குற்றவாளிகள் தொடர்ந்து விடுதலை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, April 11, 2023

குற்றவாளிகள் தொடர்ந்து விடுதலை

2002-ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற  மத வன்முறைகளின் போது முஸ்லிம் பெண்கள் கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது. மற்றும் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 26 பேர் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.அப்போது மாநில முதலமைச்சராக இருந்தவர் தற்போதைய பிரதமர் மோடி. குஜராத் மத வன்முறை விவகாரத்தில் பிரதமர் மோடி மீது குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் நீதிமன்றம் பிரதமர் மோடியை விடுவித்தது.

2002-ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற மதவெறியாட்டங்கள் தொடர்பாக பல வழக்கு விசாரணைகள் இன்னமும் நடைபெற்று வருகின்றன. இதில் ஹலோல், டிலோஸ் உள்ளிட்ட இடங்களில் நிகழ்ந்த வன்முறை சம்பவங்களும் அடங்கும். ஹலோல், டிலோஸ் பகுதிகளில் முஸ்லிம் பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்தது, சிறுபான்மையினரை படுகொலை செய்தது உள்ளிட்டவை தொடர்பாக இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. இந்த சம்பவங்களில் மொத்தம் 17 பேர் கொல்லப்பட்டனர். இவ்வழக்கில் 194 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர்; 334 ஆவணங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.

ஆனால் வழக்கை விசாரித்த ஹலோல் கூடுதல் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி லீலாபாய், குற்றம்சாட்டப்பட்ட 26 பேருக்கு எதிரான ஆவணங்கள் குற்றத்தை நிரூபிக்க போதுமானதாக இல்லை எனக் கூறி மொத்தமாக விடுதலை செய்தார். இவ்வழக்கில் மொத்தம் 39 பேர் குற்றம் சாட்டப்பட்டிருந்தனர். ஆனால் 13 பேர் வழக்கு விசாரணையின் போது மரணம் அடைந்து விட்டனர். 

2002-ஆம் ஆண்டு சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலில் கரசேவகர்கள் 59 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து குஜராத்தில் கலவரம் வெடித்தது. இதன் காரணமாக சிறுபான்மையினர் தாக்குதலுக்கு உள்ளாகினர். தங்களது இருப்பிடத்திலிருந்து தப்பித்து வேறு இடங்களுக்குச் சென்றனர். இதில் 2002, பிப்ரவரி 27-இல் பில்கிஸ் பானோ என்ற 5 மாத கர்ப்பிணியும் தனது குடும்பத்துடன்  கிராமத்திலிருந்து தப்பித்துச் சென்றார். பின்னர் சாலையில் சென்று கொண்டிருந்த பில்கிஸ் பானோவின் குடும்பத்தை ஆயுதம் ஏந்திய கும்பல் தாக்கியது. இதில் பில்கிஸின் மகள் உள்பட 7 பேர் கொல்லப்பட்டனர். கர்ப்பிணியான பில்கிஸ்யிபானோ கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார்.

இந்தக் கொடூரக் குற்றத்தை விசாரிக்க உச்ச நீதிமன்றம், சிபிஅய்-க்கு உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து 11 பேர் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் 11 பேரும் குற்றவாளிகள் என்று நிரூபணமானதைத் தொடர்ந்து 11 பேருக்கும் ஆயுள் தண்டனை வழங்கி மும்பை நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த நிலையில், 16.08.2022 அன்று அவர்களை குஜராத் அரசு விடுதலை செய்துள்ளது.   

