வைக்கம் போராட்ட வரலாற்றை சிதைத்துக் கூறுவது ஏன்? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, April 26, 2023

வைக்கம் போராட்ட வரலாற்றை சிதைத்துக் கூறுவது ஏன்?

பார்ப்பனர்களின் அறிவு நாணயமற்ற புரட்டு! தமிழர்களே, சிந்திப்பீர்! சிந்திப்பீர்!!

வைக்கம்-மூன்றாம் நாள் கூட்டத்தொடரில் தமிழர் தலைவர் ஆசிரியர் வேண்டுகோள்

சென்னை, ஏப். 26-  வைக்கம் போராட்ட வரலாற்றை சிதைத்துக் கூறுவது ஏன்? பார்ப்பனர்களின் அறிவு நாணயமற்ற புரட்டு! தமிழர்களே, சிந்திப்பீர்! சிந்திப்பீர்!! என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா 

ஏன்? எதற்காக? மூன்றாம் நாள் கூட்டம்

கடந்த 13.4.2023 அன்று ‘‘வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா ஏன்? எதற்காக?'' என்ற தலைப்பில், சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் நடைபெற்ற மூன்றாம் நாள் கூட்டத்தில், திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

அவரது சிறப்புரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:

சேரன்மாதேவி குருகுலப் போராட்டமும் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட வேண்டிய மிக முக்கியமான போராட்டமாகும்.

தந்தை பெரியார் ஆறு மாத சிறைத் தண்டனை பெற்று, மருத்துவமனை யில் இருக்கும்பொழுது ‘‘ஜாதி ஒழிப்பு!'', ‘‘ஆதி சரித்திரம்'', ‘‘வைக்கம் சத்தியாகிரகம்'' என்ற தலைப்பில் கட்டுரை களை எழுதினார். அதையெல்லாம் பதிவு செய்திருக் கின்றோம்.

இவ்வளவு பெரிய ஆதாரங்கள் நம்மிடம் இருக் கின்றன. காங்கிரஸ் தலைவராக யார் இருந்தாலும், வைக்கம் போராட்டத்திற்கு அழைத்திருக்கமாட்டார்கள்; பெரியாரைப் பார்த்துத்தான், நீங்கள் கட்டாயம் வந்தாக வேண்டும் என்று வற்புறுத்தித்தான் வைக்கம் போராட் டத்திற்கு அழைத்தார்கள்.

பிடிவாதமாக இருக்கக்கூடியவர் தந்தை பெரியார். எந்தக் காரியத்தை எடுத்துக்கொண்டாலும், அதில் தெளிவாக இருக்கக்கூடியவர் தந்தை பெரியார் அவர் கள். தமிழ்நாட்டில் கள்ளுக்கடை மறியல் தொடர்ந்து நடைபெறுகிறது. இதுகுறித்து காங்கிரஸ் தலைவர்கள் காந்தியாரிடம் இந்தப் போராட்டத்தை எப்பொழுது நிறுத்தப் போகிறீர்கள்? என்று கேட்கிறார்கள்.

அப்பொழுது காந்தியார் சொன்ன பதில் என்ன?

பேராசிரியர் கு.வெ.கி.ஆசான் அவர்களும் அதைச் சுட்டிக்காட்டி இருக்கிறார்கள்.

‘‘திராவிட தேசத்தில் இருக்கின்ற ஈரோட்டில் உள்ள இரண்டு பெண்மணிகளின் கைகளில்தான் இருக்கிறது; அது என் கையில் இல்லை'' என்று அன்னை நாகம்மை யாரும், கண்ணம்மையாரையும் மனதில் வைத்துக் கொண்டு சொல்லியது, ‘இந்து' பத்திரிகையில் வெளி வந்திருக்கிறது; மற்ற மற்ற பத்திரிகைகளிலும் வெளி வந்திருக்கிறது.

போராட்டக் குணம் என்பது தந்தை பெரியாருக்கு இயல்பானது; ஒரு போராட்ட வீரர் என்பதற்காகத்தான் வைக்கம் போராட்டத்தை நடத்தும்படி அழைத்திருக் கிறார்கள்.

