கேள்வி 1 : சமீபத்தில் தொல்.திருமாவளவனை கைநீட்டி பேசக் கூடாது என்று யூ டியூப் பத்திரிகையாளர் ஒருவர் எதிர்ப்புத் தெரிவித் துள்ளது பற்றி தங்கள் கருத்து
- தமிழ் மைந்தன், சைதாப்பேட்டை
பதில் 1 : பொதுவாக பலர் பேசும்போதும், பதில் சொல்லும்போதும் கையை ஆட்டியும், நீட்டியும் பேசும் உடல்மொழி இயல்பானதே; அது ஒன்றும் மிரட்டல் ஆகாது. தேவையற்று, சகோதரர் திருமாவளவனுக்கு உத்தரவு போடும் உரிமையை அவருக்கு யார் கொடுத்தது? அவரது அதிகப்படியான நிபந்தனை கேலிக் குரியது. ஏற்புடைத்தது அல்ல!
---
கேள்வி 2 : தகுதி நீக்கத்திற்குக் காரணமான ராகுல் காந்தியின் தண்டனை குறித்த மேல் முறையீட்டு மனு மாவட்ட நீதிமன்றத்தில் தள்ளுபடியானது அவரது எதிர்காலத்தை முடக்குமா? பிரகாசமாக்குமா?
- அ. தமிழ்க்குமரன், ஈரோடு
பதில் 2 : இறுதியில் சிரிப்பவர்கள் யார் என்று பொறுத்திருந்து பாருங்கள் - பார்ப்போம்!
---
கேள்வி 3 : விசாரணைக் கைதிகளின் பற்களைப் பிடுங்கும் அளவிற்கு காட்டுமிராண்டிகள் உயர் பதவியில் இருப்பது எதைக் காட்டுகிறது?
-அமுதன், உடையார்பாளையம்
பதில் 3 : காவல் துறைக்கே - அதுவும் தமிழ் நாட்டுக் காவல்துறைக்கே பெருத்த அவமானம்; தலைக்குனிவு, மனிதர்களிலும் மிருகத்தனமான நடத்தை இருப்பது; 'உங்கள் நண்பன்' துறைக்கு இது அழகா - முறையா? ஏன் இன்னமும் இந்த மாதிரி ஆசாமிகள் வெளியில் இருக்கிறார்கள் என்று புரியவில்லை!
----
கேள்வி 4 : சாமியார்கள் மந்திரவாதிகளின் மோசடிகள் நாள்தோறும் வெளிவரும் நிலையில் தமிழ்நாட்டில் மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் கொண்டுவர முயற்சி செய்ய வேண்டாமா?
- த.மணிமேகலை, வீராபுரம்
பதில் 4 : முக்கிய கேள்வி - முதல் அமைச்சருக்கு இந்த 'மாதிரி கேள்வி' - கருத்துருவை சமர்ப்பிக்கிறோம்.
---
கேள்வி 5 : "அரசியலும், மதமும் ஒன்றிலிருந்து மற்றொன்று பிரிக்கப்பட்டால் பல பிரச்சினைகள் முடிவுக்கு வரும்” என நீதிபதி ஜோசப் தெரிவித் துள்ள கருத்துப் பற்றி?
- க.கார்த்திகேயன், ஆண்டிமடம்
பதில் 5 : 100க்கு 200 சதவிகிதம் சரியானதும், தேவையான தருணத்தில் தேவைப்படும் அறிவுரை - நீதிபதியை வெகுவாகப் பாராட்ட வேண்டும்!
---
கேள்வி 6 : அ.தி.மு.க.வின் ஒற்றைத் தலைவராக எடப்பாடி பழனிச்சாமி வந்தது அக்கட்சியைக் காப்பாற்றப் பயன்படுமா?
-ஆரோக்கிய சேவியர், செங்கோட்டை
பதில் 6 : அ.தி.மு.க.வின் ஒற்றைத் தலைமையா? நம்ப முடியவில்லை - அடமானத்திற்குரியவர்கள் வேறு யாரோ - என்னும்போது ஒற்றைத் தலை மையாக உண்மையில் இருக்க முடியுமா? "லேடியா? மோடியா?" என்று கேட்டவர்தான் ஒற்றைத் தலைமையாவார். அப்படிக் கூறத் தகுதியில்லாதவர்கள் எப்படி 'ஒற்றைத் தலைமை'யை ஏற்று வழி நடத்த முடியும்?'
---
கேள்வி 7 : ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளை பள்ளிக்கல்வித் துறையின் கீழ் கொண்டு வருவது சரியான நடவடிக்கையா?
- கண்ணபிரான் கலையரசன், கோவர்த்தனகிரி
பதில் 7 : துவக்கப்பட்ட காலத்தில் அது சரி. இப்போது இது சரி - தவறில்லை. ஆதிதிராவிடர் பள்ளிகளை நல்ல முறையில் நடத்திடுவதில் முன்னுரிமை கொடுப்பதும் முக்கியம்! அன்று 'லேபர்ஸ்கூல்கள்' என்றுதான் துவக்கப்பட்டன!
---
கேள்வி 8 : தவிர்க்க முடியாத அறிவியலான 'சூழலியல்' மற்றும் 'சுற்றுச்சூழல்' குறித்து கழகப் பிரச்சார கொள்கைகள் ஏதேனும் உண்டா?
- திராவிட விஷ்ணு, வீராக்கன்
பதில் 8 : எப்போதும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்துதல் நம் கொள்கையேயாகும்! இதில் என்ன உங்களுக்குக் குழப்பம்?
---
கேள்வி 9 : ஒன்றிய பா.ஜ.க. அரசு கொண்டு வந்துள்ள தொழிலாளர் விரோத சட்டத் திருத்தமான 65ஏ-வை தமிழ்நாடு அரசு நிறை வேற்றி பின்னர் நிறுத்தி வைத்திருப்பது குறித்து?
- விஜய் அமுதன், உடையார்பாளையம்
பதில் 9 : ஜனநாயகக் குரலுக்கு மதிப்பளிக்கும் அரசு. நிச்சயம் அடுத்த அடியும் விரும்பத் தக்கதாகவே இருக்கும்! கவலை வேண்டாம்!
---
கேள்வி 10 : எளியவர்களின் பக்கம் நீதி இருந்தாலும், உப்புச் சப்பில்லாத காரணங்களைக் காட்டி வலியவர்களுக்குச் சாதகமான தீர்ப்புகள் வருகிறதே?
- ராஜேந்திரன், மும்பை
பதில் 10 : என்ன செய்வது! 'நீதியில் ஜாதியும் மதமும் சுயநலமும் புகுந்துவிட்டதே. அதற்குத் தடுப்பணை ஏற்பட்டால் ஒழிய உங்கள் கேள்விக்கு நியாயமான பதில் கிடைப்பது எளிதல்ல!
No comments:
Post a Comment