தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள், 30.3.2023, சிதம்பரம் பொதுக்கூட்டம் முடித்து சிதம்பரத்தில் தங்கினார். மறுநாள் 31.3.2023 காலை, அண்ணாமலை நகர் தெற்கிருப்பு பகுதியில், மாவட்டத் தலைவர் பேராசிரியர் பூ.சி.இளங்கோவன் மகள் புதிதாக கட்டியுள்ள இல்லத்திற்கு சென்றார். அங்கு தமிழர் தலைவரை அவ்வை இளங்கோவன், பூ.சி.இளங்கோவன், இ.தென்றல், பேரன் கவி, அண்ணாமலை நகர் பேரூராட்சித் தலைவர் க.பழனி, துணைத் தலைவர் தமிழ்ச்செல்வி விஜயகுமார், பேரூராட்சி உறுப்பினர்கள் விஜயா, வேலு மற்றும் எராளமான தி.மு.க. தோழர்களும் வரவேற்றனர்.
அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை தலைவர் முனைவர் பேராசிரியர் பிலவேந்திரன் மொழிப்புல முதன்மையர் (DEAN) முதுமுனைவர் அரங்க.பாரி ஆகியோ ரும் தமிழர் தலைவரை வரவேற்றனர். ஆசிரியர் அவர்கள் தான் பயின்ற வகுப்பறைகளையும், நிகழ்ச்சிகள் நடைபெறும் ‘கோகலே’ மண்டபத்தையும் பார்க்க வேண்டும் என்று விரும் பினார். முனைவர் அரங்க. பாரி பல்கலைக்கழகப் பதிவாளர் சீத்தாராமனைத் தொடர்பு கொண்டு தலைவரின் விருப்பத் தைத் தெரிவித்தார். தலைவரின் வேண்டுகோளை ஏற்று பூட்டியிருந்த ‘கோகலே’ மண்டபம் திறக்கப்பட்டது.
தமிழர் தலைவர், ஒரு குழந்தையைப் போல மனமகிழ்ச்சி யோடு - மண்டபத்தின் உள்ளே சென்று, சுற்றிப் பார்த்தார். அங்கிருந்த அரங்கத்தில் சிறிதுநேரம் அமர்ந்திருந்தார். ‘கோகலே’ மண்டபத்திலிருந்த அரிய ஒளிப்படங்களை கண்டு களித்தார். அங்கிருந்த தந்தை பெரியார், அண்ணாமலைப் பல்கலைக்கழக இணைவேந்தர் முத்தையா செட்டியார் இருவரும் ஒன்றாக இருந்த ஒளிப்படத்தைப் பார்த்து மகிழ்ச்சியடைந்து, ‘விடுதலை’ ஒளிப்படக்காரர் சிவக்குமாரை அழைத்து அப்படத்தை - பதிவு செய்யச் சொன்னார். அந்தப் படம் 1940களில் எடுக்கப்பட்ட ஒளிப்படமாகும்.
‘கோகலே’ மண்டபத்தின் முன்பக்கம் நின்று - அந்த மண்டபத்தின் பெயர் தெரியும்படி தனியாக படம் எடுத்துக்கொண்டார். தன்னுடைய பழைய நினைவுகளை எல்லாம் அசைபோட்டு மகிழ்ந்தார். அன்றைய தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் ஏ.சிதம்பரநாதன் செட்டியார் தலைமையில் நான் இம்மண்டபத்தில் பட்டப்படிப்பு வகுப்பில் படிக்கும்போது பேசினேன். பேராசிரியர் ஏ.சிதம்பரநாதன் செட்டியார் என்னை மிகவும் பாராட்டினார் என்று கூறி மகிழ்ச்சியடைந்தார். சிறு குழந்தைபோல, எங்களிடம் மீண்டும் மீண்டும் கூறினார். ஆசிரியரின் அடிமனது எவ்வளவு வெள்ளை உள்ளம் உள்ளது என்பதைக் காணும் வாய்ப்பு பெற்றோம்.
பிறகு, அண்ணாமலைப் பல்கலைக்கழக தமிழ்த்துறைக்கு ஆசிரியரை, புல முதல்வர் முதுமுனைவர் அரங்க.பாரி அழைத்துச் சென்றார். அங்கு துறைத் தலைவர் முனைவர் பிலவேந்திரன் வரவேற்றார். தமிழ்த்துறை புல முதல்வர் அறையில் சிறிது நேரம் அமர்ந்திருந்து, அங்கிருந்த - தமிழ்த்துறையை பெருமைப்படுத்திய மேனாள் துறைத் தலைவர்களான, விபுலாநந்த அடிகள், நாவலர் சோமசுந்தரம் பிள்ளை, ‘எம்.எல்.பிள்ளை’ (அந்தக் காலத்தில் எம்.எல். படித்த காரணத்தால்) என்கிற சுப்பிரமணிய பிள்ளை, டாக்டர் தெ.போ. மீனாட்சிசுந்தரம், டாக்டர் ஏ.சிதம்பரநாதன் செட்டியார், டாக்டர் லெ.ப.கரு.இராமநாதன் செட்டியார், டாக்டர் வ.சுப.மாணிக்கம் ஆகிய தமிழ்ப் பேராசிரியர்களின் படங்களைப் பார்த்து - அவர்களோடு தனக்கு இருந்த அறிமுகத்தை நினைவு கூர்ந்தார். பேராசிரியர் லெ.ப.கரு.இராமநாதன் செட்டியார் தன் 103 வயதில், தன்னிடம், “என்னைப் பார்த்து வீரமணிதானே நீங்கள்’’ - என்று கூறியதையெல்லாம் எங் களிடம் பகிர்ந்துகொண்டார்.
