திருவாங்கூர் சமஸ்தானத்தில் வைக்கம் என்றொரு இடம். இங்கு தாழ்த்தப்பட்ட மக்களை, ஜாதி இந்துக்கள் கொடுமைக்கு உள்ளாக்கியிருந்தார்கள். இதை எதிர்த்து டி.கே.மாதவன், கேசவ மேனன், ஜார்ஜ் ஜோசப் கிளர்ச்சி செய்தார்கள். இக்கிளர்ச்சி அவ்வளவாக சூடு பிடிக்கவில்லை.
அவர்கள் பெரியாருக்குக் கடிதம் எழுதி, வரச்சொன்னார்கள், உடனே பெரியார், தொண்டர்களை அழைத்துக்கொண்டு சென்று விட்டார். வைக்கத்தில் அக்கிரமம் நடக்கிறது என்று, சூராவளிச் சுற்றுப்பயணம் செய்து பல கூட்டங்களில் பேசினார். ஒவ்வொரு கூட்டத்திலும் அவர் பேசிய பேச்சுக்களுக்கு நல்ல பலன் இருந்தது. இதைப்பார்த்த சமஸ்தான அதிகாரிகள் அவரை பேசவிடாதபடி 144 தடை உத்தரவைப் போட்டார்கள்.
பெரியார் இதை மீறி கோட்டயத்தில் பேசி கைதானார். ஒருமாத சிறைத்தண்டனை அவருக்கு வழங்கப்பட்டது. 30 நாட்கள் எப்போது கழியுமென சிறையில் காத்திருந்தார். சிறையிலிருந்து வெளிவந்ததுதான் தாமதம், மீண்டும் கூட்டம் போட்டு பேசினார் உடனே சமஸ்தான அதிகாரிகள் இவரை திருவாங்கூர் எல்லைக்குள் வரக்கூடாது என்று வெளியேற்றினார்கள்.
இதையும் மீறி உள்ளே நுழைந்து பொதுக் கூட்டத்திலும் பேசிவிட்டார். திரும்பவும் கைது செய்து ஆறுமாதம் கடுங்காவல் தண்டனை கொடுத்தார்கள். இதற்குள் பெரியாரது தடை மீறல்களும்- கைதான செய்திகளும் அகில இந்தியமுக்கியத்துவம் பெற்றுவிட்டன. காந்தியார், சமஸ்தானத்தின் அடக்கு முறைப்போக்கை வன்மையாக கண்டித்துப் பெரியாரது செயலை வெகுவாகப் பாராட்டி எழுதினார். தாழ்த்தப்பட்டவர்களுக்குள்ள தடையை பெரியார் கோரிக்கைப்படி நீக்காவிட்டால் பெரும் போராட்டம் துவங்கும் என்று காந்தியார் எச்சரிக்கை செய்தார்.
சமஸ்த்தான அதிகாரிகள் பயந்து போய், பெரியார் சொன்ன தடைகளை எடுத்தெறிந்து அவர்களையும் விடுதலை செய்தார்கள். இந்தப் போராட்டம், இவருக்கு “வைக்கம் வீரர்” என்ற பட்டத்தைப் பெற்றுத்தந்துள்ளது. இதில் காந்தியாருக்கு பெரியார் மீது மதிப்பும் உயர்ந்தது. இவ்வாறு காமராசர் அவர்கள் கூறியுள்ளார்கள்.
(‘தந்தை பெரியார் மறைவையொட்டி 26.12.1973 அன்று 'காண்டீபம்' பத்திரிகையின் மாரிச்சாமி அவர்களுக்கு கல்வி வள்ளல் காமராசர் அளித்த பேட்டியிலிருந்து...’,
'காமராசர் நூற்றாண்டு விழா மலர்')
No comments:
Post a Comment