புல்வாமா தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆர்.டி. எக்ஸ். வெடிமருந்து பாகிஸ்தானில் இருந்து கார் மூலம் கொண்டுவரப்பட்டு ஒருமாதம் காஷ்மீருக்குள் பல்வேறு இடங்களில் சுற்றித்திரிந்தது குறித்து நமது உளவுத்துறைக்கு எப்படித் தெரியாமல் இருந்ததோ! மேலும் இந்த தாக்குதலைத் தொடர்ந்து தன்னைத் தொடர்பு கொண்ட பிரதமர் மோடி “இது குறித்து வாயைத் திறக்கக் கூடாது” என்று தனக்கு உத்தரவு போட்டதாகவும் - மோடி தவிர தன்னுடன் பேசிய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலும் தன்னிடம் இதையே வலியுறுத்தியதாகவும் ‘தி வயர்’ இதழுக்காக கரண் தாப்பர் நடத்திய சந்திப்பின் போது மேனாள் காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக் கூறியுள்ளார்.
2018 ஆகஸ்ட் முதல் 2019 அக்டோபர் வரை ஜம்மு காஷ்மீர் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டிருந்த சத்யபால் மாலிக், மக்கள் ஜனநாயக கட்சியைச் சேர்ந்த மெஹபூபா முப்திக்கு பெரும்பான்மை இருந்தபோதும் அவரை ஆட்சிப் பொறுப்பேற்க அனுமதி மறுத்தார்.தவிர, ஜம்மு காஷ்மீருக்கு சிறப்புத் தகுதியை உறுதி செய்யும் அரசியல் சட்டப் பிரிவு 370 ரத்து செய்யப்பட்டபோதும், புல்வாமா தாக்குதலின் போதும், ஜம்மு காஷ்மீர் மாநில ஆளுநராகப் பதவி வகித்தார்.இது தொடர்பாக பல்வேறு சந்தர்ப்பங்களில் ஒன்றிய பாஜக அரசை குற்றம்சாட்டி வரும் சத்யபால் மாலிக், கரண் தாப்பருடனான பேட்டியில் ஒன்றிய அரசுக்கு எதிராகவும், பிரதமர் மோடிக்கு எதிராகவும் காட்டமாகப் பேசியுள்ளார்.புல்வாமா தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட ஆர்.டி.எக்ஸ். வெடிமருந்து பாகிஸ்தானில் இருந்து கார் மூலம் கொண்டுவரப்பட்டு 10 - 15 நாட்கள் காஷ்மீருக்குள் சுற்றித் திரிந்தது குறித்து நமது உளவுத்துறைக்கு தெரியாமல் இருந்தது மிகப்பெரிய தோல்வி என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து கார்பெட் பார்க்கிற்கு வெளியே இருந்து என்னைத் தொடர்பு கொண்ட பிரதமர் மோடி “இது குறித்து வாயைத் திறக்கக் கூடாது” என்று தனக்கு உத்தரவு போட்டதாகக் கூறியுள்ளார். மோடி தவிர தன்னுடன் பேசிய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலும் தன்னிடம் இதையே வலியுறுத்தியதாகக் கூறியுள்ளார்.ஜம்மு காஷ்மீர் மாநில ஆர்.எஸ்.எஸ். முக்கிய புள்ளிகளில் ஒருவரான ராம் மாதவ் என்பவர் தன்னிடம் அனல் மின் நிலையம் அமைப்பதற்கும் மற்றும் ரிலையன்ஸ் இன்சூரன்ஸ் தொடர்பாகவும் சாதகமான உத்தரவை வழங்க 300 கோடி ரூபாய் பேரம் பேசியதாகவும் தெரிவித்தார்.
இதுகுறித்து பிரதமர் அலுவலகத்திற்கு தெரிவித்த நிலையில், அவர் இதுகுறித்து எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்றும், “பிரதமர் மோடி ஊழல் குறித்து கவலைப்படுபவர் இல்லை” என்றும் கூறிய மாலிக் இதைக் கூறுவதால் எனக்கு எந்த எதிர்ப்பு வந்தாலும் எதிர்கொள்வேன் என்றும் அழுத்தம் திருத்தமாகக் கூறியுள்ளார்.
தவிர, "2022 அக்டோபர் மாதம் மேகாலயா ஆளுநர் பதவியில் இருந்து மாற்றப்பட்ட பின் முக்கிய பொறுப்பு ஒன்றைத் தருவதற்காக குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. இதனையடுத்து குடியரசு தலைவர் மாளிகைக்கு செல்ல தயாரான நிலையில், பிரதமர் அலுவலக தலையீட்டால் அந்த வாய்ப்பு நழுவியதோடு பாதியிலேயே நான் திரும்பி வந்தேன்" என்றும் தெரிவித்தார்.ஆளுநர்கள் நியமன விவகாரத்தில் ஒன்றிய பாஜக அரசு தகுதியில்லாத “மூன்றாம் தர மக்களை” ஆளுநர்களாக நியமித்து வருகிறது என்றும் குற்றம்சாட்டினார். மேலும், நாடாளுமன்றத்தில் ராகுல் காந்திக்கு பேச அனுமதி மறுத்தது வரலாறு காணாத தவறு என்று கூறிய மாலிக், "அதானி ஊழல் குறித்து ராகுல் காந்தி சரியான கேள்விகளை எழுப்பியுள்ளார், இதற்குப் பிரதமரால் தெளிவாக பதிலளிக்க முடியாது" என்றும் கூறியுள்ளார்.
கோட்டைக்குள்ளேயே குத்து வெட்டு என்பார்களே, அது இதுதான் போலும்!
எந்தத் தவறு நடந்தாலும், அதை அடுத்தவர்மீது பழி போட்டுத் தப்பிக்கும் கலையில் கைதேர்ந்தவர்களாக பி.ஜே.பி. தலைமைப் பீடம் இருந்து வருகிறது என்பதற்கு இதுவும் ஓர் எடுத்துக்காட்டே!
மண்டல் குழுப் பரிந்துரைகளை செயல்படுத்திய சமூகநீதிக் காவலர் பிரதமர் வி.பி. சிங் ஆட்சியைக் கவிழ்க்க, ர(த்)த யாத்திரையை நடத்தவில்லையா?
இதற்கு வேறு காரணம் சொல்லவில்லையா? தன்னைப் பிற்படுத்தப்பட்டவர் என்று ஒரு பக்கத்தில் சொல்லிக் கொண்டு 'உயர் ஜாதி ஏழைகள்' என்று கூறி 10 விழுக்காடு இடங்களைத் தாரை வார்க்கவில்லையா?
அவர்களின் முகாம்களிலிருந்தே உண்மைகள் வெடித்து வெளியில் சிதற ஆரம்பித்து விட்டன. 2024 மக்களவைத் தேர்தலில் இதற்கு விடை கிடைக்கும் என்பதில் அய்யமில்லை.
No comments:
Post a Comment