வைக்கம் போராட்டத்திற்கு பார்ப்பனத் தலைவர்களோடு காந்தியாரும் கொடுத்த தொல்லை

வைக்கம் சத்தியாகிரகப் போராட்டத்தை - காந்தி யாரையே அவர் மனசாட்சிக்கு, அவரது சர்வ வல்லமை உள்ள பிடிவாதத்திற்கு விரோதமாக இறங்கி வந்து, வைக்கம் போராட்டம் என்ன செய்தது என்பதற்கு அய்யா சொல்கிறார்,

‘‘வைக்கம் சத்தியாகிரகம் ஒரு பெரிய சூழ்ச்சிக் கதையாகும். வைக்கம் சத்தியாகிரகமானது ஒரு சாதாரண விளையாட்டு சம்பவமாக தொடரப்பட்டு, அது இந்தியா முழுவதற்குமே சமூக சரித்திரத்தில், சமுதாய சரித்திரத்தில் இடம்பெறத் தக்க நிகழ்ச்சியாக முடிந்துவிட்டது.

அதற்குத் தென்னாட்டுப் பார்ப்பனத் தலைவர்களும், காந்தியாரும் கொடுத்த தொல்லை, செய்த சூழ்ச்சி அளவிடற்குரியதல்ல.

காந்தியாரையே அவர் மனசாட்சிக்கு, அவரது சர்வவல்லமை உள்ள பிடிவாதத்திற்கு விரோதமாக இறங்கி வந்து, தனது கருத்துகளை அவரது இஷ்டத்திற்கு விரோதமாக மாற்றிக் கொள்ளவேண்டிய அவசியத் திற்குக் கொண்டுவந்து விட்டதானது வைக்கம் சத்தியாக் கிரகம்.''

முதலில் காந்தியாரை மாற்றியது; இது அடிப்படை யான ஒரு கருத்து.

ஏனென்றால், தவறான சில கருத்துகளாக - காந்தியார் சொல்லித்தான் வைக்கம் போராட்டத்திற்குத் தந்தை பெரியார் போனார் என்று எழுதி வைத்திருக்கிறார்கள் சில பாட புத்தகத்தில், சில வரலாற்று ஆசிரியர்கள்.

தந்தை பெரியாரை, வைக்கத்திற்குப் போகாதீர்கள் என்றுதான் சொன்னார் காந்தியார். அதற்கு ஆதாரம் ‘'Gandhi and Vaikom Satyagraha'' வரலாற்றுப் பேராசிரியர் டி.கே.ரவீந்திரன் அவர்கள் எழுதியிருக்கின்ற தீசிஸ்.

அதற்குப் பிறகு, "Eight Furlongs to Freedom"  என்ற நூலையும் எழுதியிருக்கிறார் அவர்.

அந்த நூலில் அவர்கள் தெளிவாக, ஆதாரத்தோடு எழுதியிருக்கிறார்.

இதுவரை நமக்குக் கிடைக்காத விளக்கம் - தந்தை பெரியார் எழுதுகிறார். ஏனென்றால், பெரியார்மூலம் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய வரலாற்று உண்மைகள் - பொதிந்து கிடந்த உண்மைகளையெல்லாம் சொல்லுகிறார்.

வீட்டிற்குள் அனுமதி இல்லை; 

திண்ணையில் தான் உட்கார வேண்டும்

வைக்கம் சரித்திரம் காந்தியாரையே மாற்றுகிறது. ஏனென்றால், அவருக்கே மனமாற்றம் ஏற்படவேண்டிய சூழல் வந்தது.

இன்றைக்குப் பேட்டி கொடுக்கிறாரே நம்பூதிரி, அவர் சொல்கிறாரே, ‘‘காந்தியாரை நம்பூதிரி வீட்டிற்குள் விடுவ தற்குத் தயாராக இல்லை. திண்ணையில் உட்கார்ந்துதான் கேள்வி கேட்கிறார்கள்.'' இது அங்கே நடந்தது.

"தமிழ்நாட்டில் காந்தி'' என்ற  புத்தகத்தைத்தான் நம்முடைய முதலமைச்சர், பிரதமர் மோடிக்கு நினைவுப் பரிசாக அளித்தார்.

திருநெல்வேலியில் நகர மன்றத் தலைவராக இருந்த காந்தியத் தொண்டரான ப.இராமசாமி என்பவர்  எழுதிய ஆயிரம் பக்கம் கொண்ட அந்தப் புத்தகத்தை சர்வோத யத்தில் வெளியிட்டு இருக்கிறார்கள்.

அந்த நூலை நான் பலமுறை எடுத்துக்காட்டிப் பேசியிருக்கின்றேன்.

பார்ப்பனர் - பார்ப்பனரல்லாதார் பிரச்சினை தமிழ் நாட்டில் இருக்கிறதே, அதை எப்படியாவது சரிப்படுத் துவதற்கு என்ன செய்யவேண்டும்?

