1931 அக்டோபர் மாதத்தில் கம்யூனிஸ்ட் கட்சி அறிக் கையின் முதல் தமிழாக்கம் வெளிவந்தது. தந்தை பெரியாரின் சுய மரியாதை இயக்க வார ஏடான குடிஅரசு 1931 அக்டோபர் 4 முதல் தொடர்ச்சியாக அய்ந்து இதழ்களில் ‘சமதர்ம அறிக்கை’ என்னும் தலைப்பில் அறிக்கையின் முதல் பிரிவின் (பூர்ஷ் வாக்களும் கம்யூனிஸ்டுகளும்) தமிழாக்கத்தை வெளியிட்டது.
மொழி பெயர்ப்பாளரின் பெயர் குறிப்பிடப்பட வில்லை. ஆயினும் முதல் பகுதி தந்தை பெரியாரின் அறிமுகவுரையுடன் வெளியிடப்பட்டது.
இன்றும் பொருத்தப்பாடுடைய அந்த அறிமுக உரையில் பெரியார் எழுதினார் : “உலக அரசாங்கங்களி லெல்லாம் ரஷ்ய ஜார் அரசாங்கமே மிக்க கொடுங் கோன்மையாக நடைபெற்று வந்திருக்கின்றது. அதனா லேயே அங்கு சமதர்ம முறையை அனுபவத்திற்குக் கொண்டுவர வேண்டியதாயிற்று. இந்த நியாயப்படி பார்த்தால், அவ்வித சமதர்ம உணர்ச்சி உலகில் ரஷ்யாவை விட இந்தியா விற்கே முதன்முதலாக ஏற்பட்டிருக்க வேண்டியதாகும், இங்கு அனேகவித சூழ்ச்சிகள் நடைபெற்று வந்திருப்ப தாலும் சூழ்ச்சிக்காரர்கள் இந்திய மக்களை வெகுஜாக்கிரதையாகவே கல்வி அறிவு, உலக ஞானம், சுய மரியாதை உணர்ச்சி முதலியவைகள் பெறுவதற்கு மார்க்கம் அல்லாமல், காட்டுமிராண்டித்தன்மையில் வைத்து வந்ததோடு, கடவுள் பேராலும், மதத்தின் பேராலும் ஏற்படுத்தப்பட்ட உணர்ச்சியானது, அடிமையாக இருப்பதே கடவுள் சித்தமென்றும், மோட்ச சாதனமென்றும் புகட்டி வந்ததாலும், உலகில் சமதர்ம உணர்ச்சி முதன்முதலில் இந்தியாவிலேயே ஏற் பட்டி ருக்க வேண்டியது மாறி, ரஷ்யா வுக்கு முதல் ஸ்தானம் ஏற்பட வேண்டி யதாயிற்று.
“........... ஆனால் உலகில் சமதர்ம உணர்ச் சிக்கு விரோதமான தன்மையில் மற்ற தேசத்துக்கும் இந்தியாவுக்கும் ஒரு முக்கிய வித்தியாசம் இருந்து வருகின்றது. அதென்ன வென்றால், மற்ற நாடுகளில் ஒரு விஷயந்தான் முக்கியமாய்க் கருதப் படுகின்றது. அதாவது முதலாளி (பணக் காரன்) வேலையாள் (ஏழை) என்பதுவே யாகும். ஆனால் இந்தியாவிலோ மேல்ஜாதியார் - கீழ் ஜாதியார் என்பது ஒன்று அதிகமாகவும் முதன்மையானதாகவும் இருப்பதால் அது பணக்காரன்-ஏழை தத்துவத்திற்கு ஒரு கோட்டையாக இருந்து காப்பாற்றிக் கொண்டு வருகிறது” (குடிஅரசு 4.10.1931). கம்யூனிஸ்ட் அறிக்கையின் முதல் பிரிவின் தமிழாக்கத்தின் கடைசிப் பகுதியை வெளியிட்ட குடிஅரசு 1.11.1931ஆம் நாளைய இதழ், அறிக்கையின்பிற பிரிவுகளின் மொழியாக்கமும் வெளிவரும் என்று அறிவித்தது. ஆனால் 1931 டிசம்பர் 13ஆம் நாளன்று பெரியார் வெளிநாட்டுப் பயணத்தை மேற் கொண்டு பல மாதங்களுக்குப் பிறகே திரும்பி வந்ததால், பிற பிரிவுகளின் மொழி யாக்கம் ஏதும் வரவில்லை. சோவியத் யூனியனில் பெரியார் 14.2.1932 முதல் 17.5.1932 வரை தங்கி, அங்கு ஏற்பட்டுவந்த சமூக, பொருளாதார, பண்பாட்டு மாற்றங் களை அறிந்துவந்தார்.
கம்யூனிஸ்ட் அறிக்கையின் முழுமையான முதல் தமிழாக்கம், எம். இஸ்மத் பாஷாவால் செய்யப்பட்டு, இந்தியக் கம்யூனிட் கட்சியின் நூல் வெளியீட்டகமான ஜனசக்தி பிரசுராலயத்தால் 1948இல் வெளியிடப்பட்டது. பதினாறு பக்க அறிமுகவுரையுடன் கூடிய 91 பக்க மொழியாக்கம் கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை எனத் தலைப்பிடப்பட்டிருந்தது.
பெரியார், சோவியத் யூனியனுக்குப் பயணம் மேற் கொண்டதற்குச் சில ஆண்டுகளுக்கு முன்பே போல்ஷ்விக் புரட்சி குறித்த கட்டுரைகள் குடிஅரசு, ரிவோல்ட் ஆகிய சுயமரியாதை ஏடுகளில் வெளி வந்துள்ளன. சோவியத் யூனியன் பயணத்திற்குப் பிறகு, மதம் பற்றி லெனின் கார்க்கிக்கு எழுதிய கடிதம், ‘டால்ஸ்டாய்-ரஷியாவின் நிலைக்கண்ணாடி’ என்னும் லெனின் கட்டுரை ஆகியன பெரியார் ஈ.வெ.ரா., எஸ். ராமநாதன் ஆகியோரால் தமிழாக்கம் செய்யப்பட்டுப் பயன்படுத்தப்பட்டதற்கும் சான்றுகள் உள்ளன. எனவே கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையின் தமிழாக்கத்தை இருவரும் சேர்ந்து செய்திருப்பர் என ஊகிக்க வாய்ப்புண்டு.
(எஸ்.வி. ராஜதுரையின் கம்யூனிஸ்ட்
கட்சி அறிக்கை தமிழாக்க நூலிலிருந்து
நன்றி: 'இந்து தமிழ் திசை'
ஞாயிறு களஞ்சியம் 30.4.2023
No comments:
Post a Comment