வைக்கம் போராட்ட பொன்விழாவில் அன்னை மணியம்மையார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, April 1, 2023

வைக்கம் போராட்ட பொன்விழாவில் அன்னை மணியம்மையார்

50 ஆண்டுகளுக்கு முன்பாக நடைபெற்ற வைக்கம் சத்தியாக்கிரகத்தின் நினைவாக இப்போது ஒரு வார காலமாக வைக்கம் சத்தியாக்கிரகப் பொன்விழாவினைக் கொண்டாடுகின்றீர்கள்.

இந்த வைக்கம் சத்தியாக்கிரகத்தை நடத்துவதில் எங்கள் ஒப்பற்ற தலைவர் தந்தை பெரியார் அவர்கள் முக்கியக் காரணமாக இருந்து வந்தவர் என்ற காரணத்தினால் அவர் இல்லாத நிலையிலும் எங்களை இந்தக் கொண்டாட்டத்தில் பங்குகொள்ள அழைத்துப் பெருமைப்படுத்தியுள்ளீர்கள்.

எங்கள் தலைவரைத் தமிழ்நாட்டு மக்கள் ‘தந்தை ‘யென்றும். ‘பெரியார்’ என்றும் இன்னும் சொல்லப்போனால் இந்தச் சத்தியாக்கிரகம் காரணமாக ‘வைக்கம் வீரர்’ என்றும் பெருமையாக அழைத்து மகிழ்வார்கள். உங்களுக்குப் பெரியார் என்றால் அவ்வளவாகப் புரியாது. அதனால்தான் நாயக்கர் என்றும், சிறீமான் ஈ.வெ.இராமசாமி நாயக்கர் என்றும் அன்போடும். மரியாதையோடும் அழைக்கின்றீர்கள்.

ஜாதி ஒழிய வேண்டும் என்று சொல்கின்ற ஓர் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் நாங்கள். ஜாதிப் பெயரை உபயோகப்படுத்தக் கூடாது என்ற கொள்கையையும் கொண்டவர்கள் நாங்கள். அப்படியிருக்க இங்கு ஈ.வெ.இராமசாமி நாயக்கர் என்று ஜாதிப் பெயரைப் போட்டு உள்ளீர்கள். அது குற்றம் என்று நான் கருதவில்லை; சொல்லவும் இல்லை நாயக்கர் என்றுதான் அக்காலத்தில் அவரை மரியாதையாக அழைப்பார்கள்.

ஒரு காலத்திலே அப்படிக் குறிப்பிடுவதில் அவருக்குப் பெருமை இருந்தது. அதனால் மக்களுக்கு நன்றாகப் புரியும்படியான நிலையும் இருந்தது என்ற காரணத்தினாலும், இந்தப் பகுதிக்குத் தந்தை பெரியார். அவர்கள் இந்தச் சத்தியாக்கிரகத்திற்குப் பிறகு 50 ஆண்டுகளில் அதிகம் வராத காரணத்தினாலும் பழைமையாகக் கூறி வந்த ஈ.வெ.இராமசாமி நாயக்கர் என்ற பெயரைப் பயன்படுத்திக் கொண்டு. இருக்கின்றீர்களே தவிர வேறில்லை இதை நாங்களும் பெருமையாக எடுத்துக் கொள்கின்றோம்.

50 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இந்த நிகழ்ச்சியினை நாம் இன்று நினைவு கூர்கின்றோம். அந்தக் காலத்தில் எப்படி எல்லாம் நாடு இருந்தது. சமுதாயக் கொடுமைகள் இருந்தன என்பதனை இன்றைக்கு எண்ணிப் பார்க்க நம்மால் இயலாது.

இவ்வளவு பெரிய கூட்டத்தில் வந்து இருக்கக்கூடிய சகோதரர், சகோதரிகளில் வயது 50க்கும் மேலானவர்கள் மிக மிகக் குறைவாகவே இருப்பார்கள். விரல் விட்டு எண்ணக்கூடிய அளவு மிகவும் சொற்பமாகவே 50 ஆண்டுகளுக்கு மேலானவர்களைக் காண முடிகின்றதே தவிர, மற்றவர்கள் எல்லாம் குறைந்த வயதுடையவர்களும், இளைஞர்களுமே ஆவார்கள். அவர்களுக்கு இந்த நிகழ்ச்சியினை, சுவாரசியமாக உற்சாகமாக எடுத்துச் சொல்கின்ற பொழுது, கேட்கும் அவர்களுக்கு அவ்வளவு சுவாரசியமாக இருக்குமா என்று நம்மால் சொல்ல முடியாது. ஏன் என்றால். இந்த வைக்கம் கிளர்ச்சி மிகவும் சரித்திரப் பிரசித்தி பெற்ற ஒரு நிகழ்ச்சியாகும். சரித்திரத்தைப் படிப்பது போல ஏதோ ஒரு பொழுதுபோக்காக இன்றுள்ள இளைஞர்களுக்கு அது மனதில் படுமே தவிர, அன்று இருந்த உணர்ச்சி நிலையினைப் படம் பிடித்துக் காட்டுவதுபோல் - நேரில் அன்று இருந்து பார்த்தவர்கள் போல் - பங்கு கொண்டவர்கள் போல் - நம்மால் சொல்லவும் முடியாது: சொன்னால் மக்கள் அப்படியே ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு பக்குவமான நிலையிலும் இன்று இல்லை.