குஜராத் மாநிலத்தில் 2002ஆம் ஆண்டு 

பஞ்சமஹால் மாவட்டத்தின் டிலோஸ் கிராமத்தில் நடை பெற்ற கலவரத்தில் இரண்டு குழந்தைகள் உள்பட சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த 17 பேர் கொல்லப்பட்டனர். இந்தக் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 22 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்கு எதிராக போதுமான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று கூறி  அனைவரையும் அம்மாவட்ட நீதிமன்றம் விடுதலை செய்தது. அவர்களில் 8 பேர் வழக்கு  விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது இறந்ததால் இவர்கள் மீது விசாரணை எதுவும் நடத்தப்படவில்லை. சாட்சிகளை தேடும் முயற்சியில் ஒரு ஆற்றின் கரையில் இருந்து எலும்பு களை காவல்துறையினர் மீட்டனர். ஆனால் அவை இறந்தவர்களின் அடையாளத்தைக் கண்டறிய முடியாத அளவுக்கு எரிந்து இருந்தன. இந்த வழக்கில் சாட்சியாக இருக்கக் கூடிய இறந்தவர்களின் உடல்கள் சாட்சியங்களை அழிக்கும் நோக்கத்துடன் எரிக்கப்பட்டுள்ளன என்று அரசு தரப்பில் குற்றம் சாட்டினர். எனினும், போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி, குற்றவாளிகள் 22 பேரும் விடுதலை செய்யப்படுவதாகவும், அதில் 8 பேர் விசாரணையின்போதே இறந்துவிட்டதாகவும் சோலங்கி கூறியுள்ளார். 

நரோடா பாட்டியா படுகொலை வழக்கில் அக்கலவரத்தை முன்னின்று நடத்திய முக்கியக் குற்றவாளியான, பாஜக அமைச்சர் மாயா கோட்னானியை விடுதலை செய்திருக்கிறது. குஜராத் உயர்நீதிமன்றத்தின் அமர்வு.

2002இல் குஜராத் மாநில முசுலீம் மக்கள்மீதான இனப்படுகொலையில் முக்கியமான வழக்கான நரோடா பாட்டியா படுகொலை வழக்கில் குஜராத் உயர்நீதிமன்றத்தின் அமர்வு  20.4.2018 அன்று மேனாள் பா.ஜ.க. அமைச்சர் மாயா கோட்னானியை விடுதலை செய்திருக்கிறது.

இதே வழக்கில் மாயா கோட்னானி குற்றவாளி என அவருக்கு விசாரணை நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித் திருந்தது. ஹிந்துமத வெறியர்களால் கொலை செய்யப்பட்ட இஸ்லாமியர்கள் பலர் தொடுத்திருத்த வழக்குகளை  இணைத்து உச்சநீதிமன்றம் நியமித்த சிறப்பு புலனாய்வுக் குழு நடத்திய வழக்கு இது. விசாரணை நீதிமன்றத்தின் அரை குறை தீர்ப்பையும் குஜராத் உயர்நீதிமன்றம் ரத்து செய்திருக்கிறது.  விசாரணை நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட 41 குற்றவாளிகள் தொடுத்திருந்த மனு மீதான தீர்ப்பில்தான் குஜராத் உயர்நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டது

28.02.2002 அன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள "குவ்பர்க் சொசைட்டி" பகுதியில் வசித்த முஸ்லிம் மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் பலர் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டதோடு, அடித்தும் படுகொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தில் 69 பேர் உயிரிழந்தனர். காங்கிரஸ் எம்.பி. ஈசன் ஜாப்ரியும் அவரது மகன், மகள் உள்ளிட்டவர்களும் கொல்லப்பட்டனர்.

இவ்வழக்கில் 41 பேர்மீது குற்றம் சாட்டப்பட்டது. இதில் பெரும்பாலானோர் பிணையில் உள்ளனர். 5 பேர் வழக்கு நடந்த போது உயிரிழந்தனர். தற்போது 36 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் குல்பர்க் சொசைட்டி கலவர வழக்கில் 14 ஆண்டுகளுக்குப் பின்னர் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இப்படி ஒரு நீண்ட பட்டியலே உண்டு. படுகொலை செய்யப்பட்டவர்கள் சிறுபான்மையினர் என்றால் இந்த ஆட்சியில் கிடைக்கும் நீதி இவைதான்!

No comments:

Post a Comment