பிறகு, தன் வகுப்பறையான, “O26’ (ORIENTAL ROOM 26) என்கிற அறையைக் காண விரும்பினார். அரங்க.பாரியும் மற்ற பேராசிரியர்களும், அந்த அறைக்கு அழைத்துச் சென்றனர்.
அந்த அறையில் சிறிது நேரம் உட்கார்ந்து - “நான் எப்பவும் முதல் பெஞ்சில்தான் உட்காருவேன்” என்று பழைய நினைவுகளை எங்களிடம் ஒரு குழந்தைபோல பகிர்ந்து மகிழ்ந்தார்.
நம் தலைவரின் உள்ளத்தில் பழைய நினைவுகளை அசைபோட இவ்வளவு ஆசை உள்ளதே என்று நாங்கள் வியப்படைந்தோம்.
தமிழர் தலைவருடன், திருச்சி பேராசிரியர் ப.சுப்பிர மணியம், பொதுச் செயலாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார், மாநில மாணவர் கழக செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார், மாவட்ட செயலாளர் அன்பு.சித்தார்த்தன், மாவட் டத் தலைவர் பேராசிரியர் பூ.சி.இளங்கோவன், இளைஞரணித் தோழர் முரளிதரன், இரா.பொய்யாமொழி, பூ.வே.அசோக் குமார், நார்த்குடி கழகத் தோழர் ஸ்டாலின், அண்ணாமலை நகர் தி.மு.க. இளைஞரணி செயலர் மணிகுமார் ஆகியோர் சென்றனர். அண்ணாமலை நகர் பேரூராட்சித் தலைவர் க.பழனி அனைத்து நிகழ்ச்சிகளிலும் தமிழர் தலைவருடன் இருந்தார்.
இறுதியாக தமிழ்த்துறைப் பேராசிரியர்கள், மாணவர்கள் ஆகியோரிடம் விடைபெற்று கடலூர் நோக்கி புறப்பட்டார்கள்.
மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்ட
ஆசிரியர் கி.வீரமணி
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி சிதம் பரம் அண்ணாமலை நகர் பகுதிக்கு வருகை தந்தார். ஆசிரி யர் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. வரலாறு படித்து உள்ளார். கடந்த 75 ஆண்டுகளுக்கு முன்பு தான் படிக்கும் போது பல்கலைக்கழகத்தின் முக்கிய அரங்கான கோகலே அரங்கில் தான் அவருக்கு வகுப்புகள் நடைபெறுமாம்.மேலும் அவர் அங்குதான் பேச்சு பயிற்சி பெற்றதாகவும், அதனால் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தான் பயின்ற அரங்கை பார்ப்பதற்காக சென்றார்.
அப்போது அரங்கின் வெளியே நின்று ஒளிப்படம் எடுத்துக் கொண்டதோடு பல்கலைக்கழகத்தில் தான் படித்த போது மலரும் நினைவுகளை பேராசிரியர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் பகிர்ந்து கொண்டார்.
முன்னதாக மொழியியல் புல முதல்வர் அரங்க.பாரி, தமிழ்த்துறைத் தலைவர் வெங்கடேசன், ஓய்வு பெற்ற பேராசிரியர் பூ.சி.இளங்கோவன், அண்ணாமலை நகர் பேரூராட்சி மன்றத் தலைவர் க.பழனி ஆகியோர் அவரை பல்கலைக்கழக இந்திய மொழியியல் புலத்திற்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு புல முதல்வர் அறையில் தான் படித்த காலத்தில் இருந்த தமிழறிஞர்கள், பேராசிரியர்களின் ஒளிப்படங்களை பார்வையிட்டு அவர்களை நினைவு கூர்ந்தார். மேலும் தமிழ்த்துறை அறை எண்.26இல் அவருக்கு அப்போது ஆங்கில வகுப்புகள் நடைபெறும் என்பதால்தான் பயின்ற வகுப்பறைக்கு சென்று அமர்ந்து அங்கிருந்தவர்களிடம் கலந்துரையாடினார்.
தொகுப்பு: பேராசிரியர் பூ.சி.இளங்கோவன்
No comments:
Post a Comment