிக் கூட்டமே என்று எச்சரிக்கும் கருஞ்சிறுத்தைக் கூட்டத்தின் அடையாளமே கருஞ்சட்டை! 

சீண்டாதே, சீரழிந்து போகாதே!

No comments:

Post a Comment