நாடும் வளர்ந்து இருக்கின்றது; மக்களுடைய அறிவும் வளர்ந்து இருக்கின்றது. அதுவும் அல்லாமல் அன்று சமுதாயத்தில் ஜாதியின் பெயரால் நடந்து வந்த கொடுமைகள் - ஒரு சாரார் தொட்டாலோ, பார்த்தாலோ மனிதன் தீட்டாகி விடுவான் என்ற நிலை; ஒரு குறிப்பிட்ட ஜாதியினரைத் தவிர மற்றவர்கள் கடவுளைத் தொட்டால் கடவுள் தீட்டாகிவிடும், இறந்துவிடும் என்ற நிலைகள்; ஜாதியின் பெயரால் ஒருவன் உயர்வாகவும் ஒருவன் தாழ்வாகவும் கருதப்படுகின்ற அந்த நிலைகள், இவையெல்லாம் ஓரளவுக்கு மறைந்து, மனிதர்கள் எல்லாம் அறிவு வளர்ச்சி அடைந்துவரும் இந்தக் காலத்தே 50 ஆண்டுகளுக்கு முன்பு சமுதாயத்தில் இருந்து வந்த கொடுமைகளை எடுத்துச் சொல்லும்பொழுது ரொம்பச் சாதாரணமாகத்தாள் மனதில் படும் என்றாலும், நாம் அவற்றைச் சொல்லாமல் இருக்க முடியாது.

நம் முன்னோடிகள் அன்று எப்படி எல்லாம் கஷ்டப்பட்டுத் தொல்லைகள், கொடுமைகள் அனுபவித்து இன்று இந்த நிலைக்குக் கொண்டு வந்திருக்கின்றார்கள் என்பதை எண்ணுகின்ற பொழுது நாம் இன்னும் பூரணமாய்ப் பக்குவம் அடையவில்லை என்றே சொல்ல வேண்டும். ஏதோ ஓரளவுக்குக் கொடுமைகள் ஒழிக்கப்பட்டன என்பது தவிர, வெகு நாளாக இருந்துவந்த கொடுமைகள், அனாச்சாரங்கள் பூரணமாய் ஒழிந்தபாடில்லை. இன்று சமுதாயத்தில் இழிந்தவர்கள் என்று கருதப்படுகின்றவர்கள் இருக்கின்றார்கள்.ஜாதியின் பெயரால் உயர்ந்தவர்கள் என்று சொல்லப்படுகின்றவர்கள் இருக்கின்றார்கள். இந்த இரண்டும் இருக்கின்ற வரையில் மனித சமுதாயத்தில் நாம் எத்தகைய முன்னேற்றத்தையும் காணவே முடியாது.

எங்கள் இயக்கத்தின் முக்கிய கொள்கைகள் இரண்டு. ஒன்று ஜாதி முறை அடியோடு ஒழிக்கப்பட்டு மக்கள் எல்லாம் சமத்துவம் உடையவர்களாக ஆக வேண்டும் என்பது மற்றொன்று, பெண்கள் அடிமைத்தனத்தில் இருந்து விடுபட்டு ஆண்களைப் போலவே சகல உரிமைகளையும் ஆணுக்குச் சமமாக அடைய வேண்டும் என்பது.

இந்த இரண்டும்தான் தந்தை பெரியார் அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட சுயமரியாதை இயக்கத்தின் இரண்டு கண்களைப் போன்ற முக்கியமான கொள்கைகள். இதையேதான் தந்தை பெரியார் அவர்கள் நமது வாழ்நாள் முழுதும் எடுத்துச் சொல்லி அதற்காகப் பாடுபட்டும் வந்தார்கள். 

( கேரள மாநிலம் வைக்கம் போராட்ட பொன்விழாவில் 26.4.1975 அன்று பெண்கள் மாநாட்டை திறந்து வைத்து அன்னை மணியம்மையார் ஆற்றிய உரை... விடுதலை 23.5.1975)


No comments:

Post a Comment