இந்த சம்பவம் நடந்தது 1928 ஆம் ஆண்டு.

தமிழ்நாட்டிற்கு வந்த காந்தியார், தஞ்சாவூர் உக்க டைத் தேவர் வீட்டுப் பங்களாவில் தங்கியிருக்கிறார்.

அப்பொழுது, சர்.ஏ.டி.பன்னீர்செல்வம், நம்முடைய கரந்தை உமாமகேஸ்வரம் பிள்ளை போன்றவர்கள் சென்று, காந்தியாரை சந்தித்து, தமிழ்நாட்டில் பார்ப்பனர், பார்ப்பனரல்லாதார் பிரச்சினை மிகவும் உக்கிரமாகப் போய்க்கொண்டிருக்கிறது. நீங்கள் தலையிட்டு, அதனை சரி செய்வதற்கு - அதற்குக் கொஞ்சம் முக்கியத்துவம் கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று கேட்கிறார்கள்.

காந்தியார் தெரிவித்தது என்ன?

காந்தியார் சொல்கிறார், “வரதராஜூலு நாயுடு மற்றவர்கள் எல்லோரும் சொல்லியிருக்கிறார்கள். இந்தப் பிரச்சினையில் நான் தலையிடாமல் இருந்தாலே போதும். பார்ப்பனர்கள் முன்பு போன்று வருணாசிர மத்தைக் கடைப்பிடிக்கவில்லை. அவர்கள் மாறிக் கொண்டு வருகிறார்கள் என்று நான் கேள்விப்பட்டேன். இப்பொழுது போய் எதற்காக அந்த விஷயத்தில் நான் தலையிடவேண்டும்? அதற்கு உதாரணம் நான் சொல்லட்டுமா? நீங்களும் தெரிந்துகொள்ளுங்கள்.

முன்பெல்லாம் நான் தமிழ்நாட்டிற்கு, சென்னைக்கு வந்தால், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்த சீனிவாச அய்யங்கார், அம்புஜம்மாள் அவர்களு டைய தந்தை. அவர் பிரபல வழக்குரைஞர்; அட்வகேட் ஜெனரலாக இருந்தவர். அவருடைய வீடு, மயிலாப்பூரில் இருந்தது. தென்சென்னையில் உள்ள தோழர்கள் பல பேருக்குத் தெரியாது; ‘‘பலாத் தோப்பு'' என்று சொல்வார்கள்; அங்கேதான் வழக்குரைஞர்கள் நிறைய பேர் இருந்த பகுதி. அங்கேதான் சீனிவாச அய்யங்கார் வீடு இருந்தது.”

சுயமரியாதை இயக்கத்தின் கிளர்ச்சியால்....

காந்தியார் சொல்கிறார், ‘‘தமிழ்நாட்டிற்கு அதற்கு முன்பு வரும்பொழுது, நானும், கஸ்தூரிபாய் காந்தியும், சீனிவாச அயயங்கார் வீட்டில் தங்கும்பொழுது, அவருடைய வீட்டுத் திண்ணை வரைக்கும்தான் அனுமதி. ஆனால், இப்பொழுது நான் வந்தபொழுது, எனக்கு ஆச்சரியமாக இருந்தது. கஸ்தூரிபா காந்தியை, அவர்களுடைய வீட்டின் அடுப்பங்கரை வரைக்கும் அனுமதிக்கிறார்கள்'' என்றார்.

1926 ஆம் ஆண்டிற்கு முன்பு தமிழ்நாட்டிற்கு வரும்பொழுது, திண்ணை வரைக்கும்தான் அனுமதி. 1928 ஆம் ஆண்டில் வரும்பொழுது, கஸ்தூரிபா காந்தியை, அவருடைய வீட்டின் அடுப்பங்கரை வரை அனுமதிக்கிறார்கள்; உள்ளே அமர வைத்து சாப்பாடு போடுகிறார்கள் என்றால், என்ன காரணம்? சுயமரியாதை இயக்கத்தினுடைய தீவிரமான கிளர்ச்சிகளும், தாக்கங்களும்தான் என்று நாங்கள் சொல்வோம்.

தீண்டாமை ஒழிப்பு நிர்மாணத் திட்டம் என்று ஒன்றைக் கொண்டு வருகிறார்கள்.

தனிக்கிணறு, தனிக் குளம் என்று வைத்தால், என்ன அர்த்தம்?

பொதுக்கிணறு, பொதுக்குளம் என்றுதானே இருக்கவேண்டும்; இதனால்தான், தந்தை பெரியாருக்கும், காந்தியாருக்கும் கருத்து வேறுபாடு.

இதைப்பற்றி தந்தை பெரியார் சொல்கிறார், 

“Knowing from the Horse’s Mouth” என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். அதுபோன்று, தந்தை பெரியார் அவர்கள், ‘‘எப்பொழுதும் உண்மையைத் தவிர வேறு அவர் பேசுவதில்லை'' எத்தனை ஆண்டுகள் ஆனாலும், அதே சங்கதிதான். 

ஒருவர் உண்மையைப் பேசுகிறாரா? கண்டுபிடிப்ப தற்கு, என்ன வழி? பழைய வரலாற்றைச் சொல்லும் பொழுது நண்பர்களே, சில பேர், ஒவ்வொரு நேரத்திலும், ஒவ்வொரு மாதிரி சொல்வார்கள்.

ஆனால், தந்தை பெரியார் அவர்கள், 1924 ஆம் ஆண்டு என்ன சொன்னாரோ, அதையேதான் 1954 இல் சொன்னாலும், 1964 இல் சொன்னாலும் அதையேதான் சொல்லுவார்.

சம உரிமைக்கு வித்திட்டது நீதிக்கட்சி!

உதாரணத்திற்கு ஒன்றைச் சொல்லுகிறேன்.

‘‘வைக்கம் சத்தியாகிரகத்தைப் பார்ப்பனர்கள் மனதார மாற்றி எழுதிவிட்டார்கள். காங்கிரஸ் நிர்மாணத் திட்டம் என்பதில், தீண்டாமை விலக்கு என்பதாக ஒரு திட்டம் இடம்பெறவேண்டியது அவசியமாயிற்று.

அதற்குக் காரணம், தென்னாட்டில் ஜஸ்டிஸ் கட்சி, 1916 இல் தொடங்கி, தாழ்த்தப்பட்ட, தீண்டப்படாத மக்களை தன்னோடு இணைத்துக்கொண்டதுடன், அது பதவிக்கு வந்ததும், தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சட்ட சபை, ஜில்லா, தாலூகா போர்டுகளிலும், முனிசிபல் பஞ்சாயத்து ஸ்தாபனங்களிலும் நியமனம் செய்து சம உரிமை கொடுக்கப்பட்டு விட்டது.

பொதுக்கிணறு, ரோடு முதலியவைகளைத் தீண்டப் படாதவர்கள் பயன்படுத்தத் தடுத்தால், ஒரு மாதம் சிறை, ரூ.50 அபராதம் என்று சட்டம் செய்துவிட்டது.

பறையன், சக்கிலி என்ற சொல்லைப் பயன்படுத்தக் கூடாது. இந்த உத்தரவுப் போட்டு அமலில் இருந்ததால், இந்தக் காரியத்தை காங்கிரஸ் செய்வதாக மக்கள் கருதவேண்டும் என்பதற்காகவே, தீண்டாமை விலக்கு நிர்மாணத் திட்டத்தில் சேர்த்தார்கள்.

அறிவு நாணயமற்றது

ஆகவேதான், அவர்களைப் பொறுத்தவரையில் நண்பர்களே, புரட்டுகளைப் பரப்பி விடுகிறார்கள். காங்கிரசை செய்ய வைத்தது எது? எந்த சூழ்நிலை?

நீதிக்கட்சியினுடைய தாக்கம்; சுயமரியாதை இயக்கத்தினுடைய தாக்கம்; திண்ணையில் இருந்த காந்தியாரையும், கஸ்தூரிபா காந்தி அம்மையாரையும் அடுப்பங்கரை வரையில் போக வைத்தது.

வைக்கம் சத்தியாகிரகத்தின்போது திண்ணையில் அமர்ந்திருந்தவர்களை, அன்றைக்கு உள்ளே அழைத்து பேசக்கூடிய அளவிற்கு வீட்டிற்குள் அனுமதித்தார்கள்.

ஆகவேதான் நண்பர்களே, இந்தப் போராட்டத் தினுடைய விளைவும், அதனுடைய தாக்கத்தையும் ஒன்றுமில்லாமல் ஆக்கி, அதை சாதாரணமானதாக்கலாம் என்று நினைக்கிறார்களே, அது எவ்வளவு அறிவு நாணயமற்ற போக்கு என்பதை எண்ணிப்பார்க்க வேண்டும்.

- தொடரும்


No comments:

Post